Published:Updated:

இல்லத்தரசிகளுக்குச் சம்பளம்... எதிர்க்கும் கங்கனா ரணாவத்... காரணம் என்ன?!

கார்த்தி
கமல் | கங்கனா ரணாவத்
கமல் | கங்கனா ரணாவத்

வரலாற்று நெடுகிலும் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் இப்படியான பெண்கள்தான் அவர்களுக்கு எதிராக காய்களை நகர்த்தி வந்துள்ளனர் என்பது திண்ணம்.

ஒரே வாரத்தில் கமல் பேசிய இரு விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு பற்றி அவர் பேசிய காணொளி, அதற்கு முட்டுக் கொடுத்து அவரே இட்ட ட்விட்... இவை எல்லாம் சர்ச்சையாகி, வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானார். இன்னொருபுறம், "பெண்கள் அரைகுறை துணி உடுத்துதல்தான் ஆண்களைக் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகிறது என்றால், கோயில்களில் இன்னும் குறைவாகவும், சமயங்களில் ஆடைகளே இல்லாமலும் தானே சிலைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து அத்தகைய ஆண்கள் என்ன செய்கிறார்கள்?" என முற்போக்காகவும் பேசியிருக்கிறார். இவற்றை விடவும், அதே கூட்டத்தில் கமல் பேசிய இன்னொரு விஷயமும் பேசுபொருள் ஆனது. அதுதான், இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் என்கிற புது கான்செப்ட்.

காங்கிரஸ் எம்பியான சஷி தரூர் இதை வரவேற்று ட்வீட் செய்திருந்தார். இல்லத்தரசிகளை சம்பளப் பணியாளர்களாக ஓர் அரசு அங்கீகரித்து அவர்களுக்கு அதற்கான ஊதியம் கொடுக்கும் பட்சத்தில், அவர்களின் ஆளுமைத் திறனும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையும் அதிகரிக்கும் என்றார். இதற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

"நாங்கள் காதலுடன் கொள்ளும் உடலுறவுக்கு, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் தாய்மைக்கு விலை பேசாதீர்கள். எங்கள் தேசத்தின் அரசிகள் நாங்கள். எங்களின் உழைப்பை விலை பேசாதீர்கள். எல்லாவற்றையும் தொழிலாகப் பார்ப்பதை நிறுத்துங்கள். குடும்பம் எனும் அமைப்பின் உரிமையாளரை வெறுமனே ஒரு வேலையாளாக மாற்றுவது தவறு. வாழ்நாள் முழுக்க அம்மா செய்யும் தியாகத்தை விலை பேசுவீர்களா? யோசித்துப் பார்த்தால், ஒரு பெண்ணுக்கு இது மன உளைச்சலையும், சிரிப்பையும் ஒருசேர வரவழைக்கும். திடீரென உங்களுக்குக் கடவுளின் மீது அனுதாபம் ஏற்பட்டது என்பதற்காக இந்த உலகைப் படைத்த கடவுளுக்கு விலை பேசுவீர்களா? தாயையும் மனைவியையும் வேலையாள் போல நடத்துபவர்களுக்குத் தேவை மனசாட்சி. அதைத்தான் தர்மம் போதிக்கிறது. தர்மம் இல்லாத வீட்டில்தான் முதியவர்களும் குழந்தைகளும் சுமையாகக் கருதப்படுவார்கள். வீட்டின் மகாலட்சுமி அடிமையாகக் கருதப்படுவாள்" எனக் காத்திரமாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

வரலாற்று நெடுகிலும் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் இப்படியான பெண்கள்தான் அவர்களுக்கு எதிராக காய்களையும் நகர்த்தி வந்துள்ளனர். அமெரிக்கப் பெண்கள் 1970-களில் சம உரிமைக்கான சட்டத் திருத்தத்திற்காக கடுமையாகப் போராடி வந்தனர். இந்த முறை எப்படியும் பெண்களுக்கான சம உரிமையை கொடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, ஆண்களால் சூழ்ந்திருந்த காங்கிரஸ். ஆணும் பெண்ணும் சமம் என்று வந்துவிட்டால், விவாகரத்தின் போது கிடைக்கும் பணம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள கிடைக்கும் முன்னுரிமை இவையெல்லாம் கேள்விக்குறியாகுமே? எப்படி ஆணும் பெண்ணும் சமமாக இருக்க முடியும்?

ஆண் வெளியே சென்று சம்பாதித்து வருகிறான். பெண் அந்தப் பணத்தை வைத்து வீட்டை நிர்வகிக்கிறார். வீட்டின் மகாராணி அவள். இருவரையும் ஒரே தட்டில் வைப்பது எவ்வளவு தவறு எனத் தீர்க்கமாய் நம்பினார் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஃபிலிஸ் ஷாஃப்ளி (Phyllis Schlafl). பெண்ணியவாதிகள், தன் பால் ஈர்ப்பாளர்கள் போன்றவர்களை வெறுக்கும் பெண்களும் ஃபிலிஸின் பக்கம் அணி சேர்கிறார்கள். இந்தச் சமயத்துக்காக காத்திருந்த ஆணாதிக்க வர்க்கமும் இதை ரசிக்க ஆரம்பிக்கிறது. 38 மாகாணங்களிலும் இந்தத் திருத்தத்தை வெற்றி பெறச் செய்தால் மட்டுமே, அமெரிக்கா முழுமைக்கும் இது செல்லுபடியாகும். ஃபிலிஸின் காய் நகர்த்தலால், அவர் இறக்கும் வரையில் (2016) அதை நடக்காது பார்த்துக்கொண்டார். இன்று வரையில் இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

Women
Women
Pixabay

சமீபத்தில்தான் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதையே இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிலைநாட்டியது. இன்னும் இந்தியாவில் marital rape குற்றமில்லை. இப்படியிருக்கும் சூழலில்தான் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தர வேண்டும் என்பதை ஓர் அம்சமாக ஒரு கட்சி முன்னெடுக்கிறது. அதற்கான திட்ட வரைவுகள் அக்கட்சியிடம் இருக்கின்றதா என்பது தனி. இதற்கான பணம், இவை உண்மையில் சாத்தியமா போன்ற கேள்விகள் எழலாம். ஆனால், முன்னெடுப்புகள் தொடங்கியிருக்கும்போதே இதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் கங்கனா ரணாவத்துகள் இறங்குகிறார்கள்.

எல்லாவற்றையும் புனிதப்படுத்தி தெய்வத்துடனும், தர்மத்துடனும் இணைத்துவிடுவதுதான் காலம் காலமாக நடக்கும் ஒடுக்குமுறையின் அரசியல். பெண்களைச் சமமாக பாவிக்க எந்த மத நூலும் முன்வந்ததில்லை. ஏன் சட்டங்களும்கூட பெண்களைச் சமமாகப் பாவிப்பதில்லை. ஆண்களுக்கான படிநிலைகள் முடிந்த பின்னர், அதன் கீழ்தான் பெண்களுக்கானப் படிநிலைகள் எப்போதும் தொடங்குகின்றன. உயர் வகுப்பின் கீழ்வரும் பெண்ணோ, தாழ்த்தப்பட்ட பெண் வகுப்பினரோ எல்லோரையும் ஓர் ஆணால், எளிதாக ஒழுக்கத்தின் பெயரால் சிறுமைப்படுத்திவிட முடியும். அவர்களின் முன்னேற்றங்களை ஒழுக்கத்தின் அளவீடுகளின் மூலம் ஏளனப்படுத்த முடியும். இப்படியாகத்தான் இந்தச் சமூகம் காலம் காலமாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஆதரவற்றோர் போன்றவற்றுக்கு ஓர் அரசு இன்று வரையிலும் உதவித் தொகை அளித்துவருகிறது. ஆனால், ஓயாமல் வீட்டை நிர்வகிக்கும் ஒரு பெண்ணுக்கு அவர் செய்வதற்கான வேலைக்கென ஏதேனும் அங்கீகாரம் இருக்குமா என்றால் இல்லை. உண்மையில் இவற்றை பெரும்பான்மை பெண்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். அதற்கான காரணமும், ஆண் அதிகாரவர்க்கம்தான். ஒரு பெண் வேலைக்குச் செல்லக்கூடாது; வேலைக்குச் சென்றால் திமிர் வந்துவிடும்; அவர்களுக்கு அன்பு இருக்காது என ஆரம்பித்து இப்படியான பல்வேறு பிற்போக்குத்தன கருத்துகளை மதகுருமார்கள் பேசுவதை நம்மால் இணையத்தில் காண இயலும்.

இப்படியான சூழலில்தான் பெண் வீட்டை நிர்வகிப்பது ஒழுக்கத்தின்கீழ் கொண்டு வரப்படுகிறது. அதற்கு அன்பு முலாம் பூசப்படுகிறது. ஒழுக்கத்தைப் பணத்தால் அளவீடு செய்வீர்களா, அன்புக்கு விலையா என்பதுதான் இவர்களின் எதிர்வாதமாக இருக்கும். கங்கனா ரணாவத் ட்வீட்டில் தெரியாத்தனமாய் ஓர் உண்மையை சொல்லியிருப்பார். ஒருவேளை அதிகப் பணம் கிடைக்கப்பெரும் பட்சத்தில் ஓர் அடிமைப்பெண் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்பது தான் அது. அது எப்படி கங்கனா ரணாவத் நல்ல சம்பளத்தில் வேலை செய்யலாம். அவரின் சகோதரி நல்ல சம்பளத்தில் வேலை செய்யலாம். ஆனால் வீட்டை நிர்வகிக்கும் ஒரு பெண்ணிடம் அதிகப் பணம் புழங்கும் போது, அவள் ஒழுக்கம் இழந்துவிடுவாள்? ஒருவேளை தர்மம் இதைத்தான் கற்பிக்கறதா என்பதை கங்கனாதான் சொல்ல வேண்டும்.

சரி, உண்மையில் இப்படியாக இவர்களுக்குப் பணம் கொடுக்க முடியுமா. அதற்கான சாத்தியங்கள் உள்ளதா? Universal basic Income தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. மங்கோலியாவும், ஈரானும் சில காலம் இதனை நடைமுறைப்படுத்திப் பார்த்தது. எந்தவித கட்டுப்பாடுமின்றி, தேசத்திலிருக்கும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்தப் பணம் தரப்படும். உலகம் அதன் சமூக நீதியின் கீழ் இயங்க இப்படியாக பணம் தருவதன் மூலம், அனைத்து படிநிலை மனிதர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

இப்படி பணம் கொடுப்பதால், பாதகமே இல்லையா என்றால், எல்லாவற்றிலும் பாதகம் இருப்பது போல் இதிலும் பாதகம் உண்டு. சிறிய தொகைக்கு வேலைக்குச் செல்லும் பெண்களை, இந்த சம்பளத்தை காரணமாகச் சொல்லி வீட்டுக்குளேயே சிறைப்படுத்தும் போக்குக்கு இது வழிவகுக்கும் சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. இதைப்பற்றித்தான் நாம் விவாதிக்க வேண்டுமே தவிர, தர்ம அதர்ம கோட்பாடுகளை அல்ல.
இல்லத்தரசிகள்
இல்லத்தரசிகள்

பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி என விவசாயிகளுக்கு நிதி கொடுக்க முடியும் ஒரு தேசத்தால், இல்லத்தரசிகளைக் கணக்கிட முடியாதா என்ன? நிச்சயம் முடியும். எப்படியும் இந்தப் பணத்தின் பெரும் பகுதி, மீண்டும் பண சுழற்சியில் கஜானாவுக்கு வந்துவிடும் என்பதை அனைவரும் அறிந்ததுதான். விவசாயத்தைப் புனிதப்படுத்தி புனிதப்படுத்தித்தான் தற்போது அவர்கள் எங்களை வாழவிடுங்கள் என டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

வீட்டை நிர்வகிக்கும் பெண்ணோ, ஆணோ (அவர்களும் இருக்கிறார்கள்) அவர்களுக்கென ஒரு தொகையை ஒதுக்குவதென்பது குறைந்தபட்ச அறம். அதை இன்னும் எத்தனை காலத்துக்கு அன்பென்ற அமிலத்தில் நனைத்து குளிர்காய போகிறீர்கள் கங்கனாக்களே?!
அடுத்த கட்டுரைக்கு