Published:Updated:

முதல் பெண்கள்: ‘பத்மவிபூஷண்’ பெற்ற முதல் பெண் நடனக்கலைஞர்... பாலசரஸ்வதி

பாலசரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
பாலசரஸ்வதி

1918 மே 13 அன்று பாரம்பர்யக் கலைக் குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக பாலசரஸ்வதி பிறந்தார்.

முதல் பெண்கள்: ‘பத்மவிபூஷண்’ பெற்ற முதல் பெண் நடனக்கலைஞர்... பாலசரஸ்வதி

1918 மே 13 அன்று பாரம்பர்யக் கலைக் குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக பாலசரஸ்வதி பிறந்தார்.

Published:Updated:
பாலசரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
பாலசரஸ்வதி
“பாட்டி ஒரு விடுகதை, புரியாத புதிர் என்று உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று நடனக்கலைஞர் பாலசரஸ்வதி குறித்து பேசத் தொடங்குகிறார் அவரின் பேரன் அனிருத்தா நைட்.

‘`ஆனால், உண்மையில் பாட்டி மிகவும் எளிமையானவர். தன் நட்புகளை வெகு கவனமாகக் கையாள்பவர். அந்தக் காலத்தின் அறிவாளர்களிடம் நட்புகொண்டிருந்தவர்’’ என்கிறார் அனிருத்தா. தன் வாழ்வை நடனத்தில் வரலாறு ஆக்கிய ‘பத்மவிபூஷண்’ டி.பால சரஸ்வதியின் பெருமைகள், காலக் கல்வெட்டுகள்!

1918 மே 13 அன்று பாரம்பர்யக் கலைக் குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக பாலசரஸ்வதி பிறந்தார். தாய் ஜெயம்மாள், பாட்டி வீணை தனம்மாள் என்று தலைமுறைகளாக இசைத்துறையில் கோலோச்சிய தஞ்சையின் இசை மரபுக் குடும்பம். பாலசரஸ்வதியின் தந்தை மொடராபு கோவிந்தராஜுலு சென்னை, ராயப்பேட்டையின் ஜமீன்தாராக இருந்தவர்.

இசை வேளாளர் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பால்யம் பயிற்சியிலேயே கழிந்துபோகும். பாலசரஸ்வதிக்கும் அதுவே நிகழ்ந்தது. 3 வயது முதல் 20 வயதுவரை தினமும் 16 மணி நேரம் கடும் நடனப் பயிற்சி என்பதால், விளையாடக்கூட நேரமில்லாத குழந்தைப் பருவம்.

பாலசரஸ்வதி
பாலசரஸ்வதி

தஞ்சை நட்டுவனார் பரம்பரையைச் சேர்ந்த கே.கந்தப்பப் பிள்ளையிடம் சிறுமியாக நடனம் கற்றுக்கொண்டார் பால சரஸ்வதி. அவர் குடும்பம் ராயப்பேட்டை, ராமகிருஷ்ணா செட்டி தெருவில் வசித்து வந்தது. தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் என்று மூன்று மொழிகள் கற்றுத்தேர்ந்தார். பாலசரஸ்வதியிடம் நடனம் என்ற பெரும் சொத்து ஒளிந்திருந்ததை அந்தக் குடும்பம் கொண்டாடி வெளிக்கொணர்ந்தது. தாய் ஜெயம்மாள் மகளது நடனப் பயிற்சியின்போது அவருடனே அமர்ந்திருப்பதுண்டு. 7 வயதுச் சிறுமி பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் 1925-ம் ஆண்டு நடந்தது. `நடன உலகில் ஒரு புதிய விண்மீன் தோன்றிவிட்டது’ என்று கொண்டாடினார்கள் மக்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கந்தப்பப் பிள்ளைக்குப் பின் சின்னையா நாயுடுவிடம் ஸ்லோகங்கள், அபிநயங்கள், மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் என்று தன் தளத்தை விரிவாக்கிக்கொண்டார் பாலசரஸ்வதி. அவரது அபிநயங்கள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. மேடை நிகழ்ச்சிகளில் கொடிகட்டிப் பறந்தார்.

1934-ம் ஆண்டு, அனைத்து வங்க இசை மாநாட்டில் கலந்துகொள்ள 16 வயதே நிரம்பிய பாலசரஸ்வதிக்கு வாய்ப்புக் கிட்டியது. கொல்கொத்தாவில் நடந்த இம்மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து மேடையில் பாலசரஸ்வதி முதன்முதலில் ஆடினார். அந்தப் பாடலின் முதல் பத்திதான் (ஜன கண மன) பின்னாளில் நம் நாட்டுப்பண் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்த இளைஞர் சத்யஜித் ரே, பின்னாளில் மாபெரும் திரைப்பட இயக்குநராக உயர்ந்த சூழலில், ‘பாலா’ என்ற பெயரில் தன் ஆதர்ச நடனக் கலைஞரின் வாழ்க்கையைக் குறும்படமாக எடுத்தார்.

பாலசரஸ்வதியின் நடனத்தைக்கண்டு மெய்மறந்துபோனது வட இந்தியா. நடனக் கலைஞர் உதயசங்கர் பாலசரஸ்வதியின் சிறந்த நண்பர் மற்றும் வழிகாட்டியானார். அல்மோராவில் பாலாவின் குருவான கந்தப்பப் பிள்ளையுடன் இணைந்து நடனப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.

1934 ஜனவரி 1 அன்று சென்னை சென்ட்ர லுக்குப் பின்பகுதியில் அமைந்த பூங்கா ஒன்றில் பாலசரஸ்வதி நடனமாடியபோது, இந்தியாவின் முதல் பொருளாதாரத்துறை அமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியை முதன்முதலில் சந்தித்தார். இயல்பிலேயே புத்திசாலிகள் மேல் வாஞ்சை கொண்ட பாலசரஸ்வதியை சண்முகத்துக்கும் பிடித்துப்போனது. இருவரும் காதல் வயப்பட்டனர். 1936-ம் ஆண்டு, குடும்பத்தினர் அனுமதி பெற்று தன்னைவிட 26 வயது முதியவரான சண்முகத்துடன் பாலசரஸ்வதி வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த பந்தத்தின் பெருமை பேச இவர்களுக்கு ஒரு மகள் (லட்சுமி) பிறந்தாள்.

1947-ம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடனம் ஆடும் பாரம்பர்யக் கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ``இத்தனை காலமாக ஆடப்பட்டுவந்த `சதிர்’ எனும் நடனத்தை, பரதம் ‘சுத்தம்’ செய்கிறது’’ என்றபடி வந்துநின்ற பெண்களை பாலசரஸ்வதி சமாளிக்க வேண்டியிருந்தது. “நடனத்தில் ‘சுத்தம்’ செய்ய எதுவுமில்லை. உள்ளார்ந்தே நடனம் தூய்மையானது. நடனக் கலைஞர் ஒரு யோகியைப்போல கலைக்குத் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும், ஆடை, ஆபரணம், மேக்கப், புதிய சொல் தோரணங்கள் என்று எதுவும் இல்லாமலே அர்ப்பணிப்பு என்ற ஒன்று மட்டுமே இருந்தாலே போதும், நடனம் முழுமை பெற்றுவிடும்” என்று தொடர்ந்து பாலசரஸ்வதி சொல்லிவந்தார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மியூசிக் அகாடமியில் பாலசரஸ்வதியின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 1953-ம் ஆண்டு ஆர்.கே.சண்முகம் இறந்துபோக, `இனி நடனம் ஆடுவதில்லை' என்று பாலசரஸ்வதி முடிவெடுத்தார். அவர் நண்பர் வி.ராகவன் அவரை சமாதானம் செய்து, மியூசிக் அகாடமியில் பாலசரஸ்வதி நடனப் பள்ளியைத் தொடங்கினார். எம்.எஸ், ராகவன் என்று சில நண்பர்கள் பாலாவுடன் நின்றனர். 1957-ம் ஆண்டு, பாலசரஸ்வதிக்கு ‘பத்மபூஷண் விருது’ வழங்கப்பட்டது.

டச்சு நடனக் கலைஞர் பெரில் டி சோட் பாலசரஸ்வதியைச் சந்தித்து, ‘இனி ஆடப்போவதில்லை’ என்று என்றிருந்தவரிடம், மேலைநாடுகளில் நாட்டியமாட வயது தடையில்லை என்று பேசிக் கரைத்தார். பாலா மீண்டும் மேடையேறத் தொடங்கினார். 1962-ம் ஆண்டு, அமெரிக்கா சென்றவரின் வாழ்க்கை, மெல்ல மாறிப்போனது. மேலை உலகம் நடனத்தின் தங்கமகளைக் கொண்டாடிக் களித்தது. லண்டன், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் பாலசரஸ்வதியின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் இந்தியா என இரு நாடுகளிலும் பாலசரஸ்வதி நடனப் பள்ளிகளில் நடனம் கற்றுத்தரத் தொடங்கினார்.

மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி விருதை’ப் பெற்ற முதல் பெண் நடனக் கலைஞர் என்கிற கௌரவமும், சங்கீத நாடக அகாடமியின் ‘ரத்ன புரஸ்கார்’ விருதும் பெற்றார். 1977-ம் ஆண்டு ‘பத்மவிபூஷண் விருது’ பெற்றதன் மூலமாக நாட்டின் இரண்டாவது உயரிய விருதைப் பெற்ற முதல் பெண் நடனக் கலைஞர் எனும் பெயரைப் பெற்றார்.

நீரிழிவு நோயால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட பால சரஸ்வதி, 1984 பிப்ரவரி 9 அன்று சென்னையில் மரணமடைந்தார்.

2010-ம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. அமெரிக்காவின் `மாற்ற முடியாத நடனப் புதையல்கள் 100’ பட்டியலில் 2000-ம் ஆண்டு இடம்பிடித்தார். இன்று பாலசரஸ்வதியின் கலையை அமெரிக்காவிலும் சென்னையிலும் நடனப் பள்ளிகள் மூலம் பேரன் அனிருத்தா முன்னெடுத்துச் செல்கிறார். நடனத்தின் மூலம் பலரது உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் அபிநய பாலசரஸ்வதி.

`அவர் புத்தி பிடித்திருக்கிறது!'

பாலசரஸ்வதி, ஆர்.கே.சண்முகம் பற்றிப் பேசும்போது, “தன்னைவிட 26 வயது மூத்தவரான, தன்னைவிட இரு மடங்கு வயதானவருடன் இணைந்து வாழ்ந்தார் என்பது பாட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. இருவரும் நல்ல பார்ட்னர்கள், அவ்வளவுதான். அவரிடமிருந்து பாட்டி எதையும் எதிர்பார்க்கவில்லை. ‘அவர் மிகச் சிறந்த அறிவாளி. அவருக்குப் பிறக்கும் குழந்தை பெரும் புத்திசாலியாக இருக்கும் என்று கருதியதால்தான் அவருடன் வாழ ஆசைப்பட்டேன். எனக்கு அவர் புத்தி பிடித்திருக்கிறது’ என்றிருக்கிறார் பாட்டி. ஒரு கட்டத்தில் அவரைப் பிரிந்தபோதும், அவரிடமிருந்து எந்த உதவியும் வேண்டாமென மறுத்திருக்கிறார்’’ என்கிறார் அனிருத்தா.

‘சரியாக ஆடாவிட்டால் சங்கடம்'

1958-ம் ஆண்டு, ரஷ்யாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஆட பாலசரஸ்வதிக்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு. கடன் வாங்கி தன்னுடன் வரும் குழுவினருக்கு கோட் சூட் தைத்துத் தந்து தயாரானார் பாலா. விமானப் பயணத்துக்கு முந்தைய நாள் அவரது நிகழ்ச்சியை ரத்து செய்து, ‘சரியாக ஆடாவிட்டால் சங்கடம்' என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், மிருணாளினி சாராபாய். கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார் பாலா. “இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பாட்டி தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது” என்று வருந்துகிறார் அனிருத்தா.