Published:Updated:

Fact Check: ஆசிரியர்களை சித்ரவதை செய்ததா `எண்ணும் எழுத்தும்' பயிற்சி? வாட்ஸ்ஆப் செய்தியும் உண்மையும்

Teacher (Representational Image)

''அம்பது, அறுபது டீச்சர்ஸை, வெயில் நேரத்தில் ஒரே ரூம்ல வெச்சு, காத்தோட்டமே இல்லாம.. அம்பது வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு முட்டி வலி இருக்கும். அவங்களை ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார வெச்சு.. ரொம்ப அவஸ்தைப்பட்டுட்டாங்க.''

Fact Check: ஆசிரியர்களை சித்ரவதை செய்ததா `எண்ணும் எழுத்தும்' பயிற்சி? வாட்ஸ்ஆப் செய்தியும் உண்மையும்

''அம்பது, அறுபது டீச்சர்ஸை, வெயில் நேரத்தில் ஒரே ரூம்ல வெச்சு, காத்தோட்டமே இல்லாம.. அம்பது வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு முட்டி வலி இருக்கும். அவங்களை ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார வெச்சு.. ரொம்ப அவஸ்தைப்பட்டுட்டாங்க.''

Published:Updated:
Teacher (Representational Image)

ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கற்றல் மற்றும் வாசித்தல் திறனை அதிகரிப்பதற்காக, தமிழக அரசு ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தை தொடங்கி இருப்பதும், அதற்கான 5 நாள் பயிற்சியை, ஆசிரியர்களுக்கு வழங்கியதும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களின் மனக்குமுறல் என்று கூறி, வாட்ஸ் அப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. அதில்...

''எனக்கு நேற்று நள்ளிரவு முதல் காய்ச்சல். இன்று போக வர தலா நாற்பத்து மூணு கிலோமீட்டர், நான்கு பேருந்தில் பயணம் செய்து 3 கிலோமீட்டர் நடந்து பயிற்சிக்குச் சென்று வந்தேன், எனக்கு விடுமுறை அளிக்கவில்லை."

'கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த 2 பெண் குழந்தைகளின் தாயான ஆசிரியைக்கு, பயிற்சியில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி அளிக்காததால் இறந்து போனார். அவரின் குழந்தைகள், தனது ஒரே நம்பிக்கையான தாய் இறந்தது புரியாமல் விளையாடிக்கொண்டிருந்தனர், பார்க்கவே அத்தனை கொடுமையாய் இருந்தது. கட்டாய பயிற்சியினால் உயிர்ப்பலிக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்.'

எண்ணும் எழுத்தும் பயிற்சி
எண்ணும் எழுத்தும் பயிற்சி

'எண்ணும், எழுத்தும்' பயிற்சிப் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், மருத்துவ விடுப்பில் இருந்தாலும் உடனடியாக விடுவித்துக்கொண்டு கட்டாயமாகப் பயிற்சியில் சேர வைத்திருக்கிறார்கள். பயிற்சி நடைபெற்ற தேதிகளில் குடும்பத்தில் திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்ற அழைப்பிதழைக் காட்டினாலும், 'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! உங்கள் பெயர் பட்டியலில் உள்ளது நீங்கள் பயிற்சியில் இருந்தே ஆக வேண்டும்' என்று கட்டாயப்படுத்தி உள்ளார்கள்.

'பயிற்சிக்கு வர முடியாவிட்டால் வேலையை விட்டுச் செல்லுங்கள்' என்று மாவட்ட ஆசிரியர், பயிற்சி கல்வி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடம் திறந்த பின் இந்தப் பயிற்சியை நடத்தியிருக்கலாம். கல்வித்துறையில் பொறுப்பு வகிக்கின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு, முதலில் மனிதநேய பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஆசிரியர் சமுதாயத்தைப் பாதுகாத்திட வேண்டுகிறோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- இவ்வாறு, அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் உண்மையில் நடந்தனவா? 'எண்ணும் எழுத்தும்' பயிற்சிக்குச் சென்று வந்த சில ஆசிரியர்களிடம் பேசினோம். தங்கள் அடையாளத்தைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டவர்கள், படபடவென கொட்டித் தீர்த்தார்கள்.

''இதுக்கு முன்னாடி நடந்த பல்வேறு டிரெய்னிங்ல, பயிற்சி அன்னிக்கு நம்மால வர முடியாதுன்னா, வேற பேட்ச் மாத்திக் கொடுப்பாங்க. இந்தப் பயிற்சியில அதுக்கு வாய்ப்பில்லைன்னாலும், எனக்குத் தெரிஞ்சு சிலர் கேஷுவல் லீவு போட்டாங்க. தனக்கு கல்யாணம்கிறதால மெடிக்கல் லீவு போட்டுட்டுப் போனாங்க ஒரு டீச்சர். ஆனா, கோவில்பட்டி மாதிரி சில இடங்கள்ல ஆசிரியர்களோட சூழ்நிலைகளைப் புரிஞ்சுக்காம, லீவு கொடுக்காம ரொம்ப கண்டிப்பா நடந்தியிருக்காங்க.''

ஆசிரியர் பயிற்சி- சித்தரிப்பு படம்
ஆசிரியர் பயிற்சி- சித்தரிப்பு படம்
எங்களோட மாஸ்டர் ஹெல்த் செக்கப், கருப்பை ஆபரேஷன்னு எல்லாத்தையும் லீவு நாள்கள்லதான் ஃபிக்ஸ் பண்ணிக்குவோம். இந்த வருஷம் அப்படி பிளான் பண்ணவங்களால அதை செஞ்சுக்க முடியலை

''அஞ்சு நாளுக்கு முன்னாடியே இதுதொடர்பா வந்த சர்குலர்ல, பயிற்சி நடக்கிற நாள்கள்ல தேவையில்லாத விடுமுறை எடுக்கக்கூடாதுன்னு திட்டவட்டமா தெரிவிச்சிருந்தாங்க. அப்படியும் கல்யாணம், காது குத்துன்னு வீட்ல விசேஷம் வெச்சிருந்தவங்க, முன்னாடியே முறைப்படி சொல்லி லீவு வாங்கிட்டாங்க.

பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருந்த ரெண்டு டீச்சர்ஸுக்கு மெடிக்கல் லீவு தந்தாங்க. பொண்ணுக்கு வளைகாப்பு வெச்சிருந்த டீச்சருக்கு அனுமதி கடிதம் வாங்கிட்டு அரை நாள் விடுப்பு கொடுத்தாங்க. எனக்கும்கூட, பயிற்சி நாள்கள்ல ஒரு நாள் என் நாத்தனாரோட பொண்ணுக்கு காதுகுத்து இருந்துச்சு. பயிற்சி முடிஞ்சதும் நேர்ல போயிக்கலாம்னு நான் லீவு எடுக்கலை. ''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''சம்மர் ஹாலிடேஸ்ல இந்தப் பயிற்சியை வெச்சது பெரிய தப்பு. டீச்சர் வேலை லீவு எடுக்க முடியாத வேலை. எங்களோட மாஸ்டர் ஹெல்த் செக்கப், கருப்பை ஆபரேஷன்னு எல்லாத்தையும் லீவு நாள்கள்லதான் ஃபிக்ஸ் பண்ணிக்குவோம். இந்த வருஷம் அப்படி பிளான் பண்ணவங்களால அதையெல்லாம் செஞ்சுக்க முடியலை.''

''சம்மர் லீவுலதான் ஊருக்குப் போற பிளான் எல்லாம் இருக்கும். இந்த வருஷம் அது முடியலைங்கிறதால பல டீச்சர்ஸோட குடும்பங்கள்ல பிரச்னையாயிடுச்சு. வீட்ல உடம்பு சரியில்லாதவங்களைப் பார்த்துக்கணும்னுகிற நிலைமையில இருந்த டீச்சர்ஸுக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்திடுச்சு இந்தப் பயிற்சி.''

ஆசிரியர்
ஆசிரியர்

''காலையில் ஒன்பது மணியில இருந்து மாலை அஞ்சு மணி வரைக்கும் பயிற்சி நடந்துச்சு . பயிற்சி நடக்கிற இடம் பக்கத்துல இல்லை. பல கிலோமீட்டர் தள்ளி இருந்துச்சு. இதனால, வீட்டுக்கு வரவே எட்டு மணிக்கு மேல ஆயிடுச்சு. மறுநாள் காலையில மறுபடியும் ஒன்பது மணிக்குள்ள பயிற்சிக்கு வரணும். டூ வீலர் வெச்சிருந்தவங்க சமாளிச்சிட்டாங்க. எங்களை மாதிரி பஸ்ஸை நம்பியிருந்தவங்க பாடு ரொம்ப திண்டாட்டமா இருந்துச்சு. காலத்துக்கு ஏத்தமாதிரி, இந்தப் பயிற்சியை கூகுள் மீட்ல வெச்சிருக்கலாம்.''

''அம்பது, அறுபது டீச்சர்ஸை ஒரே ரூம்ல வெச்சு வெயில், அனல், காத்தோட்டமே இல்லாம தவிச்சுப் போயிட்டாங்க. அம்பது வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு முட்டி வலி இருக்கும். அவங்களை ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார வெச்சதால ரொம்ப அவஸ்தைப்பட்டுட்டாங்க. வெளியே போகவும் அனுமதிக்கலை. ஒரு ரூமுக்கு இருபது, இருப்பத்தஞ்சு பேரை மட்டும் உட்கார வெச்சிருக்கலாம்.''

''அந்த ஊருக்கு ஒரு பஸ்தான் போகுது. அந்த ஊர்லபோய் டிரெய்னிங் சென்டரை போட்டு வெச்சிருந்தாங்க. அந்த ஒரு பஸ்ல திடீர்னு அஞ்சு நாள் 300 டீச்சர்ஸ் போறதை யோசிச்சிப் பாருங்க. மூச்சு முட்டிப்போச்சு. அந்த பஸ்ஸை விட்டா வேற பஸ்ஸும் கிடையாது. இந்த மாதிரியான நடைமுறை சிக்கல்களை யோசிச்சு செஞ்சிருந்தா பயிற்சியை நிம்மதியா எடுத்துக்கிட்டிருக்கலாம்.''

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்

இந்த வாட்ஸ் அப் தகவல் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் பேசினோம்.

''பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்னால் பயிற்சி அளித்துவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது என்ற காரணத்துக்காகத்தான், கோடை விடுமுறையில் 'எண்ணும் எழுத்தும்' பயிற்சியை நடத்தியது தமிழக அரசு. பயிற்சிப் பட்டியலில் இருந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தார்கள். மீதமுள்ளவர்கள் முறைப்படி கேட்டு விடுமுறை எடுத்துக்கொண்டார்கள்.

அதாவது, ஒண்ணே கால் லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சிக்கு வராமல் விடுமுறை எடுத்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் உடல் நலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஆதாரமே, பயிற்சி நடந்த நாள்களில் 15 ஆயிரம் பேர் எடுத்த விடுமுறைதான். அவர்களுக்கு வேறொரு நாளில் பயிற்சிகள் வழங்கப்படும். வலுக்கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு அழைத்தார்கள் என்பது அதிகப்படுத்திச் சொல்வது'' என்றார்.

மாணவர்களுக்காகத் திட்டங்களை வகுக்கிற அரசு, ஆசிரியர்களின் நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய விருப்பமும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism