தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

போட்டோ அக்காவும் புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியாவும்!

புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியா
பிரீமியம் ஸ்டோரி
News
புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியா

கண்கள்

புகைப்படக்கலையில் கலையும் தொழில் நுட்பமும் சரிவிகித பயன்பாட்டில் அமையப் பெற்றிருக்கிறது. நிகழ்ந்தவற்றை நினைவுகளாக நமக்குப் பத்திரப்படுத்தித் தருபவை புகைப்படங்கள். வரலாற்றில் மறைக்கப்பட்ட பல சம்பவங்களின் சாட்சியமாக இன்றைக்கு எஞ்சி நிற்பவையும் புகைப்படங்களே. டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்று பலரின் கைகளிலும் கேமராக்களும் மொபைல்களும் இருக்கின்றன. குழந்தைகளை, கானுயிர்களை, தொல்குடிகளை, விளிம்புநிலை மனிதர்களை என நம் தேசத்தின் பல்வேறு முகங்களைத் தங்கள் விருப்பத்துக்கேற்ப புகைப் படங்களாகப் பதிவுசெய்கின்றனர்.

புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியா
புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியா

புகைப்படக்கலைஞர் யாழினி சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் வண்ணக்கலை பயின்றுவருகிறார். சென்னை விளிம்புநிலை வாழ்வியலை தன் கேமராவின் சட்டகங்களுக்குள் பத்திரப்படுத்துகிறார். சென்னை ஆதம்பாக்கம், கக்கன் பாலம் அருகிலுள்ள அம்பேத்கர் நகர் மக்களையும், அவர்கள் வாழ்வையும் ஆறு மாத காலம் புகைப்படங்களாகத் தொகுத்து, சமீபத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நம் தேசத்தைப் போலவே இனத்தாலும் மொழியாலும் வேறுபட்ட பலதரப்பட்ட மக்கள் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கிறார்கள். எந்தப் பிரிவினையும் இன்றி அன்போடு புழங்குகிறார்கள். சிறியதும் பெரியதுமாக வீற்றிருக்கும் அம்மன் கோயில்களின் திருவிழாக்களுக்குத் தீ மிதிக்கிறார்கள். விவிலிய வரிகளைத் தாங்கிய சுவர்கள் நிறைய இருக்கின்றன. ரம்ஜான் தினங்களில் நோன்புக் கஞ்சி பரிமாறுகிறார்கள். மற்றொருபுறம் வடகிழக்கு இந்தியாவிலிருந்து வேலைநிமித்தம் குடிபெயர்ந்துள்ள அசாம் மக்களின் குழந்தைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இப்படி, நம் தேசத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகக் காட்சியளிக்கிறது அம்பேத்கர் நகர். இதை மிக நேர்த்தியாகத் தனது புகைப்படங்களில் பதிவு செய்துள்ளார் யாழினி.

யாழினி
யாழினி

வீட்டு வாசலுக்கு அருகில் தெருவிலேயே காலை உணவுக் கடை வைத்திருக்கிறார்கள் தாய்மார்கள். குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி விடுவது, குடும்பத்தோடு அமர்ந்து உணவு உண்பது, அக்கம் பக்கத்தினருடன் பேசுவது, குழந்தைகள் விளையாடுவது, திருவிழாக் காலத்தில் தீ மிதிக்கும் விழா எடுப்பது, சுப, துக்க காரியங்களுக்கு ஷாமியானா பந்தல் அமைப்பது என இந்த மக்களின் வாழ்வுடனே ஒன்றிப்போயிருக்கிறது இந்தத் தெருக்களும். இதை உணர்த்தும் விதமாகவே புகைப்படங்களில் மக்களோடு மக்களாகத் தெருவும் உயிர்ப்புடன் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஒரு நிலத்தின் மக்களை, அவர்தம் வாழ்வியலைப் நுணுக்கமாகப் பதிவு செய்வதென்பது மிக முக்கியமான ஆவணம். இந்த வகையில் மக்களின் அன்றாடங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் கலைநேர்த்தியுடன் பதிவு செய்திருக்கிறார் யாழினி.

“ வேளச்சேரி ஏரியை ஓட்டிய இந்தப் பகுதி மக்கள் பற்றிய பல தவறான முன்முடிவுகள் இருந்தன. `செல்வதற்கு ஏற்ற இடமல்ல' எனப் பலரும் என்னிடம் சொன்னார்கள். இந்தப் பொதுப்புத்தியை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இஸ்லாமியர்கள், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் அனைவரும் உழைப்பாளிகள். வீட்டுவேலை, வீட்டுவாசலில் இட்லி அவித்து விற்பது என ஓயாது உழைக்கிறார்கள். இவர்கள் மீதான பார்வை மாற வேண்டும். இவர்களும் மதிப்புமிக்கவர்களாகவே பார்க்கப்பட வேண்டும்.

நான் ஆறு மாத காலம் இந்தத் தெருவுக்குச் சென்று மக்களுடன் பழகி எடுத்த புகைப்படங்கள் இவை. ‘ஏன் போட்டோ எடுக்கிற...’ என்று கேட்பார்கள். `காட்சிப்படுத்த...' என்று பதில் சொல்வேன். ஆரம்பத்தில் தயங்கியவர்கள் பிறகு வீட்டில் ஒருவராகவே என்னை நடத்தினார்கள். வடகிழக்கு இந்தியாவிலிருந்து வந்து பீனிக்‌ஸ் மாலில் வேலை செய்யும் பெண்கள் இந்தத் தெருவில் வசிக்கிறார்கள். அவர்களைப் புகைப்படம் எடுக்க கேமராவை எடுத்தாலே பதறுவார்கள். அப்படி ஒருவித அச்சம் இருந்தது. தொடர்ச்சியாக அங்கு சென்றதில் அங்கிருக்கும் குழந்தைகள் என்னை ‘போட்டோ அக்கா’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள்'' என்கிறார் யாழினி மகிழ்ச்சியுடன்.