Published:Updated:

வினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

- சஹானா

வினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி!

- சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

விமல் குடியிருக்கும் அப்பார்ட் மென்டின் பூங்காவில், வித்யாவும் வினுவும் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்திருந்தனர். தானும் மாஸ்க் அணிந்து, நுங்கு சர்பத்துடன் வந்த விமல், “வீட்டுக்கு வரலாம்ல...” என்று கேட்டாள்

“கொரோனா காட்டுத்தீயா பரவிட்டிருக்கு. அறிகுறியே தெரிய மாட்டேங்குது. நாம மறுபடியும் ஜூம்லதான் மீட் பண்ணணும் போல. இப்போ இங்கே இருக்கறது தான் நாம எல்லோருக்கும் நல்லது” என்றார் வித்யா.

“நம்மள மாதிரி எல்லாரும் கவனமா இருந்தா, பெரிய அளவுல பரவாம தடுத்துடலாம். எலெக்‌ஷன், கும்பமேளான்னு இங்கே நடக்கறதை யெல்லாம் பார்த்தா, மக்கள் மேல யாருக்கு அக்கறை இருக்குன்னே தெரியல” என்றாள் வினு.

“ஆமா, கும்பமேளாவுல எள் விழ இடமில்ல. அரசாங்கமும் இப்படி இருக்கு, மக்களும் இப்படி இருக்காங்க. போன வருஷம் ஐரோப்பாவுல இருந்த மாதிரி நிலைமை இப்ப இந்தியாவுக்கும் வந்துருச்சு. ஆக்ஸிஜன் தட்டுப் பாடு, ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடுன்னு அடுத்து என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. என் ஃபிரெண்ட் ஒருத்தர் கொரோனா எல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டிருந்தார். இப்போ ஹாஸ்பிடலில் இருக்கார்” என்று வருத்தப்பட்ட விமல், நுங்கு சர்பத்தை ஊற்றிக் கொடுத்தாள்.

 டார்னலா -  லிண்டா டாயல்ங் - சீதாலஷ்மி
டார்னலா - லிண்டா டாயல்ங் - சீதாலஷ்மி

“அடடா... வெயிலுக்கு இதமா இருக்கு. கலக்கறே விமல். போன தடவை ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்துக்கு

நீதி கேட்டுப் போராடினதைப் பத்திப் பேசிட்டிருந்தோமே... தீர்ப்பு வந்துருச்சு போல” என்றார் வித்யா.

“ஆமா, வித்யாக்கா. ஜார்ஜ் ஃப்ளாய்டைக் கதறக் கதறக் கொன்ற போலீஸ்காரர் டெரிக் சாவின் குற்றவாளின்னு தீர்ப்பு வந்துருச்சு. அவருக்கு 75 வருஷ சிறைத்தண்டனை கிடைக்கும்னு சொல்றாங்க. இந்தத் தீர்ப்புக்கு முக்கியமான காரணம், டார்னலா ஃப்ராஸியர்ங்கிற 17 வயசுப் பொண்ணுதான்!”

“அப்படியா! என்ன செஞ்சா அந்தப் பொண்ணு?”

“ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை செய்யப்பட்டப்ப, அங்கே ஒரு கடைக்குப் போயிருக்காங்க டார்னலா. அவங்களால இந்தக் கொலையைத் தடுக்க முடியல. ஆனாலும், அதை வீடியோவா எடுத்து, சோஷியல் மீடியாவுல வெளியிட்டாங்க.

‘ஐ கான்ட் பிரீத் (I can’t breathe)'னு ஃப்ளாய்டு கதறும் வீடியோ உலகத்தையே உலுக்கிருச்சு. பல நாடுகள்ல போராட்டங்களும் வெடிச்சது. டெரிக்கை கைது செய்து, விசாரணையும் நடந்துச்சு. டார்னலா துணிச்சலா சாட்சியும் சொன்னாங்க. இப்போ தண்டனையும் கிடைச்சிருச்சு” என்று இடைவெளி விட்டாள் விமல்.

“நியாயத்துக்காகப் போராடின டார்னலா வைப் பாராட்டணும். `காப்பாத்த முடியாம

தான் வீடியோ எடுத்தேன். இன்னிக்கு வரை என்னால தூங்க முடியலை. கறுப்பர்னா என்ன வேணாலும் செய்யலாம்கிற மனோபாவம் மாறணும்'னு சொல்றாங்க டார்னலா. இந்த நூற்றாண்டோட முக்கியமான சமூக உரிமை ஆவணம்னு டார்னலாவோட வீடியோவை அமெரிக்காவுல கொண்டாடறாங்க” என்று வினு சொன்னவுடன், “பெண்கள்தான் நியாயத் துக்காகத் துணிச்சலோட போராடறாங்க” என்றார் வித்யா.

“டார்னலாவைப் போலவே இன்னொரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணையும் அமெ ரிக்கா கொண்டாடிட்டு இருக்கு. அவங்களுக்கும் 17 வயசுதான். ஸ்கூல் ஸ்டூடன்ட்டான டேசியா டெய்லர், எல்லாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கும் அமைப்புகள்ல வேலை செஞ்சிட்டிருக்காங்க. அவங்களோட டீச்சர் கரோலின் வில்லிங், `சைன்ஸ் ஃபேர் கிளப்’ல டேசியாவைச் சேர்த்து விட்டாங்க. ஏழைகளுக்குப் பயன்படற மாதிரி ஒரு கண்டுபிடிப்பை உரு வாக்கணும்னு டேசியா நினைச்சாங்க.

மருத்துவம், பெண் கள் பத்தி படிச் சதுல, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சிசேரியன் பிரசவத்தின் போது தொற்று ஏற்பட்டு, ஏராளமானவங்க உயிரிழக் கறாங்கன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இன்னிக்கு தையல் போட நவீன தொழில்நுட்பம் வந்துட்டாலும் அதைப் பயன்படுத்த முடியாத நாடுகள் ஏராளம். அதனால ஈஸியா நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்கிற விதத்துல தையல் நூலை உருவாக்கும் ஆராய்ச்சியில இறங்கினாங்க.

பீட்ரூட் சாறுக்கு பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி இருக்கறதால, அந்தச் சாறுல நூலை நனைச்சு தையல் போடலாம். உடம்புல உள்ள பி ஹெச் லெவல் நார்மலா இருந்தா, நூல் பர்ப்பிள் கலரா இருக்கும். பி ஹெச் லெவல் அதிகமானா மெஜந்தாவா மாறும். உடனே தொற்று இருக்கறதைத் தெரிஞ்சுகிட்டு, சிகிச்சை கொடுத்து, உயிரைக் காப்பாத்திடலாம்.

செலவு குறைவான இந்த உயிர் காக்கும் நூலுக்கு காப்புரிமை கேட்டிருக்காங்க டேசியா, ஏழை மக்கள் தொற்றால உயிரிழக்கறதை இனி தடுக்க முடியும்கிறதால, உலக அளவுல டேசியா இளம் விஞ்ஞானியா கொண்டாடப்படுறாங்க. இப்போ பீட்ரூட் நூல் சிறந்த கண்டுபிடிப்பா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் வினு.

“கிரேட்! டார்னலாவையும் டேசியாவையும் நினைச்சா பெருமையா இருக்கு. அதே நேரத்துல அமெரிக்காவிலும் பிரசவத்துல பெண்கள் உயிரிழக்கறாங்க. அதிலயும் அமெரிக்கர்களைவிட ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களோட இறப்பு விகிதம் மூணு மடங்கு அதிகமா இருக்கு. அவங்களுக்கான சரியான மருத்துவம் கொடுக்கறதில்லைன்னு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நினைக்கிறாங்க. எவ்ளோ துயர மான விஷயமா இருக்கு. இன வேறுபாட்டால மருத்துவத்துலயும் பாரபட்சம் காட்டினா என்ன பண்றது?” என்று கவலைப்பட்டார் வித்யா.

மூவரும் நுங்கு சர்பத்தைக் குடித்து முடித்தனர்.

“உலகத்துலேயே மிக முக்கியமான செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ். இந்த நிறுவனத்தோட 170 ஆண்டுக்கால வரலாறுல முதன்முறையா முதன்மை ஆசிரியரா ஒரு பெண்ணை நியமிச்சிருக்காங்க. 47 வயசு அலெஸ்ஸாண்டரா கல்லோனி, உலகம் முழுக்க இருக்கிற 2,450 பத்திரிகையாளர்களுக்குத் தலைவரா இருப்பாங்க. ராய்ட்டர்ஸ் நிறுவனத்திலேயே ஒரு பெண் தலைமைப் பொறுப்புக்கு வர இவ்வளவு காலம் ஆயிருக்கு. அலெஸ் ஸாண்ட்ரா ரோமைச் சேர்ந்தவங்க. லண்டன், பாரிஸ்ல நிருபராவும் பத்திரிகை ஆசிரியராவும் வேலை செஞ்சிருக்காங்க” என்றாள் வினு.

வினு விமல் வித்யா: உலகப் பத்திரிகையாளர்களின் தலைவி!

“இதே மாதிரிதான் அயர் லாந்துலயும்... பிரபலமான கல் லூரிகள்ல பெண்களைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கற தில்லை. இப்போதான் ட்ரினிட்டி காலேஜ் டப்ளினின் 429 ஆண்டுக்கால வரலாறுல முதன்முறையா லிண்டா டாயல்ங்கிற பெண்ணைத் தலைவரா அறிவிச்சிருக்காங்க. `ட்ரினிட்டி காலேஜுக்கு அற்புதமான கடந்த காலம் இருக்கு. கடந்த காலத்துல யிருந்து சிறந்ததை எடுத்துக்கிட்டு, புதிய திசையில பயணிப்பேன்’னு சொல்லிருக்காங்க லிண்டா!” என்றாள் விமல்.

“இந்த நியூஸைக் கேள்விப் பட்டீங்களா? கேரளாவுல வசிக்கிற சீதாலஷ்மி சினிமா துறையில இருக்காங்க. சிங்கிள் பேரன்ட். தன் குழந்தை, அம்மா, தம்பியோட ஒரு அப்பார்ட்மென்ட்ல வசிக்கிறாங்க. சினிமா ஃபீல்டுங்கிறதால லேட் நைட் வீடு திரும்புவாங்க. கணவர் இல்லாம, தனியா வாழற ஒரு பொண்ணு எப்படி லேட் நைட் வரலாம்னு அப்பார்ட்மென்ட் ஆட்களுக்கு இவங்க மேல பயங்கர கோபம். போன வாரம் பத்து மணிக்கே கேட்டை மூடிட்டாங்க. சீதாலஷ்மி கதவைத் திறக்கச் சொன்னா, செக்யூரிட்டி திறக்கல. அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி, உள்ளே போயிருக்காங்க. அப்பார்ட்மென்ட் ஆட்கள் வீட்டுக்குப் போக விடாம தடுத்து, திட்டியிருக்காங்க. உடனே காலி பண்ணணும்னு வேற சொல்லி ருக்காங்க. சீதாலஷ்மி போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணாங்க. அவங்க வந்து எல்லோரையும் சமாதானப்படுத்தி வச்சிருக்காங்க. சிங்கிளா வாழற ஒரு பெண்ணை இன்னும்கூட இந்தச் சமூகம் எப்படி நடத்துதுன்னு நினைச்சா வேதனையா இருக்கு” என்ற வித்யா டைம் பார்த்தார்.

“யார் எப்படி வாழ்ந்தா இவங் களுக்கு என்னவாம்? இதெல்லாம் ரொம்ப அராஜகம். சரி, வினு நாங்க கிளம்பறோம். நுங்கு சர்பத்துக் காகவே அடுத்த தடவையும் இங்கேயே மீட் பண்ணலாம். ஆனா, அதை கொரோனாதான் முடிவு பண்ணணும்” என்று சொல்லிக் கொண்டே கிளம்பினாள் வினு.

வித்யாவும் கிளம்ப, வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாள் விமல்.

(அரட்டை அடிப்போம்...)