தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புத்துயிர்ப்பு: இருளுக்குள் ஒளி

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

ஆயிரம் ஆயிரம் பெண்களின் கதைகள்

தினமும் உணவு நேரத்தில் ஒரு ரொட்டி அவளுக்கு கெட்டோவில் அளிக்கப்படும். ஆனால், அதை அவள் கவனமாகச் சேமித்து எடுத்துச்சென்று தன்னைவிட மெலிந்திருக்கும் தன் மகனுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். இருவரில் முதலில் இறந்தவர் யார் என்று தெரியவில்லை. இன்னொரு பதின்வயது பெண், தன் பாட்டியோடு அடைபட்டிருந்தாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாட்டியின் நடுங்கும் கரங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு முகாமில் சில நிமிடங்கள் அவரை நடக்கவைப்பது அவள் வழக்கம். காஸ் சேம்பரில் இருவரையும் அடுத்தடுத்து தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.

இப்படி ஆயிரம் ஆயிரம் பெண்களின் கதைகள் `வதைமுகாம்' வரலாறு நெடுகிலும் பரவிக்கிடக்கின்றன. இவற்றைப் பல ஆய்வாளர்கள் தனியே பிரித்தெடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள், இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கான அவசியம் என்ன? நாஜிகள் என்னவோ ஆணென்றும் பெண்ணென்றும் பாராமல்தான் அறுபது லட்சம் யூதர்களைக் கொன்றொழித்தனர். இருந்தும் ஆய்வில் ஏன் பாலினம் முக்கியத்துவம் பெறுகிறது? அதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார், இத்துறை குறித்து நூல்கள் எழுதியிருக்கும் லெனோர் ஜே.வீஸ்மென்.

`பெண்களை மையப்படுத்தி நாஜி முகாம் களை ஆராயும்போது ஜெர்மானிய சமூகம் குறித்தும் யூதர்கள் குறித்தும் மட்டுமல்ல; நாஜிகள் குறித்தும் சில புதிய பார்வைகள் நமக்குக் கிடைக்கின்றன' என்கிறார் இவர்.

எடுத்துக்காட்டுக்கு, வதைமுகாம் தோன்றுவதற்கு முந்தைய யூத சமூகத்தை எடுத்துக்கொள்வோம். ஹிட்லர் அரசு யூதர்களுக்கு எதிரான சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்ததைத் தொடர்ந்து யூத ஆண்களின் வேலைகள் பறிக்கப்பட்டன. இதனால் மனமுடைந்த பல ஆண்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீடுகளில் முடங்கினர். வேலைக்குப் போவது, சம்பாதிப்பது, வீடு திரும்புவது... இவை தவிர வேறு எதுவுமே அதுவரை செய்திராத பல ஆண்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர்.

புத்துயிர்ப்பு
புத்துயிர்ப்பு

யூதப் பெண்களின் நிலையோ நேர் எதி ரானது. முன்பைவிடப் பலமடங்கு அதிகம் பணியாற்றவேண்டிய அழுத்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. வருமானம் இல்லாத வீட்டைத் தொடர்ந்து நடத்த வேண்டும். என்னவோ செய்து வேளை தவறாமல் அனைவருக்கும் உணவு தயாரிக்க வேண்டும். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். வேலை யிழந்து முடங்கியிருக்கும் கணவனைத் தேற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்துகொண்டே யூதர்களை வேட்டையாடும் அரசுப் படைகள்மீதும் ஒரு கண் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அசாத்தியமான துணிவோடு யூதப் பெண்கள் இவையனைத்தையும் செய்துவந்தனர். அதை யூத சமூகமும் கவனிக்கத் தவறவில்லை. ‘தொடர்ந்து மெழுகுவத்தியை ஏற்றி ஒளியைப் பரப்புங்கள், தொடர்ந்து வீட்டை உற்சாகத்தோடு வைத்திருங்கள்’ என்று பிப்ரவரி 1938-ல் பத்திரிகைகள் யூதப் பெண்களை வேண்டிக் கேட்டுக்கொண்டன.

இருளுக்குள்ளிருந்து நட்சத்திரங்கள் போல லட்சம் பெண்கள் மின்னிக்கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் நம்பிக்கையாக. குரலற்றவர்களின் குரலாக. மரணத்தை வெல்லும் புத்துயிர்ப்பாக.

சில ஆண்டுகள் கழிந்ததும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக யூதர்கள் மொத்தமாகக் கைது செய்யப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆண் எதிர்கொண்ட ஒவ்வொரு வதையையும் பெண்ணும் அனுபவித்தார். பெண்கள் மட்டுமே எதிர்கொண்ட வதைகளும் இருந்தன.

லித்துவேனியாவில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்களைக் கண்காணிக்கவென்றே சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் வேலை கருவுற்றிருக்கும் பெண்களைக் கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது. நாஜிகளைப் பொறுத்தவரை யூதர்கள் நோய்க்கிருமிகள் என்பதால் பெண்கள் நோயை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகப் பார்க்கப்பட்டனர். சில நேரம் குழந்தை தனியாகவும் தாய் தனியாகவும் கொல்லப்பட்டனர். சில நேரம், கருவுற்றிருக்கும் பெண் உடனடியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். வயதான பெண்களால் எந்தப் பலனும் இல்லை என்று நாஜிகள் கருதியதால் அனைவரும் காஸ் சேம்பருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

போலந்தில் முதலில் வேட்டையாடப் பட்டவர்கள் யூத ஆண்களே என்பதால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சினர். பால் வாங்க வேண்டும், ரொட்டி வாங்க வேண்டும், மருத்துவ உதவி வேண்டும் என்று எதுவாக இருந்தாலும் வீட்டிலுள்ள பெண்களையே அவர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் வீதிகளிலும் மருத்துவமனைகளிலும் வழக்கத்தைவிட பெண்களே மிகுதியாக நிறைந்திருந்தனர். கடைத்தெருக்களில் பெண்களே நீண்ட வரிசைகளில் கையில் கூடைகளோடு நின்றுகொண்டிருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பொருள்களை வாங்கிச்சென்று அவர்களே சமைத்துப் பரிமாறவும் வேண்டியிருந்தது. போலந்து பெண்கள் கடுமையான உடலுழைப்பைச் செலுத்திய காலம் அது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதுவரை வீட்டைவிட்டே வெளியே வராத பெண்களும் வெளியில் அனுமதிக்கப்படாத பெண்களும் வேலை தேடி பெருங்கூட்டமாகப் புறப்பட்டு வந்தனர். சிலருக்கு கெட்டோக்களில் உள்ள ஆலைகளில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. சிலர் பேக்கரி, உணவகம் போன்றவற்றில் சேர்ந்தனர். துணி துவைப்பது, கட்டடத்தைச் சுத்தப்படுத்துவது ஆகியவற்றைச் சிலர் செய்தனர். வேலை, உணவு எதுவும் கிடைக்காமல், ஈக்களைப் போல் கொத்துக்கொத்தாகப் பல பெண்கள் இறந்து விழுந்தனர்.

என் குழந்தையைக் காப்பாற்ற இதை விட்டால் வேறுவழி இல்லை என்னும் நிலையில் சில பெண்கள் பொருள்களைக் கடத்துவது, உணவைக் கடத்துவது, திருட்டுப் பொருள்களை விற்பது போன்ற சட்டத்துக்கு விரோதமான தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர். கிடைத்த வருமானத்தைக் கொண்டு கணவனுக்கும் குழந்தைகளுக்கும் உணவளித்தனர். சில பெண்கள் சாகசத்தோடு கெட்டோவில் இருந்து தப்பி வந்ததோடு, ஊரைவிட்டு வெளியேறி யூதர்கள் இல்லாத பகுதிகளுக்குக் கால் நடையாக நடந்துசென்று அங்கு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொண்டனர். தங்கள் குழந்தைகளுக்காக உணவைத் திருடிக்கொண்டு பதைபதைப்போடு ஓடிய பெண்களும் இருந்தனர்.

போருக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பல யூதர்கள், ‘நான் இன்று உயிரோடு இருப்பதற்குக் காரணம் என் அம்மா. அவர் செய்த தியாகங்களே என் ரத்தமாகவும் சதையாகவும் இருக்கின்றன’ என்று வாக்குமூலம் அளித்தனர். சிலருக்கு அம்மா. இன்னும் சிலருக்கு மனைவி அல்லது சகோதரி அல்லது காதலி அல்லது தோழி. ‘எல்லாவற்றையும் இழந்து எலும்புக்கூடாக மாறிய பிறகும் என் அம்மா என்னைப் பார்த்துப் பார்த்து ஆறுதல் அடைந்தார்’ என்றார் ஒருவர்.

சில பெண்கள் நாஜி எதிர்ப்புக் குழுக்களோடு இணைந்து ரகசியமாகப் பணியாற்றினர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் பெண்களாகவும் தனித்து வாழ்பவர்களாகவும் இருந்தனர். பல குழுக்களில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக ஆயுதம் தாங்கி இயங்கினார்கள் என்றால், சிலவற்றில் தலைவர்களாகவும் இருந்து உறுப்பினர்களை வழிநடத்தினார்கள். போலந்திலுள்ள வார்ஸா கெட்டோவில் ஜிவியா லியூபெட்கின் என்னும் பெண் மற்ற தலைவர்களோடு இணைந்து ஆயுத எழுச்சியொன்றைத் திட்டமிட்டதோடு, அதில் பங்கேற்கவும் செய்தார். இத்தகைய பல வீரஞ்செறிந்த பெண்களை யூத சமூகம் இன்றளவும் மரியாதையோடு நினைவுகூர்கிறது.

கைதிகளாக இருந்தபோதும் பல பெண்கள் சக கைதிகளுக்கு உதவுபவர்களாக, அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். குழந்தைகளைத் திரட்டி ரகசியமாகப் பாடம் போதிக்கும் பணியைப் பல பெண்கள் ஆர்வத்தோடு முன்வந்து மேற்கொண்டனர். சில பெண்கள் ஏடுகளை ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்து அவ்வப்போது சந்திப்புகள் நடத்தி மென்குரலில் வாசித்துக்காட்டினர். நாஜிகளின் கண்களில் படாமல் சிறிய நூலகமொன்றை முகாமுக்குள் நடத்திய பெண்களும் இருந்தனர். ஆடல், பாடல் போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகளைச் சில பெண்கள் சிறைவாசிகளுக்கு நடத்தினர். கைதிகள் தப்பிச் செல்லவும் பல பெண்கள் உதவியிருக்கின்றனர்.

‘கஷாரியோத்’ என்னும் பெயரில் இயங்கிய பெண்கள் குழுவை லெனோர் ஜே.வீஸ்மென் தனிக்கவனத்தோடு ஆய்வு செய்திருக்கிறார். இந்த யூதப் பெண்கள் தங்கள் அடையாளத்தைச் சாதுர்யமாக மறைத்துக்கொண்டு பிடிபடாமல் தப்பி வாழ்ந்தனர். அது மட்டுமின்றி அவ்வப்போது கெட்டோவுக்கு வருகை தந்து காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே சென்று கைதிகளைச் சந்தித்து அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொடுத்து உதவினர். உள்ளிருந்து தகவல்களைச் சேகரித்து வெளியிலிருப்பவர்களுக்குக் கடத்தும் வேலையையும் செய்தனர். பல நேரம் ஆயுதங்களை வெளியிலிருந்து மறைத்துக்கொண்டுவந்து கைதிகளுக்குக் கொடுத்து கலகம் வெடிப்பதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

ஆண் கைதிகளைவிடப் பெண்களே பசியை அதிகம் தாங்கிக்கொண்டனர். ஆண்களைவிட அதிக அவமானங்களை, இழிவுகளை, பாலியல் சீண்டல்களைப் பெண்கள் எதிர்கொண்டனர். ஆணைப் போல அல்லாமல் முகாமிலும் ஒரு பெண்ணை அவள் கடமைகள் நிழல்போலவே தொடர்ந்து வந்தன. முகாமுக்குள்ளும் தன் கணவனை, குழந்தைகளை, உறவினர்களைப் பெண்கள் இயன்றவரை நன்றாகக் கவனித்துக்கொள்ள முயன்றனர். ஒரு நல்ல மகளாக, நல்ல மனைவியாக, நல்ல சகோதரியாக, நல்ல காதலியாக, நல்ல தோழியாகப் பெண்கள் விளங்கியதைப் பல கைதிகள் பின்னர் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தனர். கதைகள் பேசி, பாடல்கள் பாடி, பழைய அனுபவங்களை அசைபோட்டு இயன்றவரை தங்கள் சூழலைப் பெண்கள் கதகதப்பால் நிரப்பியிருக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட பல ஆண்களின் வாக்குமூலம் இதை உறுதிசெய்கிறது.

கரியால் தலைமுடியைக் கருமை யாக்கிக்கொள்வது, கன்னங்களைக் கிள்ளி விட்டுக்கொண்டு சிவப்பாக்கிக்கொள்வது என்று இயன்றவரை தங்களைப் புத்துணர்ச்சி யோடு வைத்துக்கொள்ளப் பல பெண்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். சுற்றியுள்ளவர்கள் தங்களைக் கண்டு சிறிதேனும் உற்சாகம் கொள்ள வேண்டும் என்பது ஒரு காரணம். பொலிவிழந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும் பெண்கள் வலுவற்றவர்களாகக் கருதப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பது இன்னொரு காரணம்.

ஆண் பெண் வேறுபாடின்றி நோய்வாய்ப் பட்ட கைதிகளுக்குப் பெண்களே தங்களால் இயன்ற சிகிச்சையை அல்லது ஆறுதலை அளித்திருக்கிறார்கள். உடைந்து அழுத பல ஆண்களின் கண்ணீரைப் பெண்களே துடைத்திருக்கிறார்கள். உடலளவிலும் மனத்தளவிலும் பல ஆண்கள் அதிக பாதிப் பின்றி மீண்டதற்குஅங்கிருந்த சில பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

வதைமுகாம் என்பது முடிவின்றி வளர்ந்துகொண்டே செல்லும் பெரும் இருள். அந்த இருளுக்குள்ளிருந்து நட்சத்திரங்கள் போல லட்சம் பெண்கள் கிடந்து மின்னிக்கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் நம்பிக்கையாக. குரலற்றவர் களின் குரலாக. மரணத்கோக்ல்தை வெல்லும் புத்துயிர்ப்பாக.