Published:Updated:

அவள் நூலகம்: கருத்தரித்த பெண்ணுக்கு மிகச்சிறந்த பரிசு!

எஸ்.சங்கீதா

பிரீமியம் ஸ்டோரி

ஒரு பெண் தன் வாழ்க்கையின் அற்புத தருணங்களாகக் கருதுவது தாய்மை தினங்களைத்தான். கூட்டுக் குடும்பங்களில் நாம் வாழ்ந்தபோது கர்ப்பிணிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கவும், குடும்ப வாரிசை ஆசையோடு வரவேற்கவும் பாட்டிகள் உட்பட பலர் இருந்தார்கள்.

கணவனும் மனைவியும் மட்டுமே குடியிருக்கும் இன்றைய மாடர்ன் வீடுகளிலோ தாய்மை காலம் என்பது சில பல சிரமங்களுக்கு மத்தியில்தான் கழிகிறது. வளைகாப்புக்கு முன்னதாக தாய் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் மிக அரிது. கொரோனாவோடு வாழ பழகிக்கொண்ட இந்தக் காலத்திலோ இதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாது.

இந்தப் பின்னணியில் விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘தாய்மை ஓர் இனிய பயணம்’ என்கிற இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் கர்ப்பம் முதல் பாலூட்டும் காலம் வரையிலான பாரம்பர்ய மருத்துவமும் உணவு முறைகளும் எளிய தமிழில் உதாரணங்களோடு சொல்லப் பட்டிருக்கின்றன.

சித்த மருத்துவரான இந்நூலாசிரியர் இரா.பத்மப்ரியா, பாரம்பர்ய மருத்துவ ஆய்வு மையத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். சித்த மருத்துவத்தோடு, நமது இந்தியப் பாரம்பர்ய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி போன்ற மேலை மருத்துவ முறைகள் ஆகியவற்றிலிருந்தும் நலம் பயக்கும் விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

சித்தா, ஹோமியோபதி என்றவுடன் எதை எதையோ தேடி வாங்கி உட்கொள்ள வேண்டியிருக்குமோ என்று கவலைகொள்ள வேண்டாம். நம் வீட்டிலேயே கிடைக்கும் பொருள்கள்தாம் பெரும்பாலும் இவரது மருந்துகளுக்கான மூலப்பொருள்கள்.

கர்ப்பகால வாந்தி, குமட்டல் ஆகிய வற்றைச் சமாளிக்க இவர் பரிந்துரைக்கும் உணவுகளையும் எளிமையான செய்முறை களையும் அளித்திருக்கிறார்.

 இரா.பத்மப்ரியா
இரா.பத்மப்ரியா

முதல், இரண்டாம், மூன்றாம் மும்மாத கர்ப்ப காலங்களில் ஒரு பெண்ணுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும், உட்கொள்ள வேண்டிய உணவுகளும் மருந்துகளும் எவை என்பதை மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியிருக்கிறார் மருத்துவர் பத்மப்ரியா.

இவை மட்டுமல்ல... குழந்தைப் பேற்றுக்குப் பின் அறிய வேண்டிய விஷயங்களான தாய்ப்பால், மார்பகத்தில் ஏற்படும் பாதிப்புகள், பட்டி கட்டுதல், பத்திய சமையல் ஆகியவையும் இதில் உண்டு. உணவு முறை, வாழ்க்கை முறை, சிந்தனை முறை - இந்த மூன்றையும் கருவுற்ற பெண்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.

அதாவது... கருப்பையில் உள்ள கருவைப் பாதுகாத்து, அதை சிறப்பாகப் பராமரிப்பதற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம். கர்ப்பத்துக்குப் பாதுகாப்பு இல்லாத உணவுகள் மற்றும் செயல்களைத் தவிர்ப்பது அவசியம். கருவளர்ச்சிக்கேற்ப மாதாமாதம் உணவு மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்வதற்கும், மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் ஏற்ற சிந்தனை முறை அவசியம். இதை ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொண்டு பின்பற்றவும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மெனக்கெடுகிறார் நூலாசிரியர்.

ஒரு குழந்தையின் எதிர்காலமே அந்தத் தாய் எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் அவரது மனநிலையைப் பொறுத்துதான் உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய அருமையான பொக்கிஷம் இந்த நூல்.

தாய்மை ஓர் இனிய பயணம்

டாக்டர் இரா.பத்மப்ரியா பி.எஸ்.எம்.எஸ்

வெளியீடு: விகடன் பிரசுரம்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002 தொலைபேசி: 044-4263 4283

books.vikatan.com

₹210

நூலிலிருந்து சில துளிகள்...

* பொதுவாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

* கர்ப்பிணிகளுக்குப் புளிப்பான பழங்கள், காரமான உணவுகளின் மீது ஆசை உண்டாகுமல்லவா? அதற்கு பாரம்பர்ய காரணமும் உண்டு. இந்திய மசாலா உணவுகள் நோய் நுண்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டவை.புளிப்பான பழங்களாலான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை போன்றவை வைட்டமின் சி சத்து நிறைந்தவை. நோய்த்தொற்றுகளை நீக்கக்கூடியவை. அது மட்டுமல்ல... வைட்டமின் சி மரபணுக் குறைகளைத் தடுக்கும் தன்மையும் கொண்டது.

அவள் நூலகம்: கருத்தரித்த பெண்ணுக்கு மிகச்சிறந்த பரிசு!

* பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு கால்சியம் தேவைப்படுகிறது. குழந்தைக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகவும், இதயம் சரியாகச் செயல்படவும், ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கவும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் கால்சியம் அவசியம்.

* கால்சியம் சத்து போதுமான அளவில் குழந்தைக்குக் கிடைக்கத் தவறும்போது, அதன் உடல் தாயின் எலும்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கால்சியத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிடும். இப்படி கர்ப்பத்தில் அதிக அளவு கால்சியம் சத்து பயன்படுத்தப்பட்டால் தாய்க்கு மிக விரைவில் எலும்புச் சிதைவு நோய் தோன்றும் அபாயம் உள்ளது. ஆகவே, கால்சியத்தில் கவனம் அவசியம்.

* சத்தான மாவு உருண்டைகள், பொரி விளங்காய் உருண்டை, பயத்தமாவு உருண்டை போன்ற தின் பண்டங்களைச் சாப்பிடும்போது சத்துகள் ஈடுகட்டப்படும். மண், சாம்பல் சாப்பிடும் ஆசையும் நீங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு