22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இறந்தும் உயிர் வாழ்வோம்!

டாக்டர் ரமா தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் ரமா தேவி

சேவை

டந்த ஆண்டு மூளைச் சாவு ஏற்பட்ட சென்னையைச் சேர்ந்த வெங்கடேசனின் இரண்டு கைகளும் தானமாகப் பெறப்பட்டு, திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமிக்குப் பொருத்தப்பட்டது. தமிழகத்தில் முதன்முறையாக நடைபெற்ற இந்த கை மாற்று அறுவை சிகிச்சை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) துறைத் தலைவர் டாக்டர் ரமா தேவியின் தலைமையில் நடைபெற்றது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் ரமா தேவி. இதனால், கடந்த சுதந்திர தினத்தில் `சிறந்த மருத்துவ சேவை’க்கான தமிழக அரசின் விருதை ரமா தேவிக்கு வழங்கினார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

``உலகளவில் இதுவரை 100 பேருக்குத்தான் கை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. விழிப்புணர்வு குறைவு மற்றும் `சடலத்தை ஊனமாக அடக்கம் செய்ய வேண்டாம்’ என மக்கள் எண்ணுவதே இந்த குறைந்த எண்ணிக் கைக்குக் காரணம். கைகளை தான மாகப் பெற்றவரின் உடலில் செயற்கைக் கைகளைப் பொருத்திக்கொடுப்போம். இதனால், சடலம் ஊனமாகத் தெரியாது.

பல வருட முயற்சி மற்றும் ஏமாற்றத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினோம். தமிழக அரசு, அப்போதைய டீன் மற்றும் 75 பேர் கொண்ட என் துறை சார்ந்த மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்பால் அந்தச் சாதனை சாத்தியமானது.

பல்வேறு விபத்துகளில் சிக்கி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் மட்டுமே மாதம்தோறும் ஆறு பேர் கைகளை இழக்கிறார்கள். கை தானம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். மற்ற உடல் உறுப்புகளைப்போல கை தானம் செய்யவும் மக்கள் முன்வர வேண்டும். இதனால், நாம் இறந்த பிறகும் பிறர் உருவில் வாழலாம்” என்கிற ரமா தேவி, அரசு மருத்துவராக 30 ஆண்டுக்கால பணி அனுபவம் கொண்டவர்.

``பொது அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தேன். இந்த நிலையில், ஆசிட் வீச்சு உட்பட பலதரப்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எம்.சிஹெச் மேற்படிப்பு முடித்தேன். என் எண்ணப்படி, நிறைவான பணியைச் செய்துவருகிறேன்.

தீக்காயம், சாலை விபத்து உட்படப் பல விபத்துகளில் சிலருடைய முகம் மோசமாகச் சிதைகிறது. அவர்களில் சிலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரியிலும் முழுமையான பலன் கிடைக்காமல் போகலாம். அத்தகையோருக்கு, ஒருவர் இறந்த பிறகு தன் முகத்தை தானமாகக் கொடுக்கலாம். தானம் செய்தவரின் சடலத்துக்கு வேறு முகத்தை (ஃபேஸ் மாஸ்க்) பொருத்திவிடுவோம். இந்த சிகிச்சையில், தானம் கொடுப்பவரின் முகத்தோல் அவர் முக அமைப்புடன் அப்படியே எடுக்கப்பட்டு இன்னொருவருக்குப் பொருத்தப்படும் (face transplant).

இறந்தும் உயிர் வாழ்வோம்!

முக தானத்தைப் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் நம்பிக்கையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அதிகம் தேவை. உலக அளவில் இதுவரை ஐந்து பேருக்கு மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதன்முதலாக இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைச் செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு பணி ஓய்வுபெறும் நிலையில், அதற்குள்ளாக இந்த அறுவை சிகிச்சைக்கு லைசென்ஸ் வாங்கிவிடுவது அல்லது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆவலுடன் இருக்கிறேன்” என்கிறவர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

``வலி தாங்க முடியாமல் சிகிச்சைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து, நோயாளிகளில் சிலர் என்மீது கோபப்படுவார்கள். அவர்கள் மீது எனக்குக் கோபம் வராது; எனக்குத் திட்டவும் தெரியாது. அறிவுரை கூறி, கனிவுடன் சிகிச்சையளிப்பேன். சிகிச்சை முடிந்து ஆனந்தக் கண்ணீருடன் விடைபெற்றுச் செல்வார்கள். அப்போது எனக்குக் கிடைக்கும் உணர்வுக்கு விலைமதிப்பே இல்லை” என்று புன்னகையுடன் கூறுகிறார் ரமா தேவி!

சரும தானமும் செய்யலாம்!

ம் தோல் பகுதியையும் தானம் கொடுக்கலாம். அதை, ஐந்து ஆண்டுகளுக்குப் பதப்படுத்திவைத்து பிறருக்குப் பொருத்த முடியும். தமிழகத்தில் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் `ஸ்கின் பேங்க்’ (சரும வங்கி) செயல்படுகிறது. இறந்த பிறகு ஆறு மணி நேரத்துக்குள் ஒருவரின் சரும பகுதி்யை தானம் பெற்று இன்னொருவருக்குப் பொருத்த முடியும். தீக்காயம் உள்ளிட்ட விபத்துகளால் சருமப் பகுதி சிதைந்து போனவர்களுக்கு இந்த தானம் பெரிதும் உதவும்.