
மதிப்பிற்குரியவர்கள்
பெண்கள் எப்போதுமே வியப்புக்குரியவர்கள்தாம். தெருமுனையில் பூ விற்கும் பெண்ணில் ஆரம்பித்து விண்வெளிக்குச் சென்று வரும் பெண்வரை ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஏதோவோர் ஆச்சர்யத்தை ஒளித்து வைத்திருக்கிறார். அந்த ஆச்சர்யத்தை உணரும் தருணம் அவர்கள் முன் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோம். அந்தவகையில், ‘நீங்கள் சமீபத்தில் வியந்த பெண் யார், ஏன்?’ எனச் சில பிரபலங்களிடம் கேட்டோம்...

கஸ்தூரி அக்கா... எழுத்தாளர் பவா செல்லத்துரை
எங்க தெருவுல டிரைசைக்கிள்ல காற்கறி விற்க வருவாங்க கஸ்தூரி அக்கா. வேகாத வெயில்லயும் டிரைசைக்கிளை மிதிச்சுகிட்டு வரும் அவங்களை ரெண்டு வருஷமா நான் பார்த்துட்டு வர்றேன். அவங்ககிட்ட தராசே இருக்காது. யார் காய்கறி கேட்டாலும் கையில அள்ளிக் கொடுப்பாங்க. அரை கிலோ கத்திரிக்காய் கேட்டோம்னா, முக்கால் கிலோவோ, அதற்கு அதிகமாவோதான் கொடுப்பாங்க. ‘இப்படி வாரி வாரி கொடுக்குறியேக்கா உன் குடும்பம் என்னாவறது’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் நாங்க நல்லா இருக்கோம் சார். எங்களுக்கு ஒரு குறையும் இல்லே’ன்னு சொன்னாங்க.
என் ஓட்டுநரை அனுப்பி, அவங்க எங்க குடியிருக்காங்க, குடும்பம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரச் சொன்னேன். பார்த்துட்டு வந்து, “அவங்க அண்ணாசாலைக்குப் பக்கத்துல குடியிருக்காங்க சார். பத்து தென்னை ஓலைகள்தான் அவங்க வீடு. ஒரே ஒரு ஆள் படுத்துக்கலாம் அவ்வளவுதான். அந்த அக்காவோட வீட்டுக்காரர் தினமும் குடிச்சுட்டு வந்து அடிப்பாராம்’னு சொன்னார். ஆனா, கஸ்தூரி அக்கா தெருவுக்குள்ள வரும்போது ஒருநாள்கூட அந்தத் துயரத்தை வெளியில் காண்பிச்சுகிட்டதே இல்லை. பயங்கர சந்தோஷமான மனுஷியா அந்த டிரைசைக்கிள்தான் தன் உலகம்னு சுத்திச்சுத்தி வருவாங்க.
அந்த அக்காவைப் பத்தி நான் சொன்னதும், துபாயிலிருக்கும் என் நண்பர்கள் ரெண்டு பேர் ஆளுக்கு 25,000 ரூபாய் அனுப்பி... ‘கஸ்தூரி அக்காவுக்கு ஒரு காய்கறிக்கடை வெச்சுக் கொடுங்க’ன்னு சொன்னாங்க. அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்தபோது, வேண்டாம்னு மறுத்த கஸ்தூரி அக்கா, “என்னோட வாடிக்கையாளர்களை என்னைத் தேடி வர வைக்கக் கூடாது சார்... நான்தான் அவங்க வீட்டுக்குப் போகணும். சைக்கிளை மிதிச்சேன்னா தினமும் எல்லாரையும் பார்த்துடுவேன்’னு சொன்னாங்க. “ரெண்டு பேர் உங்களுக்குப் பணம் அனுப்பிட்டாங்க. அதை நான் என்ன பண்றது, வேணும்னா இந்த டிரைசைக்கிள்ல ஒரு மோட்டார் பொருத்தித் தரட்டுமா?’ன்னு கேட்டேன். ‘அதுவும் வேணாம் சார்... நான் கால்லயே மிதிச்சு வியர்வை சிந்துறேன் சார்’னு சொன்னாங்க. நான் மிரண்டுட்டேன். இப்போ இன்னும் சில நண்பர்களோட சேர்ந்து அந்த அக்காவுக்கு ஒரு வீடு கட்டித் தரப்போறோம். அஸ்திவாரம் போட்டாச்சு. இன்னும் ரெண்டு மாசத்துல ‘கஸ்தூரி அக்காவின் வீடு’ தயாராகிடும்.

பனங்கிழங்கு விற்ற பாட்டி... ஓவியர் மருது.
நான் ஒருமுறை நண்பர்கள் ஆறு பேருடன் தனுஷ்கோடி போயிருந்தேன். ராமேஸ்வரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். மதியம் வெளியே போன இடத்துல பாட்டி ஒருத்தங்க தனியா உட்கார்ந்து பனங்கிழங்கு வித்துகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு எப்படியும் 75 வயசுக்கு மேல இருக்கும். அவங்க உடல் ரொம்ப தளர்ந்துபோயிருந்துச்சு. அந்த வயசிலும் சொந்த உழைப்பில் சம்பாதிக்கணும்ங்கிற வைராக்கியத்திலோ, நிர்பந்தத்திலோ, வீட்டில் சும்மா இருக்க விரும்பாமலோதான் அந்தப் பாட்டி அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கணும். அந்தப் பாட்டிகிட்ட போய் பனங்கிழங்கு வாங்கினேன். நாலஞ்சு பனங்கிழங்கை எடுத்துக்கொடுத்து
12 ரூபாய்னு சொன்னாங்க. 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை வாங்கி தன் சுருக்குப் பைக்குள்ள போட்டுகிட்டு மீதம் கொடுக்க வேண்டிய சில்லறையைத் துழாவிகிட்டிருந்தாங்க.
‘பரவாயில்லை பாட்டி... இருக்கட்டும்’னு சொல்லிட்டுத் திரும்பினேன். பாட்டி பதறியபடி ‘நில்லு... நில்லு... இந்தா இதை வாங்கிட்டுப் போயிரு’னு சில்லறையைத் தேடி எடுத்து என் கையில் கொடுத்தாங்க. ‘இந்தப் பாவத்தை நான் எங்கே கொண்டுபோய் கழுவுறது’ன்னு கேட்டபடியே கொடுத்ததுதான் எனக்கு மிகப்பெரிய வியப்பு. அந்தப் பாட்டியையும் அவர் சொன்ன வார்த்தையையும் என்னால் மறக்கவே முடியலை. காரணம், அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்துலதான் இந்தியாவின் பல மாநிலங்களிலேயிருந்து வந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களைப் போக்கிட்டுப் போற இடம் இருக்கு. அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு, ஒருத்தர்கிட்ட 8 ரூபாயை சும்மா வாங்கறதைப் போக்கவே முடியாத பாவமாக நினைச்ச அந்தப் பாட்டியை நினைச்சு நான் எப்போதும் வியப்பேன்.

என் மனைவி நதியா... `பிக்பாஸ்' ஆரி
கணவனை வேலைக்கு அனுப்பிட்டு, வீட்டில் இருந்து சமைச்சுப் போட்டுகிட்டு குடும்பத்தைக் கவனிச்சுகிட்டு இருக்கிற பெண்களின் உழைப்பும் தியாகமும் எந்தளவுக்கு மகத்தானதுங்கிறது பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த 106 நாள்களில் எனக்குப் புரிஞ்சது.
என் மனைவி நதியா லண்டன்ல பார்த்த வேலையை ரிசைன் பண்ணிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட குடும்பம் நடத்துறாங்க. நாம சம்பாதிக்கிறோம், அவங்க வீட்டைப் பார்த்துக்கிறாங்க. இருவரும் பகிர்ந்து வாழ்க்கையை நடத்துறோம்கிற எண்ணம்தான் பிக்பாஸுல கலந்துக்கிறதுக்கு முன்னாடிவரை இருந்தது. பிக்பாஸுக்குப் போனதுக்குப் பிறகு, அந்த எண்ணமெல்லாம் சுக்கு நூறாகிருச்சு.
நமக்கான உணவைத் தயார் செய்யுறது, உடையைத் துவைக்கிறது, வீட்டைச் சுத்தம் பண்றதுன்னு எல்லாத்தையும் பெண்கள் செஞ்சுகிட்டிருக்காங்க. இதெல்லாம் ஆண்கள் வேலை இல்லைன்னு நாம ஒதுங்கிப் போய்கிட்டே இருக்கோம். பெண்களுடைய தியாகத்தை, ‘வழக்கமா அவங்க செய்யுறதுதானே…’னு ஜஸ்ட் லைக் தட் எடுத்துக்குறோம். ஆனா. அப்படியெல்லாம் இல்லைங்கிறதை பிக்பாஸ்லதான் உணர்ந்தேன். அந்தத் தருணத்திலிருந்து என் மனைவியை நினைச்சு நான் வியந்துகிட்டிருக்கேன். ஒவ்வொரு குடும்பத் தலைவிக்குமே இந்தத் தருணத்தில் என்னுடைய முதல் மரியாதையைச் சொல்லிக்க கடமைப்பட்டிருக்கேன். ஏன்னா சம்பாத்தியத்துக்காக உழைக்கிறவன்தான் ஹீரோன்னு இந்த உலகம் பார்க்குது. ஆனா, அது உண்மையில்லை. வீட்டு வேலை செஞ்சுகிட்டு குடும்பத்தைப் பார்த்துகிட்டிருக்கிற பெண்கள்தான் உண்மையான ஹீரோக்கள். ஆண் பெண் ரெண்டு பேரும் சமம்னு வெறுமனே வாயளவில் சொல்லிகிட்டிருக்காம, வீட்டு வேலையாக இருக்கட்டும் சமையலாக இருக்கட்டும் எல்லாவற்றையும் ஆண்களும் கத்துக்கணும். வீட்டு வேலையை தொழிலாகச் செய்யுற பெண்களையும் இந்த நேரத்தில் நான் வணங்குகிறேன்.

மரகதம் அம்மா... அண்ணாமலை, பா.ஜ.க துணைத் தலைவர்
கரூர் மாவட்டம் திருக்காட்டுத்துறையின் முன்னாள் பஞ்சாயத்து தலைவியான மரகதம் அம்மாவை சமீபத்துல சந்திச்சேன். அவங்க வாழ்க்கையும், அவங்க அரசியலுக்கு வந்த கதையும் வியப்புக்குரியது. மரகதம் அம்மா பி.யு.சி வரை படிச்சவங்க. அவங்க கணவர் கந்தசாமி விமானப் படையில் பணியாற்றி, ஜனாதிபதி விருது வாங்கியவர். கந்தசாமி - மரகதம் தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் சாஃப்ட்வேரில் பணியாற்ற, இன்னொரு மகன் கோகுலும் அவரின் மனைவி காயத்ரியும் விமானப்படையில் பணியாற்றினாங்க. கோகுலும் காயத்ரியும் ஜனாதிபதிகிட்டருந்து முன்மாதிரி சேவைக்கான விருது பெற்றிருந்த நிலையில், 2003-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த விமான விபத்துல கோகுல் பரிதாமா பலியாகிட்டார். அவர் குடும்பமே நிலைகுலைஞ்சுபோனது. மகனை இழந்த துக்கத்தில் நொறுங்கிப்போன மரகதம் அம்மா சில காலம் ஆன்மிகப் பாதையில் பயணிச்சாங்க.
இந்த நிலையில், விமானப்படையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, கரூர் வேலாயுதம் பாளையத்தில் உள்ள காகித ஆலையில் சேஃப்டி ஆபீஸராகப் பணியாற்றி வந்த மரகதம் அம்மாவின் கணவர் கந்தசாமியும் 2010-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட, மரகதம் அம்மாவின் வாழ்வில் வெறுமை சூழ்ந்தது. அதுவரை எந்த அரசியல் தொடர்புமில்லாம இருந்த மரகதம் அம்மா, பொதுச்சேவை செய்யும் எண்ணத்துல உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றாங்க. அங்கு அவர் செய்த பணிகள், திருக்காட்டுத்துறை கிராமத்துக்குப் பசுமை கிராமம் என்ற விருதை அப்போது பெற்றுத் தந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலா எந்த அரசியல் தொடர்பும் இல்லாம,
50 வயசுக்கு மேல் தேர்தலைச் சந்திச்சு வெற்றிபெற்று சாதிச்ச மரகதம் அம்மாவை நினைச்சு நான் வியக்கிறேன். அதுமட்டுமல்ல, கோகுலின் மகனையும் இப்போ விமானப் படைக்கு சேவையாற்ற அனுப்பி வெச்சிருக்கிறது கூடுதல் வியப்பு.

என் அம்மா... இயக்குநர் மாரி செல்வராஜ்
இந்தக் கேள்விக்கு எந்த யோசனையுமின்றி என் அம்மாதான் நினைவுக்கு வர்றாங்க. அவங்க ஸ்கூல் பக்கம் போனதே இல்லை. எழுதப்படிக்கத் தெரியாது. அப்பாவும் அப்படித்தான். என் அப்பா, கிட்டத்தட்ட ஒரு குழந்தை மாதிரிதான். என் அம்மா இல்லாம அவர் எங்கேயுமே போனது கிடையாது. ரெண்டு அண்ணன், ரெண்டு அக்கான்னு என் கூடப் பொறந்தது நாலு பேர். அதுல ஒரு அக்கா ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. மீதமுள்ள நாலு பிள்ளைங்களையும், குழந்தை மாதிரியான கணவரையும் எப்படி ஒரு தனி மனுஷி தாங்கினாங்கன்னு எனக்கு இப்பவும் ஆச்சர்யமா இருக்கு.
ஒரு துளி நிலம், வசதி வாய்ப்புனு எதுவுமே இல்லாம வெறும் கூலி வேலை மட்டுமே பார்த்து நாலு பேரையும் உருவாக்கினாங்க. நாங்க என்ன சொன்னாலும் அவங்களுக்கு அது தப்பா சரியான்னுகூட புரியாது. ஆனா, நாங்க கேட்டுட்டா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. இப்போகூட நான் டைரக்டரா இருக்கேன்னோ... எங்க அண்ணன் என்ன டீச்சரா இருக்கான்னோ எங்க அம்மாவுக்குச் சொல்லத் தெரியாது.
ஒருநாள்கூட வேலைக்குப் போகாம அவங்க வீட்ல இருந்ததே கிடையாது. இப்போதான் அவங்க ஓரிடத்துல வந்து உட்கார்ந்திருக்காங்க. இன்னிக்கு எனக்கு 35 வயசாகுது. கடந்த அஞ்சு வருஷமாதான் எங்க லைஃப் ஸ்டைல் மாறியிருக்கு. மிச்ச 30 வருஷங்கள் நான் பார்த்த வாழ்க்கை வறுமையின் பிடிதான். எப்படி குடும்பத்தை நடத்தினாங்க. நான்கு பிள்ளைகளும் அவங்களுடைய கனவை நோக்கிப் போறதுக்கு எப்படி அனுமதிச்சாங்க... நாங்க எங்க கனவை அடையுற வரைக்கும் எப்படிக் காத்திருந்தாங்கன்றது எனக்கு வாழ்நாள் வியப்பு.