Published:Updated:

`வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ - பிரதமரின் ட்விட்டரை நிர்வகித்த தமிழக பெண்

தமிழக பெண் சினேகா
தமிழக பெண் சினேகா

இந்தியப் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைத் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா என்ற இளம் பெண் இன்று காலை முதல் நிர்வகித்து வருகிறார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தன் அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் ஒரு நாள் முழுவதும் பெண்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக இந்தியப் பிரதமர் மோடி கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதற்கு தங்கள் சாதனைகளை #SheInspiresUs என்ற ஹேஸ்டாக்கில் பதிவிடுமாறும் அதில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.

சினேகா
சினேகா

இதன்படி இன்று காலை தன் அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் ஏழு சாதனைப் பெண்களிடம் சமர்ப்பிப்பதாகக் கூறி பிரதமர் மோடி விடைபெற்றார். அதன் பிறகு, அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து சாதனை பெண்கள் தங்களைப் பற்றிப் பதிவிட்டு, பொதுமக்களுடன் உரையாடி வருகிறார்கள். முதலில் சினேகா மோகன்தாஸ் என்ற பெண் தன்னை பற்றிய அறிமுக வீடியோவுடன் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினார்.

`டியர் மோடி தயவு செய்து என்னைக் கொண்டாடாதீர்கள்!’- பிரதமரின் பெண்கள் தின மரியாதையை நிராகரித்த சிறுமி

சினேகா மோகன்தாஸ், இவர் ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனர். `தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியாரின் வரிகளை ஏற்று ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் தஞ்சமடைந்தவர்கள், வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் தினமும் மூன்று வேளையும் தேடிச் சென்று உணவளித்து வருகிறார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சினேகா தமிழகத்தைச் சேர்ந்தவர்.

அந்த வீடியோவில் பேசியுள்ள சினேகா, ``நான் 2015-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு இருந்து இதைச் செய்து வருகிறேன். பசியை எதிர்த்துச் சண்டையிட வேண்டும் பட்டினியில்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

என் தாத்தாவின் பிறந்தநாள் அன்று சில குழந்தைகள் நலக் காப்பகத்துக்குச் சென்று உணவு வழங்கினேன். அப்படித்தான் இது தொடங்கியது. பின்னர் இதை ஃபேஸ்புக் பக்கமாகத் தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை என்னுடன் இணைத்துக்கொண்டேன். தற்போது அவர்களும் என்னைப்போலவே இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். எங்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களிடமிருந்து பணமாகப் பெறாமல் பொருள்களாகப் பெற்று நாங்களே சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

சமைப்பதற்காக சில தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலும், அவர்களே உணவுகளை ஏழைகளின் இடங்களுக்குக் கொண்டு செல்லவும் உதவுகிறார்கள். அவர்களால்தான் இந்த அமைப்பு தற்போது பெரிதாகியுள்ளது. `வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ இதுதான் என் வெற்றியின் மந்திரம்” என்று பேசி முடித்துள்ளார் சினேகா. இதுமட்டுமல்லாது இவரது சேவையைப் பாராட்டி பலர் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர், அவர்களுக்குப் பிரதமரின் ட்விட்டர் கணக்கின் மூலம் நன்றி தெரிவித்து வருகிறார். மேலும், பலரின் கிண்டலான கேள்விகளுக்குப் பிரதமர் கணக்கிலிருந்து பதிலளித்து வருகிறார் சினேகா.

அடுத்த கட்டுரைக்கு