Published:Updated:

வினு விமல் வித்யா: அம்மா மகளாக மாறும் கதை!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

சஹானா

வினு விமல் வித்யா: அம்மா மகளாக மாறும் கதை!

சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பூங்கா குளிர்ச்சியாகக் காணப்பட்டது.வித்யாவும் விமலும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்வீட் பாக்ஸுடன் வந்தாள் வினு.

“என்ன விசேஷம் வினு? உன்னோட க்ரஷ்கிட்ட பேசிட்டியா?” என்று குறும்பாகக் கேட்டாள் விமல்.

“க்ரஷ்கிட்ட எல்லாம் நெருங்கக் கூடாது விமல். நெருங்கினா க்ரஷே போயிரும். வர்ற வழியில் ஒரு புது ஸ்வீட் ஸ்டால் திறந்திருந்தாங்க. உங்களை எக்ஸ்பரிமென்ட் எலியா நினைச்சு வாங்கிட்டு வந்தேன்” என்று சிரித்துக்கொண்டே நீட்டினாள் வினு.

“பல நாடுகள்ல நடந்து முடிஞ்ச எலெக்‌ஷன்ல பெண்களோட பங்கு அதிகரிச்சிருக்கிறதைக் கொண்டாடற மாதிரி இந்த ஸ்வீட்டை எடுத்துக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே பாதுஷாவைச் சுவைத்தாள் விமல்.

“ஆமாம் விமல். ஜெஸின்டாவைச் சொல்றியா?”

“ஜெஸின்டா ஜெயிச்சது பழைய நியூஸ் வித்யாக்கா. ஜெஸின்டா அமைச்சரவையில இடம்பிடிச்சிருக்கிற இந்தியப் பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன்தான் லேட்டஸ்ட் டாக். இவங்க கேரளாவைப் பூர்வீமாகக் கொண்டு, சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து, நியூஸிலாந்தில் செட்டில் ஆனவங்க. தொழிலாளர் கட்சியில் இருந்தாங்க. இப்போ ஜெஸின்டாவோட அமைச்சரவையில் இடம்பிடிச்சிருக்காங்க. நியூஸிலாந்தில் அமைச்சரா பொறுப்பேற்கும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவங்க பிரியங்காதான். ரொம்ப பெருமையா இருக்கு!” என்ற விமல் தண்ணீரைக் குடித்தாள்.

வினு விமல் வித்யா: அம்மா மகளாக மாறும் கதை!

“ஜெஸின்டா இன்னும் சில புதுமைகளையும் பண்ணிருக்காங்க. மாற்றுப் பாலினத்தவரை துணை பிரதமரா தேர்ந்தெடுத்திருக்காங்க. பழங்குடிப் பெண்ணுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்காங்க. இப்படிப் பல வழிகள்ல ஜெஸின்டா உலக மக்களின் கவனத்தையும் அன்பையும் ஈர்த்திருக்காங்க. இவங்களோட 20 அமைச்சர்கள்ல 8 பேர் பெண்கள். என்ன நினைக்கிறீங்க வித்யாக்கா?”என்றாள் வினு.

“கிரேட் வினு. அமெரிக்கத் தேர்தலிலும் இஸ்லாமியப் பெண், பழங்குடிப் பெண்கள், மாற்றுப் பாலினத்தவர் எல்லாம் ஜெயிச்சிருக்காங்க. சாரா மேக்ப்ரைட் ஜெயிச்சதால, அமெரிக்காவின் முதல் திருநங்கை எம்.பி-ங்கிற சாதனையும் படைச்சிருக்காங்க. அதுக்காக இன்னொரு ஸ்வீட் கொடு” என்று வாங்கிச் சாப்பிட்டார் வித்யா.

“பொலிவியால நடந்த எலெக்‌ஷன்ல 53 சதவிகிதப் பெண்கள் ஜெயிச்சு, இப்போ நாடாளுமன்றத்துக்குப் போயிருக்காங்க. அதிகமான பெண் எம்.பிக்களைக் கொண்ட மூணாவது நாடு பொலிவியாங்கிற பேரு கிடைச்சிருக்கு. மூன்றில் ரெண்டு பங்கு பெண் எம்.பிக்களுடன் ருவாண்டா முதல் இடத்தில் இருக்கு. 53.2 சதவிகிதப் பெண் எம்.பிக்களுடன் கியூபா ரெண்டாவது இடம் பிடிச்சிருக்கு. இது அரசியலில் ரொம்ப ஆரோக்கியமான விஷயம்” என்று பெருமிதத்துடன் சொன்னாள் விமல்.

“அரசியலில் மட்டுமில்ல விமல், பொம்மைகளிலும் இப்போ மாற்றம் வர ஆரம்பிச்சிருக்கு. பார்பி நிறுவனம் அந்தந்த நாட்டுப் பெண்களைப்போல பொம்மைகளை உருவாக்குச்சு. இப்போ இளம்பெண்களுக்கு ரோல்மாடலா இருக்கிறவங்கள பொம்மையா உருவாக்கிட்டு வருது. ஓவியர் ஃப்ரைடா காலோ, டென்னிஸ் ப்ளேயர் நவோமி ஒசாகா, பாக்ஸிங் சாம்பியன் நிகோலா ஆடம்ஸ் வரிசையில இப்ப இந்திய பாரா ஒலிம்பிக் சாம்பியனான மானசி ஜோஷி பொம்மையை உருவாக்கியிருக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருந்த மானசி, 2010-ம் வருஷம் விபத்தில ஒரு காலை இழந்தாங்க. பாட்மிண்டன் ப்ளேயரா மாறினாங்க. இன்னிக்கு அவங்க உருவத்துல உலகப் புகழ்பெற்ற பொம்மை வந்திருக்கு!

இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே... ஐக்கிய அரபு அமீரகத்துல முதல் முறையா 15 பெண் தீயணைப்பு வீராங்கனைகள் உருவாகியிருக்காங்க. மத்திய கிழக்கு நாடுகள்லேயே இவங்கதான் இந்த வேலையைச் செய்யும் முதல் பெண்கள்ங்கிறது சாதாரணமான விஷயம் இல்ல!” என்றார் வித்யா.

 சாரா மேக்ப்ரைட்
சாரா மேக்ப்ரைட்

“என்ன வித்யாக்கா, இன்னிக்கு ஒரே ஹேப்பி நியூஸா போயிட்டிருக்கு! இப்படிப் பேசி ரொம்ப நாள் ஆச்சு இல்ல! ஆனா, நான் ஒரு வருத்தமான நியூஸ் சொல்லப் போறேன். கொரோனா பெருந்தொற்றால உலகம் முழுக்க வருமானம் இல்லாம, பல பள்ளிகளை மூடிட்டு வர்றாங்க. கொரோனா காலம் முடிஞ்சு பள்ளிகளைத் திறக்கும்போது 1.1 கோடி பெண் குழந்தைங்க மறுபடியும் பள்ளிக்கூடம் வர மாட்டாங்கன்னு யுனிசெஃப் சொல்லுது. பயமா இருக்கு, வித்யாக்கா.''

“ஐயோ, கொடுமையா இருக்கே. நம்ம ஊரிலும் இப்போ பள்ளிக்கூடம் இல்லாததால, ஏழைப் பெற்றோர் குழந்தைகளையும் வேலைக்குக் கூட்டிட்டுப் போயிடறாங்க. அந்தக் குழந்தைகளை மறுபடியும் பள்ளிக்கு வரவைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்த கொரோனா எத்தனை பேர் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கு” என்றார் வித்யா.

“ஆமா. துருக்கியில ரொம்ப மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுருக்கு. கட்டிட இடிபாடுகள்ல சிக்கி 80 பேர் உயிரிழந்துட்டாங்க. 65 மணி நேரம் கழிச்சு 6 வயசு சிறுமியையும் 45 மணி நேரம் கழிச்சு 12 வயசு சிறுமியையும் மீட்பு படையினர் காப்பாத்தியிருக்காங்க. கொரோனா ஒருபக்கம், இப்படி இயற்கைப் பேரழிவுகள் ஒருபக்கம். மனுஷங்க என்னதான் செய்வாங்க?” - விமல் சொன்னதையடுத்து சிறிது நேரம் மூவரும் அமைதியாக இருந்தனர். மெளனத்தைக் கலைத்தார் வித்யா, “தீபாவளி நெருங்கிருச்சே, பர்ச்சேஸ் எல்லாம் ஓவரா?” என்று கேட்டார்.

“நானும் விமலும் பர்ச்சேஸ் பண்றதா இல்ல வித்யாக்கா. வொர்க் ஃப்ரம் ஹோம்ங்கிறதால, இருக்கிற டிரஸ்களையே போட முடியல. அதனால வாங்க வேணாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்றாள் வினு.

“நீங்க சொல்றதும் சரிதான். ஷாப்பிங் போறவங்களுக்குதான் கொரோனா அதிகம் வருதுன்னு சொல்றாங்க. சரி, என்ன படம் பார்த்தே வினு?”

“வித்யாக்கா நான் ரொம்ப டைட். ஒரு படமும் பார்க்கல. விமல் ஏதோ அவார்டு ஃப்லிம் பார்த்ததா சொன்னா...”

“தி ஹவுஸ் ஆஃப் சேன்ட்' - பிரேஸில் படம் பார்த்தேன் வித்யாக்கா. வாஸ்கோ தன் மனைவி அரியா, மாமியார் மரியாவோடு பிரேஸிலின் வட பகுதியில் உள்ள ஒரு பாலைவனத்துக்குக் கிளம்பறார். வயித்துல பிள்ளையைச் சுமந்துகிட்டு, பாலைவன மணலில் பல நாள்கள் நடந்து ஓரிடத்துக்கு வர்றாங்க. அங்கே விலங்கு, செடி, மரம் எதுவும் இல்ல. பொட்டல் வெளியா இருக்கு. அது தன்னோட சொந்த நிலங்கிறதால வாஸ்கோ அழைச்சிட்டு வந்திருக்கார். இங்கே எப்படிப் பிரசவம் பார்க்க முடியும்னு மரியா கேக்குறாங்க. வாஸ்கோ கண்டுக்கல. இவங்களோட வந்தவங்க நைட்ல பொருள்களையும் பணத்தையும் எடுத்துட்டு ஓடிடறாங்க. வாழவே வழியில்ல. வாஸ்கோ செத்துடறார்.

அம்மாவும் மகளும் எப்படியாவது அங்கேயிருந்து போகணும்னு நினைக்கிறாங்க. நகரத்துக்கும் அந்த இடத்துக்கும் ரொம்ப தூரம். யாரும் அந்தப் பக்கம் வர மாட்டாங்க. கொஞ்ச தூரத்துல ஒரு தீவுல பழங்குடி மக்கள் வசிக்கிறாங்க. அவங்க கடல்ல இருந்து கிடைக்கும் உணவைச் சாப்பிடச் சொல்றாங்க. கால்நடைகளை வளர்த்தா, எப்பவாவது யாராவது வந்து உடைகளைக் கொடுத்துட்டு கால்நடைகளை வாங்கிப்பாங்கன்னு சொல்றாங்க. மாசுங்கிற மீனவர் இவங்களுக்கு உதவறார். பெண் குழந்தை பிறந்து வளருது. அந்தக் குழந்தையின் பெயரும் மரியா.

எப்படியாவது அங்கிருந்து போகணும்னு அரியா முயற்சி செய்யறாங்க. பல முறை முயற்சி செஞ்சும் அரியாவால் போக முடியல. அம்மாவைப் போலவே மகள் மரியாவும் அங்கிருந்து எப்படியாவது போகணும்னு நினைக்கிறாங்க. 20 வருஷம் கழிச்சு ஆராய்ச்சியாளர் நண்பர் வர்றார். தன் மகளை நகரத்தில் விட்டுடச் சொல்றாங்க அரியா. மகள் மரியா மகிழ்ச்சியா கிளம்புறாங்க. பெண்களின் பிரச்னைகளை நுணுக்கமாப் பேசும் வித்தியாசமான படம் இது!”

“இந்தப் படத்துல அம்மாவே மகளாவும் வருவாங்களாமே விமல்?”- வினு கேட்டாள்.

“அதாவது வயசான கேரக்டர்களை ஒருத்தரே பலமுறை செய்திருக்காங்க. இளமையான கேரக்டர்களை ஒருத்தரே பலமுறை செய்திருக்காங்க. இதுல நடிச்ச அம்மாவும் பெண்ணும் நிஜமான அம்மா, மகள். அம்மாவுக்கு இப்போ 91 வயசு. மகளுக்கு 55 வயசு. படம் 5 வருஷம் முன்னால எடுத்திருக்காங்க. வித்தியாசமான படம்” என்று கடிகாரத்தைப் பார்த்தாள் விமல்.

“வித்யாக்கா, அடுத்த தடவை ஒரு புதிரோடு வர்றேன். நீங்க பட்சணத்தோடு வாங்க. இப்ப கிளம்பறேன்” என்று பை சொன்னாள் வினு.

தூறல் விழ ஆரம்பித்தது. வித்யாவும் விமலும் வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

(அரட்டை அடிப்போம்!)