Published:Updated:

“குறைகளை மனத்தில் சுமக்கக் கூடாது!” - `சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட்' சாதித்த தீபிகா

 கணவர், குழந்தையுடன் தீபிகா...
பிரீமியம் ஸ்டோரி
கணவர், குழந்தையுடன் தீபிகா...

நம்பிக்கை மனிதர்கள்

“குறைகளை மனத்தில் சுமக்கக் கூடாது!” - `சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட்' சாதித்த தீபிகா

நம்பிக்கை மனிதர்கள்

Published:Updated:
 கணவர், குழந்தையுடன் தீபிகா...
பிரீமியம் ஸ்டோரி
கணவர், குழந்தையுடன் தீபிகா...

தீபிகா சுதர்ஷனின் வாழ்க்கை நேர்மறை எண்ணங்களால் மட்டும் நிறைந்தது. தாத்தா, அப்பா, அம்மாவைத் தொடர்ந்து குடும்பத்தில் இவரும் செவித்திறன், பேச்சுத் திறன் குறைபாடு உடையவர். ஆனாலும், இன்றுவரை சவால்கள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ்வதாகப் பெருமிதம் கொள்ளும் தீபிகா, ஒரு சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட். தென்னிந்தியாவில் செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களிலிருந்து சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் ஆகியிருக்கும் முதல் நபர்.

தீபிகாவின் 10 மாத மகன் ஆதர்ஷ் சேட்டைகளால் வீட்டை குஷிப்படுத்துகிறான். ‘சோகமான, நெகட்டிவ்வான எந்த விஷயத்துக்கும் இடம் கொடுப்பதில்லை’ என்ற உறுதியுடன் இருப்பதால், இவர்களின் வீடு, இயக்குநர் விக்ரமன் படம் போல `எல்லா நாளும் கார்த்திகை' என்றே ஜொலிக்கிறது. மகனைக் கொஞ்சியபடியே நம்மிடம் பேசினார் தீபிகா (அவரின் தம்பி தீபேஷ் மொழிபெயர்த்தார்).

“அப்பாவின் பூர்வீகம் பஞ்சாப். அம்மாவுக்குத் தமிழ்நாடு. திருமணத்துக்குப் பிறகு, ரெண்டு பேரும் டெல்லியில் வசிச்சாங்க. வெவ்வேறு சூழல்கள்லதான் தாத்தா, அப்பா, அம்மாவுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட்டுச்சு. பிறக்கும்போதே எனக்கும் இந்தக் குறைபாடு இருந்துச்சு. எய்ம்ஸ் மருத்துவர்கள் சிலரின் அறிவுரைப்படி, படிப்பு மற்றும் எதிர்கால நலனுக்காக என் மூணு வயசுல சென்னையில் குடியேறினோம். லிட்டில் ஃப்ளவர் ஸ்பெஷல் ஸ்கூல்ல படிச்சேன். 10, 12-ம் வகுப்புகளில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். அப்பா ஏர் ஃபோர்ஸ்லயும் அம்மா இன்கம்டாக்ஸ் துறையிலும் வேலை செஞ்சு ஓய்வுபெற்றவங்க. தொழில்நுட்பம் வளராத காலத்துலயே திறமையால் மத்திய அரசுப் பணிக்கு உயர்ந்தவங்க அவங்க. நான் அவங்களைவிட ஒருபடி மேல போறதுதானே நியாயம்!

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

என்னைப் போன்ற குறைபாடு உடையவங்க பெரும்பாலும் பி.காம்தான் படிப்பாங்க. சவாலுக்காக ரெகுலர்ல சி.ஏ படிப்புடன், கரஸ்ல பி.காம் படிச்சேன். சி.ஏ படிப்புல மாற்றுத்திறனாளிகளுக்குன்னு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை. நானே சுயமா படிச்சேன். அதுதான் என் வாழ்க்கையில் மிகச் சவாலான ஒரே காலகட்டம். மூணு வருஷம் ஆர்ட்டிகிள்ஷிப் முடிச்சுட்டு ஃபைனல் எக்ஸாம் எழுதியதில் தோல்வியடைஞ்சேன். தளராம படிச்சு, மூணாவது முயற்சியில் தேர்வானேன். ரெண்டு தனியார் நிறுவனங்கள்ல வேலை செஞ்ச நிலையில், கடந்த அஞ்சு வருஷமா பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஓ.என்.ஜி.சி-யில் தலைமை நிதி மற்றும் கணக்காளரா இருக்கேன்”

- மாறாப் புன்னகையுடன் பேசும் தீபிகாவும் அவர் மகனும் போட்டிபோட்டுச் சிரிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“குறைபாடுடன் இருக்கிறவங்க, தன்னை யாரும் பரிதாபமாவோ வித்தியாசமாவோ பார்க்கிறதை விரும்ப மாட்டாங்க. குறையை முழுசா ஏத்துக்கிட்டு எங்களையும் இயல்பான மனிதர்களாக அணுகணும்னுதான் நினைப் போம். என் குடும்பத்தார், நண்பர்கள் பலரும் சைகை மொழியில் என்னோடு இயல்பா பேசுவாங்க. நானும் சந்தோஷமா என் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்துவேன். வீட்டில் என் தம்பி மட்டுமே நார்மல். ஒருநாள்கூட பெற்றோரையும் என்னையும் வித்தியாசமாகூட அவன் பார்த்ததில்லை. உங்களை மாதிரியே நாங்களும் வீட்டில் ரொம்பவே இயல்பாதான் இருப்போம். வெளியிடங்கள்ல இருந்தால், உடனே வீடியோ மூலமா தகவல்களை ஷேர் பண்ணிப்போம்.

 கணவர், குழந்தையுடன் தீபிகா...
கணவர், குழந்தையுடன் தீபிகா...

காலேஜ் படிக்கும்போது மட்டுமே நார்மல் மனிதர்களோடு பழக சிரமப்பட்டேன். பிறகு, அதுவும் பழகிடுச்சு. இப்ப யாருடைய துணையும் இல்லாம வெளியுலகத்துல எனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கிறேன். பெற்றோர்தான் என் பலம். எந்த வகையிலும் என் விருப்பங்களுக்கு மாறா அவங்க நடந்துகிட்டதேயில்லை. அதனால எளிதில் வெற்றிபெற முடிஞ்சது. கனவுகள் பெரிசா இருக்கணும். நம்மகிட்ட எத்தகைய குறைகள், பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை மனதில் சுமக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை வெற்றிபெற முடியாம, கனவுகளையும் இலக்குகளையும் சமரசம் செய்யுறதுதான் உண்மையான குறைபாடு”

- புலம்பல்கள் ஒருபோதும் வெற்றிக்கு உதவாது என நிரூபித்துள்ள தீபிகாவைப் பார்த்துப் பெருமையுடன் சிரிக்கிறார், அவரின் அம்மா சித்ரா.

தீபிகாவின் பார்வை கணவர் சீனிவாசன் மீது திரும்புகிறது. இவரும் செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்தான். இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத் துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

“கணவர், ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தில் மூத்த அதிகாரியா இருக்கார். நல்லா புரிஞ்சுகிட்டு வாழுறதால ஒவ்வொரு நாளும் இல்லறம் மகிழ்ச்சியா போகுது. பையன் பிறந்த பிறகு, வாழ்க்கையே புதுசா மாறியதுபோல இருக்கு. குறைபாடுகள் இருக்கிறவங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பிருக்கு. வளர வளரத்தான் அதை உறுதி செய்ய முடியும். இப்போதைக்கு அதைப் பத்தி நாங்க கவலைப்படலை. பயிற்சி கொடுக்கிறோம், பையனும் ஒலிகளுக்கு ரியாக்ட் பண்றான். நார்மலான குழந்தையா வளர்வான்னு நம்பறோம். நம்பிக்கை பொய்த்தாலும் வருத்தப்பட மாட்டோம். சந்தோஷமாவும் சிறப்பாகவும் வளர்த்து ஆளாக்குவோம்” - முகம் மலரக் கூறும் தீபிகா, மகனைக் கொஞ்சி மகிழ, குடும்பத்தினர் ரசிக்கின்றனர். வீடு முழுக்க பாசிட்டிவிட்டி பரவியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism