Published:Updated:

வினு விமல் வித்யா: அப்பாவும் மகளும் ஓர் அபூர்வ சந்திப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்பாவும் மகளும் ஓர் அபூர்வ சந்திப்பு
அப்பாவும் மகளும் ஓர் அபூர்வ சந்திப்பு

சஹானா

பிரீமியம் ஸ்டோரி

வித்யா, வீடியோ சாட்டுக்கு விமலையும் வினுவையும் அழைத்தார்.

“என்ன வித்யாக்கா, நீங்களே கூப்பிடிருக்கீங்க... ஏதாவது முக்கியமான விஷயமா...” என்று ஆச்சர்யப்பட்டாள் வினு.

“லாக் டெளனுக்கு மேல லாக் டெளன்னு போயிட்டிருக்கும்போது மனசு என்னவோ செய்யுது. அதான் உங்க ரெண்டு பேர் கூடவும் பேசிட்டிருக்கலாம்னு கூப்பிட்டேன் வினு...”

“கொரோனாவால யாருக்குத்தான் பிரச்னை இல்லை... நீங்க எப்ப வேணா எங்களைக் கூப்பிடலாம். யோசிக்கவே யோசிக்காதீங்க. மனிதர்கள் ஒரு வருக்கு ஒருவர் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கவேண்டிய காலகட்டம் இது” என்றாள் விமல்.

வினு விமல் வித்யா: அப்பாவும் மகளும் ஓர் அபூர்வ சந்திப்பு!

“தோனி படத்தை நான் எவ்வளவு முறை பார்த்திருப் பேன்னு உங்களுக்கே தெரியும். சுஷாந்த் சிங் ராஜ்புத் ரொம்ப நல்லா பண்ணிருப்பார். அறிவாளி. வானவியல் உட்பட பல துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ஏராளமான கனவுகளும் இருந்திருக்கு. இந்த மன அழுத்தம் அவர் உயிரையே பறித்துவிட்டது. ரொம்ப அதிர்ச்சியான மரணமாக இருந்தது” என்று வருத்தப்பட்டாள் வினு.

“பாவம், மொட்டு மலரும் முன்னே கருகிவிட்டது. எழுத்தைப் படித்துவிட்டு அந்த எழுத்தாளர்களை நாம் ரொம்ப உயர்வாக நினைப்போம். ஆனா, அவங்க எழுத்துக்கும் தனிப்பட்ட கருத்துக்கும் சம்பந்த மில்லாமல் பல எழுத்தாளர்கள் இருப்பாங்க. முன்னாடி சோஷியல் மீடியா கிடையாது. அதனால் தனிப்பட்ட கருத்துகள் அவ்வளவாக வெளியே தெரியாது. இப்போ பலரின் முகமூடி கிழிந்து தொங்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹாரிபாட்டர் புகழ் பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங், மாதவிடாய் வருபவர்கள்தான் பெண்களாக இருக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டார். மாற்றுப்பாலினத்தவர் மீது ரெளலிங்குக்கு இருக்கும் வெறுப்புதான் இப்படியொரு கருத்தை வெளியிட வைக்கிறது என்று பலரும் அவரை விமர்சித் தார்கள். இதற்கு ஹாரிபாட்டர் புகழ் டேனியல் ராட்க்ளிஃப், `திருநங்கைகளும் பெண்களே.

78 சதவிகித மாற்றுப்பாலினத் தவர் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்ற கருத்துகள் மேலும் அவர்களைத் துன்புறுத்தவே செய்யும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்” என்றாள் விமலா.

டேனியல் ராட்க்ளிஃப்
டேனியல் ராட்க்ளிஃப்

“டேனியல் ராட்க்ளிஃப்க்குப் பாராட்டுகள். ரெளலிங் கதைகளில் நடித்துப் புகழ்பெற்றாலும் அவரது தவறான கருத்தை மறுக்காமலோ கண்டுகொள்ளாமலோ இருக்கவில்லை. எதிர்க்கருத்தை முன்வைத்து தான் ஒரு நிஜ ஹீரோ என்று காட்டிவிட்டார்” என்று பெருமிதம்கொண்டாள் வினு.

“நீ ஒரு ராட்க்ளிஃப் ஃபேன் என்பது எங்களுக்குத் தெரியும். இனி உன்னைப் பிடிக்க முடியாதே” என்று சிரித்தார் வித்யா.

“நல்ல கருத்து யார் சொன்னாலும் வரவேற்பதில் இந்த வினு முதல் ஆளாக இருப்பாள்னு உங்களுக்கு எல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை” என்றாள் வினு.

“சிரியாவில் 1,30,000 ஆண்கள் அரசப் படைகளால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முஸ்தாஃபாவின் அப்பாவும் ஒருவர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் சென்ற அப்பா என்ன ஆனார் என்று இன்றுவரை தெரியவில்லை. அப்பா உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஜெர்மன் நீதிமன்ற வாயிலில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பெண்” என்று சற்று நிறுத்தினாள் விமல்.

“நானும் பார்த்தேன் விமல். அப்பாவின் போட்டோவை வைத்துக்கொண்டு அந்தப் பெண் அழும் காட்சி உலுக்கி விட்டது. கொரோனா காலத்தில் மருத்துவர்களையும் செவிலியர்களையும் கடவுளாக மதிப்பது ஒருபக்கம். இன்னொருபக்கம் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாமல், போதுமான ஊதியம் வழங்கப்படாமல் போராடவும் வைக்குது இந்தப் பொல்லாத உலகம். பிரான்சில் இப்படிப் போராடிய செவிலியர்களை ஒடுக்குகிறார்கள்” என்ற வித்யா யோசனையில் ஆழ்ந்தார்.

“ரொம்ப முரணான உலகம் இது. கென்யாவைச் சேர்ந்த ஜெமிமா முத்தோனி இளம் மருத்துவர். இந்த ஊரடங்கு கால கட்டத்தில் கர்ப்பிணிகளின் நலனைக் காக்கும் விதத்தில் நைரோபியில் உள்ள வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்கிறார்... பிரசவம் பார்க்கிறார். ஒரு நாளைக்கு 30 முதல் 40 அழைப்புகள் வருகின்றன. ஒருவர் மட்டுமே இவ்வளவு பேருக்கு மருத்துவம் செய்ய முடியாது. அதனால் `வீல் ஃபார் லைஃப்’ என்ற திட்டத்தை ஆரம்பித்து, பலர் துணையோடு கர்ப்பிணிகளுக்கான வாகன உதவிகளைச் செய்து வருகிறார். இது ரொம்ப முக்கியமான விஷயம்தானே?” என்று கேட்டாள் வினு.

அய்லா
அய்லா

“ஆமாம் வினு. கொரோனா காலத்தில் இப்படி மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது அதிகரித்து வருகிறது. `அய்லா: தி டாட்டர் ஆஃப் வார்' என்ற நிஜக்கதையை வைத்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தேன். ரொம்பவும் டச்சிங்காக இருந்தது. துருக்கியிலிருந்து தென்கொரியாவுக்குச் செல்லும் ராணுவ வீரர்களில் ஒருவர் சுலேமான். அங்கே சண்டையில் அழிந்துபோன ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டு அழைத்து வருகிறார்.

முகாமில் விடும்போது அந்தக் குழந்தை அழுத்தமாகச் சுலேமானைப் பிடித்துக் கொள்கிறது. மொழி தெரியாவிட்டாலும் துருக்கிய வீரர்களிடம் ஒட்டிக்கொள்ளும் குழந்தைக்கு அய்லா என்று பெயர் சூட்டுகிறார்கள். அய்லா துருக்கி மொழியைக் கற்றுக்கொள்கிறாள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கி வீரர்கள் நாடு திரும்புகிறார்கள். அய்லாவைத் தன்னுடன் கொண்டு செல்ல எவ்வளவோ போராடுகிறார் சுலேமான். முடியாமல் போகிறது.

ஜெமிமா முத்தோனி
ஜெமிமா முத்தோனி

கடைசியில் மனத்தைத் தேற்றிக்கொண்டு, ஓர் இல்லத்தில் அய்லாவை விட்டுப் பிரிகிறார். கண்ணீருடன் நிற்கும் அய்லாவிடம், `அப்பாக்கள் மகள்களுக்காக எதையும் செய்வார்கள். நிச்சயம் உன்னை அழைத்துச் செல்வேன்' என்கிறார். எவ்வளவு முயன்றும் அவரால் அய்லாவைப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீடியா மூலம் அய்லா, சுலேமான் சந்திப்பு நடைபெறுகிறது. 85 வயது சுலேமானும் 70 வயது அய்லாவும் பிரிந்தபோது எப்படி இருந்தார்களோ... அப்படியே காலம் உறைந்து போக, கட்டிப் பிடித்து அழுது தீர்க்கிறார்கள். அப்பாவுக்காக மகளும் மகளுக்காக அப்பாவும் பரிசு பொருட்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இது உண்மைச் சம்பவமும்கூட. நீங்க ரெண்டு பேரும் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கணும்” என்ற விமல், வேலை இருப்பதாகச் சொல்லி விடைபெற்றாள்.

“வித்யாக்கா, எப்ப வேணாலும் போன் பண்ணுங்க” என்று இணைப்பைத் துண்டித்தாள் வினு.

(அரட்டை அடிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு