Published:Updated:

சமூகப் புறக்கணிப்புகளைத் திறமையால ஜெயிக்கணும்! - சாந்தி ராகவன்

எங்களால் முடியும்
பிரீமியம் ஸ்டோரி
எங்களால் முடியும்

எங்களால் முடியும்

சமூகப் புறக்கணிப்புகளைத் திறமையால ஜெயிக்கணும்! - சாந்தி ராகவன்

எங்களால் முடியும்

Published:Updated:
எங்களால் முடியும்
பிரீமியம் ஸ்டோரி
எங்களால் முடியும்
“மாற்றுத்திறனாளிகள் சுய அடையாளத்துடன் வாழணும் என்பதுதான் எங்க நோக்கம். இதுக்காக கடந்த 15 வருஷமா என் உலகமா இருப்பது எங்க அமைப்பின் வேலைகள் மட்டுமே.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்றோம். வேலைவாய்ப்பில் முன் அனுபவம் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்குத் திறமையின் அடிப்படையில் குறைந்தபட்சமா ஆண்டு வருமானம் ரெண்டு லட்சத்துல இருந்து, அதிகபட்சமா 18 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விதத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கோம். எங்க அமைப்பில் பயிற்சி பெற்று, தன்னம்பிக்கைப் பெற்று வேலைவாய்ப்பு பெற்றவங்க இன்னிக்கு சந்தோஷமா இருக்காங்க. அதோடு, பலருக்கும் உதவியும் செய்றாங்க. இந்த மகிழ்ச்சியை, வேறு எந்த வேலையிலும் பெற முடியாது” – மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் கூறுகிறார் பெங்களூரில் இயங்கிவரும் ‘எனேபிள் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் சாந்தி ராகவன்.

 கணவருடன் சாந்தி ராகவன்
கணவருடன் சாந்தி ராகவன்

“பூர்வீகம் சேலம். பிறந்தது டெல்லி, வளர்ந்தது மும்பை. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, அமெரிக்காவில் எம்.எஸ் படிச்சேன். பிறகு, முன்னணி டெலிகிராம் நிறுவனங்கள் சிலவற்றில் தொடர்ந்து அஞ்சு வருஷங்கள் வேலை செஞ்சேன். இதுக்கிடையே காதல் திருமணம். 1997-ம் ஆண்டு பெங்களூரு திரும்பி, முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சிலவற்றில் ஏழு வருஷங்கள் வேலை செஞ்சேன். அந்த நேரத்துல, என் ஒரே தம்பி ஹரி ராகவனுக்குப் பார்வைக்குறைபாடு பிரச்னை அதிகமாச்சு. சிகிச்சைக்காகப் பல்வேறு இடங்களுக்கும் கூட்டிட்டுப்போனேன். ஆனா, அந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடையாதுன்னு தெரிஞ்சது.

தம்பியின் சிகிச்சைக்கு அலைஞ்ச நேரத்துல பல்வேறு பாதிப்புகளுடன் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நேரே பார்த்தேன். அதுவரை வேலை, குடும்பம், மகிழ்ச்சியான நகர வாழ்க்கைனு இருந்த எனக்கு, மனசுல பெரிசா பாரம் ஏற்பட்டுச்சு. கண்முன்னாடி பலர் அடுத்த நகர்வுக்கான வழி தெரியாம சிரமப்படுறப்போ, நாம நம்ம வாழ்க்கையினு சுயநலமா இருக்கிறது சரியில்லைனு தோணுச்சு. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய முடிவெடுத்தேன்” என்பவர், 1999-ம் ஆண்டு, ‘எனேபிள் இந்தியா’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

பயனடைந்தோருடன்...
பயனடைந்தோருடன்...

“விடுமுறை காலத்துல மும்பைக்குப் போய் தம்பிக்குக் கணினிப் பயிற்சி கொடுப்பேன். அதுபோல பெங்களூரில் தினமும் வேலைக்குப் போகும் முன்பு காலையில ரெண்டு மணிநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை கணினிப் பயன்பாடு பற்றி இலவசமா பயிற்சி கொடுத்தேன். ஆரம்பத்துல அஞ்சு பேர் வந்த நிலையில், பலரும் என்னைத் தேடி வந்தாங்க. சில மாத இடைவெளியில் அடுத்தடுத்த பேட்ஜ் தொடங்கினேன். இப்படியே அடுத்த அஞ்சு வருஷங்கள்ல விழிச்சவால் கொண்ட ஏராளமானோருக்கு கணினிப் பயிற்சி கொடுத்தேன். அதுமட்டுமில்லாமல் அவங்க சுய அடையாளத்துடன் பிறரை எதிர்பார்க்காம தாங்களே சம்பாதிச்சு வாழ வழிவகை செய்துகொடுப்பது மட்டுமே சரியான, நியாயமான உதவியா இருக்கும்னு நினைச்சு, கணினிப் பயிற்சியுடன் ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலை வாங்கிக்கொடுக்க முடிவெடுத்தேன். அதுக்காக, 2004-ல் என் வேலையிலிருந்து விலகினேன்.

சமூகப் புறக்கணிப்புகளைத் திறமையால ஜெயிக்கணும்! - சாந்தி ராகவன்

பார்வையற்றோர் தவிர, மற்ற பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளும் என்னைத்தேடி வந்தாங்க. அவங்க எல்லோருக்கும் தேவையான அடிப்படை பயிற்சிகளைக் கொடுத்தேன். கூடவே, அவங்களுக்கான வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்தேன். ‘மாற்றுத்திறனாளிகளால் சரியா வேலை செய்ய முடியுமா?’ங்கிற கேள்வியைத்தான் தொடர்ந்து பல நிறுவனங்கள் முன்வைத்தன. ‘உரியத் திறமை இருக்கு. அவங்களுக்குப் போதிய பயிற்சி கொடுத்தா, நிச்சயமா சிறப்பாகவும் விரைவாகவும் வேலை செய்து முடிப்பாங்க’ன்னு நிறைய நிறுவனங்கள்ல புரிய வெச்சேன். அது அவ்வளவு எளிதா நடந்துடலை. 50 நிறுவனங்கள்ல முயற்சி செஞ்சாதான், ஒரு கம்பெனியில வேலை கிடைக்கும். இப்படியெல்லாம் முயற்சி செய்தால்தான் வேலை கிடைக்கும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து சோர்வடையாம வேலை செஞ்சேன்” என்பவரின் பணிகள் அதன் பிறகு வேகமெடுக்கவே, தனது வீட்டில் இயங்கிவந்த அமைப்பைத் தனி கட்டடத்தில் விரிவுபடுத்தியிருக்கிறார். பார்வைத்திறன், பேச்சுத்திறன், செவித்திறன் இல்லாதோர், போலியோ பாதிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு உட்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அந்த அமைப்பால் பயன்பெறத் தொடங்கியுள்ளனர்.

“கணினிப் பயிற்சித் தவிர, அவரவர் ஆர்வத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு பயிற்சிகள், பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான பணியிட பயிற்சிகள், மொழிப் பயிற்சி, தன்னம்பிக்கைப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சின்னு பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்தோம். அவங்களுக்கு, எம்.என்.சி, ஐ.டி நிறுவனங்கள், வங்கிகள், அரசு வேலை, பெரிய தனியார் நிறுவனங்கள்ல திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்க 15 வருஷங்களுக்கு மேல வழிவகை செய்றோம். இந்த வகையில் இதுவரை 20,000 பேருக்கு மேல பயனடைஞ்சிருக்காங்க. அவங்கெல்லாம் ஏராளமான துறைகளில், பல நூறு நிறுவனங்கள்ல வேலை செய்றாங்க. இதுதவிர, கர்நாடக மாநில அரசுடன் இணைந்து, மாவட்டந்தோறும் சுயதொழில் பயிற்சியை அளிப்பதுடன், கிராமப்புறத்தில் இருக்கிறவங்களின் முன்னேற்றத்துக்கும் உதவுகிறோம்.

ஏற்கெனவே அரசு, தனியார் நிறுவனங்கள்ல வேலை செய்ற மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான கூடுதல் பயிற்சிகள், பணியிட முன்னேற்றத்துக்கான எல்லாவிதமான தீர்வுகளையும் ஏற்படுத்திக்கொடுத்தோம். இந்த வகையில் 30,000-க்கும் அதிகமானோர் பயனடைஞ்சிருக்காங்க. இந்த விஷயங்களை இப்போ சொல்ல பெருமையாவும், கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கிறப்போ மலைப்பாவும் இருக்கு. ஆனா, இதுக்கு நடுவுல பொருளாதார ரீதியாவும், வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் எங்க அமைப்பின் ஊழியர்களும், மாற்றுத்திறனாளிகளும் கொடுத்த உழைப்பு, பட்ட கஷ்டங்கள் ரொம்பவே அதிகம். உழைப்பால் அறுவடை செய்த வெற்றிதான் நிரந்தர பயன்தரும். கூட்டு முயற்சியாலதான் இதெல்லாம் சாத்தியமாச்சு” என்று பெருமையுடன் கூறும் சாந்தி, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளுக்காக குடியரசுத்தலைவரின் விருதினை இருமுறை பெற்றிருக்கிறார். மத்திய அரசின் ‘Social entrepreneur‘ என்ற விருதைக் கடந்த ஆண்டு பெற்றவர், 2017-ம் ஆண்டு ‘பிசினஸ் டுடே’ பத்திரிகையின் ‘சக்தி வாய்ந்தப் பெண்கள்’ பட்டியலிலும் இடம்பிடித்தார்.

“எனக்கு எல்லா வகையிலும் உதவியா இருக்கும் கணவர் தீபேஷ் சுதாரியா, தனியார் நிறுவன உயர்பொறுப்பை விட்டுட்டு கடந்த 10 வருஷங்களா எங்க அமைப்பில்தான் வேலை செய்றார். இப்போ அமைப்பின் சி.இ.ஓ அவர்தான். புதிய புரொகிராம், டீம் செயல்பாடு உள்ளிட்ட வேலைகளை அவரும், வேலைவாய்ப்பு, பயிற்சிகள், கட்டமைப்பு பற்றின விஷயங்களை நானும் கவனிக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் தங்கள் உடல் ஊனத்தால் வீட்டுக்குள் முடங்கி உட்காரவோ, கனவுகளை அழிச்சுக்கவோ கூடாது. சமூகத்தில் புறக்கணிப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி திறமையால ஜெயிக்கணும். அதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமாக அமையும். அந்த நோக்கத்தோடு செயல்படற எங்க அமைப்பிலுள்ள பணியாளர்கள்ல 45 சத விகிதத்தினர் மாற்றுத்திறனாளிகள்தாம். யாருக்கும் எதுவும் எப்போதும் நடக்கலாம். அப்படி ஏதாவது நடந்தா, முடங்கி உட்காராம கூடுதல் உத்வேகத்தோடு ஓடணும். எனக்கு அப்படியொரு நிலை வந்தா, எங்க அமைப்பில் எனக்கும் போதிய பயிற்சி கொடுத்து ஆக்டிவா செயல்பட வெச்சுடுவாங்க. அந்த நம்பிக்கையுடன்தான், இந்த வேலையைச் செய்ய நாங்க கொடுத்து வெச்சிருப்பதாகவே கருதுறோம்” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார்.