Published:Updated:

முதல் பெண்கள்: அதிசய ஆனி... இந்தியாவின் முதல் பெண் டாக்டர்!

நிவேதிதாலூயிஸ்
கார்த்திகேயன் மேடி

இந்தியாவில் மருத்துவப் படிப்பு முடித்த முதல் இந்தியப் பெண்

பிரீமியம் ஸ்டோரி
`ஆனியின் கதை துயரமானது' என்ற முன் குறிப்புடன்தான் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும்.

“இறக்கும் தறுவாயில் தான் செய்ய விரும்பிய பலவற்றையும் குறித்து ஆனி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

‘ஆனி, நான் கேட்க விரும்பும் கேள்விக்குப் பதில் சொல். நீ இறைவனிடம் போகிறோம் என்று மகிழ்ந்திருக்கிறாயா... மரணம் பற்றி அச்சம் கொள்கிறாயா...’ என்று கேட்டேன்.

‘அச்சமில்லை. நான் தூய்மையான வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். என் கடமைகளைச் சரியாகவே செய்திருக்கிறேன். இறைவன் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். என் தேவை இன்னும் அதிகமாக எங்கு தேவையோ அங்கே நான் செல்கிறேன். நீங்கள், அழாதீர்கள். நான் இப்போது செல்கிறேன். நீங்களும் என்னிடம் பின்னால் வந்து சேர்வீர்கள்’ என்று ஆனி சொன்னார்.

எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், அமைதியாக எதிர்கொண்டார் ஆனி” என்று தன் சகோதரியின் மரணத் தறுவாயில் நடந்ததை நினைவுபடுத்தி எழுதியிருக்கிறார் ஆனி ஜகந்நாதமின் சகோதரி.

வாழ்க்கையை வாழத் தொடங்கிய சில ஆண்டுகளில் உதிர்ந்துபோன மலராகி சருகாகி விட்ட டாக்டர் ஆனியை, வரலாறு வசதியாக மறந்து போனது.

1864-ம் ஆண்டு, விசாகப்பட்டினம் புலிபாகம் ஜகந்நாதம் - எலிசா ஆஸ்பர்ன் தம்பதியின் ஆறு குழந்தைகளில் இரண்டாவது மகளாகப் பிறந்தார் ஆனி. தீவிர சைவப் பிரிவைச் சேர்ந்த ஜகந்நாதம், லண்டன் மிஷனரி சொசைட்டியின் பள்ளியில் கல்வி கற்றார். 1847-ம் ஆண்டு, கிறிஸ்துவராக மதம் மாறினார். மிஷனரிகளான ஜான் ஹே, கார்டன், வெல்வெட் மற்றும் வார்ட்லா போன்றோருடன் நெருங்கிய நட்பு ஜகந்நாதமுக்கு இருந்தது.

ஆனி
ஆனி

எலிசா, ஜகந்நாதம் இருவரும் சிக்ககோல் என்ற ஊரின் மிஷன் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தார்கள். தன் பிள்ளைகள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஜகந்நாதமுக்கு இருந்தது. மதம் மாறிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் ஜகந்நாதம். இதனால், பெற்றோர் மற்றும் உற்றார் - உறவினர் கைகழுவிவிட்டிருந்தனர். கல்வியைக்கொண்டு சமூகத்தில் முன்னேறி, தன்னை ஒடுக்கியவர்கள் முன் நிமிர்ந்து நடைபோட வேண்டும் என்று முடிவெடுத்தார் ஜகந்நாதம்.

அவருக்கு மிகவும் பிடித்த மிஷனரியான ஜே.எஸ்.வார்ட்லாவின் பெயரையே தன் இரண்டாவது மகளான ஆனிக்கு, ஆனி வார்ட்லா என்று சூட்டினார். 1856-ம் ஆண்டு, கிரேக்க மொழியிலிருந்து தெலுங்கு மொழிக்கு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தவர் இந்த ஜே.எஸ். வார்ட்லா.

பள்ளிப் படிப்பை விசாகப்பட்டினத்தில் முடித்த ஆனி, மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதால் மதராஸ் அனுப்பப்பட்டார். மதராஸ் மருத்துவக் கல்லூரியில் 1883-ம் ஆண்டு சேர்ந்த ஆனி, 1888-ம் ஆண்டு, அன்றைய லைசென்ஷியேட் ஆஃப் மெடிசின் பட்டம் பெற்றார். `இந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்' என்ற பெருமையுடன் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்து ஆனி வெளியேறினார்.

மேல்படிப்பு படிக்க ஆசைப்பட்ட மகளை, ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகருக்குப் படிக்க அனுப்பினார் தந்தை ஜகந்நாதம். அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தையை ஸ்காட்லாந்துக்குத் தனியே அனுப்புவதற்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்திருக்கும், எவ்வளவு செலவாகியிருக்கும், நடுத்தர வர்க்க ஆசிரியர் குடும்பத்தில் இதை எப்படி சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்பதே பெரும் ஆச்சர்யம்தான்.

ஜகந்நாதமின் மற்றொரு மகனான ரிச்சர்டு ஹேயும் எடின்பர்க் கல்லூரியில் மருத்துவ டிப்ளோமா பெற்றவர்.

எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், அறுவை சிகிச்சை, செவிலியர் சேவை என்ற மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் படிப்பைத் தொடங்கினார் ஆனி. ‘ஸ்காட்டிஷ் டிரிபிள்’ என்றே இந்த மூன்று படிப்புகளையும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 1892-ம் ஆண்டு, ஆனி இந்த மூன்று பட்டங்களையும் வெற்றிகரமாகப் பெற்றார். எடின்பர்க் கல்லூரியில் அந்த ஆண்டு படித்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 106, அதில் ஐவர் பெண்கள், அவர்களிலும் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆனி மட்டுமே.

எல்.ஆர்.சி.பி-எஸ் (எடின்பர்க்) என்ற இந்தப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் ஆனிக்குக் கிடைத்தது. படிப்பினூடே எடின்பர்க் கல்லூரியின் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்த ஆனி, ஸ்காட்லாந்தில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண் மருத்துவரானார்.

படிப்பை முடித்து இந்தியா திரும்பிய ஆனி, பம்பாயின் காமா மருத்துவமனையில் தன் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.

புலிபாகம் ஜகந்நாதமின் மகள் என்பதால் அவரை தங்கள் மிஷன் பணிக்குக் கொண்டுசெல்ல லண்டன் மிஷனரிகள் பெருமுயற்சி செய்தன. அதை அமைதியாகவே மறுத்த ஆனி, இந்தியாவில் பணியாற்றுவதிலேயே ஆர்வம்காட்டினார். காமா மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

`இன்முகமும், கடும் உழைப்புமாக நோயாளிகளைக் கண்ணும் கருத்துமாக ஆனி கவனித்து வந்தார்' என்று ஹெச்.ஜே.காஃபின் அவரைப் பற்றி எழுதிய இரங்கல் மடலில் குறிப்பிடுகிறார். இந்த உழைப்பே ஆனிக்கு வினையானது.

நோயாளிகளிடமிருந்து காசநோய் தொற்றியது. உடல்நிலை மோசமடைவதைப் பிறருக்குத் தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறார் ஆனி.

ஒருகட்டத்துக்குப் பின் நிலைமை மோசமாகவே, பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் பெற்றோரிடம் திரும்பினார். அவரை மீட்க செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பெற்றோரின் கண் முன்னே கரையத் தொடங்கினார் ஆனி. 1894-ம் ஆண்டு, ஆனி மரணமடைந்தார். 30 வயதில் இறந்துபோன ஆனி, `அவர் ஆசைப்பட்ட சிறந்த இடத்துக்கு பணியாற்ற கடவுளால் அழைக்கப்பட்டுவிட்டார்' என்று இரங்கல் மடலில் குறிப்பிடுகிறார் காஃபின்.

இறந்துபோன சித்தி ஆனியின் கதையைக் கேட்டு வளர்ந்த ஜகந்நாதமின் பேத்தி, தானும் மருத்துவராக வேண்டும், தன் சித்தி விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்ற பேராவல்கொண்டு மருத்துவரானார்.

அவர்தான் பின்னாளில் மகளிர் மருத்துவப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்ணான ஹில்டா மேரி லாசரஸ்.

சிலர் கனவுகளை விதைத்துப் போவதுண்டு. அவை எப்போதாவது பெருமரமாகிப் பல்கிப் பெருகுவதுண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு