Published:Updated:

வினு விமல் வித்யா: நம்ம வீட்டுப் பெண்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
வினு விமல் வித்யா

சஹானா

அதிசயமாக வீடியோ காலில் வித்யாவையும் வினுவையும் அழைத்தாள் விமல்.

“என்ன விமல், நீயே கூப்பிட்டிருக்கியே... ஏதாவது முக்கியமான விஷயமா...” என்று கேட்டார் வித்யா.

“சீனப் பெருஞ்சுவர் மாதிரி லாக் டெளன் நீண்டுகொண்டே போகும்போது எரிச்சலாக வருது. அதான் உங்க ரெண்டு பேர் கூடவும் பேசினால் கொஞ்சம் நல்லா இருக்கும்னு கூப்பிட்டேன். சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜகத்தால் இரண்டு உயிர்கள் போனதை நினைத்தால் ரொம்ப கோபமாக வருது. அரசும் அரசின் கீழ் இயங்கும் துறைகளும் மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தானே இருக்கின்றன. இப்படி காவு வாங்குவதற்கா இருக்கின்றன?” என்ற விமலின் குரலில் கோபம் தெறித்தது.

“உலகின் பல நாடுகளிலும் காவல்துறை இப்படித்தான் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கான போராட்டம் வலுப்பெற்றுக்கொண்டிருக்கும் போதே, அமெரிக்காவின் அட்லாண்டாவில் ரேஷர்ட் ப்ரூக் என்ற 32 வயது ஆப்பிரிக்க அமெரிக்கரைக் காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. அவருடைய இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்ட்டின் லூதர் கிங்கின் மகள் பெர்னிஸ் கிங், மிக உருக்கமான உரையை நிகழ்த்தினார். `ஐந்து வயதில் என் அப்பாவை இழந்தேன். தந்தை இல்லாமல் வளரும் ஒரு குழந்தையின் துயரம் எனக்குத் தெரியும். இனியும் இப்படி அநியாயமாக உயிர்களை இழக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் பெர்னிஸ் கிங்” என்றாள் வினு.

“ஆமாம் வினு, நானும் அந்த உரையைக் கேட்டேன். இந்த இனப்பாகுபாட்டுக்கு ஒரு முடிவே இல்லையா?” என்று ஆதங்கப்பட்டார் வித்யா.

லைனிகா ஸ்ட்ரோஸியர்
லைனிகா ஸ்ட்ரோஸியர்

“அதுக்கு அடிப்படையிலிருந்தே மாற்றத்தைக் கொண்டு வரணும். இன்றைய அமெரிக்கர்கள் பிரிட்டனிலிருந்து குடியேறியவர்கள். பூர்வகுடி அமெரிக்கர்களை ஒழித்துவிட்டு, தங்களை நிலைநாட்டிக்கொண்டவர்கள். இவர்களும் குடியேறிகள்தாம். இவர்கள் உருவாக்கியுள்ள கல்வித் திட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட குடியேறிகள் என்றும், அவர்கள் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 59 சதவிகிதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இனப்பாகு பாட்டால் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இதை 29 சதவிகிதம் அமெரிக்கர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு நாகரிக சமூகத்துக்கு இனம், நிறம், சாதி, மதம், மொழி போன்ற பாகுபாடுகள் அவமானமே என்பதை உணரும்போதுதான் இந்தப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும்” என்றாள் விமல்.

“கொரோனா யாரையும் விட்டு வைப்பதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லைனிகா ஸ்ட்ரோஸியர் விஞ்ஞானியாக இருந்தவர். தாவரங்களின் ஆரம்பகட்ட டிஎன்ஏவை ஆராய்ந்துகொண்டிருந்தார். கற்றல்குறைபாட்டால் அதிகம் பாதிக்கப் பட்டவர். மேலும் சில உடல்நல பாதிப்புகளும் இருந்திருக்கின்றன. எதைக் கண்டும் துவளாமல் தன்னை விஞ்ஞானியாக உயர்த்திக்கொண்டவர். அநியாயமாக கொரோனாவுக்குப் பலியாகிவிட்டார்” என்று வருத்தப்பட்டாள் வினு.

“கொரோனா வந்ததிலிருந்து நம் பேச்சு முழுவதும் வருத்தமான செய்திகளாகவே இருக்கிறது. சரி, கபெல்லா மலையாளப் படம் பார்த்தீங்களா ரெண்டு பேரும்... எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்” என்று வினு, விமல் பதிலுக்காகக் காத்திருந்தார் வித்யா.

வினு விமல் வித்யா: நம்ம வீட்டுப் பெண்!

“இன்னும் பார்க்கலை வித்யாக்கா. அன்னா பென் நடிச்சிருக்கார்னு தெரிஞ்ச உடனே பார்க்கணும்னு நினைச்சேன். ஹெலன், கும்பளங்கி நைட்ஸ் படங்களில் அவ்வளவு இயல்பாக நடிச்சிருப்பார்” என்றாள் விமல்.

“21 வயது அன்னா பென் நடிச்சு இதுவரை மூன்று படங்கள்தான் வந்திருக்கு. மூணுமே முக்கியமான படங்களா இருக்கு. அவர் நடிகை மாதிரியே இருக்க மாட்டார், நம் வீட்டுப் பெண் போல அவ்வளவு இயல்பாகவும் எளிமையாகவும் இருப்பார். படம் பற்றிச் சொல்லுங்க வித்யாக்கா’’ என்று வினு கேட்டவுடன் வித்யாவும் ஆர்வத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

“மலைக் கிராமத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜெஸி. ஒருமுறை தவறுதலாக ஆட்டோ டிரைவர் விஷ்ணுவுக்கு டயல் செய்துவிடுகிறார். அதற்கு மன்னிப்பும் கேட்டுவிடுகிறார். ஆனால், விஷ்ணு தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் விஷ்ணுவைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் ஜெஸி. ஸ்மார்ட்போன் இல்லாததால் ஒருவரை இன்னொருவர் பார்க்கும் வாய்ப்பில்லை. தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிற சூழலில் விஷ்ணுவைப் பார்க்கச் செல்கிறார் ஜெஸி. அங்கே விஷ்ணுவின் போன் தொலைந்து போகிறது. இருவரும் தொடர்புகொள்ள இயலாமல் தவிக்கிறார்கள். அந்த போன் ராய் கைக்கு வந்து சேர்கிறது. வேலை இல்லாமல், பார்ப்பவர்களிடம் எல்லாம் பணம் கேட்கும் ரவுடி போலிருக்கும் ராய், ஜெஸியின் அழைப்பை ஏற்கிறார். தான் இந்த நிற உடையில் இருப்பதாகச் சொல்லவும் அவளைத் தேடி வருகிறார். அப்போது விஷ்ணு அங்கு வந்து சேர, போனை ஒப்படைத்துவிட்டு நகர்கிறார். அன்று முழுவதும் ஜெஸி, விஷ்ணு ஜோடி செல்லும் இடங்களுக்குப் பின்தொடர்கிறார். விஷ்ணுவுக்கும் ராய்க்கும் கைகலப்பாகிறது. நல்லவராகத் தெரிந்த விஷ்ணுவும் ரவுடியாகத் தெரிந்த ராயும் எப்படிப்பட்டவர்கள் என்பதுதான் மீதிக் கதை. எளிய கதையை சிறப்பான திரைக்கதை மூலம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் முஹமது முஸ்தஃபா” என நிறுத்தினார் வித்யாக்கா.

“அவசியம் பார்க்கணும். மலையாளத்தில் சமகாலப் பிரச்னைகளை எல்லாம் அழகான திரைப்படங்களாக எடுத்துவிடுகிறார்கள். தமிழ்த் திரையுலகம் எப்போ அப்படி மாறுமோ தெரியவில்லை” என்றாள் விமல்.

பெர்னிஸ் கிங்
பெர்னிஸ் கிங்

“வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங் களைச் சந்தித்த வனிதா விஜயகுமார், 40 வயதில் மறுமணம் செய்திருக்கிறார். அதற்குப் பலரும் கிண்டலோடு கடுமையான கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். பெண் என்ற ஒரு காரணத்துக்காகவே அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?” என்று கேட்டாள் வினு.

“வனிதாவை மகள்கள் அழைத்து வந்த காட்சி அமர்க்களமாக இருந்தது. நம் சமூகம் மாறுவதற்கு இன்னும் காலம் ஆகும். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் வனிதாவுக்கும் சிறு பங்களிப்பு இருக்கிறது. சங்கரை இழந்த கெளசல்யா திருமணம் செய்தபோதும் அதிக அளவுக்குத் தாக்குதல்களைச் சந்தித்தார். சமூகத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்களுக்குப் பாராட்டுகள்” என்றாள் விமல்.

“சங்கர் கொலை வழக்கில் விடுதலை யானவர்களைப் பார்க்கும்போது நம் நம்பிக்கை கொஞ்சம் குறைகிறது. ஆனாலும், கெளசல்யா மேல்முறையீடு செய்து, நீதியைப் பெறப் போவதாகச் சொல்லியிருக்கார். பார்ப்போம்” என்றார் வித்யா.

“கொரோனா எப்போது நம்மைவிட்டுச் செல்லும்... மக்கள் எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்றே தெரியவில்லை. சரி வினு, விமல்... நான் கிளம்பறேன். அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்” என்று இணைப்பைத் துண்டித்தார் வித்யா.

வினுவும் விமலும் பை சொன்னார்கள்.

(அரட்டை அடிப்போம்!)