Published:Updated:

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!

மணமகள்
பிரீமியம் ஸ்டோரி
மணமகள்

ஆடை, அலங்காரம், ஆபரணம், ஆரோக்கியம், ஆலோசனைகள்...

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!

ஆடை, அலங்காரம், ஆபரணம், ஆரோக்கியம், ஆலோசனைகள்...

Published:Updated:
மணமகள்
பிரீமியம் ஸ்டோரி
மணமகள்

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான திருநாள். அந்த தினத்தில் மணமக்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். குறிப்பாக, மணமகனைவிட மணப்பெண் தன்னை தயார்படுத்திக்கொள்வதில் பரபரப்பு அதிகமாக இருக்கும். அப்படியான கடைசி நேர பதற்றத்துக்கு இடம் தராமல், முகூர்த்தத்துக்கு நாள் குறித்ததில் இருந்து மணநாள் வரை, மணப்பெண்ணுக்கான அழகு, ஆரோக்கிய பராமரிப்பு முதல் ஆடை வரை தேவையான வழிகாட்டுதல்கள் அனைத்தும்... இங்கு உங்களுக்காக.

நந்திதா
நந்திதா

திருமண ஆடை எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும், டிசைனரை தேர்வு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என எக்கச்சக்க டிப்ஸ் சொல்கிறார் ஃபேஷன் டிசைனர் நந்திதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்யாணி
கல்யாணி

எந்த ஆடைக்கு எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் உள்ளிட்ட ஸ்டைலிங் தகவல்களை வழங்குகிறார் ஹேர் ஸ்டைலிஸ்ட் கல்யாணி.

அர்ச்சனா ஆர்த்தி.
அர்ச்சனா ஆர்த்தி.

திருமண தினத்தில் ஆடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகளைப் பகிர்கிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

ரதி ராதிகா
ரதி ராதிகா

மேக்கப் சார்ந்த விஷயங்களில் பெண்கள் அவசியம் கவனிக்க, பின்பற்ற வேண்டியது என்ன என்பது தொடர்பான தகவல்களைப் பகிர்கிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் ரதி ராதிகா.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
வசுந்தரா

திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இயற்கையாக செய்துகொள்ளக்கூடிய சரும பராமரிப்பு குறித்த தகவல்களை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

ரம்யா ரவி
ரம்யா ரவி

ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ள, தைராய்டு தொடங்கி, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு வரை என்னென்ன பரிசோதனைகளை திருமணத்துக்கு முன்பு மணப்பெண் செய்துகொள்ள வேண்டும் என்ற தகவலை அளிக்கிறார் கருத்தரிப்பு சிறப்பு மருத்துவர் மற்றும் லேப்ரோஸ்கோபி சர்ஜன் ரம்யா ரவி.

இந்த இணைப்பிதழில் நாங்கள் தேடித் தேடித் தொகுத்திருக்கும் மணப் பெண்களின் நலன் சார்ந்த ஆலோசனைகள், முகூர்த்த நாளின் கடைசி நேர பரபரப்பை நிச்சயம் குறைக்கும் என்பதால் மணப்பெண்களுக்கான சிறப்பான பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
VSanandhakrishna

திருமண ஆடைகள்... ஷாப்பிங், ஸ்டிட்சிங், பேக்கிங்!

திருமணம் என்றாலே மணப்பெண்ணின் ஆடைக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம்தான். உங்கள் ஸ்பெஷல் தினத்துக்கான ஆடையைத் தேர்வு செய்யும் முன் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் டிசைனர் நந்திதா.

* திருமணச் செலவில் உங்களுடைய ஆடைகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து, உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் ஆடைகளை வடிவமைக்கும் டிசைனர்களை அணுகுங்கள்.

* திருமணம் என்பது இப்போது மெஹந்தி, நிச்சயதார்த்தம், ரிசப்ஷன், முகூர்த்தம், போட்டோ ஷூட், ஹனி மூன் எனப் பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக மாறிவிட்டது. எனவே, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உங்களை வெவ்வேறு லுக்கில் காட்டிக்கொள்ள வெவ்வேறு விதமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

* மெஹெந்தி நிகழ்ச்சிக்கு பனாரஸி ஸ்கர்ட்டை டிசைனர் கிராப் டாப்புடன் மேட்ச் செய்து அணியலாம். முகூர்த்தத்துக்கு பட்டுப் புடவை, ரிசப்ஷனுக்கு கிராண்ட் ஸ்கர்ட் அண்ட் கிராப் டாப் என்று டிரெடிஷனல் மற்றும் இண்டோ வெஸ்டர்ன் கலந்து ஸ்டைலிங் செய்துகொள்ளலாம்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
திருமண ஷாப்பிங் செல்லும்போதே மொத்தமாக செக் லிஸ்ட் போட்டு எடுத்துச் சென்று, அனைத்தையும் வாங்கிவிடுவது நல்லது. ஏதாவது ஒரு பொருளை வாங்காமல் விட்டாலும் இறுதிவரை பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

* முழுவதும் டிரெடிஷனல் ஆடைகள்தான் உங்களுடைய சாய்ஸ் எனில், புடவையின் மெட்டீரியல், கட்டும் விதம் ஆகியவற்றில் வித்தியாசம் காட்டலாம். நிச்சயதார்த்தத்துக்கு டிசைனர் புடவை, முகூர்த்தத்துக்கு பட்டுப்புடவை, ரிசப்ஷனுக்கு நெட்டட் அல்லது பனராஸி புடவை எனத் திட்டமிடலாம். உங்களுடைய சாய்ஸ் இண்டோ வெஸ்ட்டர்ன் எனில் பட்டுப்புடவைகளில் கவுன், நெட் தாவணி - பாவாடை செட் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

* பட்டுப்புடவையைப் பொறுத்தவரை, அதிக ஜரிகை இருக்கும் புடவையைவிட, ஜரிகை குறைந்த அளவில் இருக்கும் புடவையில்தான் புடவையின் நிறம் நன்றாகத் தெரியும்.

* டிரெண்ட் என்ன என்பதைப் பார்த்து திருமண ஆடையைத் தேர்வு செய்யாமல், உங்களுக்கு எது பொருந்தும் என்பதைப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

* நீங்கள் தேர்வு செய்யும் ஆடைகளின் நிறங்கள், நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். பேஸ்டல் நிற ஆடைகள் ரிசப்ஷனுக்கு பொருத்தமாக இருக்கும். சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா போன்ற டிரெடிஷனல் நிறங்கள் முகூர்த்தத்துக்கு பெஸ்ட் சாய்ஸ். மெஹந்திக்கு மஞ்சள், வெள்ளை போன்ற வெளிர் நிற ஆடைகள் அழகாக இருக்கும்.

* விதம்விதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்ய பலருக்கும் விருப்பம் இருக்கும். அத்தகைய ஜோடிகள், ஆடைகளுக்காக அதிகமாக செலவு செய்யாமல் ரென்ட்டல் (வாடகை) ஆடைகள் பயன்படுத்தலாம்.

*ஆடைக்கு ஏற்ற ஆபரணங்கள், அணிகலன்கள் மட்டுமல்லாது காலணிகள்கூட பொருத்தமாகத் தேர்வு செய்து அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* பட்டுப் புடவைகளுக்கு பட்டர்ஃப்ளை ஸ்லீவ், பஃப் ஸ்லீவ், பெல் ஸ்லீவ் போன்றவற்றைத் தேர்வு செய்தால் தனித்துவமாக இருக்கும். ஹை நெக், க்ளோஸ் நெக், காலர் நெக், பெல்ட் பிளவுஸ் என வித்தியாசமான பேட்டர்ன் களையும் தேர்வு செய்யலாம்.

* திருமணத்துக்காக எடையைக் குறைப்பவர்கள், திருமண ஆடைக்கு அளவு கொடுத்த பின் அதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் திருமண ஆடை சரியான ஃபிட்டிங்கில் இருக்காது.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
VSanandhakrishna
முன்பின் அறியாத டிசைனர்கள் அல்லது தையற்காரர்களிடம் கொடுத்து பிளவுஸ் தைக்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு மாடல் பிளவுஸ் தைத்துப் பார்த்து, ஃபிட்டிங் சரியாக இருந்தால் திருமண ஆடைகளைத் தைக்கக் கொடுக்கலாம்.

* திருமண ஆடை தயாரானதும் டிரையல் பார்த்து, தேவைப்பட்டால் ஃபிட்டிங்கை ஆல்டர் செய்துகொள்ள வேண்டும். ‘பரவாயில்ல மேனேஜ் பண்ணிக்கலாம்’ என்று நினைக்கக் கூடாது. பின் திருமண நாளில் ஆடை உங்களுக்கு அசௌகர்யத்தை, பதற்றத்தைத் தரும். திருமண ஆடைகளை கூடுமானவரை ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

* உங்களுடைய பிளவுஸ்களில் `பேட் (Pad)’ வேண்டுமா, வேண்டாமா என்பதை ஆடைகளுக்கு அளவு கொடுக்கும்போதே டிசைனர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.

* திருமண ஷாப்பிங் முடிந்த பின் ஆடைகளை அக்கம்பக்கத்தில் யாரிடம் காட்டினாலும் கவரில் வைத்துக்காட்டுவது நல்லது. ஆடைகள் கறை, அழுக்குப்படுவதைத் தவிர்க்கலாம்.

* ஒவ்வோர் ஆடைக்கும் தகுந்த உள்ளாடைகளை ஆடை வாங்கும்போதே சேர்த்து வாங்கிவிடுவது கடைசி நேர பரபரப்பைக் குறைக்கும்.

* உடல் கொஞ்சம் பருமனாக இருப்பவர்கள் உள்பாவாடைகளுக்குப் பதிலாக ஷேப் வியர்கள் (Shapewears) பயன்படுத்தலாம்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!

* திருமண மண்டபத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய ஆடைகள், அணிகலன்களை செக் லிஸ்ட் போட்டு பேக் செய்வது நல்லது.

* உங்களின் திருமண ஆடை எதுவாக இருந்தாலும், திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் தயாராகி உங்கள் கையில் இருப்பதுபோல் பிளான் செய்து கொள்ளுங்கள்.

* முகூர்த்த புடவைகளை ப்ரீ பிளீட்டிங் (Pre pleating) செய்து பேக் செய்து கொண்டால் திருமண தினத்தன்று காலையில் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
முகூர்த்தம் மற்றும் ரிஷப்சனுக்கு வெவ்வேறு ஹேர் ஸ்டைல்கள் முயற்சி செய்யவும். ஒவ்வொரு ஹேர் ஸ்டைலுக்கும் அதற்கும் தகுந்தாற் போன்ற பூக்கள் மற்றும் ஆபரணங்களைத் தேர்வு செய்யவும்.

ஹேர் ஸ்டைல்... என்ன பிளவுஸுக்கு என்ன மாடல்?

திருமணத்தன்று வித்தியாசமாக ஹேர் ஸ்டைல் செய்துகொள்ள வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருக்கும். வித்தியாசமான என்பதைவிட, பொருத்தமான ஹேர் ஸ்டைல் செய்துகொள்வது பரிந்துரைக்கத்தக்கது. அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் ஹேர் ஸ்டைலிஸ்ட் கல்யாணி.

* கூந்தலின் அடர்த்தி, கூந்தலின் தன்மை, நீங்கள் அணியும் ஆடை மற்றும் உங்கள் முகத்தின் வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து உங்களின் ஹேர் ஸ்டைலைத் தேர்வு செய்ய வேண்டும்.

* திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஸ்டைலிஸ்ட்களிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் பார்த்த ஹேர் ஸ்டைல்க ளை முயற்சி செய்யாமல் உங்களுக்கு அழகாக இருக்குமா என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* உங்களுடையது நீளமான முகம் எனில், முன் பகுதியில் செய்துகொள்ளும் பஃப் ஹேர் ஸ்டைல்களைத் தவிர்க்கலாம். சிறிய முகவெட்டு உள்ளவர்களுக்கு பஃப் பெஸ்ட் சாய்ஸ்.

* பட்டுச்சேலை அணிகிறீர்கள் என்றால், பூவால் ஆன நெட்டட் ஜடை, கொண்டை ஹேர் ஸ்டைல்கள் இப்போது டிரெண்டில் இருக்கிறது.

*பூ வைக்க விரும்பாத பெண்கள், உங்கள் ஆடையின் நிறத்துக்கு ஏற்ப தலைக்கு வைக்கும் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பூக்களைத் தேர்வு செய்யலாம்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
திருமணத்துக்கு சில வாரங்கள் முன்பு ஹேர் கட் செய்தால், திருமணத்தன்று சில ஹேர் ஸ்டைல்கள் செய்வதில் சிரமம் இருக்கும். எனவே, திருமணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, நீங்கள் விரும்பும் ஹேர் கட் செய்துகொள்ளுங்கள். அதன் பின்னர் வேண்டாம்.

* வெயில் காலம் அல்லது பகல் நேரத்தில் பூக்கள் பயன்படுத்தி ஹேர் ஸ்டைலிங் செய்யும்போது, பூக்கள் வாடி தொய்யும். மேலும், அவற்றுடன் ஹேர்ஸ்டைலிங்குக்கு அதிக ஆபரணங்களையும் பயன்படுத்தும்போது எடை அதிகமாகும் என்பதால் தவிர்க்கவும்.

* அதிகப்படியான ஜடை அலங்காரம் செய்துகொள்ள விரும்பாத பெண்கள், தலையின் முன்புறம் மட்டும் ஸ்டைலிங் செய்து, கூந்தலை வழக்கம் போல் பின்னல் இட்டு குஞ்சம் வைத்து, பின்னலுக்கு மேல் சரம் சரமாகப் பூ வைத்தால் சிம்பிள் அண்ட் நீட் லுக் கிடைக்கும்.

*டிசைனர் புடவைகள் மற்றும் லெஹங்கா அணியும்போது ஃபிஷ்டெயில் பிரைட் (Fishtail Braid), ஃப்ரீ ஹேர் ஸ்டைல் செய்துகொள்ளலாம். கொஞ்சம் டிரெண்டியாகவும் தெரிய வேண்டும் என்பவர்கள் முன்புறம் மட்டும் டிவிஸ்டட் (Twisted) ஹேர் ஸ்டைல்கள் செய்து பின் புறம் ஃப்ரீ ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

* எம்ப்ராய்டரி பிளவுஸ் அணியும்போது பன் அல்லது ஃபிஷ்டெயில் பிரைட் ஹேர் ஸ்டைல் செய்துகொள்ளலாம். கூந்தல் முன்புறமாகவோ, கழுத்துக்கு மேலோ இருந்தால் கூந்தல் பிளவுஸில் சிக்காமல் இருக்கும்.

* நீங்கள் அணியும் பிளவுஸ் டிசைனுக்கு ஏற்ப உங்களின் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்வது அவசியம். பின்புறம் குளோஸ் நெக் வைக்கிறீர்கள் என்றால் லோ பன் ஹேர் ஸ்டைலைத் தவிர்க்கவும்.

*முன் நெற்றிப் பகுதியில் சிலருக்கு முடி உதிர்வு ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் ஸ்கால்ப் (Scalp) தெரியாத வண்ணம் ஹேர் ஸ்டைலை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எதுவும் ஒவ்வாமை இல்லாத பட்சத்தில் ஸ்டைலிஸ்ட்களிடம், கேச அடர்த்தியின்மை, முடி உதிர்வை மறைக்கக்கூடிய ஃபைபர் ஸ்பிரே (Fibre Spray) பயன்படுத்தச் சொல்லலாம்.

* இளநரை பிரச்னை உள்ளவர்கள், கலரிங் அல்லது ஹேர் டை பயன் படுத்துகிறீர்கள் என்றால் குறைந்தது மூன்று நாள்களுக்கு முன் செய்து விடுவது நல்லது.

* கேச அலங்காரத்துக்கான வேணி மற்றும் பில்லை வைத்து ஹேர் ஸ்டைல் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் பூக்கடைகளில் இருக்கும் ஆல்பம் பார்த்து, 15 நாள்களுக்கு முன்பே விரும்பும் டிசைனை ஆர்டர் கொடுத்து விடுங்கள்.

* எண்ணெய் தன்மையுடன்கூடிய கூந்தல் கொண்டவர்கள், எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் அழகாக இருக்காது என்பதால், நிகழ்ச்சியன்று எண்ணெய்ப்பசை இல்லாமல் நன்றாக ஷாம்பூ வாஷ் செய்துவிடுங்கள்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
ஸ்டோன் மற்றும் கல் வைத்த நகைகள் பகல் நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமாக இருக்காது. எனவே, பகல் நேர நிகழ்ச்சிகளுக்கு டெம்பிள் ஜூவல்லரி, ஆன்டிக் ஜூவல்லரி போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு ஸ்டோன் வைத்த நகைகள் பெஸ்ட் சாய்ஸ்.

பகல், இரவு... அணிகலன்கள் எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

திருமணத்துக்கு நகைகள் தேர்வு செய்யும் வழிமுறைகளை விளக்குகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

*திருமணத்துக்கு உங்களுடைய சொந்த தங்க நகைகள் அணியப் போகிறீர் களா, அல்லது ஃபேஷன் நகைகள் அணியப்போகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.

* தங்க நகைகள் என்றால் உங்களிடம் இருக்கும் நகைகளை உங்களுடைய ஆடைக்கு ஏற்றாற்போல் மேட்ச் செய்து அணிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சாய்ஸ் ஃபேன்ஸி நகைகள் எனில், புடவையின் நிறத்துக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.

* உங்களுடைய பிளவுஸின் நெக் லைனுக்கு ஏற்பவும் நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். காலர் நெக் எனில் சோக்கர் தவிர்த்து, ஆரம் மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற நெக் டிசைன்களுக்கு சோக்கர், ஆரம் என வரிசைப்படுத்தி அணியலாம். சட்லாடா (satlada ) வகையிலான அடுக்கு அணிகலன்கள் எனில், பெரிய ஆரம் தவிர்ப்பது நல்லது.

* முகூர்த்தம், ரிசப்ஷன் என வெவ்வேறு நிகழ்ச்சிக்கு வெவ்வேறு ஸ்டைல் ஆடைகள் மாற்றுகிறீர்கள் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் அணிகலன் களையும் தேர்வு செய்ய வேண்டும்.

* சுட்டி, கம்மல், ஆரம், நெக்பீஸ், சோக்கர், வளையல் ஆகிய அனைத்தும் ஒரே பேட்டர்ன் நகைகளாக இருப்பது போன்று தேர்வு செய்து வாங்குங்கள்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
அணிகலன்கள் என்றால் அதில் காலணிகளும் அடங்கும். திருமணத்துக்கான ஆடைகள் ஷாப்பிங் செய்யும்போதே, காலணிகளையும் தேர்வு செய்து விடுவது நல்லது. திருமணத்தன்று சடங்குகள், போட்டோ ஷூட் என நீண்ட நேரம் நிற்கும் சூழல் இருப்பதால் முடிந்த வரை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். என்றாலும், உங்களின் பார்ட்னரின் உயரத்துக்கு ஈடாக இருக்க, புகைப்படங்கள் எடுக்கும்போது ஹீல்ஸ் அணிந்துகொள்ளலாம்.

*அதேபோல, ஒவ்வொரு மெட்டலிலும் ஒவ்வொரு நகை என்றில்லாமல், கவரிங், தங்கம், வைரம் என எதுவாக இருந்தாலும் எல்லா நகைகளும் ஒரே மெட்டலில் இருக்க வேண்டும்.

* உங்களின் புடவை அதிகமான ஜரிகை கொண்ட புடவை எனில் சிம்பிள் டிசைனில் இருக்கக்கூடிய நகைகளைத் தேர்வு செய்யுங்கள். அதிகமான எம்ப்ராய்டரி டிசைன் கொண்ட பிளவுஸ் எனில் கைகளில் அணியக்கூடிய வங்கியைத் தவிர்க்கலாம்.

* உங்களுடைய முகம் சிறிய முகம் எனில், பெரிய சைஸ் நெத்திச்சுட்டிகள், காதணிகளைத் தேர்வு செய்யாதீர்கள். சிம்பிள் நகைகள்தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

* உங்களுடைய ஹேர்ஸ்டைலுக்கு ஏற்ப காதணிகள் இருப்பது அவசியம். ஃப்ரீ ஹேர் அல்லது கர்லிங் ஹேர் ஸ்டைல் தேர்வு செய்கிறீர்கள் என்றால் ஜிமிக்கி போன்ற டிரெடிஷனல் காதணிகளைத் தவிர்த்து வெஸ்டர்ன் டைப் நகைகளைத் தேர்வு செய்யுங்கள்.

* நகைகளைத் திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பே ஃபிக்ஸ் செய்து விடுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றால் மிக்ஸ் மேட்ச்தான் செய்ய வேண்டியிருக்கும். அது மொத்த அலங்காரத்தையும் முழுமையடையச் செய்யாமல் செய்துவிடலாம்.

* ஆர்டிஃபிஷியல் நகை எனில் வெவ்வேறு வெரைட்டியில் அணிய முடியும் என்பதால், திருமண தினத்துக்கு தங்க நகைகள் தவிர்த்து கூடுமானவரை ஃபேன்ஸி நகைகளையே தேர்வு செய்யுங்கள். நகைகளைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பயமின்றியும் இருக்கலாம்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
Bhupi
மேக்கப் ஆர்டிஸ்ட்டிடம், திருமணத்தின்போது என்னென்ன கொண்டு வரவேண்டும், என்ன தேவைகள் இருக்கும் என்பதை முன்பே தெளிவாகப் பேசிவிடுவது நல்லது.திருமணத்தன்று உங்களால் எவ்வளவு நேரம் மேக்கப்புக்கு ஒதுக்க முடியும் என்பதில் முதலில் கவனம் செலுத்துங்கள். சில வீடுகளில் நிறைய சடங்குகள் செய்யும் வழக்கம் இருக்கும். அடுத்தடுத்து மணமகளை மேடைக்கு அழைத்துக்கொண்டே இருப்பார்கள். எனவே, மேக்கப் செய்ய போதிய நேரம் இருக்காது. இது மணப்பெண்ணுக்குத் தேவையில்லாத டென்ஷன் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்கும் சிக்கல். எனவே, முன்பே திட்டமிட்டு, உங்களின் மேக்கப் ஆர்டிஸ்ட்டிடம் கால அவகாசம் குறித்து பேசிவிட்டால் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையில்லாத டென்ஷனைத் தவிர்க்கலாம்.

டிரையல், வாட்டர்ப்ரூஃப், டச்-அப்... மேக்கப்பில் கவனிக்க!

ஆடை, அணிகலன்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது மேக்கப். திருமண தினத்தன்று நீங்கள் செய்துகொள்ளும் மேக்கப்தான் உங்களின் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் அமையும். மேக்கப் சரியாக இருந்தால் தான் புகைப்படங்களும் அழகாக இருக்கும். மேக்கப் சார்ந்த டிப்ஸ்களை வழங்குகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் ரதி ராதிகா.

* திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஒரு தரமான பியூட்டி பார்லரை தேர்வு செய்து ஃபேஷியல் உள்ளிட்ட அழகு பராமரிப்பை செய்து பாருங்கள். உங்களுக்கு அந்த பார்லர் திருப்தி இல்லையென்றால் வேறு பார்லரைத் தேர்வு செய்வது நல்லது.

* திருமணத்துக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே ஒருமுறை டிரையல் மேக்கப் செய்து பார்ப்பது நல்லது. மேக்கப் அதிகமானதால், ஸ்கின் டோன் வித்தியாச மாகத் தெரிவது போல் இருந்தால் அன்றே மேக்கப் ஆர்டிஸ்ட்டிடம் சொல்லி விடுவது நல்லது.

*திருமண நாளில், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மேக்கப் க்ரீம்கள், ஷாம்பூ, கண்டிஷனர்களைப் பயன்படுத்துங்கள். புதியவற்றை முயற்சி செய்யும்போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* திருமண நாளில் சடங்குகள் மற்றும் எமோஷனல் தருணங்களில் கண்ணீர் வெளிப்படும் என்பதால் வாட்டர் புரூஃப் மேக்கப் செய்துகொள்வது நல்லது. குறிப்பாக, ஐ மேக்கப் செய்யும்போது வாட்டர் புரூஃப் மஸ்காரா, ஐ லைனர், காஜல் போன்றவற்றைத் தேர்வு செய்யுங்கள்.

*மேக்கப் செய்துகொண்டிருக்கும்போதே அதிகமாக இருப்பது போல் தோன்றினால் தயங்காமல் மேக்கப் ஆர்டிஸ்ட்டிடம் தெரியப்படுத்திவிடுவது நல்லது.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
Clovera
உங்களுக்கு பிரைடல் மேக்கப் செய்த புகைப்படங்களை, உங்களின் மேக்கப் ஆர்டிஸ்ட் தனது விளம்பரத்துக்காக அவரது சமூக வலைதளத்தில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதையும் சொல்லிவிடுங்கள்.

* சில மணப்பெண்கள் முகூர்த்தத்துக்குப் பிறகு, புகைப்படத்துக்காக வெவ்வேறு லுக் மாற்றுவார்கள். அப்படியெனில், மேக்கப் ஆர்டிஸ்ட்டை ஒரு நாள் முழுக்க புக் செய்ய வேண்டும். ஏனெனில், முகூர்த்தத்துக்கு பட்டுப் புடவைக்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்திருப்பார். அடுத்த ஆடை மாற்றும்போது குறைந்தபட்சம் ஐ மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் மாற்றினால் தான் நன்றாக இருக்கும்.

* டார்க் ஸ்கின் உடையவர்கள் என்றால் கைகளில் மணிக்கட்டுக்கு மேல் மெஹந்தி வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. கை முழுவதும் மெஹந்தி வைத்தால் உங்களின் ஸ்கின் இன்னும் டார்க்காகத் தெரிய வாய்ப்புண்டு.

* திருமணத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே வேக்ஸிங் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிலேயே வேக்ஸிங் செய்பவர் என்றால் திருமணத்தன்று காலையில் ஒருமுறையும் வேக்ஸிங் செய்துகொள்ளலாம். உடலில் இருக்கும் முடிகளை அகற்ற பயன்படுத்தும் வேக்ஸிங் க்ரீம்களை முகத்தில் அப்ளை செய்யாதீர்கள். முகத்தில் இருக்கும் முடிகளை நீக்க வேண்டுமெனில் பார்லர்களில் திரெட்டிங் மூலம் ரிமூவ் செய்வது நல்லது.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!

* திருமணத்தின்போது நெற்றியில் சந்தனம், மஞ்சள், குங்குமம் பூசி விடும் வழக்கம் உள்ளவர்கள் எனில், ஈரமான டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக துடைத்து எடுப்பது நல்லது.

*முகூர்த்த நேரம் முடிந்த பிறகு, புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த நேரத்தில் லேசாக டச்-அப் செய்துகொண்டால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை லிப்ஸ்டிக் அப்ளை செய்யுங்கள்.

* முகத்துக்கு மட்டுமல்லாது கழுத்து, காது, கைகள் போன்ற இடங்களிலும் மேக்கப் செய்துகொள்ளவும். அப்போதுதான் புகைப்படங்களில் ஸ்கின் ஒரே நிறத்தில் இருக்கும்.

சருமம் இயற்கையாக பொலிவு பெற..!

என்னதான் மேக்கப் செய்துகொண்டாலும், நம்முடைய சருமம் நன்றாக இருந்தால்தான் இயற்கை அழகில் மிளிர முடியும். திருமணம் முடிந்து மேக்கப்பை நீக்கினால்கூட, முகம் பிரகாசமாக இருக்கும். திருமணத்துக்கு முன் மணப்பெண்கள் செய்துகொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு வழிமுறை களை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா...

* முகத்தில் முகப்பரு, கருந்திட்டுகள், கருவளையம் போன்றவை இருப்பின் அதற்குரிய சிகிச்சைகளை திருமணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்குங்கள்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
Peopleimages

* சருமத்தை ஒரே நாளில் எல்லாம் பிரகாசமாக்கிவிட முடியாது. சரும நிறமாற்றம் அல்லது முகப்பொலிவு என்பது மெதுவாக நிகழும் மாற்றம். அதை சாத்தியப்படுத்த CTM and என்று சொல்லக்கூடிய க்ளென்ஸிங் (Cleansing), டோனிங் (Toning), மாய்ஸ்சரைஸிங் (Moisturising) செய்வதை அன்றாடப் பணியாக மாற்றுங்கள். உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்ஸர், டோனர், மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து வாங்குங்கள்.

* திருமணத்துக்காக அடிக்கடி ஷாப்பிங் செல்ல வேண்டியிருக்கும். எங்கு சென்றாலும் சன் ஸ்கீரின் அப்ளை செய்து செல்வது அவசியம். மீண்டும் வீட்டுக்கு வந்ததும் மேக்கப்பை ரீமுவ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முடிந்தால் ஐஸ்க்யூப்கள் பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்தை டேன் (Tan) ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

* திருமணத்துக்கு மூன்று மாதங்கள் முன்பே, அழகு சார்ந்து சிகிச்சை வழங்கும் நிலையங்களைத் தேர்வு செய்யலாம். மாதம் இரு முறை பாடி மசாஜ், ஸ்பா போன்றவற்றை செய்துகொண்டால் திருமண தினத்தில் ஃப்ரெஷ்ஷாக இருப்பீர்கள்.

* பார்லர்களுக்குச் சென்று ஸ்பா செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யவும். பின் நலுங்கு மாவு பயன்படுத்தி குளித்தால் நல்ல பலன் தெரியும்.

* சருமத்தை அடிக்கடி பிளீச் செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக பழங்களால் ஆன ஃபேஷியல் செய்வது ஆரோக்கியமானது.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
Clovera
ரோஸ் ஆயில் கிடைத்தால் அதை வாங்கி,100 மில்லி கிராம் பாதாம் எண்ணெய்க்கு 25 சொட்டு ரோஸ் ஆயில் என்ற விகிதத்தில் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை சருமத்தில் அப்ளைசெய்து மசாஜ் செய்தால் சருமம் டால் அடிக்கும்.

* சருமம் வறட்சியாக இருக்கிறது எனில், தேங்காய் எண்ணெயை ஒரு துணியில் நனைத்து சருமத்தை மெதுவாகத் துடைத்து எடுங்கள். மீண்டும் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சருமத்தில் அப்ளை செய்து, மசாஜ் செய்து துடைத்து எடுங்கள். வாரம் மூன்று முறை தேங்காய் எண்ணெயால் இப்படி டபுள் கிளென்சிங் செய்தால் சரும வறட்சி நீங்கும்.

* உடல் சூடு காரணமாக கூந்தல், சருமம் வறட்சியாக இருக்கிறது என்பவர்கள், கற்றாழை ஜெல்லை கூந்தலின் வேர்களில் அப்ளை செய்து மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்யவும்.

* கிரீன் டீ பைகள் மூன்று எடுத்துக்கொள்ளவும். அதை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து அந்த சாற்றை வடிகட்டி கூந்தலில் அப்ளை செய்தால் கூந்தல் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும்.

* ஸ்ட்ரெஸ்ஸால் சில மணப்பெண்களுக்கு முடிகொட்டுதல் பிரச்னை ஏற்படும். இதைத் தடுக்க, செம்பருத்தி பூ, மருதாணி இலை, நெல்லிக்காய் சாறு, கற்றாழை ஜெல் ஆகியவற்றை சமமாக எடுத்து ஹேர் பேக்காக அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்யவும்.

* பித்த வெடிப்பு இருக்கிறது எனில், திருமணத்துக்கு முன் இரண்டு முறையாவது பெடிக்யூர் செய்யவும். பார்லர் செல்ல நேரம் இல்லை என்பவர்கள் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான வெந்நீரை எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மின்ட் சால்ட் (Mint salt) சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். பாதங்களை அரை மணி நேரம் இந்தத் தண்ணீரில் வைக்கவும். அதன் பின் கால்களைத் துடைத்துவிட்டு, ஃபுட் ஃபைலால் (foot file) கால்களைத் தேய்க்கவும். இப்படி 15 நாள்களுக்கு ஒருமுறை செய்து வர பித்தவெடிப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

* கால் டீஸ்பூன் சந்தனத்துடன் சில துளிகள் பால், தேன் கலந்து கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அப்ளை செய்து வந்தால் கருந்திட்டு பிரச்னை குறைந்து சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
PeopleImages
மணப்பெண்ணுக்குக் குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆரோக்கியமான உணவு முறைகளை வழக்கமாக்குங்கள். நட்ஸ், பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்ற உணவுகள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாய் மிளிரச் செய்யும்.

* சிலருக்கு சிறுவயதிலேயே நரைமுடி பிரச்னை இருக்கும். திருமணத்தன்று மறைக்க வேண்டும் என்ற அவசரத்தில், ஏதேனும் ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்திவிடுவார்கள். இதனால் சரும பிரச்னைகள் வரலாம். எனவே, கெமிக்கல் குறைவான இயற்கையான ஹேர்கலரிங்கைத் தேர்வு செய்யுங்கள்.

* வெயிலினால் சருமம் டேன் ஆகியிருக்கிறது எனில், முல்தானி மெட்டி 4 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - 4 டீஸ்பூன், கடலை மாவு - 4 டீஸ்பூன், ரோஸ்வாட்டர் 15 டீஸ்பூன் கலந்து முகம், கழுத்து, கை, கால், பின் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். 5 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். வாரம் ஒருமுறை செய்து வர, சரும நிறமாற்றம் குறையும்.

* திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, ஸ்மூத்தனிங் செய்வது போன்ற கெமிக்கல்கள் சார்ந்த வேலைகளை முடித்துவிடுவது நல்லது.

மணப்பெண்ணின் ஆரோக்கியம்... இது மிக அவசியம்!

அழகு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் பெரும்பாலான பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். திருமண வாழ்வில் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க திருமணத்துக்கு முன்பாகச் சில மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம். `அதெல்லாம் எதுக்கு...’ என்று நினைக்காமல், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கிடைத்த வாய்ப்பாக இதை நினைக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மருத்துவர் ரம்யா ரவி.

* திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடன் முதலில் கம்ப்ளீட் பிளட் கவுன்ட் ஒரு முறை எடுக்கவும். இதன் மூலம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள முடியும். இன்று பல பெண்கள் ரத்தசோகை பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். ரத்த பரிசோதனையின் மூலம் ஹீமோகுளோபின் அளவையும் தெரிந்து கொள்ள முடியும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பின் அதை சில மாதங்களிலேயே மருந்து மாத்திரைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் சரி செய்துவிடலாம்.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!
Deepak Sethi

* மாதாந்தர மாதவிடாய் சுழற்சியில் சிக்கல், முடி உதிர்வு, முகம், கை, காலில் ஆங்காங்கே முடி வளர்ச்சி, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் அது தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய மேற் கொள்ளப்படும் TSH (Thyroid Stimulating Hormone) சோதனையை மேற்கொள்வது அவசியம். தைராய்டைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் கண்டறிந்து சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு எளிமையாக பாதிப்பில் இருந்து வெளியே வர முடியும். எனவே, இது குறித்து தேவை யில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம்.

* இன்று நிறைய பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கிறது. இது, உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை தொடங்கி குழந்தையின்மை பிரச்னை வரை கொண்டு செல்லும். எனவே, திருமணத்துக்கு முன்பு ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கிறது எனில், மருத்துவரை சந்திப்பது நல்லது. பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome - PCOS), பி.சி.ஓ.டி (Polycystic Ovarian Disease - PCOD) பிரச்னை உறுதி செய்யப்பட்டால் ஒரு சிலருக்கே சிகிச்சைகள் தேவைப்படும். மற்றபடி, உடற்பயிற்சி தொடங்கி, உணவு முறைகள் என வாழ்வியல் மாற்றங்கள் மூலமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

* திருமணம் முடிந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்கள், மருத்துவரை அணுகி திருமணத்துக்கு சில மாதங்கள் முன்பிருந்தே போலிக் ஆசிட் மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்குவது ஆரோக்கியமானது.

* சில பெண்களுக்கு தாம்பத்யம் பற்றித் தேவையில்லாத பயம் இருக்கலாம். அந்த பயம் திருமணத்துக்குப் பின் தாம்பத்யம் மீது நாட்டமின்மை ஆக மாறலாம். எனவே, அப்படி இருப்பின் மகப்பேறு மருத்துவரை சந்தித்து தாம்பத்யம் குறித்த புரிதல் ஏற்படுத்திக்கொள்ளவும்.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு குறித்த பரிசோதனைகளும் ஒருமுறை செய்து கொள்வது நல்லது.

* எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் சில பெண்கள் சாப்பிடாமல் இருப்பார்கள். இது அல்சர் வரை கொண்டு செல்லவும் வாய்ப்பு உண்டு. எனவே வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சி மற்றும் டயட் ஃபாலோ செய்வது ஆரோக்கியமானது.

மணமகளுக்கான செக் லிஸ்ட்... முகூர்த்த நாளில் இனி இல்லை டென்ஷன்!

* ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருந்தாலே பாதி சிக்கல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். எனவே, ஆரோக்கியமான உணவு, தூக்கம், போன்றவற்றை வாழ்வியல் முறையாக மாற்றுங்கள்.

* ஸ்கின் அலர்ஜி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்குரிய மருத்துவரை திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சந்தித்து ஆலோசனை பெற்றுவிடுங்கள்.

இனி முகூர்த்த நாளில் நோ டென்ஷன், அன்லிமிடெட் மகிழ்ச்சி ஒன்லி!