Published:Updated:

அப்பாவின் ஆட்டோ ரிக்‌ஷாவில் வெற்றி ஊர்வலம்... மிஸ் இந்தியா ரன்னர் அப்... யார் இந்த மான்யா?

மான்யா சிங்
மான்யா சிங் ( Instagram image )

வி.எல்.சி.சி பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2020 போட்டியின் வெற்றியாளராகத் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மான்யா பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றுவருகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் குஷி நகரைச் சேர்ந்தவர் மான்யா சிங். ஃபெமினா மிஸ் இந்தியா 2020-ம் ஆண்டுக்கான அழகிப் போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றவர். ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா சிங், மிஸ் இந்தியா ரன்னர்-அப் பட்டத்தை வென்ற கதை, கவலையும் கண்ணீரும் நிறைந்தது.

மான்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். தனது 14வது வயதில், தாங்கள் வசித்து வந்த கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார் மான்யா. இதுதான் செய்யப்போகிறோம் என்ற திட்டம் இல்லாமல் ரயிலில் ஏறிய மான்யாவுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் வந்து இறங்கியதும் அவரது கண்ணில்பட்டது, ஒரு பீட்சா ஹட்.

மான்யா சிங்
மான்யா சிங்
Instagram image

எனவே, அங்கேயே வேலையில் சேர்ந்து, தங்குவதற்கான ஓர் இடத்தையும் ஏற்படுத்திக்கொண்டார். மும்பைக்கு வந்த இரண்டாவது நாளில் தன் அப்பாவுக்கு போன் செய்து, 'நான் இங்கேதான் இருக்கிறேன்' என்று தெரியப்படுத்தியுள்ளார். மான்யாவின் குரலைக் கேட்டு அழுத அவரின் தந்தையும், குடும்பத்துடன் மும்பைக்கே வந்துவிட்டார். மான்யாவின் அப்பா ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்துள்ள நிலையில், 14 வயதான சிறுமி மான்யா வேலைக்குச் சென்றுள்ளார்.

தன் மகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று மான்யாவின் தந்தை, நல்ல பள்ளியில் சேர்த்துள்ளார். மாயாவின் 15வது வயதில் முதன்முதலில் பார்த்த மிஸ் இந்தியா புரொகிராம்தான், அவரை இதற்குள் வரவைத்தது என்கிறார். தனது பாடம் சம்பந்தமான வேலைகளை பகல் நேரத்திலேயே முடிக்கும் மான்யா, மாலை பொழுதிலும் இரவு நேரத்திலும் வேலைக்குச் சென்றுள்ளார். ரிக்ஷாவுக்கு கொடுக்கும் பணத்தைச் சேமித்து வைக்கலாம் என எண்ணி எங்கு சென்றாலும் நடந்தே சென்றுள்ளார். மாதம் 15,000 ரூபாய் சம்பாதித்து வந்துள்ளார் மான்யா.

இதற்கு முன்பு மான்யா ஆடிஷன் சென்றபோது பலரும் இவரிடம், 'உனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை' என்று கூறி உள்ளார்கள். எனவே, மான்யா கல்லூரியில் மற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது அதை உன்னிப்பாகக் கவனித்து கற்று வந்தார். மேலும், அவர் பீட்சா ஹட்டில் வேலைசெய்யும்போது அங்கு வரும் வாடிக்கையாளர்களைப் பார்த்து, இப்படித்தான் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிந்து கொண்டாராம். பகுதி நேரமாக வேலைபார்த்து வந்தாலும், படிப்பிலும் அவரது கவனம் சிறிதும் குறையாமல் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

'பரீட்சைக்குப் பணம் கட்ட, போக்குவரத்துக்கு பணத்தை செலவிட மிகவும் சிரமப்பட்ட நாள்களும் உண்டு' என்கிறார் மான்யா. தேர்வுகளுக்காக வீட்டிலிருந்த கொஞ்ச நகைகளையும் அடமானம் வைத்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளார். 'கல்வி ஒரு வலுவான ஆயுதம், எந்த நிலையிலும் அது கைகொடுக்கும். நீங்கள் ஈடுபாட்டுடன் உழைத்தால் அனைத்தும் சாத்தியமாகும் என உலகுக்கு காட்டவே நான் பெமினா மிஸ் இந்தியா 2020 போட்டியில் கலந்துகொண்டு தேர்வாக இருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார் மான்யா.

மான்யா சிங்
மான்யா சிங்
Instagram image

மேலும், போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பின் வீடு திரும்பியபோது மான்யா தனது கல்லூரி ஏற்பாடு செய்திருந்த விழாவுக்குச் சென்றார். இதில் மதிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் தன் தந்தையின் ஆட்டோவில் குடும்பத்துடன் விழாவுக்கு வந்தார். அப்போது விழாவில், குனிந்து தன் தாயின் கால்களைத் தொட்டு மரியாதை செலுத்தினார். தந்தை உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியபோது அவர் கண்ணீரைத் துடைத்ததோடு மட்டுமல்லாமல், தனது கிரீடத்தை தன் தாய், தந்தைக்கு சூட்டி அழகு பார்த்தார்.

சூழ்நிலை எவ்வளவு இக்கட்டாக இருந்தபோதிலும் தனது லட்சிய பாதையை நோக்கி வெற்றி கண்ட மான்யாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அழகென்பது இதுதான்!

அடுத்த கட்டுரைக்கு