என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வினு விமல் வித்யா: கண்ணிவெடிகளிலிருந்து மக்களைக் காக்கும் பெண்கள்!

 மார்வா எல்செல்டார்
பிரீமியம் ஸ்டோரி
News
மார்வா எல்செல்டார்

- சஹானா

இஞ்சி, எலுமிச்சை, ஆரஞ்சு, தேன், புதினா எல்லாம் சேர்த்த மாக்டெய்லை ஜில்லென்று கொடுத்தார் வித்யா.

“அடடா... இந்த வெயிலுக்கு எவ்வளவு இதமா இருக்கு. டேஸ்ட் செம. எனக்கு இன்னொரு கிளாஸ் வேணும் வித்யாக்கா” என்றாள் வினு.

“வீட்டுக்குள்ளேயே இருக்க முடியலை. இந்த வெயில்ல எப்படித்தான் பிரசாரம் செஞ்சாங்களோ? என்ன கூட்டம்... அதுவும் கொரோனா காலத்துல” என்று பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“வெயில்தான் அனல் பறக்குதுன்னா, வேட்பாளர்கள் பேச்சிலும் அனல் பறந்துச்சு. ஒருத்தர் இன்னொருத்தரைத் திட்டறார்னா, நேரடியா அவரைத் திட்டாம அவங்க அம்மா, மனைவின்னு பெண்களைத்தான் திட்டறாங்க. அப்புறம் அதை வெச்சு அரசியல் பண்றதும் மன்னிப்பு கேட்கறதும்னு தேர்தல் ரொம்பவே தரம் தாழ்ந்து போயிருச்சு.”

 ஹிண்ட் அலி
ஹிண்ட் அலி

“ஆண்கள்தான் இப்படித் திட்டிக்கிறாங் கன்னா பெண்களும் அவங்களுக்குச் சளைச்சவங்க இல்லைன்னு காட்டிட்டாங்க. ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதைவிடு வினு, கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வர்றதை நினைச்சா பயமா இருக்கு. போன முறை பாதிக்கப்பட்டவங்களே இன்னும் எழுந்திருக்கல. அதுக்குள்ள அடுத்த தாக்குதல். என்ன ஆகப் போறோமோ?”

“எனக்கும் பயமாதான் இருக்கு விமல். முன்னாடி இந்தியாவில 27 சதவிகிதம் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தாங்க. கொரோனாவால 70 சதவிகிதம் குழந்தைத் தொழிலாளர்களா அதிகரிச்சுட்டாங்க. டென்த், ப்ளஸ் ஒன் படிக்கிற பசங்கள்லாம் கூட பெயின்ட் அடிக்கற வேலை, ஹோட்டல் வேலை, கட்டுமான வேலைனு போக ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு இடத்துல... காதுல ஹெட்போனை மாட்டிக்கிட்டு பெயின்ட் அடிக்கிற வேலையில கண்ணும் கருத்துமா இருந்த பசங்க சிலர்கிட்ட பேசினேன். ‘ஸ்கூல் திறந்தா மறுபடியும் படிக்கப் போவீங் களா’ன்னு கேட்டதுக்கு, ‘இனி போக மாட்டோம். வீட்டுல கஷ்டம். இப்படியே வேலை செய்ய வேண்டியதுதான்’னு அவங்க சொன்னதைக் கேட்டு ரொம்பவே ஷாக் ஆயிட்டேன். இன்னும் எத்தனை பேரோட படிப்புக் கனவு இப்படி ஆச்சோ?” என்று வருத்தப்பட்டார் வித்யா.

“கொடுமையா இருக்கு வித்யாக்கா.”

“ஆமாம். சூயஸ் கால்வாய்ல மாட்டிக்கிட்ட எவர்கிவ்வன் கப்பல் பத்தி உலகமே பேசிட்டு இருந்துச்சு. இப்போ அதை வெச்சு ஃபேக் நியூஸ் ஒண்ணு உலகம் முழுசும் சுத்திட்டிருக்கு. உங்களுக்குத் தெரியுமா...” என்று கேட்டாள் வினு.

“நீயே சொல்லு வினு.”

 மார்வா எல்செல்டார்
மார்வா எல்செல்டார்

“29 வயசு கப்பல் கேப்டன் மார்வா எல்செல்டார். எகிப்து நாட்டோட முதல் பெண் கப்பல் கேப்டன் இவங்கதான். இதுக்காக அவங்க ரொம்ப கடினமா உழைச்சிருக்காங்க. தன்னைவிட வயசானவங்ககூட படிச்சிருக் காங்க. பெண்ணுங்கிறதுக்காகக் காட்டப்பட்ட பாரபட்சத்தை எல்லாம் கடந்து வந்திருக்காங்க. ரொம்ப திறமையானவங்க. சூயஸ் கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்தப் பகுதியைக் கடந்த முதல் கேப்டன் மார்வா தான். இவங்கதான் எவர்கிவ்வன் கப்பல் கேப்டனா இருந்து, இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்காங்கன்னு ஒரு நியூஸ் மார்வாவோட படங்களோட கட்டுரையா வெளிவந்திருக்கு. இங்கிலீஷ்ல வந்த அந்தக் கட்டுரை உலகம் முழுசும் வேகமா பரவிருச்சு. எவர்கிவ்வன் கேப்டன் மார்வா இல்ல. அந்த விபத்து நடந்தப்ப அவங்க ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால், ஐடா கப்பல்ல கேப்டனா வேலை செஞ்சிட்டிருந்திருக்காங்க. இந்த ஃபேக் நியூஸால தன்னோட கரியரும் நல்ல பெயரும் பாதிக்கப்படும்னு முதல்ல ரொம்பவே வருத்தப்பட்டாங்க மார்வா.

‘ஒரு பெண் கப்பல் கேப்டனா இருக்கிறத நம்ம சமூகம் இன்னும் ஏத்துக்க மாட்டேங் குது. அதான் இந்த வெறுப்பு. ஆனா, இதுக்காக நான் உடைஞ்சு போயிட மாட்டேன். எல்லார்கிட்டயும் அனுமதி வாங்கி ஒரு விஷயத்தைச் செய்ய முடியாது. இந்த ஃபேக் நியூஸால உலகம் முழுசும் பிரபலமாயிட்டேன்னு நினைச்சுக்கறேன்’னு சொல்லிருக்காங்க மார்வா.”

“அடப்பாவிகளா, இப்படியெல்லாமா போலிச் செய்திகளைப் போடுவாங்க...''

மீண்டும் மூவரும் இன்னொரு கிளாஸ் ஜூஸ் குடிக்க ஆரம்பித்தனர்.

“இராக்ல நிறைய கண்ணிவெடிகள் புதைஞ்சு கிடக்கு. பஸ்ரா மாகாணத்துல உள்ள கண்ணிவெடிகளைச் செயலிழக்க வைக்கிறதுக்கு 14 பேர் கொண்ட ஒரு டீம் அமைக்கப்பட்டிருக்கு. இவங்க அத்தனை பேரும் பெண்கள்ங்கிறதுதான் ஸ்பெஷல். கவச உடைகள், ஹெல்மெட் எல்லாம் மாட்டிக்கிட்டு, மெட்டல் டிடெக்டர் வச்சு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிச்சு செயலிழக்க வைக்கிறாங்க. `ஒவ்வொரு கண்ணிவெடியைத் தொடும்போதும் கொஞ்சம் பயமாதான் இருக்கும். ஆனா, நம்ம நிலத்தையும் எதிர்கால மக்களையும் நினைச்சுக்கிட்டு இந்த வேலையைச் செய்வேன். எத்தனை பேர் இந்தக் கண்ணிவெடிகளால உயிரிழந்திருக்காங்க... கைகால்களை இழந்திருக்காங்க... இதை இனியும் நிலத்தில் அனுமதிக்கக் கூடாதுங்கறதுக்காக நாங்க பயிற்சி எடுத்துக்கிட்டு இந்த வேலையைச் செய்யறோம்’னு சொல்றாங்க அந்த டீம்ல ஒருத்தரான ஹிண்ட் அலி.”

``கிரேட்! பெண்கள்தான் நிலத்தைக் காக்க றாங்க. சுற்றுச்சூழலையும் காக்கறாங்க!” என்று உணர்ச்சிவசப்பட்ட வித்யா தொடர்ந்தார்.

“பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேல் அநியாயமா ஜெயில்ல வச்சிருக்கு. டலால் அல்-ஜாபினின் கணவரும் ஜெயில்ல இருக்கார். அவர் ரிலீஸாகி வரும்போது டலாலுக்கு வயசாகிடும். அதுக்கப்புறம் குழந்தை பெத்துக்க முடியாது. அதனால ஜெயில்ல கணவரைப் பார்க்கப்போனபோது அவரின் விந்தணுவை வாங்கிட்டு வந்துட்டாங்க.

12 மணி நேரத்துக்குள்ள அதை டலால் உடலில் செலுத்திட்டாங்க. ஐவிஎஃப் முறையால இப்போ டலாலுக்கு அழகான ரெண்டு மகன்கள் இருக்காங்க. டலாலைப் போலவே இன்னும் பல பெண்கள் கணவர்கிட்டருந்து விந்தணுவை எடுத்துட்டு வந்து குழந்தை பெத்திருக்காங்க. இப்படி 96 குழந்தைகள் பிறந்து, வளர்ந்துட்டு வர்றாங்க!”

 சாமியா சுலுஹு ஹஸன்ங்
சாமியா சுலுஹு ஹஸன்ங்

‘‘அமெரிக்காவுல கடந்த 2020-ம் வருஷம் மே மாசத்துல போலீஸ்காரங்க கண்மூடித்தனமா தாக்குனதுல ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்டுங்கறவர் இறந்து போனார். உலகத்தையே அதிர வெச்ச இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணமே... டெரிக் சாவின் அப்படிங்கற போலீஸ் ஆபீஸர்தான். இவர் மீதான கொலை கேஸ் விசாரணை நடந்துட்டிருக்கிற அமெரிக்க கோர்ட்டுக்கு வெளியில தன்னைத் தானே சங்கிலியால் பிணைச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டாங்க கையா ஹிர்ட் அப்படிங்கற பெண். டீச்ச ராவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் இருக்கிறாங்க ஹிர்ட். `கறுப்பு, பழுப்பு ஸ்கின் கலர் உள்ளதெல்லாம் துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் படைக்கப்பட்டவை அல்ல. வெள்ளை அல்லாத நிறங்களைக் குற்றவாளிகளா பார்க்கும் பார்வை எவ்வளவு மோசமானது... இனி ஓர் உயிர்கூட போகக் கூடாது. அந்த அளவுக்கு டெரிக் சாவினுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும். அதுக்காகத்தான் ரெண்டு நாளா இப்படிப் போராடிட்டு இருக்கேன்’னு சொல்றாங்க ஹிர்ட்” என்று தானும் கோபத்துடனேயே சொன்னாள் வினு.

“இந்த இனப் பாகுபாடு எல்லாம் எந்தக் காலத்துல ஒழியுமோ தெரியலை. தான்சானியால சாமியா சுலுஹு ஹஸன்ங்கிற 61 வயசு பெண் அதிபரா ஆகியிருக்காங்க. இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் சாமியாதான். ஆப்பிரிக்காலயே இந்தப் பதவிக்கு வந்த மூணாவது பெண்ணும் இவங்கதான். பதவிக்கு வந்தவுடனே, தடை செய்யப்பட்டிருந்த மீடியாக்களுக்கு மறுபடியும் இயங்க அனுமதி கொடுத்திருக்காங்க. கொரோனா பிரச்னையில அதிக கவனம் செலுத்தப் போறதா சொல்லிருக்காங்க. தான்சானியால மாற்றத் தைக் கொண்டு வருவாங்களா சாமியான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்” என்ற விமல், கடிகாரத்தைப் பார்த்தாள்.

“நேரமாயிருச்சா விமல்... ஆப்பிரிக்காவில் தலைமைப் பொறுப்புக்கு வரும் பெண்கள் ரொம்ப குறைவா இருக்காங்கன்னு சொல்றோம். நம்ம இந்தியாவுல உச்ச நீதிமன்றத் துல கடந்த 70 வருஷங்கள்ல எட்டு பெண் நீதிபதிகள்தாம் நியமிக்கப்பட்டிருக்காங்க. இதைச் சுட்டிக்காட்டி, பெண்களுக்கு உரிய பகிர்வு வேணும்னு உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் மனு போட்டிருக்காங்க. இவங்கள மாதிரி எந்தெந்தத் துறையில பெண்களுக்கு உரிய பங்கு மறுக்கப்படுதோ அங்கெல்லாம் குரல் கொடுக்க எல்லோரும் தயாரா இருக்கணும். அப்போதான் விடிவு வரும். வித்யாக்கா, நானும் விமலும் கிளம்பறோம். மாக்டெய்ல் ஜூஸுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று எழுந்தாள் வினு.

வித்யாவுக்கு பை சொல்லிவிட்டு விமலும் கிளம்பினாள்.

(அரட்டை அடிப்போம்!)