Published:Updated:

``காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனியா பைக் பயணம்... மக்களுக்கு ஒரு மெசேஜ்!" - ரேஸர் சௌந்தர்யா

செளந்தர்யா
செளந்தர்யா

பாலியல் வன்முறைக்கு ஆளாகும்போது அதை எப்படிச் சாமளிக்கணும்னு பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது இல்ல.

`பாலியல் வன்முறைக்கு எதிரான பயணம்' என்ற பதாகை தாங்கிய சுஸூகி ஜிக்ஸர் SF 155 பைக் ஒருபுறம் ஒய்வெடுத்துக்கொண்டிருக்க, முகத்தில் புத்துணர்வு பொங்க வரவேற்கிறார் சௌந்தர்யா என்ற சிண்டி. சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த இவர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தம் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 செளந்தர்யா
செளந்தர்யா

48 நாள்கள், 15,600 கி.மீ பயணம், 70,000 மக்களைச் சந்தித்தது என இந்தியா முழுவதும் சுற்றிவந்த சிண்டி, தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்.

``நானும் என் கணவரும் பைக் ரேஸர்கள். எனக்குச் சின்ன வயசுலயிருந்தே பைக் மேல பயங்கர க்ரேஸ். திருமணத்துக்கு அப்புறம் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்துட்டே ரேஸ் பண்ணிட்டிருந்தேன். குழந்தை பிறந்த பிறகு ஐடி வேலையை விட்டுட்டு, இப்போ ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பண்ணிட்டிருக்கேன். இதை நான் பெருமையா நினைக்கிறேன். இப்போதும் ஹாபியாக பைக் ரேஸ் தொடருது.

பயணத்துக்குத் திட்டமிடும்போதே, தினமும் 1,500 மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னு முடிவெடுத்தேன்
செளந்தர்யா

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது, ஒரு தாயாக என் மனசு பதறும். சின்னக் குழந்தைகளைக்கூட எப்படி நாசம் பண்ண முடியுது இவங்களால? நம்ம குழந்தையை எப்படி பாதுகாக்கப் போறோம், இதுக்கு என்னதான் தீர்வுனு ஆயிரம் கேள்விகள் மனசுக்குள் வந்தப்போதான், இதுக்கான தீர்வை யோசிக்க ஆரம்பிச்சேன்.

பொதுவாக நிறைய குடும்பங்களில் பெற்றோர்கள் பாலியல் வன்முறைகள் பற்றித் தங்கள் குழந்தைகள்கிட்ட பேசத் தயங்குறாங்க. வெளியிடங்களுக்கு விளையாட அனுமதித்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து, பிள்ளைகளை வீட்டிலேயே அடைச்சு வைக்கிறாங்களே தவிர, அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அதை எப்படிச் சாமளிக்கணும்னு பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது இல்ல. மக்கள்கிட்ட அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா முழுக்க ஒரு பைக் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தேன்.

செளந்தர்யா
செளந்தர்யா

நான் மட்டும் தனியா பைக்ல இந்தியா முழுக்கப் பயணம் செய்யப்போறேன்னு சொன்னதும் வீட்டில் பயந்தாங்க. ஆனா, என் கணவர் சப்போர்ட் பண்ணி என்னை அனுப்பிவெச்சார். எனக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை நான் கவனமா செய்துக்கிட்டேன்.

என்னுடைய பயணத்தை மே 5-ம் தேதி காலையில் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். ஆந்திரா, தெலங்கானா, ஜார்க்கண்ட் என தொடர்ந்த பயணம் மணாலியில் முடிவடைந்தது. மீண்டும் மணாலி வழியா திரும்புவதுதான் என் திட்டமா இருந்தது. ஆனா, அளவுக்கு அதிகமான பனி இருந்ததால மணாலி வழியாகச் செல்ல அனுமதி கிடைக்கல. எனவே, மீண்டும் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்னால் எனத் தொடங்கி ஜூன் 16-ம் தேதி கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்தேன்.

பயணம் தொடங்கிய ரெண்டாவது நாளிலேயே மாதவிடாய் சிக்கல் ஏற்பட்டது. முதல்ல, கழிப்பறைகளைத் தேடி கண்டுபிடிக்கவே தனியா நேரம் செலவிட வேண்டியிருந்தது
செளந்தர்யா

பயணத்துக்குத் திட்டமிடும்போதே, தினமும் 1,500 மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னு முடிவெடுத்தேன். 48 நாள்கள் பயணத்தில் 70,000 மக்களைச் சந்தித்து அது தொடர்பா பேசியிருக்கேன். தினமும் காலை 6 மணிக்கு பயணத்தை ஆரம்பிப்பேன்.

2 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு முறை, மக்கள் புழக்கம் அதிகம் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்களை அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன்.

என்னோட பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்கு பயணத்தை முடிச்சுட்டு, அந்த ஏரியாவில் இருக்கும் ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கி, உடலுக்கும் பைக்குக்கும் ரெஸ்ட் கொடுத்துட்டு, மறுநாள் அதிகாலை பயணத்தைத் தொடர்வேன். பைக்கில் தொலைதூரம் பயணம் செய்றவங்களுக்கு ரெஸ்ட் ரொம்ப அவசியம்'' என்ற சௌந்தர்யா, தன் அனுபவங்கள் மற்றும் இதில் தான் சந்தித்த சிக்கல்கள் பற்றி பகிர்கிறார்.

"இந்தியா முழுக்கச் சுற்றி வரணும் என்பதுதான் என்னுடைய பிளான். அதனால, இத்தனை நாள்களுக்குள் பயணத்தை முடிக்கணும்னு எந்தத் திட்டமிடலும் இல்லை. நான் எந்தெந்த ஊர்கள் வழியாகச் செல்லப்போறேன், அதில் சிக்கல் ஏற்பாட்டால் வேறு எந்த வழியாக பயணத்தைத் தொடரலாம், எந்தெந்த ஊர்களில் எந்தெந்த இடங்களில் தங்குவது பாதுகாப்பானதுனு, இதையெல்லாம் மட்டும் முன்பே திட்டமிட்டுக்கொண்டு பயணத்தை ஆரம்பிச்சேன்.

செளந்தர்யா
செளந்தர்யா

பயணம் தொடங்கிய ரெண்டாவது நாளிலேயே மாதவிடாய் சிக்கல் ஏற்பட்டது. முதல்ல, கழிப்பறைகளைத் தேடி கண்டுபிடிக்கவே தனியா நேரம் செலவிட வேண்டியிருந்தது. அப்படியே கண்டுபிடிச்சிட்டாலும், நம்ம நாட்டுல பொதுக்கழிப்பறைகளின் நிலை பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே! மேலும், சரியான இடைவெளியில் நாப்கின் மாற்றமுடியாமலும் சிரமப்பட்டேன். பெண் என்பதால் இதெல்லாம் கூடுதல் சிரமங்கள்.

வட இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது, ஒரு கார் மோதி வண்டியோடு பள்ளத்தில் சரிஞ்சுட்டேன். பயங்கரமான விபத்துதான். வண்டி முழுவதும் டேமேஜ் ஆயிருச்சு. உயிர்பிழைச்சதே பெரிய விஷயம். ஆனாலும் நான் பயந்துபோயிடலை. பைக்கை சர்வீஸ் விட்டு ஒரே நாளில் தயார் செய்துட்டு, பயணத்தைத் தொடர ஆரம்பிச்சுட்டேன்.

செளந்தர்யா
செளந்தர்யா

இப்படிப் பல சவால்களுடன், 48 நாள்கள் பயணத்தில், 70,000 மக்களின் மனதில் மாற்றத்துக்கான சின்ன விதையை விதைச்சிருக்கேன்னு நம்புறேன். அடுத்தடுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த பொறுப்புடன் நானும் என் பைக்கும் தயாராகிட்டிருக்கோம்!" என்கிறார் செளந்தர்யா.

அடுத்த கட்டுரைக்கு