Published:Updated:

உடைத்துப் பேசிய பெண்கள்! #SpeakOut

தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபிகா படுகோன்

தடை, அதை உடை

சு.கவிதா

சமூகத்தில் நாம் கொண்டாடும் பெண் பிரபலங்களுக்குப் பெரிதாக என்ன பிரச்னைகள் இருக்கப்போகின்றன, கோடிக் கணக்கில் பணம், சொகுசான வாழ்க்கை என்றுதானே அவர்கள் இருக்கின்றனர் என்று நினைக்கலாம். ஆனால், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையுமே ஒரு போராட்டம்தான். இதில் சாமானியர், பிரபலம் என்றெல்லாம் பேதமில்லை. பிரபலம் என்கிற இமேஜ் காரணமாகத் தங்களது பிரச்னைகளைப் பலர் வெளியில் சொல்வதில்லை. ஆனால், சில பிரபலங்கள் அந்த மரபை ஜஸ்ட் லைக் தட் உடைத்து, தங்களது தனிப்பட்ட பிரச்னைகளைப் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைத்திருக்கின்றனர்... அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக. அப்படிப்பட்ட பெண்களின் பகிர்தல்கள்...
உடைத்துப் பேசிய பெண்கள்!
#SpeakOut

“தற்கொலை எண்ணம் தோன்றியது!'' - தீபிகா படுகோன்

தன் நடிப்புத் திறமையால் பாலிவுட்டை ஆளும் தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்த தேவதை, 2014-ம் ஆண்டு மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். தனக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னையை ரகசியமாக வைக்காமல் பொதுவெளியில் தயக்கமின்றிப் பகிர்ந்து, `மென்ட்டல் டிப்ரெஷன்' குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

``நான் என் துறை சார்ந்து உயர்ந்த இடத்தில் இருப்பதால் எனக்கு எல்லாமே கிடைத்திருப்பதாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால், நான் 2014-ம் வருடம் மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். வாழ்க்கை சூனியமாகிப்போனது போன்ற ஓர் உணர்வு என்னை ஆக்கிரமித்தது. ஏழு வருடங் களுக்கு முன்பு நான் நானாக இல்லை. இவ்வளவு ஏன்... மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும்கூட சில நேரங்களில் எனக்கு ஏற்பட்டது. நான் என்ன நினைக்கிறேன் என்பது எனக்கே சரியாக விளங்காத அந்தக் காலகட்டம்தான் என் வாழ்க்கையின் மிகக் கடினமான நேரமாக எனக்கு இருந்தது” என்ற தீபிகா, தனக்கு ஏற்பட்ட இந்த அறிகுறிகளை தன் அம்மா கண்டறிந்ததாகவும் கூறுகிறார்.

“எனக்கு ஏற்பட்ட பிரச்னையை அம்மா சரியான நேரத்தில் கண்டறிந்தார். உரிய மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். கவுன்சலிங் மற்றும் மருத்துவ சிகிச்சை காரணமாகக் குணமடைந்து இயல்புநிலைக்குத் திரும்பினேன். மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வின்மை மற்றும் மன அழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமுதாயம் நடத்தும் விதம் ஆகியவற்றால் பலர் தங்களுக்கு ஏற்படும் இப்பிரச்னை குறித்து வெளியில் பேசவே தயங்குகின்றனர். இந்நிலை மாற வேண்டும்” என்கிற தீபிகா மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ‘லிவ், லவ், லாஃப் பவுண்டேஷன்' (Live Love Laugh Foundation) என்கிற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

உடைத்துப் பேசிய பெண்கள்!
#SpeakOut

``ஈடு செய்யமுடியாத இழப்பு அது!'' - மேகன் மார்கெல்

39 வயதாகும் மேகன் மார்கெல் இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி. நடிகை, பெண்ணிய வாதி எனப் பல முகங்கள் கொண்டவர்.

பொதுவாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிரவே மாட்டார்கள். மீடியா ஊகங்களுக்கும் எதிர்வினையாற்ற மாட்டார்கள். மேகன் ஒருபடி மேலே போய், தன் கருச்சிதைவு பற்றி அவராகவே பொதுவெளியில் துணிச்சலுடன் பகிர்ந்தார்.

ஹாரி - மேகன் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அடுத்து மேகன் மார்கெல்லுக்கு கருச்சிதைவு ஏற்பட, அதுகுறித்து அவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் வேதனை மேலிட எழுதியிருந்த கட்டுரை உலகையே கவனிக்க வைத்தது.

“எல்லா நாளையும் போலவே அந்த நாளும் விடிந்தது. காலை உணவை தயார் செய்து, நாய்களுக்கு உணவளித்து எல்லா வேலைகளையும் முடித்தேன். வைட்டமின் மருந்துகளை எடுத்துக் கொண்டேன். என் குறும்புக்காரப் பிள்ளை தலைமுடியைப் பிடித்துப் பிடித்து இழுக்கிறான் என்பதால் தலைமுடியை குதிரைவால் போல கட்டிக்கொண்டேன். பின்னர் என் மகனுக்கு டயப்பர் மாற்றும்போதுதான் அந்தக் கடுமையான வலி எனக்கு ஏற்பட்டது. குழந்தையைத் தூக்கிக் கொண்டபடி அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன். சரி கவனத்தை மடைமாற்றுவோம் என்று சன்னமாகத் தாலாட்டுப் பாடல் ஒன்றைப் பாடினேன். ஆனாலும் வலி நின்றபாடில்லை” என்று அதில் எழுதியிருக்கும் மேகன், சில மணி நேரத்தில் தான் மருத்துவமனைப் படுக்கையில் கிடந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஹாரியின் கைகளைப் பிடித்தபடி படுக்கையில் இருந்தேன். எங்கள் இருவரது கண்களிலும் கண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. எதனாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு அல்லவா இது? நூறு பெண்கள் இருக்கின்ற ஓர் அறையில்

10 - 20 பெண்களாவது கருச்சிதைவு ஆனவர்களாக இருக்கக்கூடும் என்று நாங்கள் அப்போது பேசிக்கொண்டோம். கருச்சிதைவு என்பது பெண்களுக்கு ஏற் படும் பொதுவான நிகழ்வுதானே என்று இந்த உலகம் நினைக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட கணவனுக்கும் மனைவிக் கும் இது வாழ்நாள் முழுவதும் நீங்காத துயரத்தைக் கொடுத்துவிடும் என்பதே நிஜம்” என்று அந்தக் கட்டுரையில் மனம் திறந்து எழுதியிருக்கிறார் மேகன்.

கருவிலேயே குழந்தையை இழக்கும் பெண்களின் வேதனையை அரண்மனை

யிலிருந்து சொல்லி உலகை கவனிக்க வைத்த மேகன் மார்கெல்லுக்கு ராயல் சல்யூட்.

உடைத்துப் பேசிய பெண்கள்!
#SpeakOut

`உன் கிரீடத்தை வீசிவிட்டு வீட்டுக்குள் வா' என்றார்! - இந்திரா நூயி

``பெப்சிகோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இந்திரா நூயிக்கு தற்போது வயது 65. `பெப்சிகோ' நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயல் அதிகாரி என்ற பெருமையுடன், நிறுவனத்தின் வருமானத்தை 80 சதவிகிதம் அதிகரித்து சாதனை புரிந்தவர். தற்போது `அமேசான்' நிறுவனத்தின் போர்டு ஆஃப் டைரக்டர் களில் ஒருவராகப் பொறுப்பில் இருக்கிறார்.

`என் குடும்பம் எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கும்' என்ற சம்பிரதாய வார்த்தைகளைத் தவிர்த்து, 2014-ல் பூச்சுகளின்றி இந்திரா நூயி பகிர்ந்த ஓர் அனுபவம்... அதிர்வுகளை ஏற்படுத்தியது.

“`பெப்சிகோ' நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற அன்றிரவு இந்த சந்தோஷமான தகவலைக் குடும்பத்தினரிடம் சொல்ல ஓடோடி வந்தேன். இரவு 10 மணிக்கு நான் காரை கராஜில் நிறுத்தியபோது, படியில் அம்மா காத்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், `அம்மா, உங்களுக்கு ஒரு சிறப்பான செய்தி சொல்லவா' என்று உற்சாகத்துடன் ஆரம்பித்தேன். ஆனால், ‘அதைப் பிறகு சொல்லிக்கொள்ளலாம். பால் தீர்ந்துவிட்டது. சீக்கிரம் கடைக்குச் சென்று வாங்கி வா' என்று என் அம்மா கூறினார்.

கராஜில் கணவரின் கார் நிற்பதைப் பார்த்தேன். `அவர் எப்போது வீட்டுக்கு வந்தார்?' என்று அம்மாவிடம் கேட்டேன். `8 மணி இருக்கும்' என்றார். `அவரை ஏன் பால் வாங்கிவரச் சொல்ல வில்லை?' எனக் கேட்டேன். `அவர் டயர்டாக இருப்பார்' என்றார் அம்மா. `வீட்டில் இரண்டு பணியாட்கள் இருக்கிறார்கள்... சொல்லியிருக்க லாமே...' என்றேன். `மறந்துவிட்டேன். சொன்னதை செய், பால் வாங்கி வா, நாளை காலைக்கு வேண்டும்' என்றார். பால் பாக்கெட்களை வாங்கி வந்து அவரிடம் கொடுத்துவிட்டு சொன்னேன்...

`அம்மா, எனக்கு `பெப்சிகோ' பிரசி டென்ட்டாகப் பதவி உயர்வு கொடுத்திருக் கிறார்கள். அதைச் சொல்ல வந்த என்னிடம், பால் வாங்கிவரச் சொல்கிறீர் களே...' என்றேன். அதற்கு அம்மா, `உனக்கு ஒன்றை விளக்க வேண்டும். நீ `பெப்சிகோ'வின் பிரசிடென்ட்டாக இருக்கலாம். ஆனால், அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு வந்துவிட்டால், நீ ஒரு மகள், மனைவி, தாய், மருமகள். உன்னுடைய இந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் உன் தலைக்கு மேல் உள்ள கிரீடத்தை கராஜில் போட்டுவிட்டு வீட்டுக்குள் வா' என்றார் என் அம்மா.''

பெண்கள் எத்துணை பெரிய பதவிகளை எட்டினாலும், வீட்டுக்குள் பெண் என்ற வட்டத்துக்குள் நிற்க வைக்கப்படுவதை வெளிப்படையாகப் பகிர்ந்த இந்திரா நூயியின் வார்த்தைகள், அதிர்ச்சி வாக்குமூலம்.