Published:Updated:

அவள் பதில்கள் 17 - ஃபேஷியல், மேக்கப் இல்லாத வொர்க் ஃப்ரம் ஹோம்... சருமத்துக்கு நல்லதா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

சாஹா

கடந்த ஒன்றரை வருடங்களாக வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கிறேன். சாதாரண மேக்கப், ஃபேஷியல் என எல்லாவற்றையும் கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். இப்படி சருமத்துக்கு எந்தச் சிகிச்சையோ, மேக்கப்போ செய்யாமல் விடுவது சரியானதுதானா?

- சந்தியா சங்கர், கோவை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

வெளியில் செல்கிறோமோ, இல்லையோ... தேவை இருக்கிறதோ, இல்லையோ... சருமத்துக்கான ரெகுலர் பராமரிப்பு என்பது ரொம்பவே முக்கியம். தினமும் கிளென்சர், டோனர், மாய்ஸ்சரைசர் உபயோகிப்பது அடிப்படை பராமரிப்பு. இதைச் செய்ய முடியாதவர்கள் ஃபேஸ் வாஷ் செய்ததும் மாய்ஸ்சரைசர் மட்டுமாவது உபயோகிக்கலாம். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களும் நீண்ட நேரம் செல்போன் உபயோகிப் பவர்களும் அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் ஒளியின் தாக்குதலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

மேக்கப் அவசியமில்லை. வேலைநேரத்தில் வீடியோ காலில் பேச வேண்டும் என்றால் மட்டும் மிதமான மேக்கப் போட்டுக்கொள்ளலாம். மற்ற நேரத்தில் மேக்கப்பை தவிர்ப்பதே நல்லதுதான். ஆனாலும், வொர்க் ஃப்ரம் ஹோமில் மேக்கப்பையும் ஹேர் ஸ்டைலையும் நன்கு உடையணிவதையும் தவிர்த்துவிடுவதால் திடீரென வயதான மாதிரி ஓர் உணர்வு ஏற்படுவதாக நிறைய பேர் சொல்லக் கேட்கிறேன். அந்த எண்ணத்தைத் தவிர்ப்பதற் காகவும் தன்னம்பிக்கைக்காகவும் மிதமான மேக்கப் செய்துகொள்ளலாம்.

வீட்டிலிருக்கும்போது பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள் சாப்பிடும்போது அவற்றில் சிறுதுண்டை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவலாம். சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் போன்றவற்றை எடுத்துவைத்து வேலைக்கிடையில் ஓய் வெடுக்கும்போது கண்களுக்கடியில் வைத்திருக்கலாம்.

வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது நேர மின்மையால் செய்யத் தவறிய வீட்டுச் சிகிச்சைகளை இந்த நேரத்தில் முயலலாம். கடலை மாவை ஸ்க்ரப் போல வாரத்துக்கொரு முறை உபயோகிக்கலாம். கடலை மாவு அல்லது பச்சைப்பயறு மாவில் தயிர் கலந்து முகத்துக்கு பேக் போல தடவலாம். தினம் ஒரு வேளை பால் வைத்து முகத்தை கிளென்ஸ் செய்யலாம்.

அவள் பதில்கள் 17 - ஃபேஷியல், மேக்கப் இல்லாத வொர்க் ஃப்ரம் ஹோம்... சருமத்துக்கு நல்லதா?

பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தினமும் காலை அல்லது மாலையில் தலையை நன்கு வாரிவிட வேண்டும். பலரும் ஒன்றிரண்டு நாள்களுக்குத் தலைமுடியை அவிழ்க்காமல் அப்படியே கட்டிவைத்திருக்கிறார்கள். பிறகு தலைவாரும்போது சிக்கும் அதிகமிருக்கும். முடியும் அதிகம் உதிரும். முடி உதிர்வின் தன்மையைக் கண்டுபிடிக்க வெள்ளையான தரைவிரிப்பின் மீது தலையை வாரிப் பார்க்கலாம். 100 முடிகள்வரை உதிர்ந்தால் ஓகே. அதற்கு மேல் உதிர்ந்தால் ஸ்ட்ரெஸ் அல்லது சரியாகச் சாப்பிடாதது காரணமாக இருக்கலாம். புரதம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடவும்.

தலை மற்றும் சருமத்துக்கு வாரத்துக்கொரு முறை எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இயற்கை அழகு சிகிச்சைகளை முயன்று பார்க்க இப்போது நிறைய நேரமிருக்கும். அவசரகதியில் ஓடிக் கொண்டிருந்தபோது எண்ணெய்க் குளியலுக்கோ, சீயக்காய், பயத்த மாவு உபயோகித்துக் குளிக்கவோ நேரமிருந்திருக்காது. இந்த வாய்ப்பை அதற்குப் பயன்படுத்தலாம். மிக முக்கியமாக இரண்டு வேளைக் குளியலை இந்த நாள்களில் நிச்சயம் பின்பற்றுங்கள். அது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும்.

கொரோனா ஆரம்பிப்பதற்கு முன் பியூட்டி பார்லர் தொடங்குவதற்கான முயற்சிகளில் இருந்தேன். கொரோனா பெருகி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அந்த முயற்சிகள் அப்படியே முடங்கிவிட்டன. இப்போது வீட்டிலேயே சிறிய அளவில் பார்லர் தொடங்க லாமா என யோசிக்கிறேன். சட்டரீதியாக ஏதே னும் விஷயங்களை கவனிக்க வேண்டுமா?

- ரஹீமா, சென்னை - 23

பதில் சொல்கிறார் சென்னை யைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடத்தில் பியூட்டி பார்லர் தொடங்குவதற்கு குறிப்பிட்ட சான்றிதழ்களைப் பெற வேண் டியது அவசியம். பிசினஸ் ரெஜிஸ்ட்ரேஷனுக்கான சான்றிதழ் மிக முக்கியம். அதாவது Firm Registration, Company Registration, Partnership Registration போன்ற வற்றில் ஒன்று அவசியம், Shop and Establishment Act-ன்படி லைசென்ஸ், Fire No Objection சான்றிதழ், `பொல்யூஷன் ஏ லெவல்' என்ற அறிவிப்புப் பலகை போன்றவை அவசியம். பான் கார்டு வாங்கி, ஜி.எஸ்.டிக்கான டாக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் செய்வதற்கான பதிவுகளைச் செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் பார்லர் ஆரம்பிக்கப் போகிற இடம் குடியிருப்புப் பகுதிக்குள் இருந்தால் அந்த அசோசி யேஷனிடம் என்.ஓ.சி (NOC) பெற வேண்டும்.அந்த இடத்தை வாடகைக்கோ, லீசுக்கோ எடுத்திருந்தால் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

பார்லர் தொடங்குவதற்கான மாநகராட்சி சான்றிதழை நீங்கள் பெறும்போதே பார்லர் இயங்குவதற்கான தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கான கட்டணங்கள் திருத்தி மாற்றிக்கொடுக்கப்படும்.

உங்கள் வீட்டிலேயே பார்லர் தொடங்கப் போகிறீர்கள் என்றால் வீட்டின் மொத்தப் பரப்பளவில் எவ்வளவு இடத்தை நீங்கள் பார்லருக்காக ஒதுக்குகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.

அதாவது வீட்டின் மொத்தப் பரப்பளவில் வெறும் 30 சதவிகிதத்தை மட்டுமே பார்லராக பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கேற்றபடியும், 30 சதவிகிதத்துக்கும் மேலான பகுதி என்றால் அதற்கேற்றபடியும் அந்தக் கட்டணங்கள் மாறும். வீட்டையே பார்லராக மாற்றுகிறீர்கள் என்றால் அது கமர்ஷியல் கட்டணங்களுக்குட்பட்டதாக மாறும். பார்லர் தொடங்குவது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் தகவல் சொல்ல வேண்டும். பியூட்டி பார்லர் என்பது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் ‘வெள்ளைப் பிரிவி’ன் கீழ் வரும். எனவே அதற்கு லைசென்ஸ் அவசியமில்லை. ஆனால், அந்தத் துறையிடம் தெரிவித்து அதற்கான ஒப்புதல் பெற்றதற்கான அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டால் போதும்.

மற்றபடி இது கொரோனா காலம் என்பதால், தனியிடங்களில், வணிக வளாகங் களில் இயங்கும் பியூட்டி பார்லர்களுக்கு அரசாங்கம் என்னென்ன விதிகளை விதித் துள்ளதோ, அவை வீட்டில் இயங்கும் பார்லர்களுக்கும் பொருந்தும்.

அவள் பதில்கள் 17 - ஃபேஷியல், மேக்கப் இல்லாத வொர்க் ஃப்ரம் ஹோம்... சருமத்துக்கு நல்லதா?

கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்று நிறைய செய்திகளைக் கேள்விப்படுகிறோம். இந்த நிலையில் ஃப்ளூ தடுப்பூசியைப் போடுவதன் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் காக்க முடியும் என்று சொல்லப்படுவது உண்மையா?

- ஷாலினி ராஜ், செங்கல்பட்டு

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவரும், ஐசிஎம்ஆரின் நேஷனல் கோவிட் டாஸ்க் ஃபோர்ஸின் கிளினிக்கல் ரிசர்ச் குழுவைச் சேர்ந்தவருமான குமாரசாமி.

சார்ஸ் கோவிட் 2 வைரஸானது முற்றிலும் வேறானது. சாதாரண சளி, காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிகளால் கோவிட் வைரஸ் தொற்றைத் தடுக்க முடியாது. இதற்கு முன்பும் டிபி நோய்க்குக் கொடுக்கப்படும் பிசிஜி வாக்சின் கோவிடை குணமாக்குமா என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். தட்டம்மை தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போன்றவை கூட கொரோனா தொற்றுக்கு எதிராகச் செயல்படும் என்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இவற்றில் எதுவுமே இதுவரை நிரூபணமாக வில்லை. எனவே இன்னொரு நோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பூசி கொரோனாவுக்கும் பாதுகாப்பு தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு குழந்தைக்கு ஃப்ளூ இருந்து அதற்கான சிகிச்சைகள் கொடுத்து குணப் படுத்திவிட்டால் அதே குழந்தைக்கு கொரோனா தொற்று வந்தால் பாதிப்பு தீவிரமாகாமல் இருக்கும். அந்த வகையில் ஃப்ளூ தடுப்பூசி உட்பட குழந்தைகளுக்கான வழக்கமான தடுப் பூசிகளைத் தவிர்க்காமலும் தாமதிக்காமலும் கொடுத்துவிடுவதுதான் பாதுகாப்பானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.