Published:Updated:

`ரியா பூனை இல்ல; எங்க பொண்ணு!' - பூனைக்கு வளைகாப்பு செய்த ஜோதிகுமார் நெகிழ்ச்சி

வளைகாப்பு செய்யப்பட்ட பூனை ரியா
வளைகாப்பு செய்யப்பட்ட பூனை ரியா

''ஒரு புள்ளத்தாச்சி பொண்ணுக்கு செய்யுற மாதிரியே பூ, பொட்டு, வளையல், சீர் தட்டுகள் எல்லாம் வெச்சோம்.''

செல்லப்பிராணிகளை, பெற்ற பிள்ளைகள்போல நேசிக்கும் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருப்போம். திருவேற்காட்டைச் சேர்ந்த சிவகாமி-ஜோதிகுமார் தம்பதி ஒருபடி மேலே போய் தங்கள் வீட்டு பூனைக்கு வளைகாப்பு செய்து அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குங்குமப்பொட்டு, வளையலுடன் தங்கள் வீட்டு பூனை சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிற ஜோதிகுமார், தன் வீட்டு செல்லப்பிராணிகள் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார்.

ஜோதிகுமார் குடும்பத்துடன்
ஜோதிகுமார் குடும்பத்துடன்

''எங்க வீட்டுல எல்லோருக்குமே செல்லப்பிராணிகள்னா ரொம்ப பிடிக்கும். ஏற்கெனவே லேப்ரடார் நாயும், பொமரேனியன் நாயும் வளர்த்துகிட்டிருக்கோம்க. லாக்டெளன் நேரத்துல ரோட்டுல ஒரு பூனைக் குட்டியைப் பார்த்தேன். அதோட முகம் கறுப்பும் வெள்ளையும் கலந்து இருந்ததைப் பார்த்ததும் எங்க வீட்டு நாய்களோட ஞாபகம் வந்திடுச்சு. உடனே வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துட்டேன். என் பொண்ணு அதுக்கு 'ரியா'ன்னு பேர் வெச்சு ஆசையா வளர்க்க ஆரம்பிச்சிட்டா'' என்கிற ஜோதிகுமார், கடந்த 15 வருடங்களாக மீன்கள் பதப்படுத்துவதற்கான ஐஸ்கட்டி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி சிவகாமி ஹவுஸ் வொயிஃப், மகன் சட்டக்கல்லூரியிலும் மகள் ப்ளஸ் டூவும் படித்து வருகிறார்கள்.

''எங்க வீட்டு செல்லப்பிராணிகளும் எங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ்தான். அப்படிப் பார்த்தா ரியா எங்க பொண்ணு. அதனாலதான், அவ மாசமா இருக்கிறது தெரிஞ்சதும் வளைகாப்பு செய்யணும்னு நானும் என் வொய்ஃபும் தீர்மானிச்சோம். ஒரு புள்ளத்தாச்சி பொண்ணுக்கு செய்யுற மாதிரியே பூ, பொட்டு, வளையல், சீர் தட்டுகள் எல்லாம் வெச்சோம். கூடவே ரியாவுக்கு புடிச்ச இறால், சிக்கனும் சமைச்சு வெச்சோம். மத்தபடி ரியாவுக்கு அவளுக்கான பிராண்டட் ஃபுட்டும் பால் சாதமும்தான் ஃபேவரைட்'' என்றவர், அடுத்து சொன்ன நிகழ்வு ஒரு சின்ன உயிரின் மீது அவருக்கு இருக்கிற பாசத்தை தெளிவாகக் காட்டுகிறது.

பூனைக்குட்டி ரியா
பூனைக்குட்டி ரியா

''என் பொண்ணு தெரு நாய்களுக்கு தினமும் பிஸ்கட் போடுவா. அப்படிப் போட்டுக்கிட்டு இருந்தப்போ சில நாய்ங்க ரியாவை கடிச்சிடுச்சு. அதுங்களுக்கு பயந்து ரியா எங்கேயோ ஓடிப்போயிட்டா. அப்போ ரியா மாசமா இருந்தா. நான் நைட்டு வீட்டுக்கு வந்ததும் விஷயத்தைச் சொல்லி என் வொய்ஃபும் பொண்ணும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறமா டார்ச்லைட்டை எடுத்துக்கிட்டு தேட ஆரம்பிச்சோம். கடைசியில எங்க வீட்டு முருங்கை மரத்து உச்சியில போய் உட்கார்ந்துகிட்டிருந்தா ரியா. அவ பயத்தைப் போக்கி கீழே இறக்கினோம். டாக்டர்கிட்ட காட்டி ஊசி போட்டோம். நல்லவேளையா, ரெண்டே நாள்ல ரியா நார்மலாயிட்டா. இன்னும் கொஞ்ச நாள்ல அவ அம்மாவாகப் போறா. நாங்க ரொம்ப ஹேப்பி'' என்று சிரிக்கிறார் ஜோதிகுமார்.

கொடுத்து வைத்த பூனைக்குட்டி!

7 புதிய அறிகுறிகள், 70% வேகம்... புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை! #FAQ
அடுத்த கட்டுரைக்கு