Published:Updated:

முதல் பெண்கள்: டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி

டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி

தாய்மை மற்றும் மகப்பேறு முதுகலை மருத்துவப்பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்; சென்னை நகரின் முதல் மகளிருக்கான தனியார் மருத்துவமனையைத் தோற்றுவித்தவர்

முதல் பெண்கள்: டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி

தாய்மை மற்றும் மகப்பேறு முதுகலை மருத்துவப்பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்; சென்னை நகரின் முதல் மகளிருக்கான தனியார் மருத்துவமனையைத் தோற்றுவித்தவர்

Published:Updated:
டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி

“எனக்குத் தெரிந்தவரை அத்தை கல்யாணியின் வீட்டு மாடியில் பல ஆண்டுகள் லில்லி சத்தார் வசித்தார். எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் தலைமை செவிலியர் கண்காணிப்பாளரான லில்லி, அத்தையின் மிக நெருங்கிய தோழி. எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் லில்லியைத் தன்னுடன் தங்கவைத்திருந்தார். குடும்ப உறுப்பினர் போலவே லில்லி இறக்கும்வரை எங்களுடன் இருந்தார். எங்கள் பாட்டி வைதீக முறைகளை அதிகம் பின்பற்றுபவர். ஆனால், லில்லியோடு ஒரே வீட்டில் வசிப்பதிலோ, ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவதிலோ அவருக்கு எந்த சிக்கலும் இருந்ததில்லை. மகளின் நட்புக்கு அவர் தாய் தந்த மரியாதை அது. கிறிஸ்துவப் பெண்மணி ஒருவருடன் இத்தனை நெருங்கிய நட்பு பாராட்டியவர் அத்தை” என்று தன் அத்தை டாக்டர் கல்யாணி பற்றி சொல்கிறார் சுசேத்தா ராகவன்.

முதல் பெண்கள்: டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி

1908-ம் ஆண்டு, சென்னையின் பிரபல கண் மருத்துவரான டாக்டர் ஈ.வி.ஸ்ரீனிவாசன் - கண்ணம்மாள் தம்பதியின் மகளாகப் பிறந்தார் ஈ.வி.கல்யாணி. பள்ளிப் படிப்பில் தீவிரமாக இருந்த சிறுமிக்கு வழக்கம்போல சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. கணவர் சில ஆண்டுகளிலேயே இறந்து போக, விதவையாக நின்றாள் சிறுமி. அன்றைய சூழலில் கைம்பெண்ணான பிராமண சமூகச் சிறுமிகள் மொட்டை அடிக்கப்பட்டு, காவி உடுத்தி, செக்கு மாடு போல வீட்டுவேலைகளைச் செய்து உழன்று, வீடுகளுக்குள் முடங்கி சொல்லொணாத் துயரை அனுபவித்தார்கள். தன் மகளுக்கு அப்படியொரு நிலை எப்போதும் வந்துவிடக் கூடாது என்று உறுதிபூண்டார் ஸ்ரீனிவாசன். அவளது வாழ்க்கை சிறக்க இனி கல்விதான் முக்கியம் என்று தீர்மானித்த அவர், துணை கலெக்டரான தன் தந்தைக்கு எந்த அவப்பெயரும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், வீட்டைவிட்டு வெளியேறி எழும்பூர் காசா மேஜர் சாலையிலுள்ள வேறு வீட்டுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீனிவாசனின் மூத்த மகள் கல்யாணி. அடுத்தடுத்து இரண்டு மகன்கள்; கடைக்குட்டி மகள் ருக்மிணி சிறு வயதிலேயே மரணமடைந்துவிட்டார். பள்ளிக்கு மீண்டும் செல்லத் தொடங்கிய சகோதரி கல்யாணியை பள்ளிக்குக் கொண்டுவிட்டு, திரும்ப அழைத்துவரும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றியது கடைக்குட்டி ராஜகோபாலன். “அத்தை வகுப்பறையில் பத்திரமாகச் சென்று அமர்ந்துவிட்டாரா, பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை என் தந்தை உறுதி செய்து விட்டுத்தான் தன் வகுப்புக்குச் செல்வாராம். இரண்டு சகோதரர்களும் சகோதரியுடன் நெருக்கமாகவே இருந்தார்கள்” என்று சொல்கிறார் சுசேத்தாவின் சகோதரரும், கல்யாணியின் மருமகனுமான டாக்டர் ராம் ராஜகோபாலன்.

பள்ளிப் படிப்பை முடித்து மருத்துவத் துறையே தனக்கான துறை என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட கல்யாணி, சென்னை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். “அப்போது திருமணமான பெண்கள் ஒன்பது கஜம் புடவை அணிவது வழக்கம். அதனால் படிக்க கல்லூரிக்குச் செல்லும் அத்தை, புழக்கடைப் பக்கம் சென்று ஒன்பது கஜம் புடவையிலிருந்து ஆறு கஜம் புடவைக்கு மாறியே கல்லூரிக்குச் செல்வாராம். மருத்துவமனை மற்றும் கல்லூரியில் பிரேத பரிசோதனை பயிற்சி செய்வதால், பின்வாசல் வழியே வீட்டுக்கு வந்து தலை முழுகியபின் தான் வீட்டுக்குள் நுழைவாராம்” என்று சொல்கிறார் சுசேத்தா. ஒரு கட்டத்தில் தாத்தாவுடன் சமரசம் ஆக, பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் இணைந்தது.

1932-ம் ஆண்டு, எம்.பி.பி.எஸ் படித்து முடித்த கல்யாணி, 1934-ம் ஆண்டு, டிஜிஓ பட்டம் பெற்றார். 1937-ம் ஆண்டு, தாய்மை மற்றும் மகப்பேறு முதுநிலை மருத்துவ பட்டம் பெற்றார். இந்தப் பட்டம் பெற்ற முதல் தமிழ்ப் பெண் கல்யாணி தான். 1934-ம் ஆண்டு, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாகப் பணியைத் தொடங்கினார். ஏறத்தாழ 30 ஆண்டுக்கால மருத்துவப் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார். இறுதி 10 ஆண்டுக்காலம் கௌரவ சிவில் சர்ஜன் மற்றும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மாணவர்களுக்குக் கற்றுத்தருவது கல்யாணிக்கு மிகவும் பிடித்த பணி. கல்யாணி அம்மாளிடம் கற்றுக்கொள்ள மாணவர்களிடையே அப்போது கடும் போட்டி நிலவியது என்று பதிவு செய்திருக்கிறார் பிரபல மருத்துவர் டாக்டர் இந்திரா ராமமூர்த்தி.

1940-ம் ஆண்டு சென்னை எட்வர்ட்ஸ் எலியட்ஸ் சாலையிலிருந்து கூப்பிடு தொலைவில் அமைந்த கல்யாணியின் இல்லமான `துவாரகா'வுக்குள்ளேயே `கல்யாணி மருத்துவமனை' தொடங்கப்பட்டது. நான்கே நான்கு படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட மிகச் சிறிய மருத்துவமனை அது. முழுக்க முழுக்க பெண்களுக்காக பெண் மருத்துவர் நடத்திய நகரின் முதல் தனியார் மருத்துவமனை இதுதான்.

கௌரவ மருத்துவராக எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் பணியாற்றினாலும், கூடுதலாக கல்யாணி மருத்துவமனையில் மயிலாப்பூர் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார் கல்யாணி.

டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி
டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி

1965-ம் ஆண்டு, அரசு கௌரவப் பணியிலிருந்து விலகிய பின், குஜராத்தி சஹாயகாரி மருத்துவமனையில் தனி மகப்பேறு பிரிவை அமைத்து, அதைத் திறம்பட நடத்தினார். கூடுதலாக அடையாறு வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மூலமும் தன்னார்வப் பணியாற்றினார்.

“ஒவ்வொரு ஞாயிறும் அவருடன் காரில் திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனைக்குச் செல்வேன். அங்கும் அவர் தன்னார்வப் பணியாற்றிவந்தார். இருப்பவர்களிடம் கட்டணம் வாங்கிக் கொள்வார், இல்லாதவர்கள் இல்லை என்று சொன்னால் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. அவர்களின் செலவுக்குப் பணம் தந்தும் அனுப்புவார். அப்படி இரக்கம் மிகுந்தவர் கல்யாணி” என்று நினைவுகூர்கிறார் சுசேத்தா.

மறுமணம் செய்து கொள்வதைப் பற்றி சிந்திக்காத கல்யாணி, தன் சகோதரர்களின் குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டிருந்தார். “அத்தை மிகவும் கனிவானவர், அன்பானவர், எங்களைத் தன் சொந்த குழந்தைகள் போலவேதான் நடத்திவந்தார். சொந்தக் காரர்களுக்கு தேவை அறிந்து உதவி செய்வார். விடுமுறை நாள்களில் எங்களை பழைய எல்ஃபின்ஸ்டோன் தியேட்டரில் இருந்த ஜாஃபர் ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்துச் செல்வார். சாக்லேட் டிலைட் ஐஸ்க்ரீம் அவருக்கு மிகவும் பிடித்தமானது” என்று சொல்கிறார் சுசேத்தா. இதே கனிவை மருத்துவமனையிலும் காட்டிவந்தார் கல்யாணி. அவரிடம் பேறுகால சிகிச்சை பெற்ற பெண்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு அவர் பெயரையே கல்யாண், கல்யாணி என வைத்திருக்கிறார்கள்.

மருத்துவமனை நிர்வாக விஷயங்களில் மிகவும் கண்டிப்பானவராக இருந்திருக்கிறார் கல்யாணி. இயற்கையிலேயே மன மற்றும் உடல்வலிமை கொண்டவரான கல்யாணி, மருத்துவமனையில் வலி என்று அரற்றுபவர்களைக் கண்டால் கோபப்படு வாராம். பகல் இரவு பார்க்காமல் பணியாற்றுவது அவருக்கு மிகவும் பிடித்தமானது. இரவு நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தாலும், தானே கார் ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவதுண்டு. “1965-ம் ஆண்டு, ‘சவுண்டு ஆஃப் மியூசிக்’ படம் வெளிவந்து சபையர் அரங்கில் ஓடிக்கொண்டிருந்த நேரம் எங்களுடன் திரைப்படம் பார்க்க வந்தார் கல்யாணி அத்தை. இடைவேளையின் போது ‘அவசரம், டாக்டர் கல்யாணி உடனடியாக மருத்துவமனை வரவும்’ என்ற ஸ்லைடு திரையில் வர, எங்களை அப்படியே விட்டுவிட்டு மருத்துவமனைக்கு அவர் ஓடிய கதை இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது” என்று சொல்கிறார் ராம்.

அருகே இருந்த சி.எஸ்.ஐ கல்யாணி மருத்துவமனையின் பெயரால் குழப்பம் வரவே, கல்யாணி மருத்துவமனை ஈ.வி.கல்யாணி மெடிக்கல் சென்டர் எனப் பெயர் மாற்றம் அடைந்தது. பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது இரண்டு மகன்கள், நடிகர்கள் பிரபு, சூர்யா ஆகியோர் பிறந்தது ஈ.வி.கல்யாணி மருத்துவமனையில்தான். இசைமீது ஆர்வம் கொண்ட கல்யாணி, நாரத கான சபாவில் உறுப்பினராக இருந்துள்ளார். 1990-ம் ஆண்டு வரை தினமும் மருத்துவமனை சென்று நோயாளிகளைச் சந்தித்து சிகிச்சை அளித்து வந்தவர், அதன்பின் முதுமை காரணமாக அவ்வப்போது செல்லத் தொடங்கினார். மருத்துவமனை நிர்வாகத்தை அவரின் உறவினர்களான டாக்டர் கீதா அர்ஜுனும் உமா ராமும் கவனித்துக்கொண்டனர்.

தன் 93-வது வயதில், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட கல்யாணி, 2001 ஜூலை 27 அன்று இறந்தார். எத்தனையோ மருத்துவமனைகளில் முறையான தாய்சேய் நல சிகிச்சைக்கு வித்திட்டவர் கல்யாணி. அவரது இறுதி ஆசை என்ன என்று விவரிக்கிறார் சுசேத்தா... “அத்தை தன் உயிலில் தனக்குப் பின் கல்யாணி மருத்துவமனை, இப்போது இருப்பது போலவே சேவை மனப்பாங்குள்ள மருத்துவமனையாகவே தொடர வேண்டும் என்று எழுதிவைத்திருக்கிறார்.”

இப்போது 80-வது ஆண்டு விழாவை நோக்கி நடைபோடும் கல்யாணி மருத்துவமனை இன்றும் பெண்கள் நாடும் தலைநகரின் சிறந்த மருத்துவமனையாகக் கம்பீரமாக நிற்கிறது... கல்யாணியின் கனவுகளைச் சுமந்தபடி!