என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் விருதுகள் 2020
News
அவள் விருதுகள் 2020

பெண்ணென்று கொட்டு முரசே! - ‘அவள்’ கொண்டாடும் பெண்கள்!

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

தமிழன்னை சுசீலா

சென்னையில் அறம் வளர்க்கும் அடையாளங்களில் ஒன்று அவ்வை இல்லம். பெற்றோரால் கைவிடப்பட்டு, ஆதரவின்றி தவிக்கும் பெண் குழந்தைகளை அரவணைத்து தங்குமிடம், உணவு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தும் உன்னத நோக்கத்தில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியால் 1931-ம் ஆண்டு அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. அவரது கனவுத் திட்டத்தின் வேருக்குத் தனது தன்னலமற்ற உழைப்பை நீராகப் பாய்ச்சி, இல்லத்தின் அறப் பணிகளைச் செழுமைப்படுத்திய சுசீலா, அடையாறு புற்றுநோய் நிறுவனத் தலைவராகச் சேவையாற்றி மறைந்த டாக்டர் வி.சாந்தாவின் தங்கை.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்
PRIYANKA

அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பணியாற்றும் பெருங்கனவு சுசீலாவுக்கு தாமதமாகவே நிறைவேறியது. அந்தப் பணியைத் திறம்படச் செய்தவருக்கு, அவ்வை இல்லத்தின் தலைவர் பொறுப்பும் 2002-ம் ஆண்டு தேடிவந்தது. பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாமல் அங்கு சிரமப்பட்ட குழந்தைகளைப் பார்த்து வருந்திய சுசீலா, மாற்றத்துக்கு வழிதேடினார். பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, இல்லத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். பள்ளிப்படிப்பு முடித்த பெண் குழந்தைகளை உயர்கல்வியில் சேர்ப்பது, வேலைவாய்ப்புக்கு உதவுவது, திருமண வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது என சுசீலாவின் தாயுள்ளப் பணிகள், பெற்றோர் இல்லாத ஏக்கம் அங்குள்ள குழந்தைகளை பாதிக்காத வகையில் அரவணைக்கின்றன.

பல ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ள இந்த இல்லத்தில், தற்போது 185 பெண் குழந்தைகள் வளர்கிறார்கள். இந்த இல்லத்துக்கு அருகில் செயல்படும் இரண்டு பள்ளிகளையும் நிர்வகித்து வருபவர், சேவை நோக்கத்தில் பல நூறு பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குகிறார். நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்தப் பள்ளிகளும் சிறப்பாகச் செயல்படுவதற்குப் பின்னால் சுசீலாவின் பெரும் உழைப்பு இருக்கிறது. சேவைப் பணிகளுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டு, அமைதியும் எளிமையுமாகக் கல்வி அறிவு பாய்ச்சும் சுசீலா, புகழ் ஒளியிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கை வெளிச்சம்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

மாண்புமிகு அதிகாரி பிரப்தீப் கெளர்

கோவிட்-19 பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முக்கியப் பங்காற்றும் மூத்த விஞ்ஞானியான பிரப்தீப் கௌர்,

ஐ.சி.எம்.ஆர் - தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர். பள்ளிப் படிப்பு பஞ்சாபில், மருத்துவம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முடித்த பிரப்தீப், தமிழகத்தின் மருமகள். ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்களின் தடுப்பு, சிகிச்சை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பல்வேறு புராஜெக்டுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். உலக சுகாதார நிறுவனத் தின் (WHO) சர்வதேச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஒழிப்பு நிபுணர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார். கடந்த 16 ஆண்டுக்கால அனுபவத்தில் பல்வேறு தொற்றுநோய் தீவிர நோய்ப் பரவல் நிலைகளைக் (Epidemic) கையாண்டிருக்கிறார். நோய்த்தொற்று சமயத்தில் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்கள், எச்சரிக்கை ஆகியவற்றை அரசிடமும் சரி, மக்களிடமும் சரி துணிச்சலாகத் சொல்லத் தயங்காதவர். தொற்றாநோய்கள் மற்றும் தீவிர நோய்ப் பரவல் கண்காணிப்பு ஆகிய திட்டங்களுக்காகத் தமிழக அரசுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் பிரப்தீப்பின் சேவை கொரோனா காலத்தில் மிகப்பெரியது. அந்தப் பங்களிப்புக்காக ‘மாண்புமிகு அதிகாரி’ விருது வழங்கி போற்றிப் பாராட்டுகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

எவர்கிரீன் நாயகி ஊர்வசி

8 வயதில் ஊர்வசியைக் குழந்தை நட்சத்திரமாக்கி மகிழ்ந்தது மலையாள சினிமா. அவரை, `முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா. அங்கு தொடங்கிய அவரின் கலக்கல் கரியர் இன்றுவரை ஓயவில்லை. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், காதலியாக, மனைவியாக, அக்காவாக, அம்மாவாக, தோழியாக என ஏற்றிடாத பாத்திரங்களே இல்லை. பேசாத தென்னிந்திய மொழிகளும் இல்லை.

2020-ல் எந்த நடிகையைவிடவும் அதிகம் பேசப்பட்டவர் ஊர்வசிதான். கனவுக்காரனின் அம்மாவாக `சூரரைப் போற்று'வில் அழ வைத்தவர், கலகக்காரனின் அம்மாவாக `மூக்குத்தி அம்ம'னில் சிரிக்க வைத்தார். திரை தாண்டி ஓ.டி.டி பக்கம் குதித்த இந்த சகலகலாவல்லி, `புத்தம்புதுக் காலை'யில் ரொமான்ஸையும் விட்டு வைக்கவில்லை.

ஜெயராமோடு ஊர்வசி செய்த காதல் மேஜிக், 2கே கிட்ஸின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வரை நீண்டது டிஜிட்டல் வரலாறு. 44 ஆண்டுகளாக மக்களை மகிழ்விக்கும் ஊர்வசிக்கு இன்னும்

44 ஆண்டுகள் ஆனாலும் மக்களின் மனதிலொரு தனி சிம்மாசனம் உண்டு. காலத்தை வென்ற இந்தக் கலையரசியை ‘எவர்கிரீன் நாயகி’ எனக் கொண்டாடுகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

கலைநாயகி எம்.மீனாட்சி

திருப்பூர், பூலவாடியில் கடந்த 53 வருடங்களாக அண்ணன்மார் தெருக்கூத்தில் ஆடலும் பாடலுமென அதகளப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரே பெண்மணி மீனாட்சிதான். ‘பொன்னுவள நாடு புகழ்பெரிய சீமை’ என்று மீனாட்சி குரலில் சுருதி சேர்க்க ஆரம்பித்தால், கூடி நிற்கும் கூட்டம் மெய்சிலிர்த்து செவி கொடுக்கிறது. அண்ணன்மார் உடுக்கைப்பாட்டை 8 வயதில் உருப்போட ஆரம்பித்த மீனாட்சி, படிப்படியாக தெருக்கூத்தில் தேர்ச்சி பெறுகிறார். சக கலைஞர் முத்துவுடன், ஒரு தெருக்கூத்திலேயே இவரது திருமணம் நடந்தது. காதல் கணவர் முத்துவுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 5,000 தெருக்கூத்துகளில் ‘பொன்னர் - சங்கர்’ புகழ் பாடியிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் மீனாட்சியின் பாதம் படாத ஊரே இல்லை எனலாம். அண்ணன்மார் கதையின் அத்தனை பெண் கதாபாத்திரங்களையும் ஒருவராய் தெருக்கூத்தாடும் திறமைபெற்ற இந்த மூத்த கலைஞருக்கு ‘கலைநாயகி’ விருது வழங்கி கெளரவிக்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்
DIXITH

சேவை தேவதை சீதா

12 வயதில் திருமணமாகி, 14 வயதில் தாயானவர் திருச்சியைச் சேர்ந்த சீதா. நாடோடி பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டு மனம் வெதும்பினார். கணவருடன் இணைந்து, 1990-ல் நாடோடி பழங்குடியினர் நலனுக்கான சங்கத்துடன் குழந்தைகளுக்கான விடுதியையும் ஆரம்பித்தார். இதற்காக தானம் கேட்டு ஊர் ஊராக அலைந்தவர், ஒருகட்டத்தில் பாசி மணி தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அசத்தினார். இந்தத் தொழிலைக் கைவினைத் தொழில்கள் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்து, நாடோடி பழங்குடியின சமூகத்தினர் பல ஆயிரம் பேரை தொழில்முனைவோராக மாற்றினார். தன் இனத்துக்கு தனி நல வாரியம் பெற்றுக்கொடுத்ததுடன், அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க ஆட்சியாளர்களைச் சந்திப்பது, நீதிமன்றத்தை நாடுவது, சிறைவாசம் என 30 ஆண்டுகளாக சமரசமின்றி போராடிக்கொண்டு, களப் பணியாற்றும் சேவை மனுஷி சீதாவுக்கு ‘சேவை தேவதை’ விருதைச் சூட்டுவதில் மனம் மகிழ்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

கல்வித் தாரகை ஆசிரியர் வசந்தா

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அண்டர்காடு ‘சுந்தரேச விலாஸ்’ உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் ஆசிரியை வசந்தா சித்ரவேல். வீடு வீடாகச் சென்று குழந்தைகளைக் குளிப்பாட்டி பள்ளிக்கு அழைத்து வருவதிலிருந்து, அவர்களுக்கு சிற்றுண்டி வாங்கிக் கொடுப்பது வரை அக்கறை காட்டும் அன்பின் அரசி. பனை ஓலைப் பொருள்கள், மண்பாண்டங்கள் கொண்டு வகுப்பறைகளை நிறைத்து பாடத்தை விளையாட்டாகக் கற்றுக்கொடுக்கும் நல்லாசிரியர். பாலித்தீன் பைகளை தலைக்கு அணிந்தபடி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சொந்தப் பணத்தில் குடைகள் வாங்கிக் கொடுத்த தாயுள்ளம். கொரோனா பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் ரூ.50,000 வழங்கிய முன்னோடி. தூய்மைப் பணியாளர்களுக்கு ஆரத்தியெடுத்து விருந்து வைத்த நற்சிந்தனையாளர். கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 30 லட்சம் ரூபாய் திரட்டி மக்களுக்கு உதவிய கிராமத்து தெரசா. தன் பள்ளியில் உள்ள 56 மாணவர்களின் திறனையும் வெளிக்கொண்டுவந்து அரவணைக்கும் வசந்தா வுக்கு, ‘கல்வித் தாரகை’ விருது வழங்கிச் சிறப்பிக்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

கல்வித் தாரகை ஆசிரியர் ஹேமலதா

விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியை ஹேமலதா. நாடோடி இனக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தது, கடந்த 9 வருடங்களாகத் தமிழ்ப் பாடத்தில் மாணவர்களை 100% தேர்ச்சியடைய வைப்பதென ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்துவருபவர். ஊரடங்கால் கல்வி இணையவழியானபோது, 53 பாடங்களையும் அனிமேஷன் வீடியோக்களாக மாற்றி, பென் டிரைவ் மூலம் மாணவர்களிடம் கொண்டுசேர்த்தார். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஹேமலதாவின் முயற்சியைப் பாராட்டிப் பேச, நாடு முழுவதும் அறியப்பட்டார். கடந்த 25 வருடங்களாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் மன இறுக்கம் தளர்த்தும் ஆலோசகராக அவர்களிடம் உரையாடி வருகிறார். ஊரடங்கில் விளிம்பு நிலை மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்தார். ஆசிரியர் பணி என்பது எதிர்கால சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்புகொண்டது என்பதற்கேற்ப வாழும் ஹேமலதாவுக்கு ‘கல்வித் தாரகை’ விருது வழங்கி பெருமைகொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

சாகச மங்கைகள் முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி

சாகசம் என்பது பயிற்சியினால் செய்யும் வித்தை மட்டுமா என்ன?! மற்றவர்களுக்காக இரங்கும் மனசு நொடியில் சாகசத்தை நிகழ்த்தும் வல்லமை கொண்டதாகிறது. அப்படியான சாகச மங்கைகள்தாம் பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி மற்றும் ஆனந்தவல்லி. அன்று கொட்டரை நீர்த்தேக்கத்தில் துணி துவைத்துக்கொண்டிருந்த இந்தப் பெண்கள், ஆற்றின் ஆழமான பள்ளத்தில் குளிக்கச் சென்று , நீரில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்களின் கூக்குரல் கேட்டு ஓடோடிச் சென்றனர். தண்ணீரில் இறங்கியவர்கள், கைக்கெட்டாத தூரத்தில், தத்தளித்துக்கொண்டிருந்த உயிர்களைக் காக்க வழிதேடி பரிதவித்தனர். ‘ஏய் சேலைய கழட்டி தண்ணியில வீசுங்கடி... ஆளுக்கொரு சேலை முனையப் பிடிச்சாவது கரை சேர்ந்திடுவாங்க’ என்று சொன்னபடியே ஆனந்தவல்லி முதலில் தன் புடவையைக் களைந்து வீச, முத்தம்மாள், தமிழ்ச்செல்வியும் சட்டென தங்கள் புடவைகளைக் களைந்து வீசினர். நான்கு இளைஞர்களில் இரண்டு இளைஞர்களுக்கு, அந்தப் புடவைகள் மறுபிறவி தந்து உயிர் மீட்டன. இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம்வைத்து, துணிந்து தண்ணீரில் இறங்கி, சமயோசித அறிவால் புடவையையே காக்கும் கருவியாகப் பயன்படுத்திய இந்தக் கிராமத்துப் பெண்களின் நெஞ்சுரத்துக்கு ‘சாகச மங்கை’ விருது வழங்கி தலைவணங்குகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

சூப்பர் வுமன் பூரணசுந்தரி ஐ.ஆர்.எஸ்

மதுரையைச் சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி தம்பதியின் மகள் பூரண சுந்தரிக்கு 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கி, பார்வை பறிபோனது. அவருக்குக் கண்களாக மாறிய அவரின் பெற்றோர், தங்களது போராட்ட பேரன்பால், இந்த வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க மகளுக்கு உத்வேகம் கொடுத்தனர். வெற்றியை அடைந்தே தீரும் நெருப்பை மனதுக்குள் வைத்து படிக்கத் தொடங்கினார் பூர்ணசுந்தரி. பள்ளிக்கல்வி முதல் போட்டித் தேர்வுகள்வரை முதன்மை மாணவியாக முன்னிறுத்த அவர் கொடுத்த கடும் உழைப்பு, மழையின்போது மேகங்களுக்கு மேல் சென்று பறக்கும் பறவை சிறகின் துடிப்பு. 2016 முதல்

20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதிய பூர்ணசுந்தரிக்கு, நான்காவது முறையாக அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியபோது, வெற்றியைப் பரிசளித்தது வாழ்க்கை. 2019-ம் ஆண்டின் இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் தேசிய அளவில் 296-வது ரேங்க் பெற்று வாகை சூடியபோது பூர்ணசுந்தரிக்கு வயது 25. இப்போது நாக்பூரில் பயிற்சியில் இருக்கும் இந்த விழிச்சவால் புயலுக்கு ‘சூப்பர் வுமன்’ விருது அவ்வளவு பொருத்தமானது.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

லிட்டில் சாம்பியன் பிரிஷா

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரிஷா, 2 வயதில் தன் பெற்றோர்களைப் பார்த்து யோகா செய்யத் தொடங்கினார். சிரமமான யோகாசனங்களைக் கற்றுத் தேர்ந்தவரின் கவனம் நீச்சல் பக்கம் திரும்பியது. தண்ணீருக்கடியில் இரு கால்களை மடக்கி உடலை வளைத்து முன்னும் பின்னும் நீந்தி, தண்ணீருக்குள் மூழ்கி எனப் பலவிதமான யோகாசனங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளார். மிகவும் கடினமான ‘கண்ட பேருண்டா’ ஆசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்து தனது முதல் உலக சாதனையை 2016-ம் ஆண்டு தொடங்கிய பிரிஷாவின் அடுத்தடுத்த முயற்சிகள் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட், எலைட் உலக சாதனை எனத் தொடர்ந்தன. இதுவரை 41 உலக சாதனைகள் இந்த 11 வயது சிறுமியிடம். பாளையங்கோட்டை மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். அவர்களையும் உலக சாதனைகளைப் படைக்க வைப்பதை தன் லட்சியங்களில் ஒன்றாக எடுத்து பார்வையற்ற மாணவரான கணேஷ் என்பவரையும் உலக சாதனை நிகழ்த்த வைத்துள்ளார். பெரிய பெரிய சாதனையும் சேவையும் செய்யும் பிரிஷாவை `லிட்டில் சாம்பியன்' என்பதில் அளவில்லா மகிழ்வடைகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

யூத் ஸ்டார் அபர்ணா பாலமுரளி

தமிழ் சினிமா நாயகிகளில் ‘பொம்மி’ வித்தியாசமானவள். கனவைத் துரத்தும் நாயகனுக்கு உதவியாக மட்டும் நின்றுவிடாமல் ‘எனக்கும் கனவு உண்டு. அதை நாந்தான துரத்தணும்’ எனச் சொன்னவள். ‘உன்னை ஏன் இத்தனை பேர் வேணாம்னு சொன்னாங்க’ என ஹீரோ கேட்டால், ‘உங்களுக்கு நிறைய பேங்க்ல லோன் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களாமே.. அத பத்தி பேசலாமா?” எனக் கேட்கும் துணிச்சல் மிக்கவள். ‘சூரரைப் போற்று' படத்தில் பொம்மி கதாபாத்திரத்துக்கு உயிர் தந்த அபர்ணாதான் சென்ற ஆண்டின் கோலிவுட் குயின். கமர்ஷியல் பட நாயகிகளிடம் பொதுவாக எதிர் பார்க்கப்படும் பல இலக்கணங்கள் அபர்ணாவிடம் கிடையாது. தன் நடிப்பால், அதை மீறிய என்டர் டெய்ன்மென்ட்டைத் தந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அடிப்படையில் ஆர்க்கிடெக்ட்டான அபர்ணாவுக்கு கிளாஸிக்கல் டான்ஸும் தெரியும்; நன்றாகப் பாடவும் தெரியும். இந்தப் பன்முகத் திறமையால் ரசிகர்களின் அன்பை அள்ளிய அபர்ணா ‘யூத் ஸ்டார்’தான்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

பெஸ்ட் மாம் சாந்தா

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியிலிருந்து சென்று ஆஸ்திரேலிய சிட்னி கிரவுண்டில் வெற்றியாட்டம் ஆடித்தீர்த்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் கிராமத்து தாய், சாந்தா. இன்று வெற்றிமாலைகள் சூட ஆரம்பித்திருக்கும் தன் மகனின் நேற்றுகளை, தங்கள் குடும்பத்து வறுமைக்கு இடையிலும் உரமாக்கியவர். விசைத்தறி கூலித் தொழிலாளியான தன் கணவருடன் தானும் அதே வேலைக்குச் சென்றார் சாந்தா. ஐந்து பிள்ளைகளையும் பசியாற்றி வளர்க்க அந்த வருமானம் போதாமல் போக, தள்ளுவண்டி கடைபோட்டு குடும்பத்தைத் தாங்கினார். தன் பிள்ளையின் விருப்பத்துக்கும் உழைப்புக்குமான எதிர்காலம் அவனுக்குக் கிடைக்கட்டும் என மடிசாய்த்துக்கொண்டவர். இடது கை வேகப்பந்தாளர் என்று டிவியில் குறிப்பிடும்வரை கிரிக்கெட்டில் தன் மகனின் ஆட்டம் என்ன என்பது பற்றிகூட தெரியாது இந்த எளிய தாய்க்கு, ஊர் மைதானங்களில் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்த கிராமத்து இளைஞன், விரைவில் உலகக் கோப்பையில். கந்தலில் முத்துச்சரம் கட்டிவைத்து காத்த இந்த அம்மாவுக்கு, ‘பெஸ்ட் மாம்’ விருது வழங்கி வணங்குகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

பசுமைப்பெண் எம்.பரிமளா

விவசாயி என்றால் ஆண்களாகவே அறியப்படும் நிலைமை மாறி சமீப ஆண்டுகளாக பெண் முகங்களும் கவனிக்கப்படுகின்றன. பரிமளா, அவர்களில் முன்னத்தி ஏர். திருப்பூர் மாவட்டம் முத்தூரைச் சேர்ந்த பரிமளா, நம்மாழ்வார் வழியில் விவசாயத்தை வாழ்வியலாக அமைத்துக்கொண்டவர். 6 ஏக்கரில் இயற்கை விவசாயம், 4 ஏக்கரில் ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுப் புழு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, இவற்றுடன் தனக்கும் ஒரு வீடு எனப் பல்லுயிர் சுழற்சியுடன் பசுமை ராஜாங்கம் அமைத்துள்ளார் பரிமளா. சக விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தன் வளத்தைப் பகிர்ந்துகொள்கிறார். ‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற விதியை, ரசாயன உரத்துக்கு மாற்றாக்கிக் காட்டி அசத்தியிருக்கிறார். கொரோனா காலத்தில் விளைபொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் திணறிய சக விவசாயி குறித்து முகநூலில் பதிவிட்டு உதவியிருக்கிறார். எடுப்பது மண்ணில்; கொடுப்பது மக்களுக்கென வாழும் இந்த விவசாயிக்கு ‘பசுமைப்பெண்’ விருதைச் சேர்ப்பதில் எல்லையில்லா இன்பம் கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

வைரல் ஸ்டார் `அராத்தி' பூர்ணிமா

`அராத்து' என்பார்களே… அப்படி `அராத்தி'. பூர்ணிமாவுக்கு யூடியூப் என்பது கனவோ, டைம் பாஸோ அல்ல. சென்னையில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை இழந்தார். கல்விக்கடன் துரத்த ஏற்கெனவே அனுபவமுள்ள குறும்பட நடிப்பை முழுநேர தொழிலாக்கிக்கொண்டார். வாடகை அதிகமென்பதால் நண்பர்களுடன் சென்னையில் ஒரே வீட்டை ஷேர் செய்து கொண்டு, யூடியூபே சரணம் என சுழல ஆரம்பித்தார். விளைவு, `அராத்தி சேனல்' சென்சேஷன் ஆனது. மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கடந்தது. பூர்ணிமா வரும் வீடியோவென்றால் லட்சங்களில்தான் வியூஸ். ‘கருவண்டு’ எனச் சொல்பவர்களைப் பார்த்தவர், இப்போது ‘பிளாக் டைமண்டு’ என்பவர்களையும் பார்க்கிறார். கோடம்பாக்கத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டாலும், `யூடியூபை விட மாட்டேன்' எனச் சொல்லும் அராத்தி தமிழக சிறுநகரப் பெண்களின் இன்ஸ்பிரேஷன். இந்த பிளாக் டைமண்டுக்கு `வைரல் ஸ்டார்' விருதுடன் லைக்ஸை அள்ளித் தருகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

இலக்கிய ஆளுமை கே.வி.ஜெயஸ்ரீ

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயின் தந்தை தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர். சேலத்தில் பிறந்தார் ஜெயஸ்ரீ. பின்னர், திருவண்ணாமலைக்குக் குடிவந்தது ஜெயஸ்ரீயின் குடும்பம். `இதுதான் என் பெயர்’ என்ற தலைப்பில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்க்க, அதற்கு கிடைத்த வரவேற்பு ஜெயஸ்ரீயை மேலும் எழுத்தில் ஆர்வத்துடன் ஈடுபட வைத்தது. தமிழ்ச் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட மனோஜ் குரூரின் மலையாள நூலைப் படித்து பிரமித்துப்போன ஜெயஸ்ரீ, அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். `நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற அந்த நூலுக்கு சாகித்ய அகாடமியின் 2019-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்தது. தமிழாசிரியரான ஜெய, தன் வாழ்வின் எல்லா பிரச்னைகளுக்குமான வடிகாலாக எழுத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மொழிபெயர்ப்பு பணியை அக்கறையோடு, அழுத்தமாகச் செய்துவரும் இவருக்கு `இலக்கிய ஆளுமை’ விருதை அளிப்பதில் அவள் விகடன் பெருமை கொள்கிறது.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

செயல் புயல் ராஜேஸ்வரி

1999-ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ ஆகப் பதவிக்கு வந்த சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பணிக்குச் சேர்ந்ததிலிருந்து பெண்கள் நலனில் கவனம் செலுத்துவதே லட்சியம். நள்ளிரவில், பனிக்குடம் உடைந்து உதவிக்கு யாருமின்றி தவித்த பெண்ணை தானே தூக்கி வந்து தன் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தது, மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்க இயலாமல் தவித்த ஆதரவற்ற பெண்ணுக்கு சான்றிதழ் பெற்றுத் தந்ததுடன் சிறு கடை ஒன்றை வைத்துக் கொடுத்து வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தது, மனநலம் பாதிக்கப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் சாலைகளில் காணப்படும் பெண்களைக் காப்பங்களில் சேர்ப்பது எனச் சமூக நலன் சார்ந்து இயங்கி வரும் ராஜேஸ்வரி, கொரோனா நேரத்தில் இன்னும் மின்னல் வேகத்தில் சூழல ஆரம்பித்தார்.

2020 மார்ச் 24-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து சுகாதாரத்துறை பணியாளர்களுடன் இணைந்து, ஆதரவற்றவர்களை அரசுக் காப்பகங்களுக்கு அழைத்துச் செல்வது, தினமும் 50 ஆதரவற்ற மக்களுக்கு சக காவல் பணியாளர்களுடன் இணைந்து உணவு சமைத்து வழங்கியது, தெருவில் கிடந்த இறந்தவரின் உடலைப் பார்த்து, கொரோனாவுக்கு மக்கள் பயந்து ஒதுங்கியபோது தானே முன்வந்து அந்த உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்தது என மக்களின் நலனுக்காக தொடர்ந்து இயங்கி வரும் தனித்துவ ஆளுமையான ராஜேஸ்வரிக்கு ‘செயல் புயல்’ விருது வழங்கி பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

இளம் நம்பிக்கை ஐஸ்வர்யா

பள்ளியில் படித்தபோது தான் வசித்த அடையாறு ஏரியாவில் புற்றுநோய் மருத்துவமனையின் வாசலில் காத்திருக்கும் புற்றுநோயாளிகளைப் பார்த்து மனமிரங்கி அவர்களுக்காக உதவத் தொடங்கியவர் ஐஸ்வர்யா. தங்க இடமின்றித் தவித்த புற்றுநோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தன் தோழிகளுடன் சேர்ந்து பாக்கெட் மணியிலிருந்து செலவழித்து வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார். கீமோதெரபி மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து உடல் பலவீனமடையும் என்பது தெரிந்து அவர்களுக்கும் தங்கள் செலவிலேயே பால், காய்கறி, பழங்கள் என வாங்கிக் கொடுத்தது, நேரம் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளுடன் பேசி, சிரித்து மகிழ்ந்து அவர்களின் வலியை மறக்கச்செய்தது என இவரது வயதுக்கு மீறிய சேவை இன்றும் தொடர்கிறது. புற்றுநோய் மருத்துவத்துக்கு அதிக செலவாகும். ‘பணமிருப்பவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்; இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்’ என யோசித்ததோடு நில்லாமல், அதற்காக வேலை செய்து, நண்பர்களையும் களமிறக்கிய ஐஸ்வர்யா ‘இளம் நம்பிக்கை’ தானே?

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

சிங்கப்பெண் விலாசினி

விலாசினி... அச்சுறுத்தும் கடல் அலைகளுக்கு அஞ்சாமல் சர்ஃபிங்கில் (கடலலைச் சறுக்கல்) அதிரடி காட்டிக்கொண்டிருக்கும் ஆச்சர்யப் பெண். ‘தன் மகளுக்கு ஏதாவதொரு விளையாட்டைக் கற்றுத் தர வேண்டும்’ என்று விலாசினியின் அம்மா எடுத்த முடிவு, எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே விலாசினியை நீச்சல் குளத்தில் நீந்தவிட்டது. 10 வயதிலேயே தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று, தன் நீச்சல் திறமையை உலகுக்குப் பறைசாற்றினார். பெண்கள் அதிகம் கலந்துகொள்ளாத சர்ஃபிங்கில் சாதிக்க விரும்பினார். ஒரே வருடத்தில் ஏஷியன் சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறினார். 2015-ல் நடந்த ஏஷியன் சர்க்யூட் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ளும் முதல் பெண்ணாக கால்பதித்த இவர், 2019-ல் நடந்த ஏஷியன் சர்க்யூட் போட்டியில் 'தேர்டு ரன்னர் அப்' ஆக வந்து மிளிர்ந்தார். உலக சாம்பியன் பட்டமே இவரது அடுத்த இலக்கு. த்ரில்லிங்கான விளையாட்டு ஆண்களுக்கு மட்டுமானது என்ற பிம்பத்தை உடைத்து சர்ஃபிங்கில் மிளிரும் விலாசினிக்கு `சிங்கப்பெண்' விருதை வழங்கி மகுடம் சூட்டுகிறது அவள் விகடன்.

அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்

வெற்றிப்படை மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

புறக்கணிப்பையே பார்த்துவந்த ஒரு சமூகம் கடும் உழைப்பால் பெரும் வெற்றியைக் கட்டியிழுக்கும்போது, உலகின் கழுத்து சட்டென திரும்பி கவனிக்கிறது. ‘இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகள் நடத்தும் கூட்டுறவு பால் பண்ணை’ என்ற பெருமையுடன் 30 திருநங்கைகள் சேர்ந்து சென்ற வருடம், தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு சந்தீப் நகரில் ஆரம்பித்தனர். ‘உழைக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று காலம்தோறும் கேட்டு ஓய்ந்த குரல்களின் பிரதிநிதிகளாக, 30 பெண்களும் பண்ணையில் உழன்றுழைத்து

30 கறவை மாடுகளில், மாதம் 2 லட்சம் வருமானம் காட்டி அசத்தினார்கள். ‘தரமான பால் உற்பத்தி செய்த கூட்டுறவு சங்கம்’ என்று தூத்துக்குடி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்கள். மாடுகளுக்கான லோன் தவணையாக மாதம் ரூபாய் 90,000 தவறாது கட்டிவரும் இவர்களின் அர்ப்பணிப்பு, அடுத்த வாசலாக ஆவின் பார்லர் நடத்தும் அனுமதியை இவர்கள் வசமாக்கியிருக்கிறது. புறப்பட்டுவிட்ட புயலை நிறுத்தமுடியுமா என்ன?! பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான தையல் பயிற்சிப் பள்ளி தொடங்கும் திட்டத்தை இப்போது தயார் செய்துவருகின்றன இந்த மகிழ்ச்சி முகங்கள். ஒடுக்கப்பட்ட தங்களின் விதி உடைத்து வலிமையான வெற்றியை ஈன்றிருக்கும் இவர்களுக்கு ‘வெற்றிப்படை’ விருது வழங்கி மகிழ்ச்சியைத் தனதாக்கிக்கொள்கிறது அவள் விகடன்.