Published:Updated:

`இப்போது நான் மாறியிருக்கிறேன்!'- சருமச் சுருக்கங்களுடன் போட்டோ வெளியிட்ட சூப்பர் மாடல் லிசா ரே

லிசாவின் இந்த போஸ்ட்டை பல பாலிவுட் பிரபலங்களும், அவரின் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். `அகத்திலும் புறத்திலும் நீங்கள் எப்போதும் அழகு' என பாசிட்டிவிட்டி கொடுக்கிறார்கள்.

Lisa Ray
Lisa Ray

`உங்கள் சருமத்தையும், அதன் சுருக்கங்கள் சொல்லும் கதைகளையும் நேசியுங்கள்' என்ற வரிகளுடன், மேக்கப், ஃபில்டர் எதுவும் இல்லாத தன் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் பதிவிட்டுள்ள லிசா ரேக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Lisa ray
Lisa ray

லிசா ரேயை நினைவிருக்கிறதா? உயரம், அழகு, வசீகரம் எனக் கலக்கிய பாலிவுட்டின் சூப்பர் மாடல். தமிழில் சரத்குமாருடன் இணைந்து `நேதாஜி' படத்தில் நடித்ததன் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர், இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்தார். ராம் கோபால் வர்மாவின் `வீரப்பன்' திரைப்படத்தில் நடித்தவர், தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முத்திரை பதித்தார்.

தற்போது 47 வயதாகும் லிசா ரே, புற்றுநோயிலிருந்து மீண்டிருப்பவர். இந்த ஆண்டு, 'Close To The Bone' என்ற தன் புத்தகத்தை வெளியிட்ட லிசா, தன் கேன்சர் பாதிப்பு மற்றும் தன் வாழ்க்கையைப் பற்றி அதில் பகிர்ந்திருந்தார்.

இதுதான் 47 வயது நான். சுதந்திரமானவளாக, ஃபில்டர் செய்யப்படாத புகைப்படத்தில் இருப்பவளாக. ஒப்பனைகள் எதுவுமின்றி, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைப் பார்க்கும் தைரியம் நம்மிடம் இருக்கிறதா?
லிசா ரே

2009-ம் ஆண்டு, வெள்ளை அணுக்களை பாதிக்கும் அரிய வகை புற்றுநோயால் லிசா பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதற்காக ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ப்ளான்ட் சிகிச்சை எடுத்துக்கொண்டவர். 2010-ம் ஆண்டு, தான் புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டதாக அறிவித்தார்.

வயதும் நோயும் தன் சருமத்தை மங்கச் செய்திருந்தாலும், அதை பாசிட்டிவ்வாக அணுகும் லிசா ரே, #unfilterme என்ற ஹேஷ்டேக்குடன், மேக்கப் இல்லாத, சருமத் திட்டுகளும் கோடுகளுமாய் உள்ள தன் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்...

'இதுதான் 47 வயது நான். சுதந்திரமானவளாக, ஃபில்டர் செய்யப்படாத புகைப்படத்தில் இருப்பவளாக. ஒப்பனைகள் எதுவுமின்றி, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைப் பார்க்கும் தைரியம் நம்மிடம் இருக்கிறதா? இளவயதில், என்னிடம் அந்த தைரியம் இல்லை. இப்போது நான் மாறியிருக்கிறேன்.

Lisa ray post
Lisa ray post

அனைவரும் உங்கள் மதிப்பை அங்கீகரிக்கப்போவதில்லை. உங்கள் சருமத்தையும் அதன் சுருக்கங்கள் சொல்லும் கதைகளையும் நீங்கள் நேசியுங்கள்; உங்கள் அனுபவங்களையும், அதன் சாரங்களையும். உங்கள் மதிப்பையும் நீங்கள் உணருங்கள் பெண்களே! அப்போது, உங்கள் பிரகாசத்தை இந்த உலகம் பிரதிபலிக்கும். உலகம் சொல்லவில்லை என்றாலும்கூட, நீங்கள் நேசிப்புக்குரியவர்கள், நேர்த்தியானவர்கள்!'

லிசாவின் இந்த போஸ்ட்டை பல பாலிவுட் பிரபலங்களும், அவரின் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். 'அகத்திலும் புறத்திலும் எப்போதும் நீங்கள் அழகு' என, பாசிட்டிவிட்டி கொடுக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் ஜாஸன் டேனியை மணம்புரிந்தார் லிசா ரே. வாடகைத் தாய் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகினர் இந்தத் தம்பதி. தற்போது அந்த இரட்டை தேவதைகளுக்கு ஒரு வயதாகிறது!

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!