Published:Updated:

"ஏன்னா நான் ஓர் அம்மா..." அக்கவுன்ட்ஸை உதறி, அடுப்பங்கரையில் சாதித்த ஸ்ரீபாலா

ஶ்ரீபாலா
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீபாலா

சங்க கால சமையல்

‘’சமையலுக்கு நாம பயன்படுத்தற மிளகாய், சமீப காலத்துல வந்ததுதான். சங்க காலத்துல மிளகுதான் பயன்படுத்தப்பட்டிருக்கு.

மிளகாய்னு ஏன் பெயர் வந்தது தெரியுமா? மிளகுக்குப் பதிலா, அதாவது மிளகாயை ‘மிளகாய்’ நினைச்சுப் பயன்படுத்தினதாலதான். வெளிநாட்டுக்காரங்க நம்மகிட்ட மிளகாயைக் கொடுத்துட்டு, மிளகை எடுத்துட்டுப் போயிட்டாங்க. மிளகுக்கு அபாரமான மருத்துவ குணங்கள் உண்டு. எகிப்திய மம்மிகளில் இறந்தவர்களின் சடலங்களைப் பதப்படுத்தும்போது மிளகு போட்டுவைப்பாங்களாம். மிளகுக்குக் கறுப்புத் தங்கம்னு ஒரு பெயரும் உண்டு. தங்கத்தை நமக்குக் கொடுத்துட்டு நம்மகிட்டருந்து மிளகை வாங்கிட்டுப் போவாங்களாம். இன்னிக்கு மிளகை விட்டுக்கொடுத்துட்டோம். இப்போ அது நமக்கே காஸ்ட்லியானதா மாறிடுச்சு....’’

 ராம்சேவுடன்...
ராம்சேவுடன்...

- இப்படித்தான் ஆரம்பிக்கிறது அந்த நிகழ்ச்சி. நேஷனல் ஜியாகரபிக் சேனலில் ஒளிபரப்பாகும் ‘அன்சார்ட்டர்டு’ நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற செஃப் கார்டன் ராம்சே உடன் பங்கேற்று வந்த பிரமிப்பு இன்னும் மறையவில்லை ஶ்ரீபாலாவுக்கு.

ஶ்ரீபாலா, சென்னையின் முன்னணி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களின் முக்கிய முகம். சிஏ படித்த ஶ்ரீபாலா, கரன்சியையும் கணக்குப் பதிவையும் உதறிவிட்டு, கரண்டி பிடிப்பதில் ஆனந்தம் கண்டிருக்கிறார்.

‘`குடும்பத்துல அத்தனை பேரும் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ். ஆனா, எனக்கென்னவோ சின்ன வயசுலேருந்தே செஃப் ஆகணும்ங்கிறதுதான் ஆசை. ஆச்சாரமான குடும்பம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புல அசைவமும் இருந்ததால அம்மா பர்மிஷன் தரலை. வேற வழியே இல்லாம, அக்கவுன்ட்ஸ், சி.ஏ, கம்பெனி செகரட்டரி, லா... இப்படி ஏகப்பட்ட படிப்புகளை முடிச்சேன். சட்ட நிறுவனம் ஒன்றில் ஹெட் ஃபைனான்ஸா வேலை பார்த்திட்டிருந்தேன்.

 ‘அன்சார்ட்டர்டு’ நிகழ்ச்சியில் ராம்சே
‘அன்சார்ட்டர்டு’ நிகழ்ச்சியில் ராம்சே

2013-ம் வருஷம் அப்பா தவறிட்டார். அந்த அதிர்ச்சியில படுத்த படுக்கையாயிட்டாங்க அம்மா. அதுலேருந்து மீளமுடியாம அவங்களும் தவறிட்டாங்க. அடுத்தடுத்து அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இழந்தது என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்தது. கம்பெனியில பெரிய பொறுப்புல இருந்தாலும் என்னால அந்த வேலையைத் தொடர முடியலை. மனசு அதுல லயிக்கல. வாழ்க்கையில எதிலுமே பிடிப்பில்லாத அந்த சூழல்ல எதைப் பத்தியும் யோசிக்காம அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.’’

- அந்த நிலையில் ஶ்ரீபாலாவின் வெறுமையை விரட்டியது, அவருக்குள் மறைந்திருந்த சமையல் திறன்.

‘`இயல்பிலேயே நான் ஹைப்பர் ஆக்டிவ் கேரக்டர். ஒரு நிமிஷம்கூட சும்மா இருக்க முடியாது. வேலையை விட்ட பிறகு பத்தாவது படிச்சிட்டிருந்த என் மகளைப் பார்த்துக்கிறது, சமைக்கிறதுனு இருந்தேன். சமைக்கிற உணவுகளை தினம் சோஷியல் மீடியாவில் போஸ்ட் பண்ணிட்டிருந்தேன். அதையெல்லாம் பார்த்துட்டு பெரிய ஹோட்டல்களின் செஃப்ஸ் கமென்ட் பண்ணுவாங்க. அப்படியே சிலரோட நட்பும் கிடைச்சது.

ஶ்ரீபாலா
ஶ்ரீபாலா

`ஹோட்டல்களில் எப்போதும் வட இந்திய உணவுகளையே அதிகம் பிரபலப்படுத்தறீங்க... தென்னிந்திய உணவுகளில் அத்தனை வெரைட்டி இருக்கு. தென்னிந்திய மாநிலம் ஒவ்வொண்ணுக்கும் ஏராளமான சுவைகள் இருக்கு’னு அவங்ககிட்ட விவாதம் பண்ணுவேன். ‘அப்படின்னா எங்க ஹோட்டல்ல வந்து சமைக்க அவங்கள்ல யாரையாவது ரெஃபர் பண்ணுங்க’னு கேட்டாங்க. ‘யாரையோ எதுக்கு ரெஃபர் பண்ணணும், நானே சமைக்கிறேன்’னு சொன்னேன். ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சவங்களைதான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல எடுத்துக்க முடியும்’னு சொன்னாங்க.

‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கும், சமைக்கத் தெரிஞ்சிருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. சமைக்கத் தெரிஞ்சவங்களை ஏன் நீங்க எடுக்கக் கூடாது, எனக்கொரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்க. என் சமையல் பிடிச்சா தொடரலாம்’னு சொன்னேன்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்காத ஒருத்தரை, ஸ்டார் ஹோட்டலுக்குள்ளே வேலை பார்க்க அனுமதிச்சதா அத்தனை பேரும் ஆச்சர்யமா பார்த்தாங்க. டிரைடென்ட் ஹோட்டல்ல செஃப்பா என் செகண்டு இன்னிங்ஸ் ஆரம்பிச்சது’’ - வரலாற்றை மாற்றியவருக்கு, இயல்பிலும் வரலாற்றுப் பாடம் பிடிக்குமாம்.

‘`குறிப்பா சோழர்களின் வரலாறும் வாழ்க்கையும் ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பத்தி நாம வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் படிச்சது ரொம்பக் குறைவு. இதைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிற ஆர்வத்தில் இலங்கை நூலகத்துக்குப் போய், தகவல்கள் சேகரிச்சேன். சங்க காலம் முதல் இப்போதுவரை நம் உணவு முறையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு, வெளிநாட்டுத் தாக்கத்தால் எந்தெந்த பொருள்களெல்லாம் நம்மகிட்ட வந்திருக்கு, எதையெல்லாம் நாம மறந்திருக்கோம்னு நிறைய ரிசர்ச் பண்ணினேன். உணவே மருந்து என்பதுதான் நான் நம்பற கான்செப்ட். அந்த கான்செப்ட்ல டி.வி நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். நிறைய ஸ்டார் ஹோட்டல்களில் உணவுத் திருவிழா நடத்தியிருக்கேன். அதுல பெரும்பாலும் சங்ககால இலக்கியத்துல குறிப்பிடப்பட்ட விஷயங்கள்தான் ஹைலைட்டா இருக்கும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களில் இது மாதிரி நிறைய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை அடிப்படையாவெச்சுதான் ஃபுட் ஃபெஸ்டிவல்ஸை டிசைன் பண்ணுவேன். இதையெல்லாம் பார்த்துட்டு வந்த வாய்ப்புதான் ‘அன்சார்ட்டர்டு' நிகழ்ச்சி’’ - அந்த அனுபவத்தைப் பேச ஆரம்பிக்கும்போதே கண்கள் விரிகின்றன ஶ்ரீபாலாவுக்கு.

‘`இதுக்கு முன்னாடி, ‘கறீஸ் ஆஃப் இந்தியா’னு ஒரு புரொகிராம் பண்ணியிருக்கேன். கறிங்கிறது தமிழ் வார்த்தை. ஆனா, பிரிட்டிஷ் காலத்துலயே அது ஆங்கில வார்த்தையா மாறிடுச்சு. `கறீஸ் ஆஃப் இந்தியா' நிகழ்ச்சியில சவுத் இந்தியன் உணவு சம்பந்தப்பட்ட எபிசோடுகளில் நான் வொர்க் பண்ணியிருக்கேன். அது மூலமா வந்த வாய்ப்புதான் உலகத்தின் நம்பர் ஒன் செஃப் கார்டன் ராம்சேகூட பங்கெடுத்தது.

இந்த நிகழ்ச்சியில அவர்கூட கலந்துக்கப் போறவங்களுக்கான செலக்‌ஷனே கிட்டத்தட்ட ஆறு மாசங்கள் நடந்தது. 2019 ஆகஸ்டில் ‘அன்சார்ட்டர்டு’ நிகழ்ச்சியில கலந்துக்க விருப்பமான்னு கேட்டு அமெரிக்காவிலிருந்து இன்டர்வியூ நடத்தினாங்க. பல கட்டங்களா நடந்த இன்டர்வியூவில் கடைசியா வீடியோ இன்டர்வியூ.

‘கார்டன் ராம்சேவைவிட, நான் ஏன் சிறந்த குக்’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லணும். மிஸ் வேர்ல்டுல கேட்கற மாதிரியான டஃப் கேள்வி. ‘நிச்சயமா நான் அவரைவிட பெட்டர் குக். ஏன்னா நான் ஓர் அம்மா’ - என்னுடைய இந்த பதிலைக் கேட்டதும் பயங்கரமான கைத்தட்டல்கள். அந்த பதில்தான் என்னை செலக்ட் பண்ண வெச்சிருக்கணும். நம்ம உணவுப் பாரம்பர்யத்தை, வரலாற்றை கார்டன் ராம்சேக்குச் சொல்வேன். தென்னிந்தியாவும் வட இந்தியாவும் வேற... ரெண்டுக்குமான மசாலா பொருள்கள் வேற வேற... எங்க பாரம்பர்யத்தைக் கத்துக்கிட்டு வாங்கனு சொல்வேன். அவர் தெரிஞ்சிட்டு வந்தபிறகு நாங்க சமைப்போம். இப்படித்தான் அந்த நிகழ்ச்சி போகும்.

முதல்ல அமெரிக்கா, அடுத்து 127 நாடு களில் இந்த புரோகிராம் ஒளிபரப்பாகப் போகுது. ராம்சே ரொம்ப கோபக்காரர், எல்லாரையும் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இந்த நிகழ்ச்சியில நான்தான் அவரை அதட்டியிருக்கேன். பர்சனலா அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி.’’

- வாழ்நாள் அனுபவம் பகிரும் ஶ்ரீபாலா, செஃப், சி.ஏ, யூடியூபர் என லாக்டௌன் நாள்களிலும் செம பிஸி.

சங்க இலக்கிய சாப்பாட்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, அடுத்து பழங்குடியினரின் பாரம்பர்ய உணவு முறைகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறாராம்.