லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: மணக்குது மருதாணி நேசம்!

அவள் வாசகி
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் வாசகி

இது பொற்காலம்

படித்து முடித்து தனியார் கல்லூரியில் ஒரு வருடமாக பயிற்சியாளராகப் பணிபுரிகிறேன். வேலைக்குச் சேர்ந்தபின் இடைவெளியின்றி ஓடிக்கொண்டு இருப்பதாகத் தோன்றியது.

கடந்த ஒரு வருடத்தில் அதிகபட்சமாக பொங்கலுக்கு ஒரு வாரம் விடுமுறை. மற்றபடி வேலை வேலை வேலை என்றே மனம் இருந்த நேரத்தில், எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் இந்த 60 நாள்கள்.

இப்போது வாழ்க்கையே அர்த்தம் உள்ளதாக மாறிவிட்டதுபோலத் தோன்றுகிறது. அன்றாட வேலைகளை மட்டுமின்றி வாழ்க்கையும் சேர்த்துக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். சொந்தங்கள் மனதளவிலும் நெருங்கி இருப்பதுபோல ஓர் உணர்வு.

எதிர்வீடுதான் என்றாலும் சித்தப்பா, தாத்தா வீட்டுக்கு அடிக்கடி செல்ல மாட்டேன். இந்த லாக் டெளனில்தான் அவர்களுடன் பேசி இணைய வாய்ப்பு கிட்டியுள்ளது. சித்தப்பாவின் தொழில் யுக்திகளை ஆர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன். சித்தியிடம் பூ கட்ட கற்றுக்கொண்டது ஒரு வேடிக்கை அனுபவம். தாத்தா கடந்த கால நினைவுகளை அவ்வப்போது பகிர்கிறார். நானும் அதை விரும்பிக் கேட்கிறேன்.

அவள் வாசகி: மணக்குது மருதாணி நேசம்!

தங்கையிடம் உடற்பயிற்சி கற்றுக்கொள்கிறேன். நானும் அவளும் பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த பாவாடை தாவணியை அணிந்துகொண்டோம். சுட்டிப் பருவம் மீண்டும் எட்டிப் பார்ப்பதுபோல இருக்கிறது.

மருதாணியை அரைத்து நான், தங்கை மற்றும் அம்மா வைத்துக்கொள்ளும்போது அப்பாவும் ஆசையாக கை நீட்டுகிறார். வீடு முழுக்க மணக்கிறது மருதாணியும் நேசமும்.

சமையல் முயற்சியில் முதன்முறையாக இறங்கியிருக்கிறேன். எனக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன் வீட்டுவேலை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த என் அம்மாவுக்கும் இது பொற்காலம்!

உறவுகள்: மனதால் நெருங்கியுள்ளோம்!

நான் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறேன். அண்ணன் தம்பி உட்பட அனைவரும் குடும்பத்தோடு சென்னையில்தான் உள்ளனர். அம்மா இறந்துவிட்டதால் அப்பா தம்பி வீட்டிலுள்ளார். அம்மாவின் தங்கை வீடு (என் சித்தி வீடு) கிராமத்தில் உள்ளது. சித்தி முன்பே இறந்துவிட்டார். சித்தப்பாவும் லாக் டௌனுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இறப்புக்கு நாங்கள் அனைவரும் சென்றாலும் லாக் டௌன் ஆனதிலிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல இயலவில்லை.

அவள் வாசகி: மணக்குது மருதாணி நேசம்!

இப்போது அவர்கள் மனத்தைத் தேற்றும் வகையில் தினமும் வீடியோ காலில் பேசுவதோடு, அந்தாக்ஷரி போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுகிறோம். அவர்களும் சற்று கவலை மறந்து பாசிட்டிவ்வாக உணர்கின்றனர். வீடியோ காலில் பேசுவது நேரில் பேசுவதுபோல இருப்பதால், நாங்கள் பிரிந்திருந்தாலும் மனத்தால் நெருங்கியுள்ளதாக உணர்கிறோம். இதனால் எங்கள் மனபாரமும் குறைகிறது.