Published:Updated:

கரியர்ல முன்னேறணுமா... பட்ஜெட்டிங்ல இதை செய்ங்க!

திறன் முன்னேற்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
திறன் முன்னேற்றம்

திறன் முன்னேற்றம்

“இன்றைய தலைமுறை பெண்கள்கிட்ட நீங்க வியந்து பார்ப்பது என்ன?” - ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் வீணா சேதுராமனிடம் நான் கேட்டபோது அவர் சொன்னது: ‘`தங்களோட துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கணும்ங்கிறதுல பெண்களுக்கு இருக்கும் வேட்கை மற்றும் தெளிவு.”

இது உண்மைதான். போன தலைமுறை பெண்களிடம் இருந்ததைவிட இந்தத் தலைமுறையினரிடம் தங்களின் பணி தொடர்பான எதிர்காலம் குறித்த திட்டமிடலும், துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிய தீர்க்கமான பார்வையும் இருக்கின்றன.

உஷா வங்கியில் வேலைபார்த்து சமீபத்தில் ரிட்டயர்டு ஆனவர். “எங்க பேங்க்ல கிளரிக்கல் வேலையில சேர்ந்த இளம்பெண் தனலட்சுமி, அடுத்தடுத்து பரீட்சைகள் எழுதி இப்போ அதே வங்கியின் மற்றொரு கிளையில உயர் பொறுப்பில் இருக்கா. துறை சார்ந்த அறிவை வளர்த்துக்க அவ எடுத்துக்கிட்ட முயற்சியும் உழைப்பும்தான், அவ இப்போ எட்டியிருக்கும் உயரத்துக்கு முக்கிய காரணம்’’ என்று தனலட்சுமி பற்றி வியந்தபடியே சொல்கிறார் உஷா.

ஆம்... ‘அத்தை சொன்னதால பேங்க் எக்ஸாம் எழுதினேன்’ என்று சொல்லும் பெண்கள் குறைந்துவருகிறார்கள்.

தங்கள் கரியரின் அடுத்தகட்ட வளர்ச்சியில் தன்முனைப்புடன் செயலாற்றும் பெண்கள் அதிகரித்துவருகிறார்கள்.

தனக்குக் கிடைத்த முதல் போனஸ் 350 ரூபாயில், என்ன நகை வாங்கலாம் என்று மாத்திரமே யோசித்ததாகச் சொல்லும் மீனாட்சி, தன் மகள் ராதாவைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:

‘`2011-ல அவளுக்கு பெர்ஃபார்மன்ஸ் போனஸா 85,000 ரூபாய் கிடைச்சதும், நான் தங்கம் வாங்கலாமானு நினைச்சேன். ஆனா, மகளோ அந்தப் பணத்துல பெரும்பகுதியை ‘சிக்ஸ் சிக்மா' (Six sigma) என்கிற கோர்ஸ் படிக்க பயன்படுத்தப் போவதா சொன்னா. எனக்கு, அது அநாவசியமாபட்டது. ‘நீ இதை செலவா பார்க்கிற, நான் முதலீடா பார்க்கிறேன். என் புரொஃபஷனல் குரோத்துக்கு இந்த கோர்ஸ் ரொம்ப அவசியம்’னு சொல்லி, அந்த கோர்ஸை முடிச்சா. அவ எதிர்பார்த்தது போலவே அடுத்த வருஷமே புரொமோஷன் கிடைச்சப்போதான் நான் புரிஞ்சுக்கிட்டேன். எங்க தலைமுறைக்கு முதலீடா தெரிந்த பல விஷயங்கள் இந்தத் தலைமுறை பெண்களுக்கு அநாவசிய செலவுகளாவும், எங்களுக்கு செலவுகளா தெரியும் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்கு முதலீடாவும் தெரியுது. மாற வேண்டியது என் கண்ணோட்டம்தான், என் பொண்ணு இல்ல!”

போட்டிகள் சூழ் இவ்வுலகத்தில் எந்தளவுக்கு தங்கள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்கிறோமோ அந்தளவுக்கு அது தங்களின் சுய முன்னேற்றத்துக்கு உதவும் என்ற தெளிவு இன்றைய பெண்களிடம் இருக்கிறது.

வீட்டுச் செலவு, ஷாப்பிங் , கேளிக்கை என்றே பட்ஜெட் போட்டுப் பழகிய பெண்களிடம், இப்போது தங்கள் துறைசார்ந்த திறனை மேம்படுத்திக்கொள்ளவும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் தங்களின் இலக்கை அடைய, தங்களுடைய தனித்திறமையை எல்லா விதங்களிலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பல பெண்களை இன்று பார்க்க முடிகிறது. ‘எவ்வளவு நகை போட்டிருக்கிறோம் என்பதல்ல எங்களுக்கான அடையாளம்’ என்றுணர்ந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெண்கள் தங்கள் துறைசார்ந்த அறிவைப் பெற அவர்களின் ஆண்டு வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கத் தயங்கக் கூடாது என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த பட்ஜெட்டிங்கும், திட்டமிடலும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைபார்ப்போருக்கு மாத்திரமல்ல என்பதை உணர்த்த, இனியாவை பற்றிச் சொல்கிறேன்.

கரியர்ல முன்னேறணுமா... பட்ஜெட்டிங்ல இதை செய்ங்க!

திருச்சி - பெங்களூரு பஸ் பயணத்தின்போது அறிமுகமான இனியா, திருச்சியில் சொந்தமாக சிறு தையல் கடை வைத்து நடத்துபவர். முகத்திலும் பேச்சிலும் முழுக்க கிராமத்து மணம். இரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் ‘ஆரி வொர்க் ஷாப்’ தையல் பயிற்சிக்காக பெங்களூருக்கு பஸ் ஏறியிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர் எனக்குக் கொடுத்ததோ ஆச்சர்யம்.

‘`பள்ளிப் படிப்பை முடிக்கல. ஃபேஸ்புக் மூலமா இந்த கோர்ஸ் நடக்கிறது பத்தி தெரிஞ்சுச்சு. அதான் பணம் கட்டி ரெஜிஸ்டர் பண்ணி கிளம்பிட்டேன்” என்றவரிடம், “பாஷை தெரியாத ஊர்ல எங்கே போய் தங்கவீங்க?” என்றேன். ‘`பயிற்சி நடக்கும் இடத்துக்குப் பக்கத்துல இருக்கும் பெண்கள் விடுதியில ரெண்டு நாள் புக் பண்ணியிருக்கேன்’’ என்றவரின் முகத்தில் தன்னம்பிக்கை தெறித்தது.

“பரவாயில்லையே... தொழில் கத்துக்கிறதுக் காக இவ்வளவு செலவு பண்றீங்க...’’ என நான் சொன்னதும், “இது செலவு இல்லக்கா. என் தொழிலுக்கு நான் போடுற முதலீடு. கல்யாணத்துக்கு டிசைனர் பிளவுஸ் தைக்க நிறைய ஆர்டர் வருது. இப்போ இதைக் கத்துக் கிட்டா நாளைக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்” என்றார் கண்கள் மிளிர. “இந்த கோர்ஸ் மற்றும் பயணத்துக்கு எப்படிப் பணம் சேர்த்தீங்க?” என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான், நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது. “என்னோடது சின்ன கடைதான். ஆனா, தொழில் தொடர்பா ஏதாவது கத்துக்கணும்ங்கிறதுக்காக வருமானத்துல அப்பப்போ தனியா பணம் சேர்ப்பேன். அதுதான் இப்போ உதவுது’’ என்றபோது வியந்துபோனேன்.

சொல்லுங்கள் தோழிகளே... இலக்கை நோக்கிய பயணத்தில் உங்களுடைய தனித் திறமையை வளர்க்க உங்கள் பட்ஜெட் எவ்வளவு?