தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நட்பினால் ஜெயித்த கதை!

 பிரேமா - யசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேமா - யசோதா

நம்பிக்கை

கோயிலில் யதேச்சையாகச் சந்தித்து தோழிகளான இரண்டு பெண்கள், பதினைந்து வருடங்களாக இணைபிரியாத தோழிகளாக வலம் வருவதும், கடந்த ஆறு வருடங்களாகத் தொழிலிலும் ஒற்றுமையாகப் பயணித்து, வெற்றிக்கொடி நாட்டிவருவதும் இதுவரை நாம் கேட்டிராத ஒரு கதை!

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியில் ‘இந்து ஃபாஸ்ட் ஃபுட்’ கடை நடத்திவரும், பிரேமாவும் யசோதாவுமே அந்த வெற்றிப் பெண்கள். வறுமையில் தவித்த இருவர் குடும்பமும் இந்தப் பெண்களின் கடின உழைப்பால் இப்போது நல்ல நிலைக்கு வந்திருக்கிறது.

“எனக்குச் சொந்த ஊர் மயிலாடி. யசோதா வுக்கு கடவூர் பக்கமுள்ள ரெட்டியப்பட்டி. 15 வருஷத்துக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் அவங்கங்க ஊர் பெண்களோடு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குப் போனோம். அங்கதான் ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம். பக்திமயமா ஆரம்பிச்ச பேச்சு, அப்படியே குடும்ப விவரமெல்லாம் தெரிஞ்சுக்க வெச்சது. இனி நீயும் நானும் பிரியவே கூடாதுன்னு எண்ண வெச்சது. அதுக்கப்புறம் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். அப்புறம் எனக்கு ரமேஷ்குமார் என்பவரோட திருமணம் ஆச்சு. யசோதாவை, ராமன் என்பவருக்குத் திருமணம் பண்ணி வெச்சாங்க.

 பிரேமா - யசோதா
பிரேமா - யசோதா

எங்க கணவர்கள் நடத்தின பிசினஸ் லேயும் பலத்த அடி, பொருளாதார நெருக்கடின்னு கஷ்டம்கூட ஒண்ணாவே அமைஞ்சது. குடும்ப கஷ்டத்தை தூக்கி நிறுத்த நாம பிசினஸ் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சோம். நானும் அவளும் பத்தாவதுதான் படிச்சிருந்தோம். ரெண்டு பேருமே நல்லா சமைப்போம். அதனால அதையே பிசினஸா செய்ய முடிவு பண்ணினோம்’’ என்று ஃபிரெண்ட்ஷிப் டு பிசினஸ் ஐடியாவை சொன்னார் பிரேமா.

“ `அண்ணன் தம்பிகள் சேர்ந்து பிசினஸ் பண்ணினாலே பிரச்னை வருது... இதுல ரெண்டு பெண்கள் சேர்ந்து செய்தா விளங்கின மாதிரிதான்'னு முட்டுக்கட்டை போடுற மாதிரி நிறைய பேர் பேசினாங்க. அதுக்கெல்லாம் நாங்க சளைக்கலை. கடன் வாங்கி தள்ளுவண்டி வாங்கினோம். பானி பூரி, காளான், சிக்கன் நூடுல்ஸ்னு அந்தி நேர உணவகத்துக்கான அயிட்டங்களாக லிஸ்ட்ல சேர்த்தோம். எங்களுக்குச் சில உணவுகள்ல அனுபவம் இல்லாததுனால பீகார் இளைஞரை வேலைக்கு அமர்த்தினோம். ஆனா, தொழில்ல நஷ்டம். அவ்வளவுதான் எல்லாரும் ‘நாங்கதான் சொன்னோம்ல’னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்துலேயும் ‘மனச விட்றாதீங்க. நீங்க ரெண்டு பேர் மட்டும் பிசினஸ்ல இறங்குங்க. வேற யாரையும் நம்பாதீங்க’னு எங்க கணவர்கள்தான் சப்போர்ட் பண்ணினாங்க” என்கிற யசோதாவின் கணவர் திருப்பூர் வேலையிலும், பிரேமாவின் கணவர் பி.எஸ்.என்.எல் மொபைல் சிம் விற்பனையிலும் இருப்பவர்கள்.

 பிரேமா - யசோதா
பிரேமா - யசோதா

‘‘அப்புறம் நாங்களே எல்லா உணவுகளையும் சமைக்கக் கத்துக்கிட்டோம். மசாலா, எண்ணெய் எல்லாத்தையும் தரமா பயன்படுத்தினோம். மெல்ல மெல்ல வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ கரூர்ல இருந்துகூட எங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வர்றாங்க. செலவு போக, ஒவ்வொருவருக்கும் மாதம் 35,000 ரூபா கிடைக்குது. முன்னாடி கேலி பேசினவங்க எல்லாம், இப்ப எங்க வளர்ச்சியையும் ஒற்றுமையையும் பார்த்து மூக்கு மேல விரல் வெக்கறாங்க.

எங்களுக்குள்ளும் சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும். ஆனா, ‘அதைவிட எங்களுக்கு நட்பு முக்கியம்’னு கொஞ்சநேரத்திலேயே ராசியாயிடுவோம். தினமும் மாலை நாலு மணிக்கு கடையைத் தொறந்தா இரவு பத்தரை வரைக்கும் வியாபாரம் இடைவிடாமல் நடக்கும். தொழில்ல நாங்க சறுக்க சந்தர்ப்பம் அமையலாம். ஆனா, எங்க நட்பு எந்த சூழல்லயும் சறுக்காது!” உறுதியாகச் சொல்லி முடிக்கிறார் யசோதா.

அசத்துங்கள் தோழிகளே!