லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாவ் பெண்கள்: இது பாரம்பர்ய பந்தம்! - சுபஷெரின்

சுபஷெரின்
பிரீமியம் ஸ்டோரி
News
சுபஷெரின்

எங்க ஊரில் தீப்பந்த வாள்வீச்சு தெரிஞ்ச பத்து பேரில் நானும் ஒருத்தின்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு

ஆதிகாலத்தில் நம் முன்னோர் விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, தீப்பந்தம் சுற்றி விலங்குகளை விரட்டிய கலை, பிற்காலத்தில் தீப்பந்த வாள் வீச்சாக அடையாளம் பெற்றது. இப்போது, அரசின் அங்கீகாரம் இன்றி அழிவின் விளிம்பில் இருக்கிறது இந்தக் கலை. இதற்கு உயிர் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கியுள்ளார் ஆறாம் வகுப்பு மாணவி சுபஷெரின். நட்சத்திரத் தீப்பந்தத்தைச் சுற்றிக்கொண்டே நம்மிடம் பேசினார்...

“சொந்த ஊர் ராஜபாளையம். மூணு வயசுல இருந்து சிலம்பம் கத்துக்கிறேன். மூன்று முறை உலக அளவிலான சிலம்பப் போட்டிகளில் தங்கம் வாங்கியிருக்கேன்.

வாவ் பெண்கள்: இது பாரம்பர்ய பந்தம்! - சுபஷெரின்

அம்மா அப்பா ரெண்டு பேருமே சிலம்பம் சுத்துவாங்க. ஒருமுறை எங்க ஊரு திருவிழாவில் ஓர் அண்ணா, சிலம்பக்கம்பில் தீப்பந்தம் ஏந்தி வாள் வீசுவதைப் பார்த்தேன். அந்தக் கலையை ஏன் எனக்கு சொல்லிக்கொடுக்கலைனு ஆசான்கிட்ட கேட்டேன். `தீப்பந்த வாள் வீச்சு கொஞ்சம் ஆபத்தானது. தேசிய போட்டி களில்கூட அதை விளையாட அரசு அங்கீகாரம் கொடுக்கலை. அதனால் மக்களும் கத்துக்க முன்வராமல் இன்னிக்கு அழிவின் விளிம்பில் இருக்கு'ன்னு சொன்னார்.

‘எனக்கு கத்துக்கொடுங்க’ன்னு சொன்னேன். ‘தீப்பந்த வாள்வீச்சு சுற்றும்போது தீக்காயம் ஏற்படும்... கண்ணுலேயும் மண்ணெண்ணெய் துளி விழுந்து பாதிப்பு ஏற்படலாம். அதனால் இந்த வயசில் அது வேண்டாம்'னு சொன்னாங்க.

ரெண்டு நாள் பயிற்சிக்குப் போகாமல் அடம் பண்ணவே, வேறு வழியில்லாமல் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. மூணு வருஷமா பயிற்சி எடுத்துக்குறேன். ஆரம்பத்தில் ஒற்றைக்கம்பில் தீப்பந்தத்தில் பயிற்சி எடுத்து, இப்போ ஆறு முனைகொண்ட நட்சத்திர தீப்பந்தம் வரை கத்துக்கிட்டேன். எங்க ஊரில் தீப்பந்த வாள்வீச்சு தெரிஞ்ச பத்து பேரில் நானும் ஒருத்தின்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு” என்கிற ஷெரின் மக்களிடம் தீப்பந்த வாள்வீச்சை கொண்டு சேர்க்கும் முயற்சிகள் பற்றியும் சொல்கிறார்...

வாவ் பெண்கள்: இது பாரம்பர்ய பந்தம்! - சுபஷெரின்

“கலையைக் கத்துக்கிட்டா போதுமா... அதை இன்னும் 10 பேரை கத்துக்க வைக்கணும்ல. அதனால பள்ளிக்கூடம், திருவிழா, பொதுக் கூட்டங்கள்னு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ, அங்கெல்லாம் தீப்பந்த சிலம்பம் சுத்துவேன். ‘சின்ன வயசுல எப்படி பயப்படாம தீப்பந்தம் வீசுது பாரு’னு சொல்றவங்ககிட்ட, தீப்பந்த வாள்வீச்சு தமிழர்களுடைய பாரம்பர்யக் கலைகளில் ஒன்று. நீங்களும் கத்துக்கோங்கன்னு ஆசையை விதைச்சு, நிறைய பெண் குழந்தைகளை கத்துக்க வைக்கறேன்.

தீப்பந்த வாள்வீச்சு, சிலம்பத்தில் ஒரு வகை என எங்கேயுமே அங்கீகாரம் இல்லை. அதை உருவாக்கணும். அதுவரை என் முயற்சி தொடரும்'' எனக் காற்றில் தீப்பந்தம் வீசும் ஷெரினைப் பார்க்கும்போது, வீரத் தமிழச்சி என்கிற எண்ணம் நம் மனதுக்குள் ஓங்கி ஒலிக்கிறது!