தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: 87 மணி நேரத்தில் உலகம் சுற்றலாம்!

உலகம் சுற்றலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் சுற்றலாம்

#Lifestyle

சஹானா

ழை என்பதால் வினு வீட்டுக்கு, வித்யாவும் விமலும் வந்தார்கள். “புரெவி புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காதுன்னு சொன்னாங்க. கொட்டித் தீர்க்குது மழை. உங்களுக்காக நானே வெங்காய பக்கோடாவும் ஜிஞ்சர் டீயும் ரெடி பண்ணினேன்” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றாள் வினு.

“அடடா... வினுவின் கைமணத்தைப் பார்க்கற வாய்ப்பைக் கொடுத்த புரெவிக்கு தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு, பக்கோடாவை எடுத்து வாயில் போட்டார் வித்யா.

“மாதவிடாய் காலத்துல யூஸ் பண்ற பொருள் களை இலவசமா கொடுக்கறதா ஸ்காட்லாந்து அரசு அறிவிச்சிருக்கு, கேள்விப்பட்டீங்களா?” என்று பேச்சை ஆரம்பித்தாள் விமல்.

“அடடா... எவ்வளவு நல்ல நியூஸ்! எல்லாப் பெண்களுக்கும் இந்தச் சலுகை உண்டா?”

“ஆமாம், வித்யாக்கா. 2018-ம் வருஷத்து லேருந்து ஸ்கூல், காலேஜ் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களைக் கொடுத்துட்டு இருக்கு. ஸ்காட்லாந்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் பொருள்களை வாங்கக்கூடிய சூழல் இல்லை. மாதவிடாய்க் காலத்து வறுமையைப் போக்குறதுக்காகப் பல அமைப்புகள் போராடினாங்க. இப்போ மாதவிடாய்ப் பொருள்களை இலவசமா வழங்கும் சட்டத்தையே கொண்டுவந்துட்டாங்க. இதன் மூலம் உலகத்துலேயே மாதவிடாய்ப் பொருள்களை இலவசமா கொடுக்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து என்ற பெருமை கிடைச்சிருக்கு. பெண்களோட சுகாதாரமும் பாலினச் சமத்துவமும் இதன் மூலம் மேம்படும்னு எதிர்பார்க்கலாம்!”

வினு விமல் வித்யா: 87 மணி நேரத்தில் உலகம் சுற்றலாம்!

“நம்மூரிலும் அரசுப் பள்ளிகள்ல பெண் குழந்தைகளுக்கு இலவச நாப்கின் வழங்கற திட்டம் இருக்கு. ஆனா, அதைச் சரியா செய்றதில்லை. அதிலும் ஊழல் நடக்குது. அதேபோல பெண்களுக்கும்கூட நாப்கின் வழங்குற திட்டம் இருக்கிறதா நினைக்கிறேன் வித்யாக்கா. ஸ்காட்லாந்துக்குப் பெருமை கிடைச்சிருக்கிற நேரத்துல, பிரிட்டன் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கு. பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைகளை பிரிட்டன் மருத்துவமனைகள்ல செய்யுறாங்க. சைக்கிள் ஓட்டினாலும் உடற்பயிற்சி செய்தாலும்கூட ஹைமன் சவ்வு கிழிஞ்சிட வாய்ப்பு இருக்கு. அப்படியிருக்கும்போது சவ்வைச் சரி செய்யுறதா சொல்லி ஹைமன் அறுவை சிகிச்சைகளும் நடத்தப்படுது. இப்படிக் கன்னித்தன்மையைப் பரிசோதிக் கிறது ஐநாவின் கருத்துப்படி மனித உரிமை மீறல். இந்தப் பரிசோதனையால கன்னித் தன்மையைத் தெரிஞ்சுக்க முடியாது. ஹைமன் கிழிஞ்சிருந்தா கன்னித்தன்மை கிடையாதுங்கிறதும் பொய்யான கருத்து. அதைச் சரிசெய்ய முயல்வது அதைவிடத் தப்பானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள். ஆனால், 20 நாடுகள்ல கன்னித்தன்மை பரி சோதனைகள் நடக்கறதாக ஐநா சொல்லுது...” வருத்தமாகச் சொன்னாள் வினு.

“அடப்பாவிகளா, ஐரோப்பிய நாடுகள் லேயே இப்படிக் கிளம்பிட்டாங்களே… என்னத்தைச் சொல்ல… அது சரி,

பிபிசியின் 100 பெண்கள் பட்டியல்ல சென்னையைச் சேர்ந்த கானா குயின் இசைவாணி இடம் பிடிச்சிருக்காங்க தெரியுமா...

பொதுவா, கானாவை ஆண்கள்தான் பாடுவாங்க. இவங்க கானா பாடுறதோடு, மத்த பெண்களுக்கும் கத்துக் கொடுக்குறாங்க!” - தகவல் சொன்னாள் வினு.

“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுல இருக்காங்களே அவங்கதானே? அரசியல், சாதி, பெண்கள் பிரச்னைனு எல்லாத்தையும் கானாவில் கொண்டு வந்துடுவாங்க. இசைவாணிக்கு வாழ்த்துகள் சொல்லிடலாம்!” என்றாள் விமல்.

“இன்னொரு சென்னை பெண்ணுக்கும் வாழ்த்து சொல்லிடுவோம். சென்னையில பிறந்து, மும்பையில வளர்ந்து, அமெரிக்கா வுல வசிக்கிறாங்க ப்ரியதர்ஷினி. இந்த வருஷம் இவங்க எழுதி, இசையமைச்ச Periphery மியூசிக் ஆல்பம், அமெரிக்காவின் கிராமி விருது நாமினேஷனுக்குப் போயிருக்கு. 36 வயசு ப்ரியதர்ஷினிக்கு, 2007-ம் வருஷம் ஹிமாலயன் அல்ட்ரா மாரத்தான்ல கலந்துகிட்ட முதல் இந்தியர்ங்கிற சிறப்பும் இருக்கு. நடிக்கவும் செய்றாங்க” என்றாள் வினு.

“வாவ்... நம்ம கேர்ள்ஸ் எல்லாம் கலக்கறாங்க! பிபிசி நூறு பெண்கள் லிஸ்ட்ல இருக்கிற ஷாகின்பாக் வீராங்கனை பில்கிஸ் பானு, இப்போ விவசாயிகள் போராட்டத்ததுலயும் கலந்துகிட்டாங்க. அவங்களை கைது செஞ்சு, தடுப்புக் காவல்ல வச்சிட்டாங்க. 82 வயசிலயும் டெல்லி குளிர்ல கம்பீரமா கிளம்பிடறாங்க இந்தப் பாட்டி! நமக்கே அவங்களைப் பார்க்கிறப்ப உத்வேகம் வருது. அவங்க கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேத்தணும்” என்ற வித்யா, டீயைப் பருக ஆரம்பித்தார்.

“விமல், நாம டூர் போய் எத்தனை மாசமாச்சு… இந்த கொரோனா எப்ப முடியும், நாம எப்ப டூர் போவோம்?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் வினு.

“அதெல்லாம் இப்போதைக்குப் போக முடியாது வினு. `80 நாட்களில் உலகப் பயணம்’னு ஜூல்ஸ் வெர்ன் நாவல் எழுதினாங்க. 72 நாள்கள்ல உலகத்தைச் சுத்தி வந்தாங்க நெல்லி ப்ளை. இப்போ அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த டாக்டர் காவ்லா அல் ரொமைதி எவ்வளவு நேரத்துக்குள் உலகத்தைச் சுத்தி வந்திருப்பாங்கனு நினைக்கிறீங்க?” என்று புதிர் போட்டாள் விமல்.

“ஐம்பது நாள்லயா?”

“87 மணி நேரத்துல 208 நாடுகளைச் சுத்தி வந்து, கின்னஸ்ல இடம்பிடிச்சிட்டாங்க. `ரொம்பக் கஷ்டனமான பயணம். பின்வாங்கிடலாமோனுகூட நினைச்சேன். கடைசியில வெற்றிகரமா பயணத்தை முடிச்சிட்டேன்’னு சொல்றாங்க காவ்லா!”

“நாமளும் இப்படி ஒரு உலகப் பயணம் போகணும். ஆனால், ஒவ்வொரு நாட்டையும் நிதானமா ரசிக்கணும். பயணம்னு சொன்னவுடனே நினைவுக்கு வருது. நாம எல்லாம் ஒண்ணா பார்த்தோமே ‘உயரே’ மலையாளப் படம், பார்வதிகூட அட்டகாசமா நடிச்சிருப்பாங்களே… அது இப்போ தென் கொரிய மொழியில வெளியிடப்படுது. இப்படி வெளியிடப்படும் முதல் மலையாளப்படம் `உயரே’தான். கொரியன் டிராமாக்களை நாம ரசிக்கிறோம். நம்ம படங்களை அவங்க ரசிக்கிறாங்க!” என்றாள் வினு.

“ஆசிட் அட்டாக் பத்திப் பேசின நல்ல படம். Kettyolaanu Ente Malakha படம் பார்த்தேன். மேரிடல் ரேப் பத்தி நாம பேசறதே இல்ல. 30 வயசுக்கு மேல கல்யாணம் பண்றார் ஸ்லீவச்சன். ஆனா, மனைவிகிட்ட பழக அவருக்குத் தயக்கமா இருக்கு. ராத்திரியில வீடு தங்கறதைத் தவிர்க்கிறார். மனைவி ரின்ஸிக்கு ஏமாற்றமா இருக்கு. அது ஸ்லீவச்சனுக்கும் தெரியுது. நண்பர்களின் அட்வைஸைக் கேட்டு, குடிச்சிட்டு வந்து, ரின்ஸியை பலாத்காரம் செய்துடறார். அதிர்ச்சியில் மயக்கமாகுற ரின்ஸியை ஹாஸ்பிடல்ல சேர்க்கிறாங்க. டாக்டர் ஸ்லீவச்சனைத் திட்டறார். கேஸ் போட்டா உள்ளே போயிடுவேன்னு சொல்றாங்க. வெறுக்கும் ரின்ஸி, கொஞ்சம் கொஞ்சமா கணவனைப் புரிஞ்சுக்கறாங்க. கடைசியில ரெண்டு பேரும் இனிமையா வாழ்க்கையை ஆரம்பிக்கிறாங்க. நீங்க ரெண்டு பேரும் பாருங்க” என்றார் வித்யா.

“ வித்யாக்கா நாங்க எப்பவோ பார்த்தாச்சு. ஆண்களின் பக்கம் இருக்கும் பிரச்னையையும் அழகா காட்டின படம்” என்றார்கள் விமலும் வினுவும்.

“சே… எனக்குதான் பல்பா! உங்க ஏரியாவல மரடோனாவுக்கு ஃப்ளெக்ஸ் எல்லாம் வெச்சிருக்காங்களே வினு!”

“ஆமாக்கா... மரடோனாவுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்காங்க... ஏழைக் குடும்பத்துலேருந்து வந்து, இன்டர்நேஷனல் பிளேயரா கொடிகட்டிப் பறந்திருக்கார். விளையாட்டுல அவரை மாதிரி இன்னொருத்தர் வர முடியாது. அதே நேரத்துல சர்ச்சைக்குரிய மனிதராவும் இருந்திருக்கார். போதைக்கு அடிமையானார். நிறைய ஹெல்த் பிராப்ளம் இருந்திருக்கு. பாவம், 60 வயசிலேயே இறந்துட்டார். இதையெல்லாம் மீறியும் மக்கள் மனசில் மரடோனா இருக்கார்னா, அதுக்கு அவருடைய விளையாட்டுதான் காரணம்” என்று மரடோனா புகழ்பாடினாள் வினு.

“ஓகே வினு, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள் விமல்.

“ஆமாம், நானும் கிளம்பறேன் வினு” என்றார் வித்யா.

வினு `பை' சொல்லவும் இருவரும் தங்கள் வண்டிகளைக் கிளப்பினார்கள்.

(அரட்டை அடிப்போம்!)