Published:Updated:

''வாழ்க்கையில் சலிப்பு தோன்றினா இந்த வாக்கியத்தை நினைச்சுக்குவேன்!''- பாரதிபாஸ்கர் #Motivation

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

எழுத்தாளர் சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன் 'ஜூனியர் விகடனி'ல் வெளியான 'ஏன், எதற்கு, எப்படி?' பகுதியில் அதைப் பற்றி எழுதியபோதுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

பாரதி பாஸ்கருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பட்டிமன்ற பேச்சுக்களால் பலதரப்பட்ட மக்களையும் கட்டிப்போடுகிற சுவாரஸ்யமான பேச்சு அவருக்குச் சொந்தமானது. அப்பா முதல் ஆம்ஸ்ட்ராங் வரை எவரைப் பற்றி வேண்டுமானாலும் சரளமாகப் பேசக்கூடியவர். சமூகத்துக்கும் மனித மதிப்பீடுகளுக்கும் உள்ள இணைப்பை சுவாரஸ்யமான சம்பவங்களின் வாயிலாக சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர். அவரை 'வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காகச் சந்திதோம்.

Bharathi Baskar
Bharathi Baskar

''நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை திருவல்லிக்கேணியில்தான். 'விவேகானந்தர் இல்லம்' பக்கத்துல இருக்குற 'லேடி வெலிங்டன் ஸ்கூல்'லதான் படிச்சேன். படிக்கிற காலத்தில் படிப்புடன் சுவாரஸ்யமிக்க கதைகளைப் படிக்கிறது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என்னோட ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு அப்பா, சின்னச்சின்ன கதைகள் உள்ள ஆங்கிலப் புத்தகங்களான 'டாம் சாயர்', 'ஈசாப் டேல்ஸ்', 'ஆலீஸ் இன் வொண்டர்லேண்ட்', மாதிரி புத்தகங்கள் நிறைய வாங்கித் தருவார்.

Alice in wonderland
Alice in wonderland

அவை வண்ண வண்ணப் படங்களுடன் படக் கதைகளாகவும் இருக்கும். புதிதாக வாங்கி வரப்பட்ட அந்தப் புத்தகங்களின் வாசனையே ஒரு சுகமான அனுபவம். அப்படி நான் வாசித்த புத்தகங்கள் பல. அவற்றுள் 'லூயிஸ் காரல் 'எழுதிய 'ஆலீஸ் இன் வொண்டர் லேண்ட்' எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அந்தப் புத்தகத்தை நான் சிறு பிராயத்தில் எத்தனையோ முறை வாசித்திருக்கிறேன்.

ஒரு கதையாக பால்யகால குழந்தைகளுக்கே உரிய சந்தோஷ நிகழ்வாகத்தான் அது எனக்குள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், எழுத்தாளர் சுஜாதா, பல ஆண்டுகளுக்கு முன் 'ஜூனியர் விகடனி'ல் வெளியான 'ஏன், எதற்கு, எப்படி?' பகுதியில் அதைப் பற்றி எழுதியபோதுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

Sujatha
Sujatha

கதைப்படி ஆலீஸ், ஓர் அதிசய உலகத்துக்குள் போகிறாள். அங்கு அவள் பல அதிசயங்களைப் பார்க்கிறாள். அந்தப் பயணத்தின்போது அவள் மனத்தில் எழும் கேள்விகளுக்கு பூனை ஒன்று பதில் சொல்கிறது.

ஒருமுறை அவள், தான் தொலைந்துபோய்விட்டது போல உணர்கிறாள். அதனால் அந்தப் பூனையிடம், 'இங்கிருந்து நான் எப்படி வெளியில் போவது?' (which way I go from here) எனக் கேட்கிறாள். அதற்கு அந்தப் பூனை ' அது, நீ எங்கு போக விரும்புகிறாய் என்பதைப் பொறுத்தது (where do you wish to go) என அந்தப் பூனை பதில் சொல்கிறது.

Vikatan

எனக்கு மிகவும் பிடித்த வரி இது. ஆலீஸ் இன் வொண்டர்லேண்ட் புத்தகத்தைப் பலரும் சிறுவர் இலக்கியம்னுதான் நெனச்சிக்கிட்டி ருந்தோம். ஆனா, இன்னிக்கு அது மிகச்சிறந்த தத்துவார்த்த புத்தகமாகப் பார்க்கப்படுது. வாழ்க்கையின் பல கட்டங்களில் இந்த வரியை நான் நினைச்சுப் பார்த்திருக்கேன்.

Bharathi Baskar
Bharathi Baskar

ஒரே இடத்துல இருக்கிற மாதிரி லைஃப்ல சில சமயம் அலுப்பு தோணும். நம்மால அடுத்தகட்டத்துக்குப் போக முடியலையேனு மனசு ஆதங்கப்படும். அப்படிப்பட்ட நேரத்துலயெல்லாம் நான் இந்த வரியை நெனச்சுக்குவேன். எனக்கான புதிய இலக்குகளைத் தீர்மானிப்பேன். அப்போ, அதற்கான வழி தானாகக் கிடைச்சிடும்.

ஒவ்வொரு வருஷமும் ஜனவரி ஒண்ணாம் தேதி புதுசா டைரி வாங்கினதும் இந்த வரியைத்தான் என் டைரியில் எழுதி வைப்பேன். அந்த அளவுக்கு இந்த வரி என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானது என்கிறார், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

அடுத்த கட்டுரைக்கு