பல துறைகளில் மாற்றத்தை உருவாக்கிய பெண்களின் வாழ்க்கையை (women change-makers), மத்திய அரசு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து வீடியோ சீரிஸாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு (The Union Information and Broadcasting - I&B) அமைச்சகமானது ஒடிடி இயங்குதளமான நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து, பல துறைகளில் சாதித்த, மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் 30 வீடியோக்களை சீரிஸாக வெளியிட உள்ளதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2017-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறி பத்மஸ்ரீ விருது பெற்ற அன்ஷு ஜம்சென்பா, கோசி நதியைக் காப்பாற்றும் முயற்சியில் போராடி, பத்ம விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் பசந்தி தேவி, இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரங்கனையான ஹர்ஷினி கன்ஹேகர் ஆகியோரின் சாதனைகளை விளக்கும் மூன்று சிறிய வீடியோக்கள், வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் டிவியின் தலைவராக பணிபுரியும் பெலா பஜாரியாவுடன், வீடியோவில் இடம்பெற்ற பெண் சாதனையாளர்கள் மூவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் ஏழு வீடியோக்கள் அனைத்து சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷனிலும் காணக் கிடைக்கும். குஜராத்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் காணலாம். இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்குள் 30 வீடியோக்கள் வரை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.