Published:Updated:

அவள் பதில்கள் 6 - நியூ நார்மல் வாழ்க்கைக்கு ஏற்றதா ஃபேஷன் டிசைனிங் படிப்பு?

அவள் பதில்கள் 6
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள் 6

சாஹா

அவள் பதில்கள் 6 - நியூ நார்மல் வாழ்க்கைக்கு ஏற்றதா ஃபேஷன் டிசைனிங் படிப்பு?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள் 6
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள் 6

புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். வீட்டுக்கான இன்டீரியரில் ஆளுக்கொரு கருத்து இருக்கிறது. இப்போதைய டிரெண்டில் என்ன லேட்டஸ்ட்? கூடவே வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றும்போது வொர்க் ஸ்பேஸை அழகாக வைத்துக்கொள்ள டிப்ஸ் சொல்ல முடியுமா?

- எஸ்.மந்தாகினி, பெங்களூரு - 3

பதில் சொல்கிறார் இன்டீரியர் டிசைனர் யாமினி தாக்கர்

உங்கள் வாழ்விடத்தை ரசனையானதாகவும் பயனுள்ளதாகவும் மனதுக்கினியதாகவும் மாற்றுவதே இன்டீரியர் டிசைனிங்கின் நோக்கம். அது வீட்டிலுள்ளவர் களின் கேரக்டர்களின் பிரதிபலிப்பாக வும் இருந்தால் சிறப்பு. ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட ஆளுமை இருக்கும். ஒவ்வோர் ஆளுமைக்கும் தன் வாழ்விடம் குறித்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு சமீப காலமாக ‘5 டைமென்ஷன் இன்டீரியர்’ என்ற கான்செப்ட் பிரபல மாகி வருகிறது.

அதாவது வீட்டின் சுவர், தரை, சீலிங், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வீட்டு நபர்களின் குணாதிசயங்கள் ஆகிய ஐந்தையும் கவனத்தில் கொண்டு இன்டீரியர் டிசைன் செய்வதுதான் 5 டைமென் ஷன் இன்டீரியர். மற்றவர்கள் எப்படி இன்டீரியர் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கத் தேவையில்லை. நமக்கேற்ற, நம் வீட்டு நபர்களின் கேரக்டருக்கேற்ப வடிவமைப்பதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட். எனவே, நீங்கள் இந்தப் புதிய டிரெண்டை முயற்சி செய்யலாம்.

அவள் பதில்கள் 6 - நியூ நார்மல் வாழ்க்கைக்கு ஏற்றதா ஃபேஷன் டிசைனிங் படிப்பு?
Vladimir Vladimirov

இன்டீரியர் டிசைன் செய்யும் போதே வொர்க் ஃப்ரம் ஹோம் செட்டப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சமீப காலத்தில் பிரபலமாகி இருக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் தவிர்க்க முடியாத தாகிவிட்ட இன்றைய சூழலில் பணியிடம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற அக்கறை அதிகரித்திருக்கிறது. இயற்கையான வெளிச்சம், நல்ல காற்றோட்டம், வசதியான ஃபர்னிச்சர் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வொர்க் ஃப்ரம் ஹோமுக்கான இன்டீரியர் டிசைன் செய்யப் படுகிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் இணைவோருக்கு பின்பக்கத்தில் உள்ள

சுவர் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களது வேலையின் தன்மை அல்லது படிப்புக்கேற்ப அந்தச் சுவரை வடிவமைக்கும்போது அதுவே அவர்களுக்கு உற்சாகத்தைத் தருவதாக உணர்கிறார்கள். அந்த ஒற்றைச் சுவர் அவர்களது மனநிலையின் பிரதிபலிப்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

 யாமினி தாக்கர் -  காரையடி செல்வன் -  மேனகா ராம்குமார்
யாமினி தாக்கர் - காரையடி செல்வன் - மேனகா ராம்குமார்

டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்க ஆசை. கொரோனாவுக்குப் பிறகான நியூ நார்மல் வாழ்க்கையில் ஆடம்பர உடைகளுக்கான முக்கியத்துவம் ரொம்பவே குறைந்துவிட்டது. திருமணங்களுக்குக்கூட எளிமையாகவே உடை அணியப் பழகிவிட்ட இந்தச் சூழலில் ஃபேஷன் டிசைனிங் படிப்பது, பொட்டிக் வைப்பது சரியான முடிவாக இருக்குமா?

- சாவித்திரி மோகன், கோவை-9

பதில் சொல்கிறார் கல்வி ஆலோசகர் காரையடி செல்வன்

அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் எப்போதும் உடைக்கு முக்கிய இடமுண்டு. கோவிட் காலத்துக்கு முன்பும் சரி, அதைக் கடந்துகொண்டிருக்கும் இன்றும் சரி, ஃபேஷன் டிசைனிங் துறை தொய்வடையவில்லை. வேலைவாய்ப்புக்கும் சுயதொழில் தொடங்கவும் இந்தத் துறையில் சம அளவு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஃபேஷன் டிசைனிங் என்பது உணர்வுடன் தொடர்புள்ள ஒரு துறை. ஒவ்வொருவருக்கும் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில் ஆர்வம் இருக்கிறது. உடையலங்காரம் மூலம் அது சாத்தியமாகிறது. உங்கள் மகளைப் போலவே என் நண்பரின் மகளும் திரைத்துறை பிரபலங்களுக்கு ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்ற விருப்பத்தில் ஃபேஷன் டிசைனிங் படித்தார். சின்ன அளவில் பொட்டிக் தொடங்கியவர், இன்று பல பிரபலங்களுக்கும் உடை வடிவமைப்பாளராக இருக்கிறார். ஃபேஷன் டிசைனிங் என்பது வெறும் உடை வடிவமைப்பு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. நகைகள், ஹேண்ட்பேக் என அக்ஸசரீஸ் வடிவமைப்பும் சேர்த்ததுதான். பலவிதப் பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதால் வேலை வாய்ப்புக்குப் பிரச்னையில்லை.

அவள் பதில்கள் 6 - நியூ நார்மல் வாழ்க்கைக்கு ஏற்றதா ஃபேஷன் டிசைனிங் படிப்பு?
scyther5

வருடத்துக்கு 10 லட்சம் இன்ஜினீயர்கள் உருவாகும் இடத்தில் 10,000 ஃபேஷன் டிசைனர்கள்கூட வருவதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை. பிள்ளைகளின் விருப்பம் அறிந்து அந்தத் துறையில் பிரகாசிக்க பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். ஃபேஷன் டிசைனிங் படிக்கும் அத்தனை பேரும் வெற்றிபெறுவார்களா என்றால் இல்லை. ஆனால், ஆர்வமும் கிரியேட்டிவிட்டியும் இருப்பவர்களால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.

உடை உடுத்தும் ஸ்டைல் எளிமையாக மாறிவிட்டதால் ஃபேஷன் டிசைனிங் துறைக்கு எதிர்காலம் இல்லை என்று அர்த்தமில்லை. எளிமையாகவும் ஃபேஷன் டிசைனிங் செய்யலாம். அது பகட்டுக்கான துறை மட்டுமல்ல. கொரோனாவுக்குப் பிறகு, நிறைய பேர் சுயதொழில் செய்யவும் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானத்துக்கு வழிசெய்யவும் முனைகிறார்கள். எனவே, ஃபேஷன் டிசைனிங் படித்தால் சொந்தமாக பொட்டிக் வைக்கலாம். ஏதோ ஓரிடத்தில் கன்சல்ட்டன்ட்டாக வேலை பார்க்கலாம். அவர்களது அனுபவத்தை வைத்துப் பயிற்சி அளிக்கலாம். பொட்டிக் மற்றும் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்க பயிற்சிபெற்ற ஃபேஷன் டிசைனர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, உங்கள் மகளின் ஆர்வத்துக்குத் தடைபோடாதீர்கள்.

35 வயதுதான் ஆகிறது. ஆனால், அதற்குள் முன்னந்தலையில் சில இடங்களில் முடி வளர்ச்சி குறைந்து மண்டைப்பகுதி தெரிகிறது. பேட்ச் வைக்க பயமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

பதில் சொல்கிறார் அழகுக்கலை ஆலோசகர் மேனகா ராம்குமார்

35 வயது என்பது பலருக்கும் முடி உதிர்வு தொடங்கும் பருவம்தான் என்பதால் ரொம்ப கவலைப்படத் தேவையில்லை. நிறைய பெண்களுக்கு இந்த வயதில் இந்தப் பிரச்னை இருக்கிறது. தீர்வு பற்றி யோசிப்பதற்கு முன் அதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவா, ஸ்ட்ரெஸ்ஸா அல்லது மரபியல் ரீதியாகவே இப்படியொரு பிரச்னை தொடர் கிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கேற்ப தான் தீர்வு என்ன என்று யோசிக்க முடியும்.

தற்காலிக தீர்வுகள் நிறைய உள்ளன. ஃபைபர் டஸ்ட் என்று கறுப்பு நிற பவுடர் கிடைக்கிறது. முடி உதிர்ந்து மண்டைப்பகுதி தெரியும் இடங்களில் இதைத் தூவிக் கொள்ளலாம். அந்த இடத்தில் முடி இருப்பது போன்ற தோற்றத்தைத் தரும். நீங்கள் தலைக்குக் குளிக்கும்வரை அது அப்படியே இருக்கும். யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சிந்தாது. கறையாகாது.

அவள் பதில்கள் 6 - நியூ நார்மல் வாழ்க்கைக்கு ஏற்றதா ஃபேஷன் டிசைனிங் படிப்பு?
Jun

பேட்ச் உபயோகிக்க பயமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது தேவையற்ற பயம். பேட்ச்சில் பர்மனென்ட், செமி பர்மனென்ட் என இரண்டு கிடைக்கிறது. உங்களுடைய வேலையின் தன்மை, தேவை போன்ற விஷயங்களைப் பொறுத்து அதில் எது வேண்டும் என முடிவு செய்யலாம். அதுவும் முடி உதிர்ந்த பகுதியை மறைத்து உங்களைத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீட்கும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism