Published:Updated:

வினு விமல் வித்யா: சொத்துக்குப் பதிலாக ஒரு சேலை, ஒரு வேளை சாப்பாடு!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

சஹானா

வினு விமல் வித்யா: சொத்துக்குப் பதிலாக ஒரு சேலை, ஒரு வேளை சாப்பாடு!

சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா
வித்யாவையும் விமலையும் வீடியோ காலில் அழைத்தாள் வினு.

“வினுவும் விமலும் எப்படியிருக்கீங்க? இந்தக் கொரோனா அவ்வளவு ஈஸியா போகாது போலிருக்கே... 100 நாள்களா நியூசிலாந்தில் ஒருவருக்குகூடத் தொற்று இல்லை. நியூசிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டன்கூட இந்த மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடணும்னு தோணுதுன்னார். இப்போ அங்கே மறுபடியும் பாதிப்பு ஆரம்பிச்சிருக்கு... நியூசிலாந்து மட்டுமல்ல, ஜெர்மனியிலும் தொற்று வேகமாகப் பரவிக்கிட்டிருக்கு. எனக்கு ரொம்பவே கவலையாயிருக்கு. ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து பல கோடி மக்கள் கஷ்டப்படுறாங்க. தமிழ்நாட்டில் தொற்று குறைஞ்சாலும் இறப்பு அதிகமாகிக்கிட்டே போகுது...” என்று வருத்தத்துடன் ஆரம்பித்தார் வித்யா.

“அக்கா, ரொம்ப கவலைப்படாதீங்க. ரஷ்யாவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டதா அதிபர் புதின் சொல்லியிருக்கார். அவர் மகளுக்கே பரிசோதனை செஞ்சு பார்த்திருக்காங்களாம். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிச்சா விற்பனைக்கு வந்துடும். அமெரிக்காவில் டெமாக்ரடிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், துணை ஜனாதிபதி வேட்பாளரா கமலா ஹாரீஸை அறிவிச்சிருக்கார். கமலாவின் அம்மா சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா ஜமைக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்” என்றாள் வினு.

“ஓ... அப்போ அமெரிக்கத் துணை ஜனாதிபதியாகும் முதல் தமிழர்னு சொல்லு வினு” என்றார் வித்யா.

வினு விமல் வித்யா: சொத்துக்குப் பதிலாக ஒரு சேலை, ஒரு வேளை சாப்பாடு!

“இல்லே வித்யாக்கா. கமலா தன்னை ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராகவே குறிப்பிடறார். அப்படித்தான் அவர் வளர்க்கப்பட்டிருக்கார்” என்றாள் வினு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கை இவர் மூலம் மேம்படும்னு நம்பலாமா?”

“இல்ல வித்யாக்கா. ஒருவர் ஜனாதிபதியாவே வந்தாகூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது கஷ்டம்தான். ஒபாமா இருமுறை ஜனாதிபதியா இருந்தார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குப் பெரிசா எதுவும் செய்ய முடியலையே. அப்படித்தான் கமலாவும். ஹார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் அதிபர் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துங்கிறதால, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஓட்டுகளைக் குறிவெச்சு, கமலா இறக்கப்பட்டிருக்கார்” என்றாள் விமலா.

“இந்தக் கொரோனா லாக்டௌனில் செலிபிரிட்டி ஆண்கள் எல்லாம் சமையல் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க வித்யாக்கா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தன் அம்மாவுக்கு மீன் வறுவல் செய்து அசத்தியிருக்கார். அவர் அம்மா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். மகனுக்கு அன்போடு ஊட்டிவிட்ட காட்சி க்ளாஸா இருந்துச்சு. நீங்க பார்த்தீங்களா?”

“இல்லை வினு. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் கிடங்கு வெடிச்சதில் 135 பேர் பலியானாங்க. 5,000-க்கும் மேற்பட்டவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. ரொம்ப கோரமான வெடி விபத்து. 240 கி.மீ தூரத்துக்குச் சத்தம் கேட்டதாகச் சொல்றாங்க. நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு” என்றார் வித்யா.

“ரொம்பத் துயரமான சம்பவம் அது. பெய்ரூட்னு நீங்க சொன்னதும் நினைவுக்கு வந்திருச்சு. `கபர்னம்’ (Capernum) என்ற லெபனான் சினிமா பார்த்தேன். இயக்குநரும் நடிகையுமான நடின் லபகி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய `வேர் டு வி கோ நவ்’ திரைப்படத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னாடி பார்த்தேன். மத ஒற்றுமையை வலியுறுத்தி எடுத்திருந்தார். அதைவிட கபர்னம் படம் என்னை உலுக்கிடுச்சு. ஸைன் என்ற 12 வயதுச் சிறுவனைச் சுற்றித்தான் படம். ஏழைகள் நிரம்பி வழியும் பெய்ரூட் சேரிப் பகுதியில் வாழறான். அவனுக்கு அடுத்து தம்பி, தங்கைகள் ஏழு பேர் இருக்காங்க. ஒரு அண்ணன் சிறையில் இருக்கான். அக்காவுக்குக் கல்யாணம் ஆயிருச்சு. குழந்தைகள் பீட்ரூட் ஜூஸ், நறுக்கிய பழங்கள் போன்றவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கிறாங்க. ஸைன் இந்த வியாபாரம் போக மத்த நேரத்தில் கடைகளில் சுத்தம் செய்யும் வேலையும் செய்றான்.

 அதிபர் புதின்
அதிபர் புதின்

அவனுக்குப் பெற்றோர் பொறுப்பில்லாமல் இருப்பது பிடிக்கலை. 11 வயதுத் தங்கை பூப்பெய்துகிறாள். விஷயம் தெரிஞ்சா பெற்றோர் உடனே அவளுக்குத் திருமணம் செய்து வெச்சிடுவாங்கன்னு பயப்படுகிறான். வீட்டில் சொல்ல வேண்டாம் என்று நாப்கின் வாங்கிக் கொடுக்கிறான். தங்கையை 26 வயது டையவருக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுக்கிறாங்க. தங்கையுடன் எங்காவது சென்றுவிடலாம் என்று முடிவெடுக்கிறான். ஆனால், முடியவில்லை.

விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறு கிறான். பல இடங்களில் வேலை கேட்டு அலையுறான். எத்தியோப்பியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ராஹிலின் வீட்டுக்கு வருகிறான். அவளின் ஒரு வயசுக் குழந்தையைக் கவனிச்சுக்கிறான். பர்மிட் இல்லாததால் ராஹில் சிறைக்குப் போறார். அவருடைய குழந்தையை வளர்க்கும் ஜைனுக்கு ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போயிடுது. குழந்தையை ஒருவரிடம் விட்டுட்டு, வீட்டுக்குத் திரும்புகிறான்.

அங்கே தங்கை இறந்த செய்திகேட்டு, அவள் கணவனைக் கத்தியால் குத்துகிறான். அதற்காக விசாரணை நடைபெறுகிறது. தன் பெற்றோர்மீது வழக்கு தொடுக்கணும் என்கிறான். அவர்கள் தங்களின் ஏழ்மையை எடுத்துச்சொல்லி, அவர்களின் நியாயத்தைச் சொல்றாங்க. ஸைனுக்கு அஞ்சு வருஷம் சிறைத்தண்டனை வழங்கப்படுது. எந்த ஆவணமும் இல்லாமல் இருக்கும் ஸைனை போட்டோ எடுக்கறாங்க. அவன் வாழ்க்கையில் முதன்முறையாக ஓர் அடையாள அட்டை கிடைக்குது.

நாலு நாளா அந்தப் படமும் அந்தச் சிறுவனும் தூங்கவிடலை. அவன் சிரியா விலிருந்து வந்த அகதி. அந்தப் படத்தில் நடித்த பிறகே, பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கான்” என்று நீண்ட உரையை நிகழ்த்தி முடித்தாள் விமல்.

“நானும் நடின் லபகி படங்களைப் பார்த்திருக்கேன். அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டரில் வருவார். இந்தப் படத்தில் ஸைனின் வக்கீலாக வருவார் இல்லையா?” என்றாள் வினு.

“கரெக்ட் வினு. நீ பார்த்துட்டீயா... வித்யாக்கா கண்டிப்பா பாருங்க. என்னைப் பொறுத்தவரை ஆஸ்கர் விருது வாங்கிய `பாராசைட்’ படத்தைவிட `கபர்னம்' நல்லா இருக்கு. ஏழைகள் வாய்ப்பு கிடைத்தால் ஒட்டுண்ணிகளாக எப்படி மாறுவாங்கன்னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியலை. ஏழ்மையிலும் உழைச்சு சம்பாதிக்க நினைக்கிற கபர்னம் சிறுவன் மனசைக் கொள்ளை கொள்கிறான்!”

“பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை இருக்கு என்பது ஏற்கெனவே சட்டமாகத்தானே இருந்தது. இப்போ மீண்டும் சட்டம் கொண்டு வந்திருக்காங்களே... ஒண்ணும் புரியலையே” என்றார் வித்யாக்கா.

“நீங்கள் சொல்ற மாதிரி 2005-ம் ஆண்டில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் வந்தது. ஆனால், அதில் 1989-ம் ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்திருந்தாலும் சொத்து பிரிக்கப்பட்டிருந்தாலும் உரிமை கோர முடியாது என்று இருந்தது. இப்போது அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, இந்து திருமணச் சட்டப்படி 2005-ம் ஆண்டுக்கு முன்பே தந்தை இறந்திருந்தாலும் ஆண் வாரிசைப் போலவே பெண் வாரிசுக்கும் சொத்தில் சம உரிமை உண்டுன்னு தீர்ப்பு கிடைச்சிருக்கு வித்யாக்கா.”

“ஓ... அப்படியா! நல்ல விஷயம். ஃபேஸ்புக்ல பலரும் இதுக்கு எதிரா கொதிச்சதைப் பார்த்தேன். என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும் எத்தனை பேர் பெண்களுக்குச் சொத்தில் பங்கு கொடுப்பாங்கனு தெரியலை. எனக்குத் தெரிஞ்சு ஒரு சேலையும் ஒரு வேளை சாப்பாடும் போட்டு, சொத்தில் உரிமை கேட்கக் கூடாதுன்னு சொன்ன அண்ணனுங்க எல்லாம் இருக்காங்க.”

“வித்யாக்கா, எனக்கு அசைன்மென்ட் இருக்கு. நான் கிளம்பட்டுமா?”

“எங்களுக்கும் வேலை இருக்கு. ஓகே பை” என்றார் வித்யா.

அடுத்த நொடி வினுவும் விமலும் இணைப்பைத் துண்டித்தார்கள்.

(அரட்டை அடிப்போம்!)