பிரீமியம் ஸ்டோரி
வித்யா, சற்று பதற்றத்தோடு வினுவையும் விமலையும் வீடியோ காலில் அழைத்தார்.

“ஹாய் வித்யாக்கா, என்ன முகமே சரியில்லை...” என்று கேட்டாள் விமல்.

“எங்க ஃப்ளாட்ல கொரோனா வந்துருச்சு விமல். எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.”

“நீங்கதான் வீட்டைவிட்டு எங்கேயும் போகலையே, அப்புறம் எப்படி வரும்... பயப்படாதீங்க வித்யாக்கா” என்று ஆறுதல் கூறினாள் வினு.

“நாலு நாளைக்கு முன்பு பேங்க் வரைக்கும் போயிட்டு வந்தேன். அதான் யோசனையா இருக்கு வினு.”

“கொரோனா எல்லோருக்கும் வந்துட்டுதான் போகும்போல... அதனால் பயப்படாதீங்க. கவனமா இருப்போம். அதையும் மீறி தொற்று வந்தா, சிகிச்சை எடுத்து சரி பண்ணிக்கலாம். என் தோழி வீட்டில் ஆறு பேர். அதில் ஒருத்தருக்குத்தான் கொரோனா பாசிட்டிவ். அதனால அவரை வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக்கச் சொல்லிட்டாங்க. ரொம்ப சீக்கிரமே குணமாகிட்டார். பெரும்பாலானவர்கள் லேசான பாதிப்பில்தான் இருக்காங்க. நம்பிக்கைதான் முக்கியம் வித்யாக்கா” என்றாள் விமல்.

வினு விமல் வித்யா: அறுபதிலும் எடை குறைத்த கேத்ரின்

“நீங்க சொல்றதும் சரிதான். இனி கொரோனாவைக் கண்டு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இன்னும் கவனமா இருந்துகணும்... அவ்வளவுதான்” என்றார் வித்யா.

“டாபிக்கை மாத்துவோம். போன வருஷம் ஆடித் தள்ளுபடி ஷாப்பிங் செய்தது நினைவிருக்கா... அரை நாள் முழுக்க ஜாலியா சுத்தினோம். இன்னிக்கு வீட்டைவிட்டு வெளியே வர முடியலை” என்றாள் வினு.

“ஓ... இப்ப எல்லாம் பழசை நினைச்சுப் பார்க்கறது தான் என்னோட வேலையா இருக்கு. அது ஒரு பொற்காலம்!”

“பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்து போராடி வரும் 17 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க் போர்ச்சுக்கல் நாட்டின் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றிருக்கிறார். இதற்காக இவருக்கு இந்திய மதிப்பில் 8.6 கோடி ரூபாய் பரிசு கிடைச்சிருக்கு. ‘இந்தத் தொகை முழுவதையும் என்னுடைய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மற்றும் சுற்றுச்சூழலுக்காகப் போராடும் அமைப்புகளுக்கு வழங்கப் போறேன்’னு அறிவிச்சிருக்கார் அந்தச் சிறுமி” என்றாள் விமல்.

“இந்தச் சின்ன வயசுலயே எவ்வளவு போர்க்குணம்... கிரேட்!”

“வித்யாக்காவும் விமலும் வீட்டுக்குள்ளே இருந்தாலும் உடற்பயிற்சி செய்யறீங்களா?”

“வீட்டில் இருக்கோம்னுதான் பேரு. எங்கே நேரம் கிடைக்குது?” என்று அலுத்துக்கொண்டார் வித்யா.

“நான் வீட்டுக்குள்ளேயே நடக்கறேன் வினு.”

 கேத்ரின் மெத்பி
கேத்ரின் மெத்பி

“இனிமேல் நீங்க ரெண்டு பேரும் கேத்ரின் மெத்பி மாதிரி பாட்டு கேட்டுட்டே உடற்பயிற்சி செய்யலாம். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கேத்ரின், 150 கிலோ எடையுடன் இருந்தார். உடலை அசைக்கக்கூட முடியாது. ஒருநாள் ரேடியோவில் ஒரு பாட்டைக் கேட்டார். தன்னையறியாமல் உடலை அசைத்தார். உடனே உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்க முடிவெடுத்தார். அதுக்கு நல்ல பலன். 63 வயசுல எடை குறைஞ்சு, கட்டுசிட்டா மாறினதோட... உடற்பயிற்சியாளராவும் புது அவதாரம் எடுத்திருக்கார். போற இடத்துலயெல்லாம் பாட்டோடு கூடிய உடற்பயிற்சியைக் கத்துத் தர ஆரம்பிச்சிருக்கார்.தென்னாப்பிரிக்காவைத் தாண்டி, உலகம் முழுக்க இதைக்கொண்டு செல்லணும்கிறதுதான் தன்னோட நோக்கம் என்கிறார் கேத்ரின். யாராவது அவர் வீடியோவைப் பார்த்தீங்களா?” என்று கேட்டாள் வினு.

“இல்ல வினு. இனிமேல்தான் பார்க்கணும். எனக்கு மிகவும் பிடித்த கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை, திரைப்படமா வந்திருக்கு. சகுந்தலாவாக வித்யா பாலன் நடிச்சிருக்கார். லண்டனைச் சேர்ந்த அனு மேனன் இயக்கியிருக்கார். மூணு வயசுலேயே சகுந்தலாவின் கணிதத் திறமை வெளிப்பட்டிருக்கு. எட்டு வயசுக்குள்ள பல்கலைக்கழகத்தில் திறமையை நிரூபிச்ச சகுந்தலா, லண்டன் போயிட்டார் 1950-வது வருஷம் பிபிசி நடத்தின நிகழ்ச்சியில் சகுந்தலாவுக்கும் கம்ப்யூட்டருக்கும் போட்டி. சகுந்தலாதான் சரியான விடையைக் கொடுத்திருந்தார். அதனால்தான் `மனித கம்ப்யூட்டர்’ங்கற பேரும் அவருக்குக் கிடைச்சுது. சகுந்தலாவின் மகள் அனுபமா பானர்ஜி இந்தத் திரைப்படத்துக்குத் தேவையான பல தகவல்களைக் கொடுத்து உதவி யிருக்கார்” என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தாள் விமல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பயோபிக்னாலே சுவாரஸ்யமா இருக்கும். `நடிகையர் திலகம்’ சாவித்திரி பயோபிக் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சகுந்தலாவையும் பார்க்கணும். இப்படி நிறைய பயோபிக் வந்தா நல்லா இருக்கும்” என்றார் வித்யா.

“நீங்க சொல்றது கரெக்ட் வித்யாக்கா. விமான சாகசக்காரர் அமெலியா எர்ஹாட் டோட பயோபிக் வரப் போகுது. அதுக்காக ஆவலோட காத்திட்டிருக்கேன்.”

 கேத்ரின் மெத்பி
கேத்ரின் மெத்பி

“ஆனா, உலகம் எப்படி முன்னேறிட்டிருந் தாலும் பெண்கள் பத்தின வெறுப்புக் கருத்துகளை வெளிப்படுத்துற வக்கிர கூட்டம் தன்னோட வேலையை வேக வேகமா செய்துட்டேதான் இருக்குது. ஃபேஸ்புக்கைத் திறந்தாலே இப்படியான செய்திகள்தான் கண்ணில்படுது. அதனால நான் அந்தப் பக்கம் போறதை நிறுத்திட்டேன்” என்றார் வித்யா.

“நாகரிகத்தோட உச்சத்தில் இருக்கறதா பேசப்படுற அமெரிக்காவுலயும் இதுதான் நிலைமை. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஒகாசியோ கோர்டஸ். இவரை, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டெட் யோஹோ ரொம்ப மோசமா வெர்பல் அப்யூஸ் செய்தார். செய்தியாளர்கள் மற்றும் கட்சி உயர் பொறுப்பாளர்களுக்கு கண்முன்னாடியே நடந்த இந்தச் செயலுக்கு கண்டனம் கிளம்பியும், அந்த ஆண் மன்னிப்புக் கேட்கல.’’

‘`பிறகு...’’

‘`மோசமான வார்த்தைகளால அவமானப் படுத்தின அந்த நபர்மீது உருக்கமான வார்த்தைகளால போரே தொடுத்துட்டார் ஒகாசியோ. அதுக்கு செம வரவேற்பு. ‘பெண்களைப் பற்றிய வெறுப்பு கருத்துகளைப் பரப்பவது ஒரு கலாசாரமாகவே இருக்கிறது. ஒரு மனைவியின் கணவராகவும் இரண்டு பெண்களின் தகப்பனாகவும் யோசிக்காமல், தன்னுடைய மகளைவிடச் சின்னவளான என்னை அந்த மோசமான வார்த்தையால் அழைத்துவிட்டார் அவர். எந்த ஒரு நாகரிகமான மனிதரும் இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார். என் அப்பா உயிருடன் இல்லாததால் இதை யெல்லாம் கேட்கவில்லை. என் அம்மா தொலைக்காட்சியில் பார்த்து எவ்வளவு துயருற்றார் என்பதைச் சொல்ல முடியாது. ஒரு பெண்ணை வார்த்தை வன்முறை செய்யலாம் என்ற எண்ணம் எப்படி வருகிறது... காதில் கேட்க முடியாத வார்த்தைகளைப் பேசிவிட்டு, சாக்குபோக்கு சொல்லித் தப்பித்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களைப் பற்றிய வெறுப்புக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றே நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்’ என்று நிதானமாகக் கூறினார் 30 வயது ஒகாசியோ. அவரைக் கட்டிப்பிடித்து பூச்செண்டு கொடுக்க லாம் போல் இருந்தது” என்றாள் வினு.

“பெண்கள் பற்றிய பார்வையில் அடிப்படை யிலேயே குறைபாடு இருக்கறதுங்கறதுக்கு உலக உதாரணம்தான் இது வினு. சரி, சுஷாந்த் சிங் ஃபேனான நீ, ‘தில் பெச்சாரா’ பார்த்துட்டியா...” என்று கேட்டாள் விமல்.

“ரிலீஸான அன்னிக்கே பார்த்துட்டேன் விமல். ஃபீல் குட் மூவி. புற்றுநோயால் பாதிக்கப் பட்ட இருவர், தங்கள் கடைசிக்காலத்தில் காதலிக்கிறார்கள். ஒவ்வொரு நொடியையும் ரசனையுடன் கடக்கிறார்கள். நாயகன் இறந்து போகிறார். நாயகிக்கு நம்பிக்கையோடு மிச்ச வாழ்க்கையை வாழ கடிதம் எழுதி வைத்திருக்கிறார். சுஷாந்தும் சஞ்சனா சங்கியும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தின் வெற்றியைப் பார்க்க சுஷாந்த்தான் இல்லை” என்று வருத்தப்பட்டாள் வினு.

“என்ன பண்றது, ரொம்ப ஃபீல் பண்ணாதே வினு. சரி, நம்ம அரட்டையை முடிச்சுக்க லாமா.... எனக்கு ஒரு ஜூம் மீட்டிங் இருக்கு” என்றார் வித்யா.

வினுவும் விமலும் பை சொல்லி, இணைப்பைத் துண்டித்தனர்.

(அரட்டை அடிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு