Published:Updated:

நான் மரியாவின் மகன்

அவள் விகடன் டீம்
கார்த்திகேயன் மேடி

புத்துயிர்ப்பு

பிரீமியம் ஸ்டோரி

மருதன்

ஷ்யாவின் ஆன்மா என்று லியோ டால்ஸ்டாயை அழைக்கிறார்கள். `அப்படி யெல்லாம் சொல்லிவிட முடியாது, அவர் ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரதிநிதி’ என்று வாதிடுபவர்களும் உண்டு. `உங்கள் ஆன்மா யார்?’ என்று லியோ டால்ஸ்டாயிடம் கேட்டால் அவர் தயங்காமல் சொல்வார்... `என் அம்மா மரியா.’

யாஸ்னயா போல்யானா என்னும் மாபெரும் பண்ணை வீட்டில் பிறந்தவர் லியோ டால்ஸ்டாய். தெரிந்தவர், தெரியாதவர் என்று தன்னை நாடி வரும் எவரையும் திருப்பியனுப்பும் வழக்கம் அவருக்கு இல்லை. உள்ளூர்க்காரர்கள் போக, அயல்நாடுகளி லிருந்தும் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர் களும் லியோ டால்ஸ்டாயைக் காண (‘தரிசிக்க‘ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்) அணிவகுப்பதுண்டு. தள்ளாத வயதிலும் அவர்களோடு நடைபோட்டபடி பண்ணையைச் சுற்றிக்காட்டுவார். அப்போது அவர் என்ன பேசுவார்...

`இந்தக் கதவைத் திறந்துதான் அம்மா உள்ளே வருவார். மாலை நேரங்களில் இங்கே தான் சில மணி நேரம் அமர்ந்திருப்பார். இந்தக் குளம் அம்மா இருந்தபோது இன்னும் பெரியதாக இருந்தது. கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள், ஒரு கோபுரம் தெரிகிறது அல்லவா... சற்றே இடிந்திருந்ததால் புதிதாகக் கட்டமைத்திருக்கிறேன். உச்சியில் ஒரு ஜன்னலைக் காணமுடிகிறது அல்லவா... அப்பா வருகிறாரா என்று அங்கிருந்துதான் அம்மா தினம் தினம் கவனித்துக்கொண்டிருப்பார். இந்த நிலம் முழுக்க அம்மாவின் கால் தடங்கள் பதிந்திருக்கின்றன. இங்குள்ள மரங்களுக்கும் புல்வெளிகளுக்கும் வானத்துக்கும் அம்மாவை நன்கு தெரியும். அம்மாவின் சுவாசக்காற்று இப்போதும் இங்கே நிறைந்திருப்பதை உணர்கிறேன்.’

மரியா நிகோலயேவ்னாவுக்கு ஏழு வயதாகும்போது, யாஸ்னயா போல்யானாவுக்கு அழைத்து வந்தார் அவர் தந்தை. இறக்கும்வரை அவர் அந்த இடத்தைவிட்டு அகலவில்லை. மரியாவின் தந்தை ராணுவத்தில் இருந்தவர். பணி ஓய்வுக்குப் பிறகுதான் அப்பாவோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பே மரியாவுக்கு அமைந்தது. எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து, ஒவ்வொன்றையும் குறித்து நூறு கேள்விகள் எழுப்பும் தன் மகளைக் கண்டு மகிழ்ந்த தந்தை வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்து அவளுக்கு வகுப்புகள் எடுக்கச் செய்தார். கணிதம், வானியல், கிரேக்கத் தத்துவம், அரசு நிர்வாகம் ஆகியவற்றோடு இலக்கியமும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

நான் மரியாவின் மகன்

வாசிப்பு போக, பரந்து விரிந்திருக்கும் பண்ணையை கால் வலிக்க வலிக்கச் சுற்றித் திரிந்தார் மரியா. `இங்கு நான் காணும் பூச்சிகளும் புழுக்களும் பறவைகளும் விலங்குகளும் ஏன் புத்தகங்களில் இடம்பெறவில்லை... இவற்றையெல்லாம் நான் எங்கே போய் கற்றுக்கொள்வது அப்பா...’ என்று குறைபட்டுக்கொண்டார்.

மரியாவுக்கு இசையிலும் ஆர்வம் இருந்தது. `அம்மாவின் வயலின் இசையை நான் கேட்டிருக்கிறேன். உணர்வுபூர்வமாக வாசிப்பார். அவருடைய கலைத் திறன் அபாரமானது’ என்கிறார் லியோ டால்ஸ்டாய்.

மரியாவுக்கு ரஷ்ய மொழியோடு பிரெஞ்சு மொழியும் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும் ஒன்று, இன்னும் ஒன்றேயொன்று என்று ஆசிரியர்களையும் அப்பாவையும் வற்புறுத்தி ஐந்து மொழிகள் கற்றுத் தீரும்வரை அவர் ஆர்வம் அடங்கவில்லை.

`என் அம்மா ஒரு சிறந்த கதைசொல்லி. அவர் கதை சொல்ல ஆரம்பித்தால் பண்ணையிலுள்ள குழந்தைகள் அனைவரும் போட்டது போட்டபடி ஓடிவந்துவிடுவோம். விருந்தினர்களும்கூட இசை, நடனம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எங்களுக்குப் போட்டியாக நாற்காலிகளை இழுத்துக்கொண்டுவந்து அம்மா முன்னால் உட்கார்ந்துவிடுவார்கள்.’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் கதைகள், பாடல்கள் என்று எழுதவும் ஆரம்பித்தார் மரியா. தனது தோட்டத்திலிலுள்ள தாவரங்களை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒருமுறை இறங்கினார். புனித பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அப்பாவோடு செல்லும் வாய்ப்புக் கிடைத்தபோது தனது பயண அனுபவங்களைப் பதிவு செய்து வைக்க அவர் மறக்கவில்லை. இதுதான் மரியா என்று நீங்கள் அவரை ஒவ்வொருமுறை வரையறை செய்யும்போதும் அதற்குள் சிக்காமல் வெளியில் வந்து இன்னொன்றாகத் திரண்டு நிற்பார்.

குழந்தையாக இருக்கும்போதே அவருடைய எதிர்கால மணமகனைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். மரியா வளர்ந்து, திருமண நாள் நெருங்கிவரும்போது எதிர்பாராவிதமாக மணமகன் இறந்துவிட்டான். `ஐயோ, பாவம் மரியா... இவள் வாழ்க்கை இப்படியா முடிய வேண்டும்’ என்று அருகிலிருந்தவர்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தபோது, மரியா அதை ஏற்கெனவே கடந்துவந்திருந்ததோடு கதை எழுதவும் தொடங்கியிருந்தார்.

அதுவும் எப்படிப்பட்ட கதை? பெரும் பண்ணை வீட்டில் வசிக்கும் செல்வந்தர் படிப்படியாக சமூக அக்கறை கொண்ட ஒரு சாமானிய மனிதனாக மாறி, தன்னிடம் பணியாற்றும் அடிமைப்பெண்களை விடுவிக்கிறார். `உனக்கேன் இப்படியெல்லாம் தோன்றுகிறது...’ என்று உறவினர்கள் முகஞ்சுளித்ததற்கு அந்தக் கதை மட்டும் காரணமல்ல. சிறிது காலமாகவே விவசாயிகளோடும் அவர்கள் குடும்பத்தினரோடும் சரிக்குச் சமமாக அமர்ந்து மரியா மனம்விட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது அங்குள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை.

விரைவில் அவர்கள் பயந்ததைப் போலவே லூயி என்னும் ஒரு பணிப்பெண்ணைத் தன் தோழியாகவே வீட்டுக்குள் வரவேற்று ஏற்றுக்கொண்டார் மரியா.

அப்பாவின் மரணத்துக்குப் பிறகு தன் பெயரிலுள்ள நிலமொன்றை தன் தோழியின் பெயருக்கு மாற்றி எழுதினார். `சொத்து இல்லாததால்தானே அவளை அடிமையைப் போல் எல்லோரும் நடத்துகிறீர்கள்... இப்போது என்ன செய்வீர்கள்...’ என்று மரியா கேட்டபோது குடும்பத்தினர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துத் தீர்த்தார்கள். ‘அசிங்கமான பெண்‘, ‘அருவருப்பான பெண்’, ‘வயதான மூதாட்டி’ ஆகிய செல்லப்பெயர்கள் மரியாவுக்கு வந்து நேர்ந்தன.

`இந்த மரியாவால் நமக்கு எவ்வளவு பெரிய களங்கம் ஏற்பட்டுவிட்டது பார்த்தாயா...’ என்று சீமான்களும் சீமாட்டிகளும் மாலை நேர விருந்துகளின்போது சிடுசிடுத்துக் கொண்டிருந்தபோது மரியா இன்னும் ஒரு படி முன்னேறி, மிகேல் என்னும் உறவுக்காரப் பையனோடு கலந்துபேசி அவனைத் தன் தோழி லூயிக்குத் திருமணம் முடித்துவைத்தார்.

`ஐயோ, நம்முடைய ராஜாங்க ரத்தம் மாசடைந்துவிட்டதே... குலப்பெருமை கெட்டு விட்டதே’ என்று யாஸ்னயா போல்யானா ஒற்றைக் குரலில் ஓலமிடத் தொடங்கியபோது, `ஒரு நிமிடம் பொறுங்கள்’ என்றார் மரியா. அவர்கள் கண்முன்னால் தன்னுடைய சேமிப்பிலிருந்து ஒரு பெரும் பகுதியை மணமக்களுக்குப் பரிசாக வழங்கி கையசைத்து வழியனுப்பி வைத்தார்.

நான் மரியாவின் மகன்

லியோ டால்ஸ்டாய், தன் அம்மா மரியாவின் நீட்சி. பண்ணை வீட்டில்தான் இறுதிவரை வசித்தார் லியோ டால்ஸ்டாய், என்றாலும் அதற்கும் அப்பாலுள்ள மனிதர்களுக்காகவே அவர் நெஞ்சம் எப்போதும் துடித்தது. தன் புத்தகங்களின் மூலம் கிடைக்கும் சன்மானம் அனைத்தையும் கைவிட்டதோடு வலிந்து வறுமையை அவர் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அம்மா மரியா.

மரியாவைப் போலவே டால்ஸ்டாய் உலகையும் உயிர்களையும் நெருக்கமாக நேசித்தார். மரியாவைப் போலவே அன்பைக் கடவுளாகக் கருதி தொழுதார். மரியாவைப் போலவே குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் கதைகள் சொல்லத் தொடங்கினார்.

இயற்கையின் எழிலில், அதன் தூய்மையில், அதன் படைப்பாற்றலில் தன்னைக் கரைத்துக்கொண்டார். வரையறைகளைக் கடந்து வளர்ந்துகொண்டே போனார். எவ்வளவு வளர்ந்தாலும் கால்கள் நிலத்தில் ஊன்றியிருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

இவளுக்குக் குடும்ப வாழ்க்கையெல்லாம் பொருந்தாது என்று பலரும் முடிவுகட்டிவிட்ட நிலையில் 32 வயது மரியா தன்னைவிட நான்கு வயது குறைந்த நிக்கோலாய் டால்ஸ்டாயைத் திருமணம் செய்துகொண்டார். ஐந்து குழந்தைகள் பிறந்தன. லியோ டால்ஸ்டாய் நான்காவது குழந்தை.

`அம்மாவின் நினைவுகள்தாம் என்னைத் தூக்கிவைத்து வளர்த்தன. அம்மாவின் நினைவுகள்தாம் தொடர்ந்து கதகதப்பூட்டிக் கொண்டிருக்கின்றன’ என்கிறார் லியோ டால்ஸ்டாய். `மனமுடைந்து போகும் ஒவ்வொரு முறையும் அம்மாவை நினைத்துக்கொள்வேன். கண்களை மூடி கைகூப்பித் தொழுவேன். நான் எப்போது இருளில் சுருண்டு படுத்தாலும் அவர் கரங்கள் என்னை வருடிக்கொடுக்கத் தவறாது.’

எண்பது வயதான பிறகும் லியோ டால்ஸ்டாய், தன் அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்ததையும் அப்படிப் பேசும்போதெல்லாம் அவர் குரல் உடைந்து கண்ணீர் திரண்டுவருவதையும் கண்டு பலர் வியந்திருக்கிறார்கள்.

இவ்வளவு அழுத்தமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மரியாவோடு, எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தார் லியோ டால்ஸ்டாய்... முழுமையாக ஓராண்டு. இரண்டாம் வயதை நெருங்குவதற்குள் அம்மா மரியா மறைந்துவிட்டார்.

`என் அம்மா எப்படி இருப்பார் என்றுகூட எனக்குத் தெரியாது. அவருடைய ஒரேயொரு படம் கூட எஞ்சியிருக்கவில்லை’ என்கிறார் லியோ டால்ஸ்டாய்.

ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். `பரந்து விரிந்திருக்கும் என் அம்மாவை ஒரு புகைப்படத்துக்குள் எப்படி அடக்குவது? அவருக்கு எப்படி ஒரேயொரு முகம் இருந்திருக்க முடியும்? என் அம்மா முகமற்றவராக இருப்பதால்தான் அவரை அன்பின் திருவொளியாக என்னால் காணமுடிகிறது. அவர் என் மனசாட்சி. என் சத்தியம். என்னை வழிநடத்தும் ஆன்மா. என் எழுத்துகளுக்கெல்லாம் ஆதாரமாக உள்ள அணு. என் உயிரின் திரட்சி. யாஸ்னயா போல்யானாவாக, ரஷ்யாவாக, உலகாக நான் அவரையே காண்கிறேன். நான் லியோ டால்ஸ்டாய் அல்ல, மரியாவின் புத்துயிர்ப்பு.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு