லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

இசையுடன் வளர்கிறது மொழி! - கனடாவில் ஒரு கானக்குயில்... சாருமதி மனோகாந்தன்

சாருமதி மனோகாந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
சாருமதி மனோகாந்தன்

#Lifestyle

‘‘கனடாவில் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, கலையைக் கற்றுக்கொடுக்க நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அதற்கான முயற்சிகளை எடுக்கிறார்கள். நான் 17 வருடங்களாக கனடாவில் இசைப்பள்ளி நடத்திவருவது இம்மக்களின் அந்த ஆர்வத்தால்தான் சாத்தியமாகியிருக்கிறது’’ - பெருமையுடன் சொல்கிறார் சாருமதி மனோகாந்தன். இலங்கை யைச் சேர்ந்தவர். கனடா, டொரன்டோவில் வசிக்கிறார்.

‘‘என் குடும்பம் இசைக் குடும்பம். இலங்கை யில் மணிபல்லவம் என்று அழைக்கப்படும் நயினா தீவுதான் என் பூர்வீகம். என் தாத்தா, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி என்று அனைவரும் இசையில், கலைகளில் புலமை கொண்டவர்கள். எனவே, நானும் சிறுவயதிலிருந்தே இசையில் தேர்ச்சிபெற்று வந்தேன்.

சாருமதி மனோகாந்தன்
சாருமதி மனோகாந்தன்

இசை மேற்படிப்புக்காக இந்தியா வந்த போது, நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் அம்மா லலிதா சிவகுமாரிடம் இசை கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. மேலும், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 10 இசைக் கலைஞர்களிடம் இசை நுணுக்கங்களைக் கற்றேன். பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் என மியூசிக் கோர்ஸ்களில் கோல்டு மெடலிஸ்ட்டாகத் தேர்வு பெற்றேன். மில்லினியம் 2000-ம் ஆண்டு பிறந்தபோது, இமயமலையில் பாடிய வாய்ப்பு மறக்க முடியாதது’’ என்றவர், கனடாவில் தன் இசை வாழ்வு பற்றிச் சொன்னார்.

‘‘கனடாவுக்குக் குடிபெயர்ந்ததும், 17 வருடங்களுக்கு முன் ‘ஸாமகானம்’ எனும் கலை பீடத்தை ஆரம்பித்தேன். அதில் வாய்ப்பாட்டு மற்றும் வீணை கற்பித்து வருகிறேன். என் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, கோயில் திருவிழாக்கள், முதியோர் அமைப்புகள் என்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி, கலாசார வளர்ச்சியில் பங்காற்றி வருகிறார்கள். ‘சங்கீத ஸ்வரங்கள்’ என்ற யூடியூப் சேனலிலும் அவர்களின் திறமைகளைக் காணலாம்.

மேலும், பாட்டிலும் வீணையிலும் பல வானொலி, தொலைக்காட்சி கர்னாடக சங்கீத கச்சேரிகள் மற்றும் ஃபியூஷன் கச்சேரிகளை கனடாவில் மட்டுமல்லாமல், இலங்கை, இந்தியா, லண்டன் போன்ற நாடுகளிலும் வழங்கியுள்ளோம்’’ என்பவர், கனடாவின் முன்னணி தமிழ்த் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் இசை நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர். இசை ஆல்பம், ஆன்மிகப் பாடல்கள் என்று சாருமதி தன் குரலுக்கு ஓய்வு கொடுப்பதே இல்லை.

இசையுடன் வளர்கிறது மொழி! - கனடாவில் ஒரு கானக்குயில்... சாருமதி மனோகாந்தன்

‘‘குறிப்பாக, நான் இசையமைத்து, எழுதிய தனியிசைப் பாடல்கள் முயற்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவற்றை என் மகள் சுபிகா மனோகாந்தனுடன் பாடி வெளியிட்டுள்ளேன்’’ என்கிறார் கூடுதல் மகிழ்ச்சியுடன்.

‘‘இசைத்துறை மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துவருவதை என் முக்கியப் பொறுப்பாக உணர்கிறேன்.

கலை, கலாசார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியுடன் இயல்பாக இணைந்து நிற்பது இசை. இசையுடன் கூடவே இருப்பது மொழி. எனவே, இசைக்குள் மொழி இருக்கும்போது ஒன்றால் மற்றொன்று பரஸ்பரம் வளர்ந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, புலம் பெயர்ந்த தமிழர்களின் வீடுகளில் தாய்மொழியே பேசுமொழி. அது இசையுடன் வளர்வது இன்னும் சிறப்பு.

கனடா ஒரு கூட்டுக் கலாசார நாடாக இருப்பதால், இங்குள்ள அரசாங்கமும் நமது தாய்நாட்டுக் கலை மொழி, கலாசாரம், பண் பாடுகளை வளர்க்க ஆதரவு தந்து அழகு பார்க்கிறது.

வரப்புயர நீர் உயரும் என்பதைப் போல, இங்கு கலை, கலாசாரம், மொழி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கூட்டு சேர்ந்து வளர்ந்து வருகிறது” என்கிறார் உற்சாகமாக.இசைக்குள் மொழி இருக்கும்போது பரஸ்பரம் வளர்ந்து கொண்டே இருக்கும். புலம்பெயர்ந்த தமிழர்களின் வீடுகளில் தாய்மொழியே பேசுமொழி. அது இசையுடன் வளர்வது இன்னும் சிறப்பு.