Published:Updated:

வினு விமல் வித்யா: வெங்காய பக்கோடா செய்தால் பணக்காரிதானே!

 Force Majeure - நீலம் சிங் - ஜெஸிண்டா
பிரீமியம் ஸ்டோரி
News
Force Majeure - நீலம் சிங் - ஜெஸிண்டா

சஹானா

விமல் வீட்டு பால்கனியில் வித்யாவும் வினுவும் அமர்ந் திருந்தார்கள். சூடான லெமன் டீ, வெங்காய பக்கோடாவுடன் வந்து சேர்ந்துகொண்டாள் விமல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“என்ன விமல், பணக்காரியாயிட்டே போல!” என்று சொல்லிக்கொண்டே வெங்காய பக்கோடாவை கையில் எடுத்தாள் வினு.

“என்ன சொல்றே, வினு?”

“வெங்காய பக்கோடா செய்தால் பணக்காரிதானே, வித்யாக்கா” என்று கடித்தாள் வினு.

“இங்கே எல்லாமே விலையேறிட்டுதான் இருக்கு... என்ன பண்றது... நான் நியூசிலாந்து போயிடலாமான்னு யோசிக்கிறேன். அங்கே நடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கு. ஜெஸிண்டா ஆடர்ன் ரெண்டாவது முறையா பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்காங்க!”

“ஆமாம், விமல். சிறந்த நிர்வாகத் திறன், தொழிலாளர், பெண்கள் நலன் குறித்த அக்கறை, கொரோனாவைக் கட்டுப்படுத்தியதுன்னு ஜெஸிண்டாவுக்கு நியூசிலாந்து தாண்டியும் புகழ் பரவியிருக்கு” என்றார் வித்யா.

“அதுமட்டுமல்ல வித்யாக்கா, ஜெஸிண்டா கட்சியில் ஜெயிச்சவங்கள்ல 50 சதவிகிதம் பேர் பெண்கள்தான். இதில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண், ஆப்பிரிக்கப் பெண், மாற்றுப் பாலினத்தவரும் உண்டு. இப்படியொரு பிரதிநிதித்துவம் இருக்குறது ஆரோக்கியமான விஷயம்தானே வினு...”

“ஆமாம், வித்யாக்கா. இலங்கைத் தமிழ்ப் பெண் வனுஷி வால்டர்ஸ், சட்ட வல்லுநராகவும் மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும் இருந்தவங்க. போர் காரணமாகச் சின்ன வயசுலேயே இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்குப் போயிட்டாங்க. இப்போ அந்த நாட்டின்

எம்.பி-யாகவும் ஆகியிருக்காங்க!” என்ற வினு லெமன் டீயை உறிஞ்சினாள்.

“இன்னொரு எலெக்‌ஷன் நியூஸும் சொல்லிடறேன்... பொலிவியாவில் இடதுசாரி அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்க ஆதரவு ராணுவம் செயல்பட்டு வந்தது. போன வருஷம் பாட்ரிஷியா அர்ஸ் என்ற இடதுசாரி மேயரை, ராணுவம் தெருவில் அடிச்சது. அவங்க மேல சாயங்களை ஊற்றியது. தலைமுடியை வெட்டியது. தரதரன்னு இழுத்துட்டுப் போனது. இந்த வருஷம் அந்தப் பெண்ணே செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்க. பொலிவியாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்காங்க” என்று நிறுத்தினாள் விமல்.

``கிரேட்... அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிப்பது நல்ல விஷயம். கொரோனா நிலவரம் எப்படி இருக்கு வித்யாக்கா?”

``பாதிக்கப்பட்டவங்க எண்ணிக்கை குறைவதா வரும் டேட்டா நம்பிக்கையளிக்குது வினு. ஆனால், நான் யார்கிட்ட பேசினாலும் கொரோனான்னு சொல்லிட்டே இருக்காங்க. அதான் பயமா இருக்கு. மும்பையில் அரசுப் பள்ளிப் பேருந்துகளை கோவிட் ஆம்புலன்ஸா யூஸ் பண்றாங்க. நீலம் சிங்னு 55 வயசுப் பெண், ஸ்கூல் பஸ் டிரைவரா இருந்தாங்க. திடீர்னு இவருக்கும் கொரோனா பாதிப்பு வந்தது. இவங்க மூலம் இவங்க அம்மாவுக்கும் கணவருக்கும் கொரோனா தொற்றிடுச்சு. மூணு பேரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கிட்டாங்க. உடம்பு சரியானதும் வேலைக்குத் திரும்பிட்டாங்க. கொரோனா நோயாளிகளும் அவங்க குடும்பமும் வாழ்த்தும்போது ரொம்ப நிறைவாவும் இந்த வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருப்பதாவும் உணர்கிறேன்னு சொல்றாங்க நீலம் சிங்!”

 Force Majeure - நீலம் சிங் - ஜெஸிண்டா
Force Majeure - நீலம் சிங் - ஜெஸிண்டா

“நீலம் சிங்குக்கு என் அன்பு. இங்கே தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, தரையில் அமர்ந்திருந்த காட்சி இன்னும் என்னை என்னவோ செய்யுது விமல். எத்தனையோ தலைவர்கள் சாதி ஒழிப்பில் ஈடுபட்டாலும் தமிழகம் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் இந்தச் சாதி உணர்வை மட்டும் சாய்க்க முடியலைங்கிறது எவ்வளவு வேதனையான விஷயம்... இந்தப் பிரச்னைக்குக் காரணமானவங்க மேல நடவடிக்கை எடுத்தாலும், மனங்களில் மாற்றம் வராத வரை தீர்வு கிடையாது. அமெரிக்காவில் முதன்முறையா தேர்தலில் வெற்றிபெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஷிர்லி சிஷ்ஹோல்ம் சொன்னதுதான் நினைவுக்கு வருது. `சேர் கொடுக்கலைன்னா ஃபோல்டிங் சேரைக் கொண்டு போகணும்’னு சொல்லியிருக்காங்க. ராஜேஸ்வரியும் அடிபணியாம இந்த விஷயத்தை முதல்லேயே வெளியே சொல்லி யிருக்கலாம். இந்த மாதிரியான அநீதிகளைக் கண்டு பொறுத்துப் போக வேண்டியதில்லை. சகிச்சுக்கிட்டா சாதி வெறியர்கள் திருந்த வாய்ப்பே இருக்காது” என்ற வித்யாவின் குரலில் விரக்தி தெரிந்தது.

“வித்யாக்கா, போன முறை மீட் பண்ணினப்ப தனிஷ்க் விளம்பரம் நல்லா இருந்ததா சொன்னீங்களே, இப்போ அந்த விளம்பரத்தை மாத்திட்டாங்க.”

“அந்தச் சம்பவம் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது வினு. நம்ம நாட்டுல கருத்தைக் கருத்தால் சமாளிக்கிற பக்குவம் இல்லாமப் போயிட்டிருக்கு.”

“வித்யாக்கா, ஒரு மாதவன் ரசிகரா அவரோட லேட்டஸ்ட் படத்தைப் பார்த்தீங்கன்னா வருத்தப்படுவீங்க. அப்புறம் உங்க இஷ்டம்” என்று சிரித்தாள் வினு.

“அப்படியா வினு... நீ பார்த்துட்டியா?”

“நான் பார்க்கலை. ஆனா, நான் `Force Majeure'னு ஒரு ஸ்வீடிஷ் மூவி பார்த்தேன். தலைப்புக்கு `டூரிஸ்ட்'னு அர்த்தம். தொழிலதிபர் தாமஸ் தன் மனைவி எபா, குழந்தைங்களோடு விடுமுறையை அனுபவிக்க ஆல்ப்ஸ் மலைக்குப் போறார். பனிமலைகள்ல விதவிதமான பனிச்சறுக்கு விளையாட்டுகளை விளையாடி மகிழறாங்க. ஒருநாள் காலையில சாப்பிட்டுக்கிட்டிருந்தபோது, பக்கத்துல இருந்த மலையிலேருந்து பனிப்புகை உருவாகி ராட்சசத்தனமா புயல் போல வருது. பலரும் அதிர்ச்சியில ஓடுறாங்க. அப்போ தாமஸும் ஓடுறார். பனிப்புகை அடங்கினதும் மனைவியையும் குழந்தைகளையும் தேடி வர்றார். அவங்க அதே இடத்துல பத்திரமாக இருக்காங்க. நிம்மதியாகிறார். ஆனா, அந்த நிம்மதி சில நிமிஷம்கூட நீடிக்கலை. `ஆபத்துன்னா, எங்களை விட்டுட்டு நீ மட்டும் எப்படி ஓடலாம்'னு கேட்கிறாங்க எபா. இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத தாமஸ், தான் வீடியோ எடுத்துக்கிட்டிருந்ததாகவும் அவங்களைவிட்டு ஓடலைன்னும் சொல்றார். `என்னையறியாமல் ஓடிட்டேன்'னு தாமஸ் சொல்லியிருந்தா, எபா விட்டிருப்பாங்க. தாமஸோ தப்பு செய்துட்டு, அதை மறைக்கிறாரேன்னு எபா வருத்தப்படறாங்க. அந்த நொடியில் ரெண்டு பேருக்கும் இடையில விரிசல் ஏற்படுது. அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சிடுவாங்களோனு குழந்தைங்க பயப்படுறாங்க. தாமஸும் வருத்தப்படறார். கடைசியில மன்னிப்பு கேட்கிறார். உளவியல் ரீதியா இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கு. நல்லா இருந்தது” என்று நீண்ட விளக்கம் கொடுத்த வினு தண்ணீர் குடித்தாள்.

``வித்தியாசமான படமா இருக்கு வினு. ஆமாம்... அரசுப் பள்ளியில் படிச்சு, இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள்ல நீட் தேர்வில் முதலிடம் வாங்கியிருக்கார் ஜீவித் குமார். ரொம்பப் பெரிய விஷயம், இல்லையா விமல்...” என்று கேட்டார் வித்யா.

“ஆமாம் வித்யாக்கா. அவர் தனியார் பயிற்சி மையத்துல சேர்ந்து பயிற்சி எடுத்திருக்கார். கடினமா உழைச்சிருக்கார். அதேநேரம் இவரோட வெற்றிக்குப் பின்னாடி, பல பேர் நிக்கிறாங்க. அவர் படிச்ச பள்ளிக்கூடத்தோட ஆசிரியர்கள் பக்கபலமா இருந்திருக்காங்க. நீட் எதிர்ப்புக்காக ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா, நிதி திரட்டிக் கொடுத்து பயிற்சி பள்ளியில சேர துணை நின்னிருக்காங்க” என்று விமல் சொல்ல...

“ஓ... அரசுப் பள்ளியில படிச்ச ஒரு மாணவர், நீட் தேர்வுல ஜெயிச்சதுக்குப் பின்னால இத்தனை பேரோட உழைப்பும் உதவியும் இருந்திருக்கு” என்று பெருமூச்சுவிட்டாள் வினு.

 பாட்ரிஷியா
பாட்ரிஷியா

“ஆனா, ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா, 160 வாங்கினாகூட பாஸ் என்ற கணக்கில் சேர்த்துக்கறாங்க. ஆனா, 450 மார்க்குக்கு மேல வாங்கினாதான் நல்ல அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். மத்தவங்க தனியார் மருத்துவக் கல்லூரியில சேரணும். ஃபீஸ் கட்டணும். அதனால் நீட்டில் பாஸ் ஆகிறவங்க எல்லாருக்கும் இடம் கிடைக்கிறதில்லைங்கிறது வேதனையான விஷயம் இல்லையா வித்யாக்கா...” என்று வருத்தத்தோடு சொன்னாள் விமல்.

“நீ சொல்றதும் சரி விமல். இதுக்கெல்லாம் எப்போ ஒரு விடிவு வருமோ... வினு, கிளம்ப லாமா...” என்று எழுந்தார் வித்யா.

வினுவும் வித்யாவும் விமலிடம் விடைபெற்று, புறப்பட்டார்கள்.

(அரட்டை அடிப்போம்!)