Published:Updated:

`தந்தை பியூன்... மகள் நீதிபதி'- குழந்தையில் சொன்னதை தாயான பின் செய்துகாட்டிய பெண்!

தனது தந்தையிடம் நானும் ஒரு நாள் நீதிபதி ஆவேன் எனக் கூறிய அர்ச்சனா இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதைச் சாதித்தும் காட்டியுள்ளார்.

அர்ச்சனா
அர்ச்சனா

வெற்றிக்குக் கடின உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் போதும் சாதித்துவிடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இளைஞர் ஒருவர் 21 வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தினார். அவரைப் போலவே பீஹார் பெண்மணி ஒருவரும் நீதிபதி தேர்வில் அசத்தியுள்ளார். பீஹார் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர் அர்ச்சனா. இவர்தான் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த சாதனைக்கு அவர்பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை என்கின்றனர் அப்பகுதி வாசிகள். அர்ச்சனாவின் தந்தை கௌரிநந்தன் சரண் மாவட்டத்தின் சோன்ப்பூர் நீதிமன்றத்தின் நீதிபதியிடம் பியூனாக வேலை பார்த்துவந்தவர். அர்ச்சனா குழந்தையாக இருக்கும்போது நீதிமன்றத்துக்கு அவ்வப்போது அவரை அழைத்துச் சென்றுள்ளார் கௌரிநந்தன். அப்போது தனது தந்தையிடம் நானும் ஒரு நாள் நீதிபதி ஆவேன் எனக் கூறிய அர்ச்சனா இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதைச் சாதித்தும் காட்டியுள்ளார்.

அர்ச்சனா
அர்ச்சனா

தந்தையிடம் நீதிபதி ஆவேன் எனப் பேசியபடியே அர்ச்சனா சாதித்து காட்டினாலும் அதைப் பார்க்க அவரது தந்தை கௌரிநந்தன் தற்போது உயிருடன் இல்லை. அர்ச்சனா குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே கௌரிநந்தன் உயிரிழந்துள்ளார். இதன்பிறகு குடும்ப கஷ்டம் வாட்டினாலும் தாய் தந்த ஊக்கத்தினால் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் தனது தந்தை இல்லாததால் பட்டப்படிப்பு மட்டும் படித்தவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக தான் படித்த பள்ளியிலேயே கணினி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

Vikatan

காலப்போக்கில் திருமணம் மூலம் இல்லற வாழ்க்கையில் இணைந்தார் அர்ச்சனா. குழந்தையும் பிறந்தது. இனியும் தனது நீதிபதி கனவு நிறைவேறாது என்பதை உணர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால் அர்ச்சனாவின் விருப்பத்தை அறிந்த அவரது கணவர் ராஜீவ் ரஞ்சன் அவருக்கு ஆதரவளிக்க முடிவுசெய்து படிப்பைத் தொடர ஊக்குவித்தார். கணவர் ஆதரவைத் தொடர்ந்து மாமியார், மாமனார் என உறவினர்களும் அர்ச்சனாவின் கனவுக்குக் கை கொடுக்க சட்டப்படிப்பு படிக்க ஆரம்பித்தார். புனே கல்லூரியில் எல்எல்பி பட்டம், அடுத்து பூர்ணியா சட்டக்கல்லூரியில் எல்எல்எம் பட்டம் பெற்றவர் டெல்லி சென்று நீதிபதி தேர்வுக்கான கோச்சிங் பெற்றார். சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்வில் தேர்ச்சிபெற்று தந்தையிடம் சொன்னதுபோலவே நீதிபதி ஆகி அசத்தியுள்ளார்.

அர்ச்சனா
அர்ச்சனா

இதுகுறித்து பேசியுள்ள அர்ச்சனா, ``என் தந்தை நீதிபதியின் பியூனாகப் பணியாற்றினார். குழந்தையாக இருந்தபோது தந்தையின் வேலை எனக்குப் பிடிக்கவில்லை. பின்னர் ஒரு நாள் நான் நீதிபதியாக வருவேன் என்று நானே உறுதியளித்தேன். ஆனால் விதி என் தந்தை உயிரைப் பிரித்துவிட்டது. என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு படிப்பைத் தொடர்வது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், என் அம்மா என்னுடன் ஒரு தூண் போல நின்றார். சில உறவினர்களும் கஷ்டங்களை கலைய எங்களுக்கு உதவினார்கள். எனது கனவுக்காக நான் நிறைய போராட வேண்டியிருந்தது. என் கணவர் என் கனவை அறிந்திருந்தார். அதற்காகப் பாடுபட அவர் என்னை ஊக்குவித்தார். திருமணம் முடிந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பின் படிப்பைத் தொடர்ந்தது எளிதான முடிவில்லை. ஆனால், என் கணவரும் மாமியாரும் எப்போதும் எனக்கு ஆதரவளித்தனர். ஒருவருக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காகப் பாடுபடத் தயாராக இருந்தால், அதை நிச்சயம் அடைய முடியும். அதற்கு நானே சாட்சி" எனப் பூரிப்புடன் கூறியுள்ளார்.

சாதனைக்குக் கடின உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் போதும் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் அர்ச்சனாவை வாழ்த்துங்கள் மக்களே!

`9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!' - ஆளும்கட்சியைப் பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி