என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அந்த வலிதான் அவங்களுக்காக இயங்கவெச்சது! - அகதிகளின் ஆபத்பாந்தவர் ஃப்ளோரினா

ஃப்ளோரினா
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ளோரினா

போரில் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைச்ச மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்லி, அவங்க வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்தினேன்

ஃப்ளோரினா... அகதிகளின் ஆபத்பாந்தவர். போர் காரணத்தால் தங்களுடைய சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி, வேறு நாடுகளில் தஞ்சம்புகும் மக்களுக்குத் தேவையான வாழ்வியல் பயிற்சிகள் வழங்குவது, சொந்த நாட்டுக்குத் திரும்ப நினைப்பவர்களுக்கு உதவுவது, உளவியல்ரீதியாக அவர்களை மீட் டெடுப்பது போன்றவற்றைச் செய்து வருபவர்.

“சென்னையைச் சேர்ந்த நடுத்தர குடும்பம் என்னுடையது. படிப்பை முடிச்சிட்டு தேவாலயம் மூலமா மக்கள் பணி செஞ்சுகிட்டு இருந்தேன். அப்போ அசோக் சேவியர் க்ளாட்சன் எனக்கு நண்பரா அறிமுகமானார். மக்கள் பணியில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துட்டு என்னை சமூகப் பணியில் முதுகலை படிக்கச் சொன்னார். முதுகலை சமூகப்பணியில புராஜெக்ட் பண்றது கட்டாயம். அப்படி புராஜெக்ட்டுக்காகத் தொடங்கியதுதான் அகதிகளுடனான பயணம். நாட்டை, சொந்த வீட்டை, உறவு களை விட்டுட்டு வேறு நாடுகளுக்குப் போய் வாழறவங்களுக்குப் பின்னால் மிகப்பெரிய துயரம் இருக்கும். யாராவது அவங்களுக்கு உதவி பண்ணி, அது மூலம் அவங்க வாழ்க்கையில மாற்றம் ஏற்படாதா... சொந்த பந்தங்களைப் பார்த்துட மாட்டோமா என்ற பெரிய எதிர்பார்ப்போட இருப்பாங்க. அகதி களோடு நெருங்கிப் பழகினபோதுதான் அவங்களுடைய முழுக் கஷ்டத்தையும் உணர முடிஞ்சுது. அந்த வலியில என் வாழ்க்கை முழுக்க அவங்களுக்காகவே இயங்கணும்னு முடிவு எடுத்தேன்.

அந்த வலிதான் அவங்களுக்காக இயங்கவெச்சது!  - அகதிகளின் ஆபத்பாந்தவர் ஃப்ளோரினா

ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியிலும், சென்னை லயோலா கல்லூரியிலும் பேராசிரியரா வேலை பார்த்தேன். அப்புறம் என் நண்பரான அசோக் சேவியரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அமெரிக்காவின் ஈஸ்டர்ன் மெனானைட் பல்கலைக்கழகத்துல முதுகலை கான்ஃபிளிக்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் அண்டு பீஸ் பில்டிங் (Conflict Transformation and Peace Building in Eastern Mennonite University) படிக்க, நாங்க ரெண்டு பேரும் அப்ளை பண்ணிருந்தோம். ரெண்டு பேருக்கும் ஸ்காலர்ஷிப் கிடைச்சுது. இது மக்களுக்காக இயங்கும் அடுத்தகட்ட வாய்ப்பை உருவாக்கி கொடுத்துச்சு'' - நீண்ட அறிமுகம் தரும் ஃப்ளோரினா தன் அடுத்தகட்ட பயணம் பற்றியும் பகிர்ந்தார்.

``மியான்மர், தாய்லாந்து, ஆப்கானிஸ் தான்னு வேறு வேறு நாடுகளுக்குப் பயணம் செஞ்சேன். போரில் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைச்ச மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்லி, அவங்க வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்தினேன். ‘ஆப்கான் - சோவியத்’ போரால் பாதிக்கப்பட்டு கிரிகிஸ்தானில் தஞ்சமடைந்த மக்களுக்காக ஐ.நா சபையோடு இணைஞ்சு பணி செய்யுற வாய்ப்பு எனக்கு கிடைச்சுது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மனரீதியா திடப்படுத்துறதுதான் முக்கிய தேவையா இருந்துச்சு. எனவே, கவுன்சலிங் மூலம் அவங்களை மீட்டெடுக்கும் பணிகளைச் செய்தேன்.

இப்போ, ‘ஆக்ட் ஃபார் பீஸ்' என்ற அமைப்போடு இணைஞ்சு இலங்கையிலிருந்து இங்கு வந்த மக்களுக்கான உதவிகளைச் செய்துட்டு இருக்கேன். இந்தியாவில் இலங்கை மக்கள் 53,000 பேர் இருக்காங்க. அவங்களுக்கான கல்வி, அடிப்படை ஆதாரங்களை உருவாக்கிக் கொடுக்குறது, வாழ்வியலுக்கு உதவுறது, திரும்பி நாடு செல்ல விரும்புற வங்களுக்கு உதவுறது போன்ற பணிகளைச் செய்யுறேன். இலங்கை செல்லும் மக்கள் அங்கு வாழ்வாதாரத்தை உயர்த்திக்கிற வகையில் இலங்கையிலும் செயல் படுறோம்” என்கிறார் ஃப்ளோரினா.

கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கவுன் சலிங் கொடுத் துள்ளவருக்கு, இறுதிவரை மக்களுக்காக இயங்குவதே இலக்காம்.