சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“வலிகளைக் கடந்தேன்... வலிமையால் உயர்ந்தேன்!”

ஜாஸ்மின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாஸ்மின்

இரண்டாவது வாழ்க்கை நிச்சயம் நல்லதா அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துச்சு மாப்பிள்ளையுடனான அந்தச் சந்திப்பு.

ஜாஸ்மினால் சிரிக்காமல் பேசவே முடிவதில்லை. சிரிப்புக்கு இடையில் வந்து விழுகிற சொற்களைக் கோத்துதான் அர்த்தம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“வாழ்க்கையில் நிறைய அழுது முடிச்சிட்டேன். அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு இப்போ சிரிக்கிறேன். இனியும் சிரிச்சிட்டேதான் இருக்கப்போறேன்...’’ எனச் சிரிக்கிறார். ஜாஸ்மின் பெங்களூரின் பிரபலமான ஜிம் ஒன்றில் ஃபிட்னெஸ் பயிற்சியாளர். மஸுல்ஸும் மேன்லியான மாஸ் லுக்கும் நிகழ்கால ஜாஸ்மின் என்றால் கண்களில் பயமும் முக்காடிட்ட முகமும் அவரின் கடந்தகால அடையாளங்கள்.

“ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குள்ளே நுழைஞ்சபோது ஒரே கூட்டம். அவசரமா என்னை உள்ளே இழுத்துட்டுப் போன எங்கம்மா, ‘சீக்கிரமா டிரெஸ்ஸை மாத்திட்டு வா’ன்னு சொன்னாங்க. வந்தவங்களுக்கு டீ கொடுக்கச் சொன்னாங்க. எதுக்குன்னு தெரியாம சொன்னதையெல்லாம் செய்தேன். அப்புறம்தான் அது என்னைப் பெண்பார்க்க வந்த கூட்டம்னு தெரிஞ்சது. ‘கல்யாணமெல்லாம் வேண்டாம், நான் படிக்கணும், நல்ல நிலைமைக்கு வரணும்’னு அழுதேன், கதறினேன், கெஞ்சினேன். அம்மாவும் அப்பாவும் என் பேச்சைக் கேட்கத் தயாரா இல்லை. 18 வயசு முடிஞ்ச மூணாவது நாள் நிக்கா பண்ணிவெச்சிட்டாங்க. சரி... இதுதான் விதின்னா என்ன செய்ய முடியும்னு மனசைத் தேத்திக்கிட்டு, புகுந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன். அங்கே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கல்யாணமான முதல் ராத்திரி... அறைக்குள்ளே நுழைஞ்ச என்னை அவன் வன்முறையா அணுகினான். என்னை அவன் மனைவி மாதிரி நடத்தாம, மூன்றாம் மனுஷி மாதிரி தாக்கினான். அவனுடைய செய்கைகளால் என்னை பயமுறுத்தினான். அன்னிக்கு நடந்தது முதலிரவில்லை; பாலியல் வன்கொடுமை.’’ வருடங்கள் கடந்தும் வலியை மறக்கவில்லை ஜாஸ்மின்.

“அவனுடைய அராஜகமும் அசாதாரண நடவடிக்கைகளும் தினசரி வாடிக்கையாச்சு. ஒரு கட்டத்துல அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் அம்மா, அப்பாகிட்ட, ‘இனியும் இந்த உறவைத் தொடர முடியாது. தயவுசெய்து விலக்கிவெச்சிடுங்க’ன்னு அழுதேன். விவாகரத்தும் முடிஞ்சது. ஆனா அது என் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலை. அதைவிட பயங்கரமான விஷயங்களுக்கான இன்னோர் ஆரம்பமா மாறினது.

ஜாஸ்மின்
ஜாஸ்மின்

அக்கம்பக்கத்துல எல்லாரும் வாழாவெட்டின்னு பேசினாங்க. ‘நீ இப்படி இருக்கிறது எங்களுக்குப் பெரிய பாரம். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்’னு மறுபடி வீட்டுல வற்புறுத்தினாங்க. ‘கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க பார்க்கிற பையனோடு நான் தனியா பேசணும்’னு கண்டிஷன் போட்டேன். சம்மதிச்சாங்க.

இரண்டாவது வாழ்க்கை நிச்சயம் நல்லதா அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துச்சு மாப்பிள்ளையுடனான அந்தச் சந்திப்பு. எல்லாத்தையும் அவர்கிட்ட சொன்னேன். எல்லாம் தெரிஞ்சும் என்னை அப்படியே ஏத்துக்கத் தயாரா இருந்தார். கல்யாணம் முடிஞ்சது. முதல் திருமணமும் அந்த முதல் ராத்திரியும் தந்திருந்த மிரட்சிகளை எல்லாம் கஷ்டப்பட்டு மறந்து, புது வாழ்க்கையில் அடியெடுத்துவெச்சேன். ஆனா அந்தக் கடவுளுக்கு என்மேல என்ன கோபமோ தெரியலை... முதல்ல திருமணம் செய்தவன் மனநலம் சரியில்லாதவன்னா, அடுத்து வந்தவன் போதை அடிமையா இருந்தான். 24 மணி நேரமும் போதை. மிருகத்தை அடிக்கிற மாதிரி என்னை அடிச்சுக் கொடுமைப்படுத்துவான். நடந்த எதையாவது யார்கிட்டயாவது சொன்னேன்னு தெரிஞ்சா கொன்னுடுவேன்னு மிரட்டுவான். இத்தனை கொடுமைகளுக்கு இடையில் நான் கர்ப்பமானேன்.

விவாகரத்தும் முடிஞ்சது
- ஜாஸ்மின்

குழந்தையின் உதையும் அசைவுகளும் எனக்குன்னு ஓர் உறவு இருக்குங்கிற நம்பிக்கையையும் வாழ்க்கையின்மேல் ஒரு பிடிமானத்தையும் கொடுத்தது. குழந்தை உருவானது தெரிஞ்சா திருந்திடுவான், எல்லாம் சரியாயிடும்னு நினைச்சேன். ஆனா அந்த நம்பிக்கையும் பொய்யானது. கர்ப்பமா இருக்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டதும் என் வயித்துல எட்டி உதைச்சான். அந்த வேகத்துல எனக்கு பிளீடிங் ஆக ஆரம்பிச்சது. உடனே என்னை டாக்டர்கிட்ட தூக்கிட்டு ஓடினாங்க. உடனடியா ஆபரேஷன் பண்ணினாதான் ரத்தப்போக்கை நிறுத்தி, குழந்தையைக் காப்பாற்ற முடியும்னு சொன்னாங்க. ஆனா ஆபரேஷன் முடிஞ்ச அடுத்த சில வாரங்களில் என் குழந்தை இறந்துடுச்சு. கணவனின் அடி உதைகளின் வலியைக்கூடத் தாங்கிக்கிட்டேன். ஆனா குழந்தை இழந்த வலியைப் பொறுத்துக்கிறதும், கடந்து போறதும் அவ்வளவு சுலபமானதா இல்லை...’’ உயிரின் உயிரைப் பறிகொடுத்த வலி நினைவுக்கு வர, குரல் உடைகிறது ஜாஸ்மினுக்கு. அந்தச் சிரிப்பு காணாமல் போனது.

ஜாஸ்மின் பெங்களூரின் பிரபலமான ஜிம் ஒன்றில் ஃபிட்னெஸ் பயிற்சியாளர்.

‘`வாழ்க்கையின் மேல எனக்கிருந்த ஒரே நம்பிக்கையை சிதைச்சுச் சின்னாபின்னமாக்கின குற்ற உணர்வுகூட இல்லாம, விவாகரத்து கேட்டு வந்து நின்னான். அந்த உறவே வேணாம்னு தூக்கிப்போட்டுட்டு இந்தியாவை விட்டே எங்கேயாவது போயிடணும்னு நினைச்சேன். ஆனா என் பெற்றோர் அதை அனுமதிக்கலை. அப்படி ஏதாவது பண்ணிடப் போறேன்னு பயந்து பாஸ்போர்ட்டைக் கொளுத்திட்டாங்க. ‘வீட்டை விட்டுப் போகணும்னு நினைச்சா ஒண்ணு நீ பிச்சை எடுக்கணும் அல்லது பாலியல் தொழில் பண்ணணும்’னு சாபம் கொடுத்தாங்க. ஒருநாள் யார்கிட்டயும் சொல்லாம கொச்சிக்குப் போனேன். அங்கே ஒரு ஃபிட்னெஸ் சென்டர்ல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். புதிய ஊரும் புதுச் சூழலும் எனக்கு ஆறுதல் தந்தது. ரணமாகியிருந்த என் உடம்பும் மனசும் கொஞ்சம் கொஞ்சமா ஆறவும் மாறவும் ஆரம்பிச்சது. ஃபிட்னெஸ் சென்டருக்கு வந்தவங்க நட்பானாங்க. என் கதையைக் கேட்டுட்டு நிறைய அன்பையும் அதைவிட அதிகமான நம்பிக்கையையும் கொடுத்தாங்க. உலகம் எவ்வளவு பெரிசுன்னு புரிய ஆரம்பிச்சது. வாழாமல்போன வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிற ஆசை வந்தது. அத்தனை காலமா எனக்குள்ளே ஊறிப்போயிருந்த தயக்கங்களையும் தடைகளையும் தூக்கி எறிஞ்சேன்.

ஜாஸ்மின்
ஜாஸ்மின்

என்னுடைய மாற்றங்களை வீடியோ பதிவாக்கி வெளியிட்டேன். அது செம வைரலானது. வழக்கமா இந்த மாதிரியான விஷயங்களைக் கேள்விப்படும்போது திட்டித்தீர்க்கும் மக்கள், என் மாற்றங்களைப் பார்த்துட்டு என்கரேஜ் பண்ணினாங்க. இந்த இடைப்பட்ட நாள்களில் ஃபிட்னெஸ் சார்ந்த விஷயங்களிலும் என் ஆர்வம் அதிகமாகியிருந்தது. ஃபிட்னெஸ் பற்றி முறையான ஒரு கோர்ஸ் படிக்கலாம்னு பெங்களூரு போனேன். ரெஸ்டாரன்ட், காபி ஷாப்னு சில இடங்களில் பார்ட் டைமா வேலை பார்த்துக்கிட்டே, ஃபிட்னெஸ் கோர்ஸை முடிச்சேன். இன்னிக்கு பெங்களூரின் பிரபலமான ஃபிட்னெஸ் சென்டர்ல டிரெய்னரா இருக்கேன்’’ வலிகளைக் கடந்து வென்றிருப்பவரின் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பின்னால் ஒருவர் இருக்கிறார்.

“இப்போ என் உலகத்தை அன்பால் நிறைத்திருப்பவள் என் பார்ட்னர் ரிச்சா. வாழ்க்கையில் திகட்டத் திகட்ட கசப்புகளைப் பார்த்த எனக்கு இன்னொரு கல்யாணம், குடும்பம்னு எதன்மேலும் நம்பிக்கையில்லை. எந்த ஆண்மீதும் ஈர்ப்பும் வரலை. என்னுடைய இந்த ரிலேஷன்ஷிப்பைக் கேள்விப்படற பலரும், ‘ஐயோ பாவம்... அந்த அளவுக்கு உங்களுக்கு ஆண்கள்மேல வெறுப்பு வந்திருச்சா... உங்களுடைய கடந்த காலம்தான் இதுக்கெல்லாம் காரணமா’ன்னு கேட்கறாங்க. அப்படியெல்லாம் இல்லை. என்னிக்கு கொச்சிக்கு வந்தேனோ, அன்னிக்கே என் பெற்றோருடனான உறவு அறுந்துபோச்சு. நான் இப்போ சுதந்திரப் பறவை. நான் நினைச்சா எந்த ஆணோடும் வாழலாம், யாரும் கேட்கப்போறதில்லை. ஆனாலும் எனக்கு ஆண்கள்மேல ஈர்ப்பு வரலை. அதுக்காக நான் ஆண்களை வெறுக்கறவள்னு அர்த்தமில்லை. நிறைய நல்ல ஆண் நண்பர்கள் இருக்காங்க. கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி ரிச்சாவை சந்திச்சேன். அவளோடு இருக்கிற தருணங்கள் எனக்கு சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறதை உணர்ந்தேன். எல்.ஜி.பி.டி கம்யூனிட்டில இருக்கிறதை வெளிப்படையா சொல்லிக்கிறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’’ மரபுகளை உடைத்தெறிந்தவருக்கு மனம்கொள்ளாக் கனவுகளும் லட்சியங்களும்.

‘`உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு... உங்க கதை ரொம்ப இன்ஸ்பயரிங்கா இருக்கு...’’ இந்த மாதிரி நிறைய கேட்டுட்டேன். இனியும் இவை எனக்கான அடையாளமா இருக்க வேண்டாம்னு. நான் வேற மாதிரி அடையாளப்படுத்தப் படணும்னு விரும்பறேன்.

ஜாஸ்மின்
ஜாஸ்மின்

இன்னிக்கு எனக்குள்ளே ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் ஃபிட்னெஸ். உடம்பு ஃபிட்டா இருந்தா, மனசும் ஆரோக்கியமா இருக்கும். வாழ்க்கையில் பாசிட்டி விட்டி மலரும் என்பதற்கு நானே உதாரணம். அடுத்து ஃபிட்னெஸ் ஒலிம்பியா போட்டிகளில் கலந்துகிட்டு இந்தியாவுக்குப் பெருமை வாங்கித் தரணும். அதுக்குத்தான் தயாராயிட் டிருக்கேன். என்னாலயே இவ்வளவு விஷயங்களை சாதிக்க முடிஞ்சிருக் குன்னா, மற்ற பெண்களாலும் முடியும். ‘நீ வீட்டை விட்டு வெளியில போகணும்னு நினைச்சா பிச்சை எடுக்கணும் அல்லது பாலியல் தொழில் செய்யணும்’னு சொன்னாங்க பெற்றோர். அந்த ரெண்டு வழிகளுக்கும் போகாம இன்னிக்கு நான் ஜெயிச்சிருக்கேன். தயவுசெய்து பெண் குழந்தைகளை பலவீனமானவங்களா பார்க்காதீங்க. உன்னால முடியாதுன்னு மட்டம் தட்டாதீங்க. தட்டிக்கொடுக்க முடியலைன்னாலும் பரவாயில்லை, தடுக்காதீங்க...’’ சீரியஸான மெசேஜையும் சிரித்தபடியே சொல்கிறார் ஜாஸ்மின். அந்தச் சிரிப்பில் தெறிக்கிறது பாசிட்டிவ் எனர்ஜி.