Published:Updated:

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

நம்மால் முடியும்

பிரீமியம் ஸ்டோரி
‘பசங்க’ படத்தில் வருவதுபோல பள்ளி நாள்களிலேயே பெயருக்குப் பின்னால் சி.ஏ என தன் கனவைச் சேர்த்து அழகு பார்த்தவர் ஸ்வேதா ஶ்ரீனிவாசன்.

ஆனால், அது கனவாகவே கலைந்துபோனதுதான் சோகம். திருப்பதியில் வசிக்கும் 24 வயது ஸ்வேதா, காகிதங்களில் கைவினைக்கலைகள் செய்யும் வித்தகி. அவரது கையில் சிக்கும் துண்டுக் காகிதம்கூட அழகான கதையாகிறது, காவியமாகிறது. அந்தக் கலையின் பின்னால் இருப்பது ஸ்வேதாவின் வலிநிரம்பிய வாழ்க்கை.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

‘`16 வயசுவரைக்கும் சிறகுகளை விரிச்சுப் பறந்துகிட்டிருந்தேன். விளையாட்டு, படிப்புனு ஹைப்பர் ஆக்டிவா இருந்தவள் நான். சி.ஏ படிப்புக்காக திருப்பதியிலேருந்து சென்னைக்கு வந்தோம். அதுக்கான கோச்சிங் கிளாஸ்லகூட சேர்ந்தாச்சு. திடீர்னு லைஃப் தடம் புரண்டது. 16 வயசுலேருந்து அடிக்கடி காய்ச்சல் வர ஆரம்பிச்சது. அப்புறம் மாசாமாசம் டைபாய்டு, சிக்குன் குன்யானு விதவிதமான காய்ச்சல் வர ஆரம்பிச்சது. காலையில எழுந்திருக்க முடியாது. எப்போதும் களைப்பா ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன். படிப்புல கவனம் போச்சு. நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிட்டே வந்தது. மூட்டுவலி கடுமையானது. நிறைய டாக்டர்ஸ், நிறைய நிறைய டெஸ்ட்டெல்லாம் எடுத்துப் பார்த்த பிறகு 16 வயசுல அது ‘ஜுவைனல் ஆர்த்ரைட்டிஸ்’னு உறுதியாச்சு. அதாவது 18 வயசுக்கு கீழே இருக்கிறவங்களை பாதிக்கிற முடக்குவாதம்னு சொன்னாங்க. படுக்கையில விழலைன்னாலும் கிட்டத்தட்ட அப்படியொரு நிலைமைதான்’’ - ஸ்வேதாவின் வார்த்தைகளில் வலி மிச்சமிருக்கிறது. 16 வயதில் கனவைத் தொலைக்கிற கொடுமை, காலத்துக்கும் ஆறாத ரணம் என்பதை அறிந்தவர்கள் ஆமோதிப்பார்கள்.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

‘`என் தாத்தாவுக்கு 70 வயசுக்குப் பிறகு ஆர்த்ரைட்டிஸ் வந்து, கால்கள் வளைஞ்சு போச்சு. அதனால மரபியல் ரீதியா எனக்கும் வந்திருக்கலாம்னு சொன்னாங்க. ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தபோது டைபாய்டு, மலேரியா ரெண்டும் சேர்ந்து வந்தது. எக்ஸாம் எழுதணும், காய்ச்சல் குறையணும்னு ஹை டோசேஜ் மருந்து கொடுத்தாங்க. அதோட விளைவா இருக்கலாம்னும் சொல்றாங்க. இன்னிக்கு வரைக்கும் காரணம் உறுதியா தெரியலை. ஆனா, நோயோடு வாழப் பழகியாச்சு.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

அந்த வயசுலேயே எல்லாத்துக்கும் யாரையாவது சார்ந்திருக்கிற நிலை. பேனாவைப் பிடிக்கக்கூட விரல்கள் ஒத்துழைக்காது. ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையில மூட்டுகள்ல வலி இருக்கும். ஆனா, என் விஷயத்துல தலைமுடியிலேருந்து பாதம்வரை வலிக்கும். `ஆஸ்டியோபொரோசிஸ்'னு சொல்ற எலும்புப்புரை பிரச்னையும் இருந்தது. அலோபதி சிகிச்சையைத் தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்தாங்க. அதோட விளைவு ஒரே மாசத்துல 20 கிலோ எடை அதிகரிச்சது. ஏற்கெனவே எலும்புகள் பலவீனமானதுல உடல் எடையைத் தாங்க முடியாம, நிலைமை இன்னும் மோசமானது. அப்பதான் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறினேன். மறுபடி திருப்பதிக்கே போனோம். அங்கே ஆயுர்வேத மருத்துவமனையில தங்கி சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அங்கே எனக்குப் பக்கத்து ரூம்ல ஒரு பெண் அட்மிட் ஆயிருந்தாங்க. கிட்டத்தட்ட எனக்கிருக்கிற அதே பிரச்னைதான் அவங்களுக்கும். அவங்க தினம் தினம் விதம் விதமா கம்மல் போடுவாங்க. பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ‘எங்கே வாங்கறீங்க’னு விசாரிச்சேன். ‘வாங்கறதில்லை, நானே பண்றேன்’னு சொல்லி க்வில்லிங் ஜுவல்லரிக்கான மெட்டீரியல்களை எனக்குக் காட்டினாங்க. அடிப்படையான விஷயங்களைக் கொஞ்சம் சொல்லிக்கொடுத்துட்டு டிஸ்சார்ஜ் ஆயிட்டாங்க. என் ஆர்வத்தைப் பார்த்துட்டு அம்மா எனக்கும் க்வில்லிங் மெட்டீரியல் செட் வாங்கித் தந்தாங்க. முடியுதோ, இல்லையோ தினம் கொஞ்சம் கொஞ்சமா நானும் க்வில்லிங் ஜுவல்லரி பண்ணப் பழகினேன். ஒருகட்டத்துல அதுவே என் வலிகளை மறக்க உதவியா இருந்தது.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும் குட்டிக்குட்டி ஜுவல்லரி செய்து வீட்டுக்கு வர்றவங்களுக்கெல்லாம் கொடுத்திட்டிருந்தேன். அதே மெட்டீரியலைவெச்சு பொம்மைகள் செய்ய ஆரம்பிச்சேன். கார்ட்டூன் கேரக்டர்களை பொம்மை வடிவங்களுக்குக் கொண்டு வந்தேன். நிறைய பாராட்டுகள்... இன்ஸ்டா பேஜ் ஆரம்பிச்சு அதுல போஸ்ட் பண்ணச் சொன்னாங்க. சின்னச் சின்ன எக்ஸிபிஷன்ஸ்ல கலந்துகிட்டு என் டிசைன்ஸை காட்சிக்கு வெச்சேன். இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கை அதிகரிச்சது. 2017 செப்டம்ர்ல ‘30 டேஸ் சேலஞ்ச்’னு நானே ஒரு முயற்சியை ஆரம்பிச்சேன். தினம் என்னால வேலைசெய்ய முடியுதான்னு என்னை நானே டெஸ்ட் பண்ண அந்த முயற்சியை எடுத்தேன். அந்த வருஷம் ‘அருவி’ படம் ரிலீசாச்சு. அந்தப் படத்தோட போஸ்டர் ரொம்பப் பிடிச்சது. அதை என் ஸ்டைல்ல பேப்பர் வொர்க்ல பண்ணினேன். படத்தோட டைரக்டர் பார்த்துட்டுப் பாராட்டினார்.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

‘ஜூன்’ என்ற மலையாளப் படத்துல ஹீரோயினுக்கு இதே மாதிரி பொம்மைகள் பண்ற கேரக்டர்னு சொல்லி என்கிட்ட ரெஃபரென்ஸ் எடுத்துட்டுப் போனாங்க. தளர்ந்த தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா துளிர்க்க ஆரம்பிச்சது’’ - மென்சிரிப்பில் மனம் கவரும் ஸ்வேதாவின் உருவாக்கம் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

யூஸ் அண்டு த்ரோ பேப்பர் கப்புகளைவைத்து அவர் உருவாக்கும் ‘கப் சீரீஸ்’, கைகளின் அருமையை உணர்த்தும் ‘ஹேண்ட் சீரீஸ்’ என குட்டிக் குட்டி சுவாரஸ்யங்கள் அவை. இத்தனை வலிகளுக்கும் வேதனைகளுக்கும் இடையில் பி.காம் முடித்துவிட்டு, எம்.எஸ்ஸி யோகா படித்துக்கொண்டிருக்கிறார்.

முன்பெல்லாம் என்னால ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேச முடியாது. இன்னிக்கு இதோ உங்ககிட்ட ஒரு மணி நேரமா பேசிட்டிருக்கேன். காரணம்... யோகா.

‘`முன்பெல்லாம் என்னால ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேச முடியாது. டாக்டரைப் பார்க்கப் போகணும்னா என்னால பேச முடியாதுன்னு எல்லா பிரச்னைகளையும் பேப்பர்ல எழுதி எடுத்துட்டுப் போய்க் காட்டுவேன். அப்படியிருந்த நான் இன்னிக்கு இதோ உங்ககிட்ட ஒரு மணி நேரமா பேசிட்டிருக்கேன். காரணம் யோகா. இன்னிக்கு இருக்கிற பேண்டெமிக் சூழ்நிலையில எல்லாருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையும் மன உறுதியும் தேவைப்படுது. அதுக்கு யோகா பெரிய அளவுல உதவும். அதனால இப்போதைக்கு என் எதிர்காலம் அதுதான்’’- நம்பிக்கையோடு சொல்பவருக்கு சி.ஏ கனவு தகர்ந்ததில் இன்றும் வருத்தமே.

கனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்

‘`அது ஒரு பெருங்கனவு. உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாயிட்டே போனாலும், நல்லாயிடும்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டு படிச்சிட்டிருந்தேன். ஒவ்வொருமுறை டாக்டர்கிட்ட போகும்போதும் அம்மாவும் அப்பாவும் ‘இவளுக்கு எப்போ சரியாகும்’னு ஆர்வமா கேட்பாங்க. டாக்டர் நல்ல வார்த்தை சொல்வார்னு நானும் எதிர்பார்த்திருக்கேன். ஆனா, ‘அவதான் அவளைப் பார்த்துக்கணும்’னு சொல்வாங்களே தவிர, ஒருமுறைகூட சரியாயிடும்னு சொன்னதே இல்லை. அந்த யதார்த்தம் புரிஞ்சபிறகு என் கனவை நானே மறந்துட்டேன். என் நிலைமையை ரிவர்ஸ் பண்ண முடியாது. இருக்கிறது இன்னும் தீவிரமாகாமப் பார்த்துக்கிறது மட்டும்தான் சாத்தியம். லேசா கிளைமேட் மாறினாலும் அது என் உடம்புல பிரதிபலிக்கும். சிகிச்சைகள் தொடர்ந்திட்டிருக்கு’’ - கனவை வெல்லும் கலையை வாழ்வாக்கிக் கொண்டவருக்கு வேறு என்ன திட்டம்?

‘`சி.ஏ படிப்பு என் கனவு. ஆனாலும் ஆர்ட் எனக்கு தெரபி. இதுதான் வாழ்க்கைனு மனசைத் தேத்திக் கிட்டேன். இப்பவும் எப்பவாவது மனசும் உடம்பும் தளரும். ஆனாலும் என்னை நானே தட்டிக்கொடுத்து, எழுந்திடுவேன். பாசிட்டிவ்வான சிந்தனை, மனிதர்கள்னு என்னைச் சூழ்ந்திருக்கிற பாசிட்டிவிட்டிதான் ஒவ்வொரு முறையும் என்னை மீட்டெடுக்குது’’ - நம்மையும் பற்றிக்கொள்கிறது அந்த பாசிட்டிவிட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு