Published:Updated:

‘கீர்த்திமா லவ் யூ ...’ - இணையம் மூலம் இதயங்களை வென்ற ‘அடிதூள்’ ஆன்ட்டி

கீர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி

புதிய பாதை

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்களுக்கு கீர்த்தியை நிச்சயம் தெரிந்திருக்கும். புதிதாக புடவையோ, நகையோ வாங்க நினைப்பவர்கள், அதற்கு முன் கீர்த்தி யின் ஃபேஸ்புக் லைவைப் பார்க்கத் தவறுவதில்லை.

இன்னொரு பக்கம் புதிதாகத் தொழில் தொடங்குவோரும் சரி, பல வருடங்களாக பிசினஸ் செய்துகொண்டிருப்போரும் சரி, ஒரே நாளில் விற்பனையில் ஜாக்பாட் அடிக்க கீர்த்தியை நாடுகிறார்கள்.

‘ஃபேஷன் வித் கீர்த்தி’ என்ற பெயரில் இவரது முகநூல் பக்கம் பிரபலம். அந்தப் பக்கத்துக்குள் நுழைந்தால் எப்போதும் ஏதோ ஒரு கடைக்கான புரொமோஷன் லைவ்வாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். கலகலப்பான உரையாடல், கலர்ஃபுல் காஸ்டியூம், கலக்கல் ஜுவல்லரி, கூடவே அடிக்கடி உச்சரிக்கும் ‘அடிதூள்’... இவைதான் கீர்த்தியின் அடையாளங்கள். இவர் இருப்பது சேலத்தில். ஆனாலும் இந்தியாவைத் தாண்டியும் பிரபலம்.

‘`இது 20 வருஷ உழைப்புங்க. இந்த அளவுக் குப் பிரபலமாவேன்னெல்லாம் எதிர்பார்க் கலை. ஆனா, என் உழைப்புக்கேத்த வெற்றி கிடைக்கும்னு நம்பினேன். அதைத்தான் இன்னிக்கு எல்லாப் பெண்களுக்குமான அட்வைஸாகவும் சொல்லிட்டிருக்கேன்...’’ - அடக்கமான அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் கீர்த்தி.

‘கீர்த்திமா லவ் யூ ...’ - இணையம் மூலம் இதயங்களை வென்ற  ‘அடிதூள்’ ஆன்ட்டி

‘`பூர்வீகம் திருச்சி. டிப்ளோமா இன் கம்ப்யூட்டர்ஸ் படிச்சேன். 18 வயசுலயே கல்யாணமாயிடுச்சு. அப்புறம் சேலம் வந்தேன். அந்த வயசுலயே எனக்கு காம்பியரிங் பிடிக்கும். என் மகள் பத்மாவதி குழந்தையா இருந்தபோதே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டா. லோக்கல் சேனல்கள்ல ஆங்க்கரிங்கும் பண்ணிட்டிருந்தா. அவகூட போனபோது எனக்கும் ‘கலக்கல் குட்டீஸ்’னு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது. 100 எபிசோடு பண்ணினேன். அதைத் தொடர்ந்து சேனலுக்காக, புடவைக் கடைகள், நகைக் கடைகளுக்குப் போய் ஆங்க்கரிங் பண்ற வாய்ப்பும் வந்தது.

முதன்முதல்ல என்னை வாய்ஸ் டெஸ்ட்டுக் கும் கேமரா டெஸ்ட்டுக்கும் கூட்டிட்டுப் போனவங்க என் மாமியார். என் ஆசையை நிறைவேத்தணும்னு நினைச்ச முதல் மனுஷி. என் வாழ்க்கையின் லக்கி சார்ம்...’’ - மாமியாரை மெச்சும் மருமகளுக்கு முதலும் முடிவும் குடும்பம்தான் என்கிறார்.

‘`நான் மீடியாவில் அடியெடுத்து வெச்ச போது கூட்டுக்குடும்பத்துலதான் இருந்தேன். வேலைக்காகவோ, என் ஆர்வத்துக்காகவோ ஒருநாளும் என் குடும்பத்தையோ, குடும்பத் தாரோட தேவைகளையோ கவனிக்கத் தவறினதில்லை. அவங்களுக்கான அன்பையும் மரியாதையையும் கொடுத்ததால அது பல மடங்கா எனக்குத் திரும்ப கிடைச்சது.

20 வருஷங்கள்ல ஆயிரக்கணக்கான கடைகள், லட்சக்கணக்கான பொருள்களுக்கு நிகழ்ச்சிகள் பண்ணிட்டேன். கொரோனாவால போடப் பட்ட லாக்டௌன் ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையிலதான் நான் தனியா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கும் என் மகளும் கணவரும் கொடுத்த சப்போர்ட்தான் காரணம். புராடக்ட் புரொமோஷனையே ஃபேஸ்புக்ல லைவ்வா பண்ணலாம்னு ஐடியா கொடுத்தவங்களும் அவங்கதான்...’’ - வார்த்தைக்கு வார்த்தை குடும்ப பெருமை பேசுகிறார் கீர்த்தி.

ஆரம்பத்தில் ஆயிரத்தைக்கூட தொடாத இவரது ஃபேஸ்புக் பக்கம், அடுத்தடுத்த நாள்களில் லட்சங்களாக எகிறியது. இன்று ஒரு நாளைக்கு 8 லைவ் வரை செய்கிற அளவுக்கு எக்கச்சக்க பிஸி இவர். தமிழ்நாடு, கர்நாடகா என இவரின் எல்லைகள் நாளுக்கு நாள் விரிந்துகொண்டிருக்கின்றன.

‘`எந்த ஊரா இருந்தாலும் எனக்கு நேரம் இருந்தா `நோ' சொல்றதில்லை. எல்லா இடங்களுக்கும் டிராவல் பண்ண முடியாததால சேலத்துல என் இடத்துக்கே பொருள்களுடைய பார்சலை அனுப்பிடுவாங்க. என் இடத்துலயே அவங்களுக்கான புரொமோஷன் விஷயங் களைப் பேசிக் கொடுத்துடுவேன். லைவ் பண்ணும்போது மக்களோட கேள்விகளுக்குப் பதில் சொல்லணும், அவங்களுக்கு போரடிக்காம என்டர்டெயின் பண்ணணும், கடையோட பெயரை மறக்காமலும் மாத்தாமலும் சொல்லணும். கடையோட ஆஃபர் என்ன, விலை என்னன்னு சொல்லணும். அது என்ன டிசைன், கலர், பேட்டர்ன், நம்பர்னு எல்லாத்தையும் சரியா சொல்லணும். இத்தனை வருஷங்கள்ல இதுல ஒரு விஷயத்தைக்கூட தப்பாவோ, மாத்தியோ சொன்ன தில்லை. அது ஒரு வரம்’’ என்பவருக்கு பெண்களுக்கு இணையாக குட்டீஸ் ரசிகர்கள் அதிகம்.

‘கீர்த்திமா லவ் யூ ...’ - இணையம் மூலம் இதயங்களை வென்ற  ‘அடிதூள்’ ஆன்ட்டி
Nijar Mohamed N

‘`நான் பண்ற புரொகிராமுக்கும் குட்டீஸுக்கும் சம்பந்தமில்லைன்னாலும் ‘கீர்த்திமா லவ் யூ’னு சொல்லி ஓடி வந்து கட்டிப் பிடிச்சுக் கிறதும் அடிதூள் ஆன்ட்டினு சொல்றதும் அவ்ளோ அழகு...’’ - அன்புக்கு அடிமையான கீர்த்திக்கு ஒரே ஒரு லட்சியம் தான்.

‘`இப்படியொரு துறை மூலமா அடுத்தவங்களுக்கு உதவுறதோடு, என்னால சம்பாதிக்கவும் முடியுது. இது எல்லாப் பெண்களுக்கும் சாத்தியம்தான். என்னைத் தேடி வரும் பிசினஸ் பெண்களை ‘உங்க பிசினஸ் பத்தி நீங்களே பேசுங்க... உங்களால முடியும்’னு ஊக்கப்படுத்துறேன். திறமை இருந்தும் வெளியுலகத்துக்குத் தெரியாத பெண்களை வெளியில கொண்டு வரணும்ங்கிறதுதான் என் ஆசை. எந்தப் பெண்ணும் அவங்கவங்க துறையில முதல்நாளே சாதனை யாளரா அடையாளம் காணப்படுறதில்லை. சவால்களைக் கடந்து, போராட்டங்களைத் தாண்டிதான் சாதனை யாளரா அறியப்படுறாங்க. நானும் விதி விலக்கல்ல’’

- கீர்த்தியின் வார்த்தைகளில் நன்னம்பிக்கை.

அடிதூள்!