Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

- சஹானா

வினு விமல் வித்யா: பெண்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

- சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸுக்கு வரச் சொன்னார் வித்யா. வினுவும் விமலும் ஒன்றாக வந்தனர்.

“என்ன வித்யாக்கா, இந்த வருஷம்தான் கச்சேரி எல்லாம் இல்லையே... அப்புறம் எதுக்கு இங்கே வரச் சொன்னீங்க?” என்று கேட்டாள் விமல்.

“கச்சேரிதான் இல்ல, கேன்டீன் உண்டு. சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே” என்றார் வித்யா.

பீட்ரூட் தோசை, இட்லி தவா ஃப்ரை, பாலக் பூரி, வெற்றிலை பஜ்ஜி என்று ஆர்டர் கொடுத்துவிட்டு அரட்டையை ஆரம்பித்தனர்.

“இந்த வருஷம் டைம், நேச்சர் பத்திரிகை களின் சிறந்த மனிதர்கள் பட்டியல்ல பெண்கள் அதிகம் இடம்பிடிச்சிருக்காங்க...’’ - உற்சாகமாக ஆரம்பித்தாள் விமல்.

‘`டைம் மேகஸினோட சிறந்த மனிதர்கள் பட்டியல்ல, அமெரிக்க துணை ஜனாதிபதியா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கற கமலா ஹாரிஸ் இடம்பிடிச்சிருக்காங்க. முதன்முறையா இந்த வருஷம் சிறந்த குழந்தையையும் டைம் மேகஸின் தேர்ந்தெடுத்திருக்கு. கீதாஞ்சலி ராவ்னு 15 வயசு பொண்ணுக்குத்தான் இந்த கெளரவம் கிடைச்சிருக்கு” என்றாள் விமல்.

``ஓ... இந்தியக் குழந்தையா!” என்றார் வித்யா.

“இந்திய வம்சாவளிக் குழந்தை. பிறந்து, வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவுலதான். இவங்க ஒரு விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தற காரீயம் தண்ணில கலந்திருக்கிறதைக் கண்டுபிடிக்கும் கருவியை இவங்க உருவாக்கியிருக்காங்க. சுற்றுச்சூழலுக்காக ஏற்கெனவே அமெரிக்க அதிபரின் விருது வாங்கியிருக்காங்க கீதாஞ்சலி. தன்னைப் போல உலக அளவுல இருக்கும் இளம் விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கிற திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில இப்போ இறங்கியிருக்காங்க!” என்று தானும் இணைந்துகொண்டாள் வினு.

“சூப்பர்... சரி, நேச்சர் மேகஸின் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கு, வினு?” - வித்யா கேட்டார்.

“நேச்சர் சயின்ஸ் மேகஸின் வெளியிட்ட சிறந்த 10 அறிவியலாளர்கள்ல ஆறு பேர் பெண்கள். கொரோனாவை அறிவியல் முறைப்படி சிறப்பா கையாண்ட நியூஸிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆடர்ன். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை, கலப்பு இனக் கொசுக்கள் மூலம் அடக்கும் தொழில் நுட்பத்தை முன்னெடுத்த அதி உதரினி. கொரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கும் அமெரிக்க ஃபைசர் நிறுவன ஆய்வுத் தலைவர் கேத்ரின் ஜான் சென். கரும்பொருள் ஆய்வில் ஈடுபட்ட சந்தா பிரெஸ்காட் வெயின்ஸ்டைன். சீனாவில் கொரோனா பரவ ஆரம்பிச்சதும் பொது முடக்கத்தை அறிவிச்சு, பாதிப்பைக் குறைச்ச லீ லிஞ்சுவான். ஆர்க்டிக் மிஷன் பயணத்தின் தலைமை லாஜிஸ்டிக்ஸ் அதிகாரி வெரெனா மொஹாப்த்னு ஆறு பேருக்கும் இந்தச் சிறப்பு கிடைச்சிருக்கு, வித்யாக்கா.”

``அடடா! ரொம்ப சந்தோ ஷமா இருக்கு. பெண்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! சரி, ஸூ செங்க்யூ பத்தி தெரியுமா... இப்ப சீனாவே அவங்களைப் பத்திதான் பேசிக்கிட்டிருக்கு. உலக அளவுல இவங்க பிரபலமா யிட்டு வர்றாங்க. சாங்கே-5 என்ற விண்கலத்தை சீனா நிலவுக்கு அனுப்பியிருந்தது. இப்போ நிலவில் மண் மாதிரியை எடுத்துக்கிட்டுத் திரும்பியிருக்கு சாங்கே-5. அந்த விண்கலத்தோட ராக்கெட் கனெக்டர் சிஸ்டம் என்ற முக்கியமான பணியில இருந்தவங்கதான் ஸூ செங்க்யூ. 24 வயசுலேயே இந்தப் புகழை எட்டுறது சாதாரண விஷயமில்லை” என்றாள் விமல்.

“கொரோனா இங்கே குறையற மாதிரி தெரிஞ்சது. ஐஐடியில் எத்தனை பேருக்கு வந்திருச்சு பார்த்தீங்களா? தடுப்பூசி எப்போ வரும்னு தெரியல. கொரோனா எப்ப போகும்னே தெரியல” என்றார் வித்யா.

வினு விமல் வித்யா: பெண்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

``அமெரிக்கால மாடர்னா மருந்து கம்பெனி கொரோனாவுக்குத் தடுப்பூசியை உருவாக்கியிருக்கு. ஆப்பிரிக்க அமெரிக்கர் களுக்கு இந்தத் தடுப்பூசி மேல நம்பிக்கை இல்ல. அமெரிக்க அரசு பாதுகாப்பானதுன்னு தொடர்ந்து சொல்லியும் 14 சதவிகிதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தான் தடுப்பூசி போட்டுக்கத் தயாரா இருக்காங்க. இந்தத் தடுப்பூசியை முன்னின்று உருவாக்கினவங்க

34 வயசு டாக்டர் கிஸ்மெகியா கார்பெட். இவங்க ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். இவங்களை வெச்சு மக்களுக்கு நம்பிக்கையூட்டற முயற்சியில அரசு இறங்கியிருக்கு” என்ற வினு, பீட்ரூட் தோசையைச் சாப்பிட ஆரம்பித்தாள்.

‘`உற்சாக சங்கதி சொல்லட்டுமா... சமீபத்துல புதுசா பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து, நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்துலதான்கிற பெருமை கிடைச்சிருக்கு. அதிகபட்சமா 13 பெண் நீதிபதிகள் இப்போ பொறுப்புல இருக்காங்க. இந்த நீதிமன்றத்துல ஐந்து நீதிபதிகள்ல ஒருத்தங்க பெண் நீதிபதி” என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன ஆர்டர் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள் விமல்.

`‘இன்னொரு சூப்பர் நியூஸ் கேள்விப் பட்டீங்களா... நம்ம நாட்டு ரஞ்சித் சிங் திசலே டீச்சருக்கு 2020-க்கான குளோபல் டீச்சர் அவார்டு கிடைச்சிருக்கு. மகாராஷ்டிராவுல பர்தேவாடி கிராமத்துல உள்ள ஸ்கூல்ல 2009-ம் வருஷம் வேலைக்குச் சேர்ந்தார் ரஞ்சித்.

கிஸ்மெகியா கார்பெட் , ரஞ்சித் சிங்
கிஸ்மெகியா கார்பெட் , ரஞ்சித் சிங்

கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள மகாராஷ் டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தோட தெற்குப் பகுதியில துளு, கொடவா மொழிகள்ல ஏதாவது ஒண்ணை தாய்மொழியா கொண்டவங்க அதிக அளவுல இருக்காங்க. அந்தப் பகுதி மக்கள் பேசுற உள்ளூர் மொழியில் பாடப் புத்தகங்கள் இல்லை. கன்னட பாடத்திட்டத்துக்கும் மகாராஷ்டிர மாநிலப் பாடத்திட்டத்துக்கும் வித்தியாசம் இருக்குறதால, கர்நாடக அரசோட பாட நூல்கள் இங்கு பயன்படுத்தப்படறதில்லை. அந்தக் குழந்தைகள் அவங்க மொழியிலேயே படிக்கறதுதானே நல்லது? அதனால பாடப் புத்தகங்களை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கார். க்யூஆர் கோடு மூலம் வீடியோக்களைக் காட்டி, அவங்க தேடலை அதிகப்படுத்தியிருக்கார். குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கார். நிறைய பெண் குழந்தைகளைப் படிக்க வச்சிருக்கார். இப்படி இன்னும் பல விஷயங்களைச் செஞ்ச ரஞ்சித் சிங்குக்கு

7.4 கோடி ரூபாய் பரிசா கிடைச்சிருக்கு. அதுல பாதிப் பணத்தைத் தன்னுடன் போட்டியில இருந்த ஒன்பது ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறதா சொல்லி, அசத்தியிருக்கார்!” என்ற வித்யா, காபி குடிக்க ஆரம்பித்தார்.

``கலக்கிட்டார் ரஞ்சித் சிங். `ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் பார்த்தீங்களா ரெண்டு பேரும்?” என்றாள் வினு.

“பார்த்தேன். காமெடி சீரிஸ். கிரேசி மோகன் டைப்ல ட்ரை பண்ணிருக்காங்க. ஜெய், வாணி போஜன் லீட் ரோல் பண்ணியிருக்காங்க. ஆனா, மொக்கையைக் குறைச்சு இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்னு தோணுச்சு!” என்றாள் விமல்.

“இதுதான் இந்த வருஷத்துக்கான கடைசி மீட். நீங்க ரெண்டு பேரும் நியூ இயர் ரெஸல்யூஷன் எடுத்துக்கற வழக்கம் உண்டா?” என்று கேட்டார் வித்யா.

“ரெஸல்யூஷன் எடுத்துக்கறதில்லைனு ரெஸல்யூஷன் எடுக்கப்போறோம்!’’ என்று சிரித்தாள் வினு.

“நல்ல ரெஸல்யூஷன்தான். சரி, கிளம்பு வோம்” என்று வித்யா சொல்ல, மூவரும் இருக்கைகளை விட்டு எழுந்து புறப்பட்டனர்.

(அரட்டை அடிப்போம்!)