22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மரபு வீட்டை கட்டிப் பார்! - ஹேமலதா - ரவி

மரபு வீடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரபு வீடு

ஆனந்த முற்றம்

‘`வானத்தையும் வெளிச்சத்தையும் வீட்டுக்குள் கொண்டுவந்து கொட்டுகிற இந்த முற்றம்வெச்ச வீடு, எங்களின் பல ஆண்டு கனவு’’ - வெற்றிப் புன்னகையுடன் பேசுகிறார் ஹேமலதா.

நமக்கே நமக்கான கனவு வீட்டை அமைப்பதில் தமிழர்களுக்கு பெரிய பாரம்பர்யம் உண்டு. முற்றம் வைத்த வீடு, துழாக்கட்டை போட்ட வீடு, மச்சு வீடு, குச்சு வீடு, சுத்தாலக்கட்டு வீடு, காரை வீடு, திண்ணை வைத்த வீடு என்று நம் முன்னோர் கட்டி அழகுபார்த்த வீடுகள் பலவிதம். இன்றோ, நம் பாரம்பர்ய கட்டுமானப் பொருள்களைத் தவிர்த்து, வீட்டின் அமைப்பை மேற்கத்தியமயமாக்கி, ‘தமிழர் வீடு’ என்ற தனித்தன்மையையே தொலைத்து வருகிறோம். இந்த நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள குள்ளமாபட்டியைச் சேர்ந்த ஹேமலதா - ரவி தம்பதி, சிமென்ட், கம்பி பயன்பாடுகளை 80 சதவிகிதம் தவிர்த்து, மண், சுண்ணாம்பு பயன்படுத்தி தங்கள் மரபு வீட்டை முற்றத்தோடு அழகாகக் கட்டி முடித்திருக்கிறார்கள்.

‘` `வீட்டைக் கட்டிப்பாரு'ன்னு சொல்லுவாங்க. எங்களுக்கு அந்தச் சவால் ரெண்டு மடங்கு இருந்துச்சு’’ - புதுமனை புகுவிழா முடித்திருக்கும் தன் வீட்டில், பயோ கேஸ் அடுப்பில் காபி போட்டுவந்து கொடுத்த படியே பேச ஆரம்பித்தார் ஹேமலதா.

“என் கணவர் ரவி, தூரத்து உறவு. 2003-ல் எங்களுக்கு கல்யாணமாச்சு. நான் பத்தாவது வரை படிச்சிருந்தேன். அவரும் அதிகம் படிக்கலை. ஓட்டைக் குடிசை வீடுதான் எங்களுக்கு சொந்தமா இருந்துச்சு. அதனால, நானும் கணவரும் சொந்தமா தொழில் தொடங்க கல்யாணமான வருஷமே பட்டுக் கோட்டைக்குப் போனோம். ராகேஷ், சந்தோஷ்னு எங்களுக்கு ரெண்டு பசங்க.

 ஹேமலதா - ரவி
ஹேமலதா - ரவி

ஆரம்பத்துல, நல்லா சம்பாதிச்சு எல்லா ரையும்போல ஒரு வீடு கட்டணும்னுதான் நாங்களும் நினைச்சோம். என் வீட்டுக்காரர், இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல்னு ஆர்வம்கொள்ள ஆரம்பிச்சாரு. அவரைப் பார்த்து எனக்கும் அதுலயெல்லாம் ஈடுபாடு வந்துச்சு. நம்மாழ்வார், ‘செம்மை வனம்’ செந்தமிழன் இருவரைப் பற்றியும், யூடியூப்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு அப்புறம், தற்சார்பு, மரபு வாழ்வியல் முறைகளில் தீவிரமாகி, அக்குபங்சர் மருத்துவமுறை படிச்சு முடிச்சேன்.

நாங்க கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்ச காசை வெச்சு, சொந்த ஊரு குள்ளமாபட்டியில் அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கினோம். அதுல இயற்கை விவசாயம் செய்யலாம்னு சொன்னப்போ, வீட்டுக்காரரும் சம்மதிச்சார். நஷ்டம்தான் மிச்சமாச்சு. என் மாமனார் முத்துசாமி , கோவிச்சுக்கிட்டு போயிட்டார். பத்து நாள்கள் அலைஞ்சு திரிஞ்சுதான் அவரைத் தேடிக் கண்டுபிடிச்சோம். இருந்தாலும், இயற்கை விவசாயத்தை நாங்க கைவிடலை’’ என்கிறவருக்கு, அதன்பிறகு மரபு வீடு ஆசை வந்திருக்கிறது.

‘`அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரர்கிட்ட, ‘நம்ம நிலத்துல கிடைக்கிற பொருள்களை வெச்சே, ஒரு மரபு வீட்டைக் கட்டுவோமா’ன்னு கேட்டேன். ‘கட்டலாம்தான்... அப்படியான பாரம்பர்ய வீட்டைக் கட்ட வெல்லாம் இப்போ ஆள் கிடைக்கிறது கஷ்டம்’னு நிதர்சனத்தை எடுத்துச் சொன்னார். ஆனாலும், நான் விடல. அரை மனசா சம்மதிச்சார். மூணு வருஷத்துக்கு முன்னாடி வேலையை ஆரம்பிச்சோம். ஊர்க்காரங்க வழக்கம்போல, ‘வெறும் மண்ணை வெச்சு வீடு கட்டுனா, மழைக்கும் வெயிலுக்கும் தாங்குமா’ன்னு எதிர்மறையா பேசினாங்க. எதுக்கும் நான் அசரலை’’ என்கிறவர், கணவருடன் இணைந்து கட்டுமான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.

 குழந்தைகளுடன்...
குழந்தைகளுடன்...

‘`எங்க வயல்ல உள்ள செம்மண்ணை வெச்சு நாங்களே சொந்தமா கல் அறுக்க முடிவு பண்ணினோம். அந்த வேலை களுக்காக, பட்டுக்கோட்டை, விழுப்புரம், பக்கத்து ஊரைச் சேர்ந்தவங்கன்னு மாறி மாறி கூட்டிக்கிட்டு வந்தோம். ஆனா, அவங்க எல்லாம் காசை அதிகமா வாங்கிக்கிட்டு கல்லை அறுக்காம ஏமாத்திட்டாங்க. 5,000 கல்லைக்கூட அறுக்கலை. அதுவும் மழையில் நனைஞ்சு வீணாப்போயிடுச்சு. ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம். நான் அப்படியே மூலையில உக்காந்துட்டேன். ரெண்டு நாள் சாப்பி டலை. அதைப் பார்த்த என் கணவர், ‘ஆனது ஆகட்டும். உன் விருப்பப்படி வீடு கட்டுறதைத் தொடர்வோம். எவ்வளவு நஷ்டம்வந்தாலும் பரவாயில்லை’ன்னு தைரியம் கொடுத்தார். சடார்னு ஒரு பலம் வந்த மாதிரி இருந்துச்சு. மறுபடியும் மளமளன்னு வேலையை ஆரம்பிச்சோம். ஏழு கடல், ஏழு மலை தாண்டிப் போய் மூலிகைச் செடி பறிச்சுவந்த கதை மாதிரி, பழைமையான முறையில் வீடு கட்டுறவங்களை, நாலா பக்கமும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்தோம்.

செங்கலை மட்டும் வெளியில வாங்கி னோம். மத்தபடி, அடித்தளம் போட வழக்கமா பயன்படுத்துற கப்பிக்குப் பதிலா, எங்க வயல்ல கிடந்த சுண்ணாம்பு தயாரிக்கப் பயன்படும் சுக்காங் கற்களைப் பயன்படுத்தினோம். உடை கல்லுக்கு எங்க கிணத்தை வெட்டி எடுத்த கற்களையே பயன்படுத்தினோம். சுவர்களை எழுப்ப சிமென்ட்டை பயன்படுத்தாம, எங்க வயல்ல இருந்த செம்மண்ணையே மணல்ல குழைச்சு, சுவர்களை அமைச்சோம். செம்மண் சுவர் என்பதால, அதை ஒன்றரை அடி அகலத்துக்கு எழுப்பினோம். சுவர் பூச்சுக்கு சுண்ணாம்பையும் மணலையும் கலந்து குழைச்சுப் பூசினோம். மேலே ஏழு அடியில கட்டுற கூரைக்கு மட்டும் சிமென்ட்டையும், கொஞ்சமா கம்பியையும் பயன்படுத்தினோம்’’ என்கிறவர், அடுத்து சொல்வது ஆச்சர்யம்!

 முற்றத்தில்...
முற்றத்தில்...

‘`வீட்டுக்கு நடுவுல முற்றம் அமைச்சோம். முற்றத்துல விழுற தண்ணியை வெளியே கொண்டுபோய் ஒரு தொட்டியில் விட்டு, அதைக் குடிநீரா மாற்றும் அமைப்பையும் உருவாக்கினோம். திண்ணை கட்டினோம். இப்படி மெள்ள மெள்ள எங்க கனவு வீடு எழும்ப ஆரம்பிச்சது.

அடுத்து, பயோ கேஸ் அமைப்பை நிறுவினோம். இதுல சாணம், காய்கறி, பழக்கழிவுகளைக்கொண்டு பயோ கேஸ் தயாரிச்சு, அதைப் பயன்படுத்தி சமைக்கிறோம். வீடு முழுக்க எல்லா சுவர்கள்லயும் காடு, மலைகள், யானைகள், பறவைகள், சோலைகள்னு இயற்கை ஓவியங்களைத் தீட்டினோம்’’ என்று ரசித்துச்சொல்லும் ஹேமலதா, தான் இப்படி அணு அணுவாகச் செதுக்கிய தன் மரபு வீடான `முற்றம்' பற்றி, முகநூலில் பதிவு செய்து வந்திருக்கிறார்.

மரபு வீட்டை கட்டிப் பார்! - ஹேமலதா - ரவி

‘`முகநூல் நண்பர்களையும் எங்க வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு அழைச்சோம். அவங்க வந்து பார்த்துட்டு, ‘இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு வீடு கட்டலாம்னு எங்களுக்கும் நீங்க உத்வேகம் கொடுத்திருக்கீங்க’ன்னு சொல்லி வாழ்த்திட்டுப் போனாங்க. அந்த வார்த்தைகள் மனசுக்கு அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. இந்த வீட்டை கட்டிமுடிக்க நாங்க பொருளாதார ரீதியாகவும், உடல், மனசளவிலேயும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். இப்போ, குடும்பமே சேர்ந்து முற்றத்துல உட்கார்ந்துக்கிட்டு, வீட்டுக்குள்ளேயே மழை பெய்யுறதைப் பார்க்கும்போது, எங்க கஷ்டமெல்லாம் அந்த சாரல்ல கரைஞ்சு ஓடிருச்சு. அப்புறம் இன்னொரு சிறப்பான விஷயம்... எங்க நிலத்துல இயற்கை விவசாய முறையில விளைஞ்ச தானியங்கள், காய்கறிகள்தாம் எங்க அடுப்பங்கரையில் சமையலாகும்’’ என்று சொல்லும்போது ஹேமலதாவின் மகிழ்வுக்கும் பெருமைக்கும் அளவில்லை.

மனைவியின் கனவை, எல்லா சூழல்களிலும் அவர் கரம்பற்றி நின்று நிறைவேற்றிய சந்தோஷத்துடன் இருந்தார் ரவி. ‘`இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால, மரபு வீடு யோசனை ஆரம்பத்துல மலைப்பா இருந்துச்சு. ஆனா, மனைவியின் பேச்சைத் தட்ட முடியலை. இன்னொருபக்கம், மரபு வாழ்வியல்ல பற்றுக்கொண்ட நானே, என் மனைவியோட இந்த முயற்சிக்குத் தயங்கலாமா என்கிற கேள்வியும் எழுந்தது. அதனால, நாங்க ரெண்டு பேரும் முழு நம்பிக்கையோடு வேலைகள்ல இறங்கினோம். இதோ... இப்போ எங்க கண்ணுக்கு முன்னாடி மரபு வீடு விஸ்தாரமா எழுந்து நிக்குது. நெடுங்காலமா தொலைச்ச ஏதோ ஒன்றை கண்கள்ல பார்த்துட்ட ஆத்மதிருப்தி ஏற்பட்டிருக்கு’’ என்கிறார் எதிர்பார்ப்புடன்.

ஹேமலதாவின் கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார் எனக் குடும்பமாக முற்றத்தில் அமர்ந்து கதைகள் பேச ஆரம்பிக்கிறார்கள். அதன் பெயர் ஆனந்தம்!

முற்றம் வீடு... சில குறிப்புகள்

பரப்பளவு : 1,800 சதுரஅடி

கட்டுமானச் செலவு : ₹ 25 லட்சம்

வீட்டின் தன்மை : குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடைக் காலத்தில் குளிராகவும் இருக்கும்.

சிறப்பு : பஞ்சபூதங்களும் வீட்டின் உள்ளே வருவதுபோன்ற வடிவமைப்பு.