Published:Updated:

முதல் பெண்கள்: சத்தியவாணி முத்து

சத்தியவாணி முத்து
பிரீமியம் ஸ்டோரி
News
சத்தியவாணி முத்து

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர்

அம்மா முதன்முதலில் சிறை சென்ற போது நான் அம்மாவின் வயிற்றில் இருந்தேன். அவர் நிறைமாத கர்ப்பிணி. வேலூர் சிறையிலிருந்து பிரசவத்துக்கு நேரே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவைப்படுவது உரிமையே தவிர சலுகையல்ல. இன்று அரசு எல்லா மக்களுக்கும் பலவித சலுகைகள் கொடுக்கிறது. அண்ணா அவர்கள் விரும்பியது உரிமை... மனித உரிமை... உபகாரமல்ல. அதைத் தாழ்த்தப்பட்ட மக்களேதான் போராடிப்பெற வேண்டும். வேறு யாரும் முன்வந்து அந்த உரிமையைத் தர மாட்டார்கள். `அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அந்தப் போராட்டத்துக்கு ஓர் அமைப்பு தேவை. அந்த அமைப்பு, விவரம் அறிந்தவர்களால் சமுதாயப் பிரச்னை உணர்ந்தவர்களால் உருவாக்கப்பட வேண்டும். இது அண்ணல் அம்பேத்கரின் எண்ணம். கற்க! ஒன்று சேர்!! போரிடு!!!” - ‘எனது போராட்டம்’ புத்தகத்தில் டாக்டர் சத்தியவாணி முத்து.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ஐயோ… உன் பெண்ணுக்கு 19 வயதாகி விட்டது. இன்னுமா திருமணம் செய்து கொடுக்கவில்லை?” என்ற கேள்வியை தினமும் எதிர்கொண்டு வந்தார் தென்னக ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக இருந்த நாகைநாதன். சென்னை ஜார்ஜ் டவுனில் வசித்த நாகைநாதன் - ஜானகி அம்மாள் தம்பதியின் மகளாக 1923 பிப்ரவரி 15 அன்று பிறந்தார் சத்தியவாணி. நீதிக்கட்சியின்பால் தீவிர நாட்டம்கொண்ட நாகைநாதன், சுயமரியாதை இயக்கத்தின் மீதும் பற்றுகொண்டிருந்தார். தென்னிந்திய பௌத்த சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். சிறுவயது முதலே சுயமரியாதைக் கொள்கையை மகளுக்கு ஊட்டியே வளர்த்தவர், மகளைக் கல்வி கற்கத் தூண்டினார். ‘அம்மாவின் உறவுக்காரப் பெண்கள்… குறிப்பாக என் பெரியம்மா ஒருவர், பாவாடை சட்டை போட்டுக்கொண்டு, சட்டையின் மேல் தாலி தொங்கிக்கொண்டிருக்க, தெருவில் பாண்டி விளையாடிக் கொண்டிருப்பாராம். அம்மாவோ அப்போது படித்துக்கொண்டிருப்பார்’ என்கிறார் சத்தியவாணியின் மகள் சித்திரமுகி.

1943 ஜனவரி 17 அன்று சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய எம்.எஸ்.முத்து என்பவருடன் ஹோமியோபதி மருத்துவம் படித்த சத்தியவாணியின் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னின்று நடத்தியவர் திரு.வி.க. மணமகன் நன்றியுரை வழங்க வருமாறு திடீரென மனைவியை அழைக்க, தடுமாற்றத்துடன் தொடங்கினாலும் நன்றாக உரையாற்றினார் மணப்பெண்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவியின் பேச்சாற்றலைக் கண்டு கொண்ட முத்து, மனைவியின் பெரும் துணையாக அவருடனே நின்று, கூட்டங்களில் பின்னாளில் உரையாற்ற வழிவகை செய்தார்.

இந்தத் தம்பதிக்கு அறச்செல்வன், சித்திரமுகி, மரகதமணி, செழியன் என்று நான்கு குழந்தைகள். குழந்தைகள் நால்வருக்கும் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் அண்ணா. அந்தக் கால திராவிட அரசியல் குடும்பங்கள் எப்படி நெருங்கி நட்பு பாராட்டின என்று விளக்கு கிறார்கள் சத்தியவாணியின் பிள்ளைகள்!

தன் இருபதாவது வயதில் ஒடுக்கப் பட்ட சாதிக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சத்தியவாணி. பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் அவரது கூட்டங்களில் உரையாற்றும் வாய்ப்பையும் பெற்றார். இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் எதிர்ப்புக் குரல்களில் ஒன்று சத்தியவாணியின் குரல். குடியரசு இதழில் `ஹிந்தியன் ரகசியங்கள்' என்ற இந்தி எதிர்ப்புக் கட்டுரையை எழுதினார் சத்தியவாணி. அரசியல் ஆர்வம் உந்தித்தள்ள சுயமரியாதை இயக்கத்திலிருந்து அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது, அவருடன் துணை நின்றார். மாட்டு வண்டியிலும் வில் வண்டியிலும் பயணித்து பட்டிதொட்டி எங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளைப் பரப்பினார்.

கணவர் முத்துவோ, தீவிர காங்கிரஸ் தொண்டர். ஆனால், இருவரும் தங்கள் அரசியல் விருப்பங்களை தங்கள் தனிவெளியாகவே வைத்திருந்தனர். 1953-ம் ஆண்டு, ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார் சத்தியவாணி.

“அம்மா முதன்முதலில் சிறை சென்ற போது நான் அம்மாவின் வயிற்றில் இருந்தேன். அவர் நிறைமாத கர்ப்பிணி. வேலூர் சிறையிலிருந்து பிரசவத்துக்கு நேரே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்து 1962-ம் ஆண்டு நடைபெற்ற விலைவாசி ஏற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் போதும் அவர் நிறைமாத கர்ப்பிணிதான்.

சத்தியவாணி
சத்தியவாணி

தம்பி செழியன் பிறந்த நேரம் அது. அவன் தவழும் நிலையில் இருந்தபோது மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அம்மாவின் சிறை முதல் மாடியில் இருந்தது. தம்பி இரவில் தவழ்ந்து சிறைக்கம்பிகளுக்கு இடையே வெளியே சென்றுவிடக் கூடாது என்று அவன் இடுப்பில் தன் சேலை முந்தானையைக் கட்டிவைத்துக்கொண்டு தூங்குவாராம் அம்மா” என்று நெகிழ்வுடன் நினைவுகூர்கிறார் மகள் சித்திரமுகி.

1957-ம் ஆண்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தனி வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெற்றார் சத்தியவாணி. பெரம்பூர் பகுதியிலேயே வசித்துவந்தவரால் மக்களிடம் எளிதில் தன் கொள்கைகளை எடுத்துச் செல்ல முடிந்தது. 1962-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் அதே பெரம்பூர் தொகுதியில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டுத் தோற்றார் சத்தியவாணி. 1965-ம் ஆண்டு, சிறுநீரகக் கோளாற்றால் கணவர் முத்து மறைந்துவிட, அரசியலில் இன்னும் அதிக தீவிரம் காட்டினார்.

அடிமைகளாக வாழ்ந்தவர்களுக்கு அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டு அவர்களது வலிமையையும் ஆற்றலையும் நினைவுபடுத்திய பிறகு அவர்களுக்கு சமத்துவ சகோதரத்துவ வாழ்வு தர மறுப்பது தற்கொலைக்கு ஒப்பாகும் - சத்தியவாணி முத்து.

1967-ம் ஆண்டு, தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். அவருக்கு தி.மு.க தலைவர் அண்ணா அரிசன நலத்துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார். அதே ஆண்டு, முதல் அலுவல் சார் வெளிநாட்டுப் பயணமாக சத்தியவாணி மொரீஷியஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள, தன் அமைச்சரவையின் பெண் அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்று அவரை வழியனுப்பவும், மீண்டும் வரவேற்கவும் நேரில் வந்தார் முதல்வர் அண்ணா.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான சத்தியவாணி தன் பொறுப்பை உணர்ந்து பணியாற்றினார். தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் என்று அறியப்பட்டவர் சத்தியவாணி. எட்டு பேர் கொண்ட அமைச்சர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் சத்தியவாணிதான். அண்ணாவின் மறைவுக்குப் பின்னும் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க அரசில் 1974-ம் ஆண்டு வரை மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, செய்தித்துறை, அரிசன நலத்துறை என்று பல துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்றுப் பணியாற்றினார் சத்தியவாணி.

‘ஹியூமன் ரைட்ஸ் சொஸைட்டி’ என்ற மனித உரிமைச் சங்கத்தையும் நடத்தினார் சத்தியவாணி. முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன், குசேலர் போன்றவர்களை உறுப்பினர் களாகக்கொண்ட அந்தச் சங்கம் டாக்டர் அம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரியை வட சென்னை பகுதியில் அமைக்க முடிவெடுத்தது. அதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு அதன் பொருளாளராக அப்போது தி.மு.க-வில் இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நியமித்து நிதி திரட்டியது.

ஐந்து லட்ச ரூபாய் நிதி திரட்டி அரசுக்கு வழங்கி, ஒருவர் வேண்டுகோள் வைத்தால் அவர் கேட்கும் பெயரில் கல்லூரி ஒன்றை நிறுவ தமிழக அரசு அப்போது அனுமதித்து வந்தது. நட்சத்திர இரவு, நட்சத்திர கிரிக்கெட் போட்டி போன்றவற்றை நடத்தி ஐந்து லட்ச ரூபாய் நிதியையும் திரட்டித்தந்தார் பொருளாளரான எம்.ஜி.ஆர். கல்லூரிக்கான இடத்தையும் தேர்வுசெய்து அப்போதைய முதல்வர் கலைஞரிடம் விண்ணப்பம் வைக்க, அவரது பெரும் ஆதரவுடன் கல்லூரி கட்டப் பட்டு திறக்கப்பட்டது. அதற்குள் பிணக்கு ஏற்பட்டு எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து விலக நேரிட்டது.

டாக்டர் அம்பேத்கருக்கு கல்லூரி அமைக்க முன்னெடுத்ததுபோல பேரறிஞர் அண்ணா பெயரில் ஒரகடத்தில் 1971-ம் ஆண்டு, சமூகப் பணி இல்லம் ஒன்றையும் தொடங்கி நடத்திவந்தார் சத்தியவாணி. குழந்தைகள் காப்பகம், மகளிர் தொண்டகம், தையற்பயிற்சிக்கூடம் என்று பல பணிகள் அங்கு நடை பெற்றன. அந்த இல்லத்தில் தினமும் 700 குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியிடம் தொடக்கத்தில் நட்பு பாராட்டிவந்த சத்தியவாணிதான் தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு கலைஞரின் பெயரை வழிமொழிந்தவர். ஆனால், 1974-ம் ஆண்டு தன் அரிசன நலத்துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு குறித்து சட்டமன்றத்திலேயே சத்தியவாணி கலைஞரை எதிர்த்துக் கேள்வி எழுப்ப, பெரும் பிரச்னை வெடித்தது.

`அண்ணா, அம்பேத்கர் வழியைப் பின்பற்றாது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை கருணாநிதி மடைமாற்றுவதன் மூலம் அவர்களை வஞ்சிக்கிறார்' என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் சத்தியவாணி. அதைத் தொடர்ந்து 1974 மே 4 அன்று அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவர் தனியே கட்சியிலிருந்து வெளியேற வில்லை. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு மேலவை உறுப்பினர்கள், இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவருடன் கழகத்தைவிட்டு வெளியேறுவதாகக் கடிதம் அனுப்பினர். அவர்களின் ஆதரவுடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் சத்தியவாணி.

சத்தியவாணி
சத்தியவாணி

முறையான கட்டமைப்பின்மை, தொண்டர்களிடம் சரியாக எடுத்துச் செல்ல வசதியின்மை, பொருளாதார நெருக்கடி காரணமாக கட்சியைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. ஆனால், அ.தி.மு.க அவரை அரவணைத்துக்கொண்டது. தன் போராட்டத்தை `எனது போராட்டம்' என்று புத்தகமாக எழுதி பதிவும் செய்தார் அவர்.

1978 முதல் 1984-ம் ஆண்டு வரை அ.தி.மு.க-வின் ராஜ்ய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார் சத்தியவாணி. 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழ்வெண்மணியில் கலவரம் நடைபெற்றபோது அங்கே சென்று களப்பணியாற்றினார். அரசு உதவி பெற்று கீழ்வெண்மணியை மாதிரி கிராமமாக உருவாக்க உதவினார்.

1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராகப் பதவியேற்றபோது மத்திய அமைச்சரானார் சத்தியவாணி முத்து. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் மத்திய அமைச்ச ரானது அதுவே முதன்முறை. திராவிடக் கட்சிகளின் முதல் மத்திய பெண் அமைச்சரும் சத்தியவாணிதான்!

டெல்லியின் தட்பவெப்பம் சத்தியவாணிக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தியது. கணவர் இறந்தபின் கட்சிப்பணி மற்றும் பொதுப்பணி காரணமாக தன் குழந்தைகளைச் சரிவர கவனித்து, சரியான கல்வி தர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார் அவர்.

இறுதி வரை பெரியாரின் சுய மரியாதைக் கொள்கை, நாத்திகம் போன்றவற்றைக் கைவிடாமல் கடைப்பிடித்தார் சத்தியவாணி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட சத்தியவாணி 1999 நவம்பர் 11 அன்று மரணமடைந்தார்.

வரலாறு மறந்துபோன அரசியல் அரசி சத்தியவாணி!