லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வினு விமல் வித்யா: ஒரு தாயின் தவிப்பு

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
வினு விமல் வித்யா

சஹானா

வீடியோ சாட்டுக்கு வித்யாவையும் விமலையும் அழைத்தாள் வினு. “நம்ம எல்லாம் எப்போ நேரில் பார்க்கப் போறோமோ?” என்ற ஆதங்கத்துடன் பேச்சை ஆரம்பித்தாள்.

“சென்னையில் விலைவாசி மாதிரி தினமும் கொரோனா பாதிப்பு அதிகமாகிட்டே இருக்கு. இதில எப்படி நாம் சந்திக்கிறது வினு? இப்போதைக்குச் சந்திப்பு சாத்திய மில்லை. உனக்கு ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சிருக்குமே... எப்படிப் போகுது?” என்றார் வித்யா.

``நல்லாதான் போயிட்டிருக்கு வித்யாக்கா. ஆனா, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது ரொம்பவும் புதுசு. அதிலும் எத்தனை பேருக்கு ஆன்லைன் வகுப்புக்கான வசதி இருக்கும்... கேரளாவில் ஒரு மாணவி ஆன்லைன் வகுப்பைப் பயன்படுத்த வசதியில்லாமல் தற்கொலை செய்துகொண்டார். கொரோனாவில் மாணவர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க. பாவமா இருக்கு. என்ன விமல் எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க?”

“நம்ம வீடுகளில் வேலை செய்து கொண்டிருந்த உதவியாளர்களுக்குச் சம்பளத் தோடு லீவும் கொடுத்து அனுப்பியிருக்கோம். ஆனால், பெரும்பாலான வீட்டுவேலை பணியாளர்களுக்கு இப்போ வேலையும் இல்லை... சம்பளமும் இல்லை. லெபனான் நாட்டில் வீட்டுவேலை செய்யும் பெண்கள் பெரும்பாலும் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவர்கள். குறைந்த ஊதியத்துக்குக் கடினமாக வேலை செய்வார்கள். அவர்களுக்கு இப்போது வேலையில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. லெபனானில் வீட்டுவேலை செய்த முன்னாள் பணியாளர்கள் எல்லாம் ஒன்றுகூடி, நிதி திரட்டியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உணவுப் பொருள்களை அவர்கள் இடத்துக்கே சென்று வழங்கி வருகிறார்கள். கஷ்டத்தில் இருப்பவர்களுக்குதான் இன்னொருவரின் கஷ்டம் புரியும். அதனால்தான் இந்த உதவியைச் செய்து வருகிறார்கள்” என்று நிறுத்தினாள் விமல்.

வினு விமல் வித்யா: ஒரு தாயின் தவிப்பு

“கொரோனா காலகட்டத்தில் இல்லாதவர் களுக்கு இருப்பவர்கள் பகிர்ந்துகொடுத்துதான் ஆகணும் விமல். அமெரிக்காவில் கொரோனா வின் கோரத் தாண்டவத்தைவிட, நிற வெறியின் தாண்டவம் அதிகமாகியிருக்கு பார்த்தீங்களா... ஜார்ஜ் ஃப்ளையோடின் குரல் என் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. `மூச்சுவிட முடியவில்லை' என்று அவர் கதறுவதைக்கூட அந்த போலீஸ்காரர் கண்டுகொள்ளவே இல்லை. சாலையில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இப்படியெல்லாம் அநியாயம் நடக்குதே...’’ என்று கவலைப்பட்டார் வித்யா.

“நிறவெறிக்கு எதிராக எவ்வளவு போராட்டம் நடந்திருக்கிறது இந்த அமெரிக் காவில்... படிப்பு, வேலையில் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் போராடித்தான் அவர்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் குறைவான சம்பளத்துக்கு வேலை செய்யக்கூடியவர்களாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வருமானத்துக்கு ஆரோக்கியமான உணவுகூடச் சாப்பிட இயலாது. ஜார்ஜின் மரணம் இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம். ஆனா, இவ்வளவு நாள் அவர்கள் ஒடுக்கப்பட்ட வலிதான் இப்போது மிகப்பெரிய போராட்டமாக உருமாறுவதற்குக் காரணம் வித்யாக்கா...”

“ஆமாம் வினு. இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கர்களும் ஆதரவு தருகிறார்கள். அமெரிக்காவின் மியாமி போலீஸார்கூட அமைதியாகக் கண்ணீர் வடித்து மன்னிப்பு கேட்டார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ஒண்ணு கவனிச்சீங்களா, அமெரிக்காவில் நிறவெறி என்றால் நம் நாட்டில் சாதி வெறி. கொரோனா காலகட்டத்திலும் நிறம், இனம், சாதி வெறி உச்சத்தில் இருப்பது மனிதர்களுக்கு நல்லதல்ல” என்றாள் விமல்.

“ஆமாம், விமல். அமெரிக்கக் கால்பந்து அணிகளும் ஜார்ஜுக்கு ஆதரவான போராட்டத்தில் களமிறங்கியிருக்கின்றன. என் ஃபேவரைட் கிரிக்கெட் ப்ளேயர் கிறிஸ்ட் கெய்ல், `கால்பந்து அணியில் மட்டுமில்லை; கிரிக்கெட் அணியிலும் நிறப்பாகுபாடு நிலவுகிறது. என்னதான் நான் திறமையானவனாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஓர் ஆப்பிரிக்கன் என்பதால் நிறப்பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன். ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கை, மற்ற மக்களின் வாழ்க்கையைப் போல எளிதானதல்ல' என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்” என்ற வினுவின் குரல் கரகரத்தது.

“ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் ஐஎஸ்ஐஎஸ் பிரசவ மருத்துவமனைமீது தாக்குதல் நடத்தியதில் 14 கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள் கொல்லப்பட்டிருக்காங்க. `மருத்துவமனைகள், பள்ளிகளில் தாக்குதல்களை நடத்தக் கூடாது என்று போராடி வருகிறோம். எங்கள் குழந்தைகள் வன்முறையில் பிறந்து, வன்முறையில் மடிந்து போகிறார்கள். இதற்குத் தீர்வு வேண்டும்’ என்று ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்ணியவாதிகள் குரல் கொடுத்திருக் கிறார்கள்.

வினு விமல் வித்யா: ஒரு தாயின் தவிப்பு

சரி... விமலுக்கும் வித்யாக்காவுக்கும் `வி ஆர் ஒன் - எ க்ளோபல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' படங்களுக்கான யூடியூப் லிங்க் அனுப்பினேனே, பார்த்தீங்களா?”

“சாரிடா, நானும் பார்க்கலை. விமலும் பார்க்கலை. நல்ல படங்களை மிஸ் பண்ணிட்டோமோ...” என்று கேட்டார் வித்யா.

“ஆமாம்... நிறைய நல்ல படங்கள் இருந்தன.

2014-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரில் வசித்த 276 பள்ளி மாணவிகளை போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு கடத்திச் சென்றுவிட்டது. அவர்களில் சொற்பமானவர்கள் மட்டுமே பின்னர் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இப்படிப் பாதிக்கப்பட்ட ஒரு தாயின் தவிப்பை ஆவணப்படமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். நானும் எல்லாப் படங்களையும் பார்க்கலை. `பொன்மகள் வந்தாள்' பார்த்தீங்களா, யாராவது...”

“பார்த்தேன். குழந்தைகள் பாலியல் வன்முறை பற்றித் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப் படவில்லை. இதுபோன்ற படங்கள் அதிகம் வரணும். அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக் முதல் படத்திலேயே சீரியஸான கதையைத் தேர்ந் தெடுத்ததுக்குப் பாராட்டணும். ஜோதிகா சிறப்பாகச் செய்திருந்தார். நிகழ்காலப் பிரச்னைகள் எல்லாம் வசனத்தில் எதிரொலித்தது. ஆனா, டிராமா போன்ற கோர்ட் சீன்களைக் குறைத்து இன்னும் நேர்த்தியாகப் படத்தைக்கொண்டு வந்திருக்கலாம்னு எனக்குத் தோணுச்சு” என்ற வித்யா, கடிகாரத்தைப் பார்த்தார்.

”கடுமையான இந்த வெயில் காலத்தில் கொரோனாவுடன் மின்சாரக்கட்டணமும் மக்களை வதைக்குது. ஃபேன் போடாமல் இருக்க முடியறதில்லை. எல்லா விதங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டால் என்னதான் செய்ய முடியும்?” என்றாள் விமல்.

“இப்ப எல்லாம் நம்ம அரட்டை ரொம்ப சீரியஸாவே இருக்கு. கொரோனா முடிஞ்சு நாம பழைய சூழ்நிலையில் எப்போ வாழப் போறோம்னு தெரியலை விமல்” என்றாள் வினு.

``கொரோனாவுக்கு முன்பு உள்ள உலகம் இனி அப்படியே திரும்பக் கிடைக்குமான்னு தெரியலை வினு. உலகமே மாற்றத்தைச் சந்திச்சிட்டிருக்கு. சரி, வேலையிருக்கு. அடுத்த வாரம் மீட் பண்ணுவோம். கவனமா இருங்க. பை” என்று இணைப்பைத் துண்டித்தாள் விமல்.

(அரட்டை அடிப்போம்!)