லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பயன்படாத பாட்டில்களில் பயனுள்ள ஓவியங்கள்! - தரன்ஷியா

தரன்ஷியா
பிரீமியம் ஸ்டோரி
News
தரன்ஷியா

வாவ் பெண்கள்

கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டறியப்படாத சூழலில், பட்டினியில் வாழும் மக்களைக் காக்க பல இடங்களில் சேவைக் கரங்கள் நீண்டுள்ளன. அப்படி உதவி செய்பவர்களில் சென்னையைச் சார்ந்த தரன்ஷியாவும் ஒருவர். பத்தாம் வகுப்பு மாணவியான இவர், பயன்படாத கண்ணாடி பாட்டிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அதை சமூக வலைதளங்கள் மூலமாக விற்று 25,000 ரூபாயைத் தமிழக அரசின் கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார்.

பயன்படாத பாட்டில்களில் 
பயனுள்ள ஓவியங்கள்! - தரன்ஷியா

“ஏழாம் வகுப்பு படிக்கும்போது கேன்வாஸ் பெயின்டிங் கத்துக்கிட்டேன். ஸ்கூல்ல இருந்து வந்து தினம் ஒரு மணிநேரம் படம் வரைய ஒதுக்கிடுவேன். மனசு ரிலாக்ஸாக இருக்கும். யார் வீட்டில் விஷேசம் என்றாலும் என்னுடைய ஓவியங்களைத்தான் கிஃப்ட் பண்ணுவோம். அதில் ஒரு மனதிருப்தி கிடைக்கும். பாட்டில் பெயின்டிங் டிரெண்ட் ஆனபோது, ஆன்லைன்ல பார்த்து கத்துக்கிட்டு வரைய ஆரம்பிச்சேன்” என்று அறிமுகமாகிற தரன்ஷியாவிடம் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் பற்றிக் கேட்டோம்.

“ஊரடங்கு அறிவிச்சதால் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம்னு தோணுச்சு. கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு ஓவியங்களைப் பாட்டிலில் பெயின்ட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். செலிபிரிட்டிகளும் வாழ்த்து சொல்லி பாட்டில்களை விலைக்கு கேட்க ஆரம்பிச்சாங்க. பெயின்டிங் விற்ற தொகையை கொரோனா நிதியாகக் கொடுக்கலாம்னு முடிவு செய்தோம். நடிகர் சூரி அங்கிள், பார்த்திபன் சார், சினிமோட்டோகிராபர் ரவிவர்மன் அங்கிள், தென் கொரியா ஆர்டிஸ்ட் தினா சார்னு நிறைய பேர் என் ஓவியங்களை வாங்கினாங்க. ஓர் ஓவியம் 250 ரூபாய்னு விலை நிர்ணயிச்சு இருந்தோம். ஆனா, 5,000 ரூபாய் வரை கொடுத்து ஓவியங்களை வாங்கினாங்க. இப்போ வரை 90-க்கும் மேலான பாட்டில்களில் ஓவியம் வரைந்து முடிச்சுருக்கேன். 25,000 ரூபாய் பணம் கிடைச்சுது. அந்தத் தொகையை அப்படியே கொரோனா நிதிக்காக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாரிடம் கொடுத்தோம். ‘நிறைய பேர் இப்படி உதவ முன்வர நீங்க ரோல் மாடலாக இருப்பீங்க’னு வாழ்த்தினாங்க. ஊரடங்குக்குப் பிறகு ஆதரவற்ற பெண்களுக்கு பாட்டில் பெயின்டிங் கத்துக்கொடுக்கலாம்னு இருக்கேன். சமூகத்துக்கு இப்போ, உணவு, உடை பாதுகாப்புக்கவசங்கள் என நிறைய உதவிகள் தேவைப்படுகிறது. நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுப்போம்... கொரோனாவிலிருந்து மீண்டுவருவோம்” என்று விடைபெறுகிறார் தரன்ஷியா.